Namvazhvu
தலையங்கம் சர்வாதிகாரத்தின் கூர்முனை
Monday, 03 Apr 2023 06:27 am

Namvazhvu

மார்ச் 23, 2023 அன்று ராகுல் காந்தி மீதான குற்றவியல் அவதூறு வழக்கில் குஜராத்தில் உள்ள சூரத் மாவட்ட நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதனைத்தொடர்ந்து அவசர கதியில் தீர்ப்பு வந்த 24 மணி நேரத்திற்குள் புதுதில்லியில் உள்ள மக்களவைச் செயலகம் ராகுல் காந்தியை எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம்செய்து உத்தரவு பிறப்பித்தது. ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் அரசு அளித்துள்ள வீட்டிலிருந்து வெளியேறும்படியும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சியில்லா இந்தியாதான் எங்களின் கனவு என்று கங்கணம் கட்டி பாஜக கட்சி கடந்த ஒன்பது ஆண்டுகளாக திட்டமிட்டு செயல்படுகிறது. கூட்டணி கூட்டாளிகளை கபளீகரம் செய்வதோடு மட்டுமின்றி, சிதைத்து சின்னாபின்னமாக்குவதிலும் தீவிரமாக இயங்குகிறது.

ராகுல் காந்தி மட்டுமல்ல; சோனியா காந்தி, நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி என்ற ஒட்டுமொத்த காங்கிரசின் ஆளுமைகளை சிதைப்பதில் பாஜக அதீத கவனம் செலுத்துகின்றனர். பப்பு என்று ஓரங்கட்டவே முனைகின்றனர். வெற்றிகரமாக ஒற்றைச் சிந்தனையுடன் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி முன்னெடுத்த இந்திய ஒற்றுமை யாத்திரையும் பெருகிய மக்களின் ஆதரவும் வலதுசாரிகளின் வயிற்றில் புளியை கரைத்தது. ஆகையால் தான் புரளியை கிளப்புவதில் மும்முரமாக செயல்படுகின்றனர். ஹிண்டன்புர்க் அறிக்கை வெளியான நாளிலிருந்து அதானிமோடியின் கூட்டணி ஆட்டம் கண்டு வருகிறது. அதானியின் பங்குகள் மட்டுமல்ல; மோடியின் செல்வாக்கும் சேர்ந்தே சரிந்தது.

பிப்ரவரி 7 அன்று, ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இருக்கும் தொடர்பு குறித்து ஆதாரங்களோடு, புகைப்படங்களோடு பேசினார். முன்அனுபவம் இல்லாத அதானிக்கு எப்படி விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்க அனுமதி கொடுக்கப்பட்டன? 609 ஆம் இடத்திலிருந்து 3 ஆம் இடத்திற்கு அதானி உயர்ந்தது எப்படி? உங்களுடைய ஆதரவு இல்லாமல் அதானி வளர்ச்சியடையவில்லை என்று பேசினார். இதற்கு பதில் அளிக்கப்படவில்லை; ஆனால், ராகுல் காந்தி பேசிய அனைத்தும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன. நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஏகோபித்த குரல் நாடாளுமன்றத்தையே முடக்கியது. மோடியின் நண்பரான அதானி குறித்த விவாதத்தை விரும்பாத பாஜகவினரும் ராகுல் காந்தியின் லண்டன் உரை குறித்து விவாதிக்க வேண்டும், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குரல் கொடுத்து நாடாளுமன்றத்தில் எவ்விதத்திலும் நடைபெறாதபடி பார்த்துக்கொள்கின்றனர். 45 இலட்சம் கோடி மத்திய பட்ஜெட்டை எவ்வித விவாதமுமின்றி ஒப்புதல் தந்ததே ஒரு கேலிகூத்து.

ராகுல் காந்தியின் ஒவ்வொரு அசைவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வலதுசாரிகள், அவரை அரசியலிலிருந்து அப்புறப்படுத்தியே ஆக வேண்டும் என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் செயல்படுகின்றனர். லண்டனில் மிகவும் வெளிப்படையாக, ஜனநாயகத்துக்கு அடிப்படையான நிறுவன கட்டமைப்புகள் அனைத்தும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இந்தியாவில் பயணம் மேற்கொண்டால் தலித்துகள், சிறுபான்மையினர், மற்றும் பழங்குடியினருக்கு என்ன நேர்ந்து வருகிறது என்பதைக் காண முடியும். இது குறித்த விவாதங்களுக்கு பாஜக தயாராக இல்லை என்றுதான் எதார்த்தமாக பேசினார். சிபிஐ, அமலாக்கத்துறை, ரிசர்வ் பேங்க் போன்றவற்றை மோடி அரசு எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைப் பற்றியும் பெகாசஸ் பயன்படுத்தி எப்படி தன்னை உளவு பார்த்தது குறித்தும் பேசினார். மோடியின் மீதான தாக்குதலை தேசத்தின் மீதான தாக்குதலாக சித்தரித்து வலது சாரிகள் அரசியல் செய்கின்றனர். அதானியின்மீதான விமர்சனத்தைக் கூட தேசத்தின் மீதான தாக்குதல் என்று கொக்கரித்ததும் இவர்கள்தான்.

எதிர்வரும் மே மாதத்தில் கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே ஆம் ஆத்மி, ஆர்ஜெடி, திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கட்சிகளை அமலாக்கத்துறை சிபிஐ விசாரணைக் கொண்டு முடக்கி வரும் நிலையில், மிகப்பெரிய ஆளுமையாக உள்ள ராகுல் காந்தியையும் காங்கிரசையும் முடக்கவும், ஏனைய எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவும் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு உச்சபட்ச தண்டனை வழங்கச் செய்து, மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ளனர்.

