5 பெண்கள் மற்றும் ஓர் அருள்பணியாளர் என ஆறு இறையடியார்களின் புண்ணிய பண்புகள் நிறைந்த வாழ்வு பற்றிய விவரங்களை ஏற்றுக்கொண்டு, அவர்களை, புனிதத்துவத்தை நோக்கிய பாதையில் உயர்த்துவதற்கான ஆணைகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அங்கீகாரமளித்தார்.
மார்ச் 23 ஆம் தேதி வியாழனன்று புனிதர் மற்றும் அருளாளர் நிலைகளுக்கு உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவரான, கர்தினால் மார்செல்லோ செமராரோ, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்து, 3 அருள்சகோதரிகள், 2 பொதுநிலைப் பெண்கள், ஒரு சலேசிய மறைப்பணியாளர் ஆகியோருக்கான புனிதத்துவப் பணிகளை துவங்குவதற்கான ஒப்புதல் பெற்றார்.
இத்தாலியைப் பூர்வீகமாகக் கொண்ட சலேசிய சபையின் ஈக்வடார் நாட்டு மறைப்பணியாளர் அருள்பணியாளர் கார்லோ க்ரெஸ்பி குரோசி, பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த பிரிஜிடின் சபை அருள்சகோதரி மரிய கேத்தரின் ஃபிளனகன், புனித திருமுழுக்கு யோவான் சபை அருள்சகோதரி லியோனில்டே, போர்ச்சுக்கல் நாட்டைச் சார்ந்த இயேசுவின் திருஇதய மருத்துவப் பணிபுரியும் சகோதரிகள் சபையைச் சார்ந்த அருள்சகோதரி மரியா டூ மான்டே பெரேரா, இஸ்பெயின் நாட்டைச் சார்ந்த நான்கு குழந்தைகளின் தாயான தெரசா என்ரிக்வெஸ் டி அல்வரேடோ ஆகியோரின் வாழ்வு புனிதர் பட்ட பணிகளுக்காக ஒப்புதல் பெற்றுள்ளது.
தாராள மனமும் தாயுள்ளமும் கொண்ட தெரசா என்ரிக்வெஸ் டி அல்வரேடோ 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இஸ்பெயினில் நம்பிக்கை நிறைந்த குடும்பத்தில் வளர்ந்தவர். குடும்பத்தினரின் வேண்டுகோளின்படி நாட்டின் அமைச்சரை மணந்து நான்கு குழந்தைகளின் தாயானார், பின் 1503 இல் கணவனை இழந்து கைம்பெண் ஆனார். நற்கருணையில் வீற்றிருக்கும் இயேசுவின் மீதான உறுதியான நம்பிக்கையும் அன்பும் இஸ்பானிய கவர்ச்சியிலிருந்து விலக்கி செபம், மற்றும் தொண்டுப்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள வழிவகுத்தது. அவர் டோலிடோவிற்கு அருகிலுள்ள டோரிஜோஸில் தங்கி எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து, ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களின் சார்பாக பணியாற்றினார்.
பிளேக் மற்றும் பஞ்சத்தால் அனாதையாக விடப்பட்ட சிறுவர்களுக்கு தாயாகவும், கல்வி கற்பிப்பவராகவும் செயல்பட்டார். தெருவோரப் பெண்களைப் பராமரித்து, நோயுற்றவர்களைக் கவனித்தார். தனது குடும்பத்தின் செல்வத்தை புத்திசாலித்தனத்துடனும் விவேகத்துடனும் நிர்வகித்து, அதைத் தொண்டுப் பணிகளுக்கும் வழிபாட்டுத் தலங்கள் கட்டுவதற்கும் ஒதுக்கி, 1529 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் நாள் இறந்தார்.