கேரளாவில் ஒரு கிலோ இரப்பருக்கு 300 ரூபாய் என்று விலையை உயர்த்தினால், வருகின்ற 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி கேரளாவில் ஒரு மக்களவைத் தொகுதியை பெறுவதற்கு தான் உதவுவதாக தெல்லிச்சேரியின் பேராயர் மார் ஜோசப் பாம்பிளானி விடுத்திருக்கும் அறிக்கை கேரள கிறிஸ்தவர்களுடைய பெரும்கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
“கத்தோலிக்க திரு அவையானது ஒருபோதும் தீண்டாமை கொள்கையை கடைபிடிப்பதில்லை. எனவே கத்தோலிக்க திரு அவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியை வெறுப்பதில்லை. கேரள மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கென ஒரு மக்களவை பிரதிநிதிகூட இல்லை. இந்நிலையில் ஒரு கிலோ இரப்பரின் விலையை 300 ரூபாய் என்று உயர்த்தினால் கேரள மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஒரு மக்களவை பிரதிநிதியை பெறுவதற்கு உதவி செய்வேன்” என்று கூறினார்.
இது குறித்து இந்தியன் கரன்ட்ஸ் எனும் பத்திரிக்கையின் ஆசிரியர் அருள்பணியாளர் சுரேஷ் மேத்யூ “இந்த அறிக்கையை பேராயர் அவர்கள் கத்தோலிக்க திரு அவையினுடைய பிரதிநிதியாக வெளியிட்டிருந்தால் அது முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று. 300 ரூபாய் இரப்பருக்கு ஒரு மக்களவை பிரதிநிதி என்பது ஒரு நோட்டுக்கு ஒரு ஓட்டு என்பதாகும். அதாவது பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவதற்கு சமம். எந்த ஒரு ஆயரோ அல்லது அருட்பணியாளரோ தனிப்பட்ட முறையில் இப்படிப்பட்ட அறிக்கையை விடுவதற்கு அதிகாரம் இல்லை என்று ஏசியாநெட் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
கேரளாவில் காங்கிரஸ் தலைவரும் சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவருமான V.D. சதீசன் “கடந்த நான்கு ஆண்டுகளில் பாஜக ஆளும் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. மத்திய மற்றும் வடஇந்திய மாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்படும் அட்டூழியங்கள், பாம்பிளானி போன்ற பேராயர்களுக்கு தெரியாதா? கர் வாப்சி என்ற வன்முறைத் திட்டத்தின் மூலம் பல கிறிஸ்துவ பள்ளிகள், கல்லூரிகள் நிறுவனங்களை வேண்டுமென்றே தாக்குவது மற்றும் ஏழை கிறிஸ்தவ பழங்குடியின மக்களை உடல் ரீதியாக துன்புறுத்தி, அச்சுறுத்தி இந்துக்களாக மாற சொல்வது, இல்லையென்றால் அவர்களது வாழ்விடங்களைவிட்டு வெளியேற சொல்வது போன்ற வன்முறைகளைப் பற்றி அறிந்திருந்தும் பேராயர் பாம்பிளானி இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. கேரளாவில் கிறிஸ்தவர்கள் 18 சதவீதம் உள்ளனர். கிறிஸ்தவர்களின் வாக்குவங்கியை பெற பாரதிய ஜனதா கட்சி பல உத்திகளை கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.