Namvazhvu
“கடவுளுக்கு கணக்குப் பார்க்கத் தெரியாது” மன்னிப்பு - மனமாற்றம் - மன அமைதி
Wednesday, 29 Mar 2023 10:43 am
Namvazhvu

Namvazhvu

கடவுளுக்கு கணக்குப் பார்க்கத் தெரியாதுஎன்பது, நான் சிறுவனாக இருந்தபோது, அடுக்கு மொழியில் மறையுரையாற்றி என்னை மிகவும் கவர்ந்த எனது பங்குத்தந்தை அடிக்கடி பயன்படுத்திய ஒரு கூற்று. அப்பொழுது எனக்கு முழுமையாக இதன் அர்த்தம் புரியவில்லை என்றாலும், அது என் ஆழ்மன ஆளியில் விழுந்த சிறு துளியாக கலந்து நின்றது. நாம் செய்யும் ஒவ்வொரு குற்றத்தையும், பாவத்தையும் கடவுள் கணக்கில் வைத்துக் கொள்வதில்லை. ஒருவேளை வைத்திருந்தால் நம்மால் நிம்மதியாக வாழ்ந்திருக்க முடியுமா? வாழத்தான் முடியுமா? என்பது வினாக்குறியே.

நம் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் நாம் அனுதினமும் செய்யும் ஒவ்வொரு பாவத்திற்காக கடவுள் நம்மை தண்டித்திருந்தால் என்னவாயிருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. நமது வாழ்வின் கதையை எழுவதற்கு நம்மிடம் எழுதுகோலை கொடுத்துவிட்டு, இரப்பரை கடவுளே வைத்துக் கொண்டாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. அதனால் தான் திரும்ப திரும்ப ஒரே தவறை செய்துகொண்டு, உணர்வற்று வாழும் நம் பாவத்தை நம்மை அறியாமலேயே தொடர்ந்து தனது ரப்பரால் அழித்துக் கொண்டிருக்கிறார்.

ஆம்! அந்த இரப்பர் வேறேதுமில்லை, அது மன்னிப்பு என்னும் அந்த விந்தை மருந்து. தனது சாயலிலே படைத்த நம்மிடம் அந்த அழிப்பான் இல்லாமலாப் போகும். கண்டிப்பாக இருக்கிறது. நமது பென்சிலின் மறுமுனையில் இருக்கும் ரப்பரை நாம் இன்னும் கண்டுகொள்ளவில்லை () அதனைச் சரிவர போதுமான அளவு பயன்படுத்துவதில்லை என்பதுதான் அர்த்தம்.

மன்னிப்பின் மாண்பு

நம்மில் பலருக்கு மன்னிப்பைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததே நாம் மன்னிப்பை வாழ்வாக்குவதற்கு முயலாமல் () இயலாமல் போவதற்கு ஒரு காரணமாக அமைகிறது. நாம் மனமுவந்து நமது மனக்கசப்பையும், காயத்தையும், வலியையும், கோபத்தையும் விட்டுவிடுவது () தாண்டி வருவதே மன்னிப்பு என எளிதாக புரிந்துகொள்ளலாம். மேலும், நிபந்தனையின்றியும், வரம்புகளின்றியும் நம் மீது தமது இரக்கத்தையும் கனிவையும் தொடர்ந்து பொழிந்துவரும் இறைவனுக்கு நாம் கொடுக்கும் பதில்மொழியாகக்கூட மன்னிப்பின் அர்த்தம் காணலாம். கிறிஸ்தவர்களாகிய நமக்கு மன்னிப்பு எவ்வளவு முக்கியம்? கிறிஸ்துவின் சீடர்களாகிய நாம் கடவுளின் அளப்பரிய அன்புக்கு சான்றுபகரக் கடமைப்பட்டுள்ளோம். நலமளித்து  ஒப்புரவு அளிக்கும் கருவிகளாக இவ்வுலகில் வாழ்வதன் மூலமாக நாம் இதனை வெளிப்படுத்தலாம்.

