"மெக்சிகோவில் உள்ள சியூடட் ஜூவாரெஸ் என்ற இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்த புலம்பெயர்ந்தவர்களுக்காக இறைவேண்டல் செய்வோம்" என்றும், “கடவுள் பாதிக்கப்பட்ட மக்களைத் தம்முடைய அரசுரிமையில் ஏற்று, அவர்களுடைய குடும்பங்களுக்கு ஆறுதலைத் தருவாராக," என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
மார்ச் 29 புதன்கிழமை வத்திக்கானின் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு புதன் பொது மறைக்கல்வி உரையாற்றிய பின் இவ்வாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மக்களுக்காக செபிக்க ஒன்றிணையுமாறும் கேட்டுக்கொண்டார்.
டெக்சாஸ் எல்லைக்கு அருகில் மெக்சிகோவில் உள்ள சியூடட் ஜூவாரெஸ் குடியேறியவர்களுக்கான பகுதியில் மார்ச் 28 செவ்வாயன்று ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 38 பேருக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் கவலைகளையும் எண்ணங்களையும் செபங்களையும் வெளிப்படுத்தினார்.
உயிரிழந்தவர்கள் குவாத்தமாலா, ஹோண்டுராஸ், எல் சால்வடார், ஈக்வடார், கொலம்பியா மற்றும் வெனிசுலாவைச் சேர்ந்தவர்களாவர்.
மீண்டும் தங்கள் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவோமோ என்று அஞ்சி, குடிபெயர்ந்தோர் தடுப்பு மையத்தில் இருந்தவர்களே தங்கள் மெத்தைகளை எரித்து, தீயை ஏற்படுத்தியதாகவும், ஆனால் அது இவ்வளவு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர்கள் நினைக்கவில்லை என்றும் மெக்சிகோவின் அரசுத்தலைவர், அண்ட்ரெஸ் மானுவேல் லோபெஸ் ஆப்ரடோர் கூறியுள்ளார்.
மெக்சிகோ ஆண்டுதோறும் நூறாயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை நாடு கடத்தவும், பலருக்கு, மெக்சிகோவில் தங்கி வேலை செய்ய அனுமதிக்கும் தற்காலிக அனுமதியினையும் வழங்குகிறது.