குழந்தையாக நாம் நடக்கக் கற்றுக்கொண்டபோது எப்படியிருந்தோமோ, அதுபோல், தற்போதும் இறைவனின் கைகளைப் பிடித்துக்கொண்டு, அவரின் வழிநடத்தலில் நடைபோடுவோம் என திருத்தந்தை பிரான்சிஸ் உரைத்தார்.
"கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்" என இலாசரை இயேசு உயிர்ப்பிக்கும் நிகழ்வை விவரிக்கும் ஞாயிறு நற்செய்தி வாசகம் குறித்து, மார்ச் 26 ஆம் தேதி ஞாயிறன்று தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நண்பகல் மூவேளை செப உரையில் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு சிரமமான வேளையிலும் நாம் எழுந்து நின்று மீண்டும் நடைபோடுவதையே இயேசு எதிர்பார்க்கிறார் என கூறினார்.
அனைத்தையும் இழந்துவிட்டதாக எண்ணி நாம் மனம் சோர்ந்துப்போகும் நிலையில், இறைவன் தன் அளவற்ற வல்லமையால் நம்மை மீட்டெடுக்கிறார் என உரைத்த திருத்தந்தை, அனைத்து நம்பிக்கைகளும் இழந்துவிட்ட நிலையிலும், இலாசரை உயிர்ப்பித்த இயேசு, நம்மையும் காக்கிறார் என உரைத்தார். வலி தரும் இழப்புகளாலும், நோயாலும், கசப்பான ஏமாற்றங்களாலும், நம்பிக்கைத் துரோகம் போன்றவைகளாலும் நாம் நம்பிக்கையிழக்கும்போதும், நம்பிக்கையிழந்த மக்களை சந்திக்கும்போதும், ஒரு மூடப்பட்ட கல்லறைக்குள் இருளின் நடுவில் இருப்பதுபோல் தோன்றலாம், ஆனால், உண்மையில் நாம் தனியாக இல்லை, இயேசு இத்தருணங்களில் நம் அருகில் இருந்து நமக்கு வாழ்வளிக்கிறார் என உரைத்தார்.
எதிர்மறை எண்ணங்களால் நாம் ஒரு நாளும் நசுக்கப்படக் கூடாது, ஏனெனில், கடவுளை விசுவாசிப்பது மற்றும் அவரில் நம்பிக்கைக் கொள்வது என்பது இதிலிருந்து நம்மைக் காக்கும் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார். கல்லைப் புரட்டுங்கள், அதனுள் உள்ளவை அனைத்தையும் என்னிடம் நம்பிக்கையுடன் அச்சமின்றித் தாருங்கள். நான் உங்களுடன் உள்ளேன், உங்களை வாழவைப்பேன், என நம் ஒவ்வொருவரிடமும் இயேசு கூறுகிறார் என்றார்.
நாம் பலவேளைகளில் எழும்பி நடக்கும் சக்தியின்றி மனம் தளர்ந்திருக்கிறோம். ஆனால், நாம் நடந்து முன்னேறிச் செல்லவேண்டுமென ஊக்கமளித்து, நான் உன்னுடன் இருக்கிறேன் என இயேசு நம் ஒவ்வொருவரையும் நோக்கிக் கூறுகிறார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கையின்மை, அச்சம், சோக அனுபவங்கள், போன்ற நம்மைத் தளரவைக்கும் கட்டுக்களை அறுத்தெறிந்து, நம்பிக்கையை இறக்கவிடாமல், வாழ்வுக்குத் திரும்புங்கள் என புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளிடம் அழைப்புவிடுத்தார்.
இதயத்தில் சுமைகளையும் துன்பங்களையும் தாங்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும், இயேசுவை நோக்கி அவைகளைத் திறந்து, அவர் அன்பினை கண்ணாடி ஒளியில் பெற்று, அதனை நம் வாழ்வின் நடவடிக்கைகளிலும் வார்த்தைகளிலும் பிரதிபலிப்போம் எனவும் கேட்டுக்கொண்டார். பாவிகளாயிருக்கும் நாம் அனைவரும், கடவுள் நம்மை மன்னிப்பதுபோல், நாமும் ஒருவர் ஒருவரை மன்னிக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் திருத்தந்தை பிரான்சிஸ் முன்வைத்தார்.