சிறப்பாக நமக்கெதிராக செயல்பட்டு, நம்மைக் காயப்படுத்தி பகைமை பாராட்டியவர்களை, நாம் மன்னிப்பதன் மூலமாக அர்த்தமுள்ள கிறிஸ்தவ வாழ்வை நம்மால் வாழ இயலும். நமது மற்றும் மற்றவர்களின் பாவங்கள் நம்மைக் காயப்படுத்துவதுபோல, மன்னிப்பு நமக்கும் மற்றவருக்கும் நலமளிக்கிறது. மன்னிப்பு என்னும் மருந்தின்

மூலமாக காயப்பட்டு, உடைபட்டு, வலியுடனும், கசப்புடன் இருக்கும் இவ்வுலகில், நலமளிக்கும் மருத்துவர்களாக பணியாற்ற வேண்டிய நமது கடமையை தவக்காலம் நினைவூட்டுகிறது.

பிடித்த மந்திரம்

தவக்காலத்திலாவது மன்னிப்பால் விந்தை செய்யும் மந்திரம் நம்மிடம் இருக்கிறது என்பதை உணர்ந்து, நமது வீடுகளிலும், வீதிகளிலும் நடமாடும் புதுமைகளாக வலம்வர அழைக்கிறார் நம் ஆண்டவர். கடவுள் நம்மை அக்கறையோடு படைத்தார், அன்போடு பாதுகாக்கிறார்மன்னித்து பராமரிக்கிறார்  என்பதையும் தாண்டி, வாழ்க்கை நமக்கு இன்னும் அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும் தெரிகிறதென்றால் அதற்கு காரணமே, தகுதியற்றவர் என நமது குறுகிய, குறையுள்ள, சராசரி மனித மனம் ஒதுக்க நினைக்கும் ஒரு சிலரை, கஷ்டப்பட்டும், இஷ்டப்பட்டும் நாம் தொடர்ந்து மன்னித்து வருவதால்தான்.

அதேபோல நமது குறைகளையும், தகுதியையும் தாண்டி இன்னும் பலபேர் நம்மை மன்னித்து அரவணைப்பதால்தான். மன்னிப்பு என்னும் விழுமியத்தை, பதமாக, பக்குவமாக, பத்திரமாக நாம் பயன்படுத்துகிறோமா? மன்னிப்பு கொடுப்பதற்கான பெருந்தன்மையும், மன்னிப்பு கேட்பதற்கான தாழ்ச்சியும் நம்மிடம் இருக்கிறதா? நமது உரையாடலில் அடிக்கடி மன்னிப்பு என்னும் வார்த்தை இடம் பெறுகிறதா? தமிழில் நமக்குப் பிடித்த வார்த்தை எதுவென்று கேட்டால், அது மன்னிப்பு தான் என்பதை நமது அனுதின வாழ்க்கை உரக்கச் சொல்லுகிறதா? இந்த தவக்காலத்தில் இத்தகைய உன்னதமான ஒரு கிறிஸ்தவ மதிப்பீட்டைப் () மந்திரத்தைப் பற்றி கொஞ்சம் சிந்தித்து, ஆய்வுசெய்வோம்.

