எல்லாவற்றையும் மன்னியுங்கள், இயேசுவின் அரவணைப்புள்ள பார்வையுடனும் அமைதியான புரிதலுடனும் எல்லாவற்றையும் மன்னியுங்கள் என்றும், இவ்வாறு நாம் மன்னிக்கும் போது விண்ணகத் தந்தையால் மன்னிக்கப்படுவோம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். மார்ச் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை உரோம் ட்ரையன்ஃபேல் உள்ள புனித மரியா டெல்லே கிரேஸி ஆலயத்தில் தவக்காலத்திற்கான 24 மணிநேர ஆராதனை துவக்கம், ஒப்புரவு அருளடையாளம் மற்றும் திருப்பலியை சிறப்பித்து மறையுரையாற்றியபோது திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு கூறினார்.
ஒப்புரவு அருளடையாளம் என்பது, துன்புறுவதற்கான நேரமல்ல மாறாக அமைதியைப் பெறுவதற்கான நேரம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லூக்கா நற்செய்தி அதிகாரம் 18:9-14ல் வாசிக்கப்பட்ட பரிசேயர் வரிதண்டுபவர் செயல்முறைகள் பற்றியும் விளக்கினார்.
பரிசேயர் பெருமையுடன் தனியாக நின்று, கடவுள் முன் தனது இதயத்தைத் திறப்பதற்குப் பதிலாக, தனது பலவீனங்களை பகட்டுத்தனத்தில் மறைக்கிறார் என்றும், வரிதண்டுபவரோ வெகுதொலைவில் நின்று, கடவுள் முன் தன் பாவங்களை அறிக்கையிட்டு அவரது இரக்கத்தைப் பெறுகின்றார் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
நமது வாழ்வில் நாமும் பெருமிதம், பகட்டு, சாதனை, திறமை போன்றவற்றை முன்னிறுத்தி நமது பாவ இயல்புகளை மறைக்காது, வெளிப்படையாக இயல்பாகக் கடவுள் முன் அறிக்கையிட்டு அவரது இரக்கமுள்ள அரவணைப்பைப் பெற வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார்.
ஆயக்காரர் தொலைவில் நின்றதை சுட்டிக்காட்டி பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நமக்கும் மற்றவர்களுக்கும் இடையில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியை நாம் பாதுகாக்கும் போது உண்மையான உரையாடல் நடைபெறுகிறது என்றும், இது ஒவ்வொருவரையும் பாதிக்காமல் அவரவர் சுதந்திரக் காற்றை சுவாசிக்க அனுமதிக்கும் ஆரோக்கியமான இடைவெளி என்றும் எடுத்துரைத்தார். இந்த இடைவெளியானது உரையாடல் மற்றும் சந்திப்பை ஏற்படுத்தி, தூரத்தைக் குறைத்து நெருக்கத்தை உருவாக்குகின்றது என்றும், வரிதண்டுபவரைப் போல இந்த வழியில் தொலைவில் நின்று கடவுளை நெருங்குவதை சாத்தியமாக்குகிறது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
வாழ்க்கையில் பலவீனம் மற்றும் அலட்சியத்தினால் நாம் செய்யும் தவறுகளுக்காக மனம் வருந்தும்போது, கடவுள் நமக்காகக் காத்திருக்கிறார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒப்புரவு அருளடையாளத்தின்போது நமக்காகக் காத்திருக்கும் கடவுளுக்கு நம்மை பாவ இயல்பு என்னும் இருளில் மறைத்து கொள்ளாமல், நம் தவறுகளை கடவுளின் இரக்கத்திற்கு ஒப்படைப்போம் என்றும் கூறினார்.