ஏப்ரல் 13, 2019 அன்று கர்நாடக சட்டசபைத் தேர்தல் பரப்புரையின் போது, ராகுல் காந்தி அனைத்துத் திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டிருக்கின்றனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்று முடிகிறது ஏன்? என்று கொந்தளித்திருந்தார். இதை எதிர்த்து குஜராத் மாநில பாஜக எம்எல்ஏ பூர்னேஷ் மோடி, சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் ராகுல் காந்திமீது குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

கோலாரில் நடந்த நிகழ்வுக்கு டெல்லியில் வசிக்கும் ராகுல் காந்தியை எதிர்த்து சூரத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. தொடக்கத்தில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிக்கு போதுமான ஒத்துழைப்பு தராமல், காலம் தாழ்த்தி வந்தார் பூர்னேஷ் மோடி. குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கின் தீர்ப்புக்கு எதிராக தடையும் பெற்றார். பின்னர் வாபஸ் பெற்றார். ஒருகட்டத்தில் அந்த குறிப்பிட்ட நீதிபதி மாறுதலாகி புதிய நீதிபதி வந்த பிறகு வழக்கு அவசர அவசரமாக விசாரிக்கப்பட்டது. அதானி விவகாரத்தால் ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்த நிலையில், வழக்கு விசாரணை விரைவுப்படுத்தப்பட்டது.

அவ்வழக்கின் தீர்ப்பு மார்ச் 23 ஆம் தேதி வெளியான சூழ்நிலையும் தீர்ப்பும் விசாரித்த முன்னாள் நீதிபதியின் உடனடி மாற்றமும் சர்ச்சைக்குரியதே. ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.15000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் ஜாமீன் வழங்கி 30 நாட்கள் மேல்முறையீடு செய்வதற்கு அவகாசமும் வழங்கப்பட்டது. தீர்ப்பு வழங்கப்பட்ட 24 மணி நேரத்தில் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகவே குற்றவியல் அவதூறு வழக்கிற்கு வழங்கப்படும் அதிகபட்ச தண்டனையான இரண்டு ஆண்டு சிறை விதிக்கப்பட்டதாகவே தெரிகிறது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 8 -ன் படி பதவியில் இருக்கும் நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர்கள் கிரிமினல் வழக்குகளில் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு தண்டிக்கப்பட்டால் அவர்களின் பதவி தகுதி நீக்கம் செய்யப்படும். மேலும் தண்டனைக்காலம் முடிவடைந்து ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. ஒருவேளை இத்தீர்ப்பு முறியடிக்கப்படாத போது, ராகுல்காந்தி எட்டு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட இயலாது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பித்ததிலிருந்தே இந்திய ஜனநாயகத்தை இழிவுப்படுத்திய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக எம்பிக்கள், மார்ச் 17 ஆம் தேதி, ராகுலின் லண்டன் பேச்சு, மக்களவை விதிமுறை 223 -ன் படி ஏற்புடையதல்ல; இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் பேசிய ராகுல்காந்தியின் எம்பி பதவியை ஏன் பறிக்கக்கூடாது என்பது பற்றி சிறப்புக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று அவைத்தலைவரிடம் மனு கொடுத்தபோதே, அவர்களின் பின்புத்தியும் முன்திட்டமும் தெரிந்துவிட்டது. தங்களை எதிர்க்கும் கட்சிகள் என்றால் சிபிஐ-அமலாக்கத்துறை விசாரணை, மக்கள் உரிமை செயல்பட்டாளர்கள் என்றால் உபா கொடுஞ்சட்டம், சிறுபான்மை முஸ்லீம்கள் என்றால் என்ஐஏ விசாரணை என்று பாசிச வெறியுடன் மோடி தலைமையிலான பாஜக செயல்படுகிறது. ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்புகளையும் சிதைத்து வதைத்து கொண்டிருக்கிறது.

ராகுல்காந்தி மீதான பாசிச தாக்குதலின் காரணமாக, 18 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, ஜனநாயக விரோத தாக்குதலுக்கு எதிராக தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர். சனாதனத்திற்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. மக்களவை உறுப்பினர் திருமாவளவன் அவர்கள், ‘ஏற்கனவே விசாரித்த நீதிபதியை மாற்றிவிட்டு, ஒரு ஆர்எஸ்எஸ்காரரை அமரவைத்து, அவர் மூலமாக வாங்கிய தீர்ப்பு தவிர, வழங்கிய தீர்ப்பு இல்லை" என்று விமர்சிப்பதில் உண்மையில்லாமல் இல்லை.

ஜனநாயகத்தின் முகம் ஆளுங்கட்சி என்றால், அதை பிரதிபலிக்கும் கண்ணாடி எதிர்க்கட்சி. எதிர்க்கட்சியில்லா ஜனநாயகம் ஒரு கேலிகூத்து, அது சர்வாதிகாரமே. சர்வாதிகாரத்தின் கூர்முனைகள் இவ்வழக்கில் ஆங்காங்கே தென்படுகின்றன. மேல்முறையீடு செய்யும் வரை பொறுத்திராமல் 24 மணி நேரத்திற்குள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு என்பது தன் அரசியல் எதிரியை பழிவாங்குவதில் உள்ள பாஜகவின் பாசிச வெறியைத்தான் காட்டுகிறது.

அவதூறு மட்டுமே குற்றவியல் வழக்குக்கு ஒற்றை ஆதாரமானால், இந்தியாவில் எவரும் அரசியல் செய்ய இயலாது. ஒருவகையில் எல்லா அரசியல்வாதிகளுமே தண்டிக்கப்படாத குற்றவாளிகள்தான். ஜனநாயகத்தினை சர்வாதிகாரத்தின் கூர்முனை சிதைப்பதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.