இறைப்படிப்பினை

கடவுள்  பெருந்தன்மையோடு தொடர்ந்து நம்மை மன்னித்து வருகிறார் என்று திருப்பாடல் ஆசிரியர், நமக்கு ஊக்கமூட்டுகிறார்: “நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர்” (திபா 130:3); “ஆண்டவரேநீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர்” (திபா 86:5). எனவே, ,நாமும்எழுபது தடவை ஏழுமுறை” (மத் 18:22) மன்னிக்கவேண்டுமென இயேசு எதிர்பார்க்கிறார். அது மட்டுமல்ல; அவர் கற்றுக்கொடுத்த செபத்தில் பல தேவைகள் முன்வைக்கப்பட்டாலும், மன்னிப்பிற்கு மட்டும் ஒரு சிறு நிபந்தனையை () வரையறைக்கூறை இணைக்கிறார்:  “எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும்” (மத் 6:12). தொடர்ந்து, “உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார்” (மத் 18:35; மத் 6:15) என்று மன்னிப்பு கொடுப்பதையும், பெறுவதையும் மன்னிப்பின் மாண்பாகியகடவுள்-மற்றவர்-நாம் என்ற தவிர்க்க இயலாத முப்பரிமாணத்தோடு அழகாக கோர்க்கிறார். ஆனால் மன்னிப்பது அவ்வளவு எளிதல்ல என்பது நாம் அறிந்ததே. கத்தோலிக்க திருமறைக்கல்வி (2843) கூறுவதுபோல, மன்னிப்பது முற்றிலும் நமது கையில் இல்லை; நமது இதயத்தை முழுமையாக நாம் தூய ஆவியிடம் கையளிக்கும்போது, அவர் நமது காயங்களை கனிவாக மாற்றி, நமது நினைவுகளை தூய்மையாக்கி, நமது வலிகளை செபமாக மாற்றுவார். அதோடு சேர்ந்து, நம் மத்தியில் உலா வரும் மன்னிப்பின் மகாத்மாக்களிடமிருந்தும் நாம் பாடங்களை கற்பது நல்லது.

இழப்பு இலாபமாகும்?!

மன்னிப்பில் நாம் இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால், அதனால் வரும் இலாபத்திற்கு எல்லை இல்லை.கூட்டத்திலிருந்த எல்லாருமே ஸ்கூட்டர்காரனை திட்டும்போது, ஜோசப்பின் முதலாளி அவனைத் துரத்தவோ, வசைபாடவோ () போலீசிடம் புகார் கொடுக்கவோ நினைக்கவில்லை. தேவையில்லாமல் தன்னுடைய சக்தியையும், ஆற்றலையும் விரயம் செய்யவும் விரும்பவில்லை. மாறாக, அந்த கணப்பொழுதில் அவனை மன்னித்துவிட்டு, தான் இழந்த காசை எப்படி பெறலாமென்று யோசிக்க ஆரம்பித்தார். நிதானத்தை இழந்து கோபப்படாமல், தனது வெறுப்பை வார்த்தை வெடிகளாக்காமல் மன்னித்ததால் அந்த முதலாளியால் தெளிவாக சிந்தித்து, முடிவெடுக்க முடிந்தது. அதனால் அவருக்கு அதிகமான இலாபமும் கிடைத்தது. ஒருவரை மனதார மன்னிக்கும்போது நம்மால் தெளிவான முடிவுகளை மட்டுமல்ல; மாறாக, சிறப்பாக செயல்படவும் முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த சான்று. மன்னிக்கும்போது நமது தான் என்ற அகந்தை, கோபம், வெறுப்பு, மனக்கசப்பை நாம் இழக்கிறோம். ஆனால், சொல்லற்கரிய மன அமைதியையும், இழந்த உறவையும் மீண்டும் நமதாக்குகிறோம். அதனால்தான் மன்னிப்பதும், மன்னிப்பு கேட்பதும் விண்ணகத்திற்கான எளிய வழிகளும், வாயில்களுமாய் இருக்கின்றன.

மன்னிப்பவரே பலசாலி!

