தொழில்முறை படிப்புகளில் சேரும் கிறிஸ்தவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்று ஒடிசா மாநிலத்தின் கஜபதி மாவட்ட ஆட்சியர் லிங்கராஜ் அவர்கள் உறுதியளித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தின் கஜபதி மாவட்டத்தில் மத்திய அரசின் கண்காணிப்பின்கீழ் இயங்கும் ஜவகர் நவோதயா வித்யாலயாவில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த ஆதிவாசி சிறுமி ஒருவர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்தார். இதைக் குறித்து ஆய்வு செய்ய மாநில சிறுபான்மை ஆணைய பொதுச்செயலாளர் பல்லப் லீமா மற்றும் வழக்கறிஞர் அருள்சகோதரி சுஜாதா ஜெனா ஆகியோர் மாவட்ட ஆட்சியர் லிங்கராஜை மார்ச் 27 ஆம் தேதி சந்தித்தனர்.
ஆதிவாசி சிறுமி எப்படி இறந்தார் என்றும், இறந்து போன அவருக்கு நீதியும் அந்த குடும்பத்திற்கு ஏதாவது உதவியும் வழங்கப்பட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரை வலியுறுத்த இவர்கள் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது மாவட்ட ஆட்சியர், "இப்பள்ளியானது மத்திய அரசின் கீழ் இயங்குவதால் இதனுடைய செயல்பாடுகளில் நான் தலையிட முடியாது. அச்சிறுமியின் பிரேத பரிசோதனைக்கான அறிக்கை வந்த பிறகு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நீதிமன்றத்தின் உதவியை நாடலாம். பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் குடும்பத்திற்கும் அவருடைய பெற்றோர்களுக்கும் தேவையான பாதுகாப்பையும் நல்வாழ்வையும் நான் வழங்குவேன் என்று கூறி, கஜபதி பகுதியில் கிறிஸ்தவர்கள், குறிப்பாக பழங்குடியின கிறிஸ்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். எனவே இம்மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக 15 நூலகங்கள் கண்டிப்பாக அமைத்து தரப்படும். ஞாயிறு விவிலிய வகுப்புகள் நடத்துவதற்கும் இந்த நூலகங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று தன் உறுதுணையை வெளிப்படுத்தினார். ஆட்சியர் கிறிஸ்தவப் பள்ளியில் கல்வி பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.