கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சார்பாக மருந்துகள் விமானங்களில் அனுப்பப்பட்டு வரும் நிலையில், துருக்கிய தூதரகத்துடன் இணைந்து திருத்தந்தையின் சார்பாக மேலும் 10,000 மருந்துகளை அனுப்பியுள்ளது திருப்பீடத்தின் பிறரன்புப் பணித்துறை.
மார்ச் 27 திங்கள் கிழமை மற்றும் 28 செவ்வாய் ஆகிய தேதிகளில் புதிய மருந்துகளை அனுப்ப வேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆணையின் பேரில், நடவடிக்கை எடுத்து வரும் திருப்பீடத்தின் பிறரன்புப் பணித்துறை, இம்முறை துருக்கிய தூதரகத்தின் வேண்டுகோளின் பெயரில் 10,000 புதிய மருந்துகளை துருக்கியின் இஸ்தான்புல்லுக்கு அனுப்பி வைத்துள்ளது.
சிரியாவில், நிலநடுக்கம் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட 1கோடியே 50 இலட்சம் மக்களுக்கு, திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பான கர்தினால் க்ரஜெவ்ஸ்கி அவர்கள் வழியாக பெற்ற திருத்தந்தையின் பொருளாதார நிதிஉதவிக்காக ஏற்கனவே சிரியாவிற்கான திருப்பீடத் தூதரகத்தார் நன்றி செலுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், துருக்கியில் ஏறக்குறைய 20 இலட்சம் மக்களை இடம்பெயரச் செய்த நிலநடுக்கத்திற்குப் பிறகு, இலவசமாக மருந்துகள் மட்டுமல்லாது, அரிசி, தானியம், போன்ற உணவுப் பொருட்களும் குளிர்போக்கும் ஆடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள், போன்ற சூழ்நிலையைத் தாங்கும் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, அனைத்து இத்தாலிய தலத்திருஅவைகளிலும் CEI என்னும் இத்தாலிய ஆயர் பேரவை அறிவிப்பின்படி, துருக்கி மற்றும் சிரியா மக்களின் பொருள் மற்றும் ஆன்மிகத் தேவைகளுக்காக நன்கொடைகள் சேகரிக்கப்பட்டன. இது நம்பிக்கையுள்ள அனைத்து மக்களின் ஒற்றுமை மற்றும் பங்கேற்பின் உறுதியான அடையாளமாக சேகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2023 ஏப்ரல் 23 ஆம் நாள் வரை அஞ்சல் துறைக் கணக்கு எண்ணைப் பயன்படுத்தி தொடர்ந்து நன்கொடை அளிக்க முடியும் எனவும், 347013,என்ற வங்கிக் குறியீட்டு எண் அல்லது www.caritas.it என்ற இணையதளத்தின் வழியாக "துருக்கி-சிரியா 2023 நிலநடுக்கம்" என்று குறிப்பிட்டு பணம் செலுத்தலாம் என்றும் CEI அறிவித்துள்ளது.
முதல் அவசரநிலைகளை சமாளிக்க, CEI தனது 8xmille நிதியில் இருந்து 5,00,000 யூரோக்களை ஆரம்ப ஒதுக்கீட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.