சில சமயங்களில் மன்னிப்பவர்கள் வலிமையற்றவர்களோ, ஏமாளிகளோ, திராணியற்றவர்களோ என்று எண்ணத் தோன்றும். ஆனால், மன்னிப்பவர்கள் பலசாலிகள், வலிமையானவர்கள். ஏனென்றால், “மன்னிப்புகடினமான ஒன்றாக இருந்தாலும், அது நமது பலவீனத்திலிருந்தல்ல; மாறாக, நமது மனவலிமை என்னும் பாறையிலிருந்து அழகாக துளிர்விடும் ஓர் இளந்தளிர். மன்னிப்பு - அது ஒரு ஞானம், வரம், கலை, தியாகம், பரிசு, திறமை. அது நம்மையும் மற்றவர்களையும் குணமாக்கும் ஓர் அழகான ஆசீரும்கூட. மன்னிப்பு என்பது நமது கை நிறைய மல்லிகைப் பூக்களை வைத்துக் கொண்டு அதை மற்றவர்மேல் தூவுவதற்கு ஒப்பானது. அந்த பூக்கள் நமது கையிலும் வாசனையை விட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை. மன்னிப்பு நமது மனதிற்கு நிம்மதியையும், அமைதியையும் தருவதோடு நம்மைக் காயப்படுத்தி கஷ்டப்படுத்தியவர்களுடன் நம்மை மீண்டும் உறவுக் கயிறுகளால் கட்டிப்போட்டு, நமது ஒற்றுமையைப் பலப்படுத்துகிறது. மன்னிக்கத் தெரிந்தவருக்கு மட்டுமே மன்னிப்பு கேட்கவும் தெரியும். இவை இரண்டிற்கும் நம் மனவலிமையும் பலமும் இங்கு தேவையாகிறது.

மன்னிப்பின் மூன்று முகங்கள்

நமக்கு காயத்தோடு கூடிய வலியைத் தந்தவர்களை நாம் மன்னிக்கும்போது

(i) நாம் நம்முள்ளிருக்கும் தெய்வத் தன்மையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகிறோம். நம்மை கடவுள் மன்னித்ததுபோல நாமும் பிறரை மன்னிக்கிறோம்.

(ii) பிறரை நாம் மன்னிக்கும்போது, நாம் பட்ட காயங்களின் கசப்புத் தன்மையிலிருந்தும், காயங்களின் வலி உருவாக்கிய வெறுப்பிலிருந்தும் நாம் விடுதலையடைகிறோம். மன்னிக்க மறுப்பவர்கள் தங்களுடைய காயத்தை இன்னும் ஆழமாக்கி ரணமாக்குகிறார்கள். மன்னிப்பு நம்மை உடல், உணர்வு, மனம் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் விடுதலைபெற்றவர்களாக மாற்றுகிறது. நமது செப வாழ்விற்கு இடையூறாக இருக்கும் அனைத்து தடைகளையும் மன்னிப்பு தகர்த்தெறிகிறது. அதோடு தூய ஆவி எளிதாக நம்மை நிரப்பும் வாய்க்காலாகவும் செயல்படுகிறது.

(iii) மன்னிப்பு - அதை கொடுப்பவரையும் பெறுபவரையும் பலப்படுத்துகிறது.

மன்னிக்காதபோது நாமும் நமது சக்தியை வீணாக்குகிறோம், பிறரையும் வலுவிழக்கச் செய்கிறோம். ஆனால், நாம் யாரை மன்னிக்கிறோமோ அவருக்கு அதிக ஆற்றலைக் கொடுத்து மீண்டும் புது வாழ்வைத் தொடங்க ஆவன செய்கிறோம். இதைத்தான் இயேசு செய்தார். யார் யாரையெல்லாம் அவர் மன்னித்தாரோ அவர்கள் புது வாழ்வை ஆரம்பித்தார்கள் என்பதை நற்செய்தியில் நாம் பல இடங்களில் வாசித்தறியலாம்.

