ஒடிஸா மாநிலத்தில் பெராம்பூர் மறைமாவட்டத்தில் அடாவா கிராமத்தில் வசிக்கும் 15 பேரைக் கொண்ட ஒரு கத்தோலிக்க குடும்பம், தாங்கள் பதற்றத்திலும், பயத்திலும் வாழ்ந்து வருவதாக மேட்டர்ஸ் இந்தியா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். மார்ச் 16 ஆம் தேதி கமிலா நாயக், அவரது மனைவி மற்றும் மூன்று மகன்களை அதே கிராமத்தைச் சேர்ந்த சுமார் 100 ஆண்களும் பெண்களும் சேர்ந்து இரும்பு கடப்பாறைகள் மற்றும் கம்பிகளை கொண்டு அவர்களையும் அவர்களது வீடுகளையும் தாக்கி, அவர்களிடமிருந்து தங்க ஆபரணங்களையும், ஸ்மார்ட் ஃபோன்களையும் பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து கமிலா நாயக் “நாங்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக 15 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் வாழ்ந்து வருகிறோம். திடீரென்று எங்கள் கிராமத்து மக்கள், இந்த இடம் இந்துக்களுக்கு சொந்தமான இடம் ஆகவே கிறிஸ்தவர்களாகிய நீங்கள் உடனடியாக இங்கிருந்து போய் விடுங்கள், இங்கு உங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று மிரட்டல் விடுத்து எங்களை தாக்கினார்கள்” என்று கூறினார். கமிலா நாயக்கின் மகன் ஜெயா “நாங்கள் காவல்துறையிடம் புகார் அளித்தோம். ஆனால் காவல்துறை முதல் தகவல் அறிக்கையை (FIR) இன்னும் பதிவு செய்யவில்லை. பல்வேறு அரசு அதிகாரிகளின் பார்வைக்கு இதை எடுத்துச் சென்றும் பலனில்லை. பிறகு ஒடிசா உயர்நீதிமன்றத்தை நாடினோம். தற்போது ஒடிசா உயர்நீதிமன்றமானது நாங்கள் இந்த இடத்தில் பழையபடி தங்குவதற்கும் வசிப்பதற்குமான எங்களின் உரிமையை நிலைநாட்டியுள்ளது” என்று கூறினார்.
கமிலா நாயக்கின் பங்குத்தந்தை அசோக் குமார், “கமிலா நாயக்கின் குடும்பத்தில் ஏறக்குறைய 15 பேர் இருக்கிறார்கள். அவருக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களும் அருட்கன்னியர்களாக இருக்கிறார்கள். அருட்சகோதரி ஜீமி கமிலஸ் சபையில் சேர்ந்து தமிழ்நாட்டில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவரின் தங்கை அருட்சகோதரி ஜரானா உர்சுலின் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து மைசூரில் பணியாற்றுகிறார். இங்கு வாழ்வதற்குரிய எல்லா உரிமைகளும் கமிலா நாயக்கின் குடும்பத்திற்கு இருக்கிறது. கிறிஸ்துவர்கள் என்பதற்காக இப்படி தாக்கப்படுவது உண்மையாகவே வேதனைக்குரிய ஒன்று. இது குறித்து எங்களது மறைமாவட்ட ஆயரிடம் தெரிவித்திருக்கிறோம்” என்று கூறினார்.