மறைந்த கர்தினால் கார்ல்-ஜோசப் ராயூபெர் அவர்கள், திருஅவையின் உண்மையான மறைப்பணியாளர் என்றும், கடவுள் மக்களின் ஒற்றுமைக்காக, தன்னை அர்ப்பணித்து தனது ஒவ்வொரு செயல்பாடுகளையும் கிறிஸ்துவின் அன்பால் நிரப்பியவர் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார் .
மார்ச் 26 ஞாயிற்றுக்கிழமை மறைந்த ஜெர்மனி நாட்டுக் கர்தினால் கார்ல்-ஜோசப் ராயூபெர் அவர்களின் மறைவிற்கு அனுப்பியுள்ள திருத்தந்தையின் இரங்கல் தந்தியானது மைன்ஸ் மறைமாவட்ட ஆயர், பீட்டர் கொஹ்லக்ரா அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மறைந்த கர்தினால் ராயூபெர் அவர்களின் அருள்பணித்துவ வாழ்வு மற்றும் மேய்ப்புப்பணி வாழ்க்கையானது திருஅவைக்கு அவர் செய்த பணியால் விளங்குகின்றது என்றும், உரோமன் தலத்திருஅவை மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கடவுள் மக்களின் ஒற்றுமைக்காகத் தன்னை அர்ப்பணித்தவர் என்றும் அத்தந்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.
திருஅவையின் உண்மையான பணியாளராக, ஒவ்வொரு செயலிலும் கிறிஸ்துவின் அன்பால் நிரப்பப்பட்டவராகத் திகழ்ந்த கர்தினால் ராயூபெர் அவர்கள், மனிதகுலத்தின் மகிழ்ச்சிக்காக அத்தனையையும் செய்தவர் என்றும், மீட்பராம் இயேசுவின் இரக்கமுள்ள அன்பை என்றென்றும் அவர் பெற தான் செபிப்பதாகவும் அத்தந்தியில் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.