கணக்கு கனிவாகும்

வாழ்வில் கணக்கு பார்க்காமல் வாழ்ந்து, வரம்பற்ற அன்போடு நம்மை மன்னிக்கும் ஒருமெய்-வாழ்வியலைகடவுள் நமக்கு காவியமாக விட்டுச் சென்றிருக்கிறார். நாம் எப்படி? நீ எனக்கு செய்தது போலவே, நானும் உனக்கு செய்வேன் என்றமொய்-வாழ்வியல்நமது அனுதின உறவாடல்களுக்கு பொருந்தாது வருந்தி நிற்கிறது. எனக்கு செய்யப்பட்ட நன்மையைவிட ஒரு மடங்கு அதிகம் செய்வேன். எனக்கெதிராகச் செய்யப்பட்ட தீமையை மன்னிப்பு என்னும் நன்மையால் வெல்லுவேன் என்ற நேரிய மனப்பாங்கு நம்மில் மேலோங்கும்போது, கணக்கிற்கு நம் உறவாடல்களில் கல்லறை கட்டிவிடலாம். தவறுகளைப் பட்டியலிட்டு குறிப்பெடுப்பதற்கு வாழ்க்கை ஒரு கணக்குப்பாட வகுப்புமல்ல; மனிதர்கள் கணக்கிடுவிகளும் அல்ல. நமது கிறிஸ்தவ உறவாடல்களில் பிறரின் தவறுகளைக் கூட்டி, பெருக்கி வாழ்வதைவிட, மன்னிப்பு என்னும் கருவியால் கணக்கை கனிவாக்கி, வாழ்வை அனைவரும் சுவைக்கும் கனியாக்குவோம். “நானும் தீர்ப்பு அளிக்கவில்லை.…இனி பாவம் செய்யாதீர்” (யோவா 8:11) என்ற இயேசுவின் மன்னிப்பு, கணக்கைத் தாண்டிய கனிவை அப்பெண்ணின் வாழ்வில் உருவாக்கியது.

கசப்பு கரும்பாகும்

நமக்கெதிராக மற்றவர் செய்யும் தீங்கும், துரோகமும் நமது மனங்களில் நீங்கா கசப்பை, கோபம், வைராக்கியம், ஆணவம், வெறுப்பின் வடிவில் விட்டுச் செல்கின்றன. விளைவு நமது சிந்தனையில் தொடங்கி நமது நடைமுறை வாழ்வே கசந்து நிற்கும். நமக்கு வலியைக் கொடுத்தவர்களின் இருத்தலும், இயக்கமும், தவிர்க்க இயலா சந்திப்புகளும், அந்த கசப்பை இன்னும் வீரியமாக்கும். தேவையில்லாமல் நாம் மன்னிக்க மறுப்பவர்களையும், நம்மை மன்னிக்காதவர்களையும் நம் சிந்தனை சிம்மாசனத்தில் இலவசமாக உட்கார வைப்பதைவிட, அவர்களை மன்னித்து, சுதந்திரமாக பறக்க விட்டு, நாமும் விடுதலைக் காற்றை சுவாசித்து, நமது கசந்த நினைவுகளை கரும்பாக மாற்றுவோம். வாழ்வின் அடுத்த கணமே நிச்சமற்றதாக இருக்கும்போது, சேமிக்கும் நினைவலைகளை கசப்பு செங்கற்களால் உருவாக்குவதைவிட, நமக்கு மன அமைதி தரும் மன்னிப்பில் தோய்த்து, நம் குறுகிய வாழ்வில் கரும்புப் பாலங்களை கட்டி நம் சூழலை இனிப்பாக்குவோம். மன்னிப்பின் ஊதாரித் தந்தை, வெறுப்பு என்னும் கசப்பை தம் மகன்மேல் உமிழாமல், ஊதாரிக்குமகன்என்னும் உரிமையை மீண்டுமளித்து (லூக் 15), மன்னிப்பால் மீண்டும் அவன் வாழ்வையும், தனது வாழ்வையும் கரும்பாக்கினார்.

காயங்களே கதவாகும், சாளரமாகும்!

நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு புரிதலின்மையும், அதனால் விளையும் பிரிவும், பழியும் நம்மில் காயங்களையும், அதன் இலவச இணைப்பாக வலியையும் விட்டுச் செல்கின்றன. காயங்கள் மன்னிப்பு என்னும் களிம்பை காணாதவரை ரணமாகி, சில சமயங்களில் நாம் செய்யாத தவறுகளுக்குக்கூட நமக்கு நாமே தண்டனை கொடுப்பது போலாகிவிடும். வாழ்வில் நாம் அனுபவிக்கும் காயங்களை நாம் கிறிஸ்தவ மதிப்பீடுகளின்படி சரிவர கையாளாதபோது, அவை நமது உறவு மனைகளுக்கான வழிகளை மறைத்து, தொடர்புக்கான அனைத்து சாளரங்களுக்கும் தாழிட்டு, நம்மை தனிமைப்படுத்திவிடும். ஆனால், காயங்களை மன்னிப்பு மருந்தால் ஆற்றும்போது, நாம் நலமடைந்து, தாளிடப்பட்ட நம் உறவுக் கதவுகள் மீண்டும் திறந்து, நமது உறவு மனைகள் கொண்டாட்டம் நிறையும் வீடுகளாக மாறும். தன்னை மறுதலித்த பேதுருவை மன்னித்து, தன் ஆடுகளை பேணுவதற்கான கொட்டகைகளின் கதவுகளை இயேசு திறந்தார். சக்கேயுவையும் மன்னித்து, அவரோடு விருந்துண்ண வாயில்களை திறந்திடச் செய்தார் இயேசு. நமது காயங்களை புது வாழ்விற்கான கதவுகளாக்குவோம்.

இயேசுவே முன்மாதிரி

இத்தகைய மன்னிப்பு என்னும் உறவு பரிமாற்றம் அவ்வளவு எளிதானதல்ல; அதற்கு தொடர் உந்துதலும் உற்சாகமும் நமக்கு தேவையாகிறது. மன்னிப்பின் ஆழத்திற்கும், உச்சத்திற்கும் ()ம்மைக் கொண்டு சென்றவர் நமதாண்டவர் இயேசு. பெரும்பாவியாகிய விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை அவர் மன்னித்தது (யோவா 8) ஒரு இனிய புரட்சி. தன்னைக் கொலை செய்தவர்களையும் எளிதாக மன்னித்து (லூக் 23:34), மன்னிப்பின் சிகரத்தையே தொட்டது வரலாற்றின் அழியா ஆவணம். மன்னிக்கும்போது கணக்கு பார்க்கக் கூடாது (மத் 18:22), நம்மைக் காயப்படுத்தியவர்களைப் பழி வாங்கக் கூடாது (மத் 5:38-42), நமது பகைவரிடத்திலும் அன்பாயிருக்க வேண்டும் (லூக் 6:27), நாம் மன்னிக்கும்போதுதான் நாமும் மன்னிக்கப்படுவோம் (லூக் 6:37), சுகமும், அதிசயங்களும் நிகழும் (மாற் 2:5), புது வாழ்வு பிறக்கும் (லூக் 19:1-10), முதலில் மன்னித்துவிட்டு பின்பு செபிக்க வேண்டும் (மாற் 11:25) என்றெல்லாம் மன்னிப்பின் பல முகங்களை இயேசு நமக்கு தனது வாழ்வால் அறிமுகம் செய்திருக்கிறார்.

தனது உறவுப் பாடத்திட்டத்தில் கணக்கு இடம் பெறாததால் தான் இயேசுவின் உறவாடும் உத்திகள் அவரது சமகாலத்தவரிடமிருந்து வேறுபட்டிருந்தது. கண்ணுக்குக் கண் வேண்டாம்; உங்கள் மேலுடையை கேட்பவருக்கு அங்கியையும் கொடுங்கள்; உங்கள் சகோதரருக்கு உங்கள்மேல் மனத்தாங்கல் இருந்தால், நீங்கள் போய் நல்லுறவு ஏற்படுத்துங்கள்; கடவுள் நல்லோர் மேலும் தீயோர் மேலும் கதிரவனை உதித்தெழச் செய்கிறார் (மத் 5, 6) உங்கள் பகைவருக்கு அன்பையும், வெறுப்பவருக்கு நன்மையையும், சபிப்பவருக்கு ஆசியையும், இகழ்ந்து பேசுவோருக்கு செபத்தையும் கொடுங்கள்; ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் காட்டுங்கள். உங்கள் பொருட்களை எடுத்துக் கொள்பவர்களிடம் திருப்பிக் கேட்காதீர்கள்; திரும்ப கிடைக்கும் என எதிர்பார்த்து கடன் கொடுக்காதீர்கள். நீங்கள் கொடுக்கும்போது, அமுக்கி குலுக்கிச் சரிந்து விழும்படி உங்கள் மடியில் கொட்டுவார்கள் (லூக் 6), எழுபது தடவை ஏழுமுறை மன்னியுங்கள் (மத் 18:22), தொண்ணூற்றொன்பது ஆடுகளை விட்டுவிட்டு, காணாமற்போன ஒரு ஆட்டை தேடுங்கள் (லூக் 15:4) - இவையெல்லாம் இயேசுவின் உறவாடலில் கணக்கிற்கு இடமேயில்லாமல் மன்னிப்பு மேலோங்கி இருந்ததைக் காட்டுகிறது. உறவில் நம்மைப் பிரிக்கும் கணக்கு தவிர்த்து, நம்மை பிணைக்கும் கனிவும் இரக்கமும் பேணுவோம்.

ஒப்புரவு அருட்சாதனம்

மன்னிப்பு என்பது வெறும் மனித செயல் அல்ல. இறைவன் நம்மோடிருந்தால், அவரை நம்மில் செயலாற்ற அனுமதித்தால் மன்னிப்பு நமக்கு எளிதாகும். அதற்கான ஒரு சிறந்த வாய்ப்புதான் ஒப்புரவு அருட்சாதனம். மன்னிப்பு மழையில் நாம் நனைந்து, நாமே மன்னிப்பு மழையாகலாம்.

நாம் விலையில்லாமல் பெற்று, இலவசமாக மற்றவரோடு பகிர்வதற்கு இது ஒரு வாய்க்காலாக அமைகிறது. ஒப்புரவு அருட்சாதனத்தின் வழியாக கடவுள் தம் இரக்கத்தால் நம்மை மன்னித்து, பிறரையும் நாம் எளிதாக மன்னிக்கும், மன்னிப்பு வேண்டும் அமைதியின் கருவிகளாக அனுப்பி வைக்கிறார். “நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார்” (1யோவா 1:9). நமது தீச்செயலை கடவுள் இரக்கத்தோடு மன்னிப்பதோடு, நம்முடைய பாவங்களை இனிமேல் நினைவுகூர மாட்டார் (எபி 8:12). திருத்தந்தை பிரான்சிஸ் கூறுவதுபோல,கடவுள் நம்மை மன்னிப்பதில் ஒருபோதும் சோர்வடைவதில்லை. நாம் தான் அவரின் இரக்கத்தை மீண்டும் மீண்டும் நாடுவதில் களைப்படைந்து விடுகிறோம்.

எனவே, இந்த தவக்காலத்தில், மன்னிப்பு கொடுப்பதற்கும் கேட்பதற்கும் நமது ஆணவம் தடைபோட்டால், தாழ்ச்சியால் அதனை கடந்து சென்று, தேவையெனில் உடைத்தெறிந்து, ஒப்புரவு அருட்சாதனம் வழி இறை ஆசீர் பெறுவோம்! நாமே ஆசியாக மாறுவோம்! ஏனென்றால், மன்னிப்பு இல்லா மனமாற்றம் வெறுமை. மன்னித்து மனமாறினால், விளைவதுமன அமைதி. அந்த அமைதியே உயிர்ப்பின் முன்சுவை!