திருப்பலி முன்னுரை
இன்று நாம் ஆண்டவரின் பாடுகளின் பெரிய வியாழனை கொண்டாடுகிறோம். இந்தப் பெரிய வியாழன் இரவிலே ஆண்டவர் திருத்தூதர்களோடு தமது இறுதி இரவு உணவை அருந்துகிறார். இந்த இரவு உணவில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இரட்டைப் பிள்ளைகளாக, நற்கருணை மற்றும் குருத்துவம் என்னும் இரண்டு திருவருட்சாதனங்களை பெற்றெடுக்கிறார். எதற்காக ஆண்டவர் இவ்விரு திருவருட்சாதனங்களையும் ஒரே இரவில் அல்லது ஒரே நேரத்தில் தோற்றுவிக்கிறார்? ஏனெனில், நற்கருணை இல்லாமல் குருத்துவம் இல்லை, குருத்துவம் இல்லாமல் நற்கருணை இல்லை என்பதை உணர்த்தவே ஆண்டவர் இயேசு கிறிஸ்து இவ்வாறு செய்கிறார். இதையே குருக்களின் பாதுகாவலரான புனித ஜான் மரிய வியான்னி, தனது வாழ்வின் தாரக மந்திரமாக ஏற்றுக் கொண்டார். நற்கருணையிலே இறைவன் தன்னையே முழுமையாக நமக்குத் தருகிறார். அதே போல் குருத்துவத்திலே மறுகிறிஸ்துவாக நமக்கு காட்சியளிக்கிறார். இவ்வாறு, ஒரே இரவில் ஆண்டவர் நற்கருணை மற்றும் குருத்துவத்தை ஏற்படுத்திய நிகழ்வையே இன்று நாம் சிறப்பாக கொண்டாடுகிறோம். இறைவன் இவ்விரவில் ஏற்படுத்திய இத்திருவருட்சாதனங்களுக்காய் அவருக்கு நன்றி செலுத்தவும், குருத்துவத்தை ஏற்படுத்திய இந்நாளில் நமது பங்கு குருக்களுக்காகவும், மண்ணின் மைந்தர்களுக்காகவும், நமது மறைமாவட்டத்தின் ஆயர் மற்றுமுள்ள குருக்களுக்காகவும், மேலும் நமது ஒட்டுமொத்த திருஅவைக்காகவும் இப்பெரிய வியாழன் திருப்பலி கொண்டாட்டத்தில் பக்தியோடு மன்றாடுவோம்.
முதல் வாசக முன்னுரை
அடிமைகளாய் இருந்த இஸ்ரயேல் மக்கள், ஆண்டவர் வாக்களித்த நாட்டிற்கு செல்வதற்கு முன்பாக, ஆண்டவர் செய்த நன்மைகளை நினைத்து, எகிப்தில் தங்களது இறுதி இரவு பாஸ்கா உணவை உண்டு, விடுதலையை நோக்கி நடக்கிறார்கள் என்று கூறும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, அந்த இறுதி இரவு உணவின் போது எதைத் தந்தாரோ அதையே நான் அவரிடம் இருந்து பெற்று உங்களுக்கும் தருகிறேன். சாகும் வரை இதை நாம் அறிவிக்க வேண்டுமென்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.
மன்றாட்டுகள்
1. எங்கள் அன்பு தந்தையே! உமது திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், துறவறத்தார் உமது திருமகனைப்போல, தங்களின் தாழ்ச்சியான வாழ்வால் உமக்கு சான்று பகிர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. எங்கள் விண்ணகத் தந்தையே! நற்கருணையையும், குருத்துவத்தையும் பரிசாகப் பெற்றுக் கொண்ட நாங்கள், இத்திருவருட்சாதனங்கள் வழியாக எம் நாட்டில் அன்பு, அமைதி, மகிழ்ச்சியை எங்கும் பரப்பிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்கள் பரம தந்தையே! குருத்துவத்தை ஏற்படுத்திய நாளினை கொண்டாடும் நாங்கள், அக்குருத்துவத்தை ஏற்று எங்களை வழிநடத்தும் எங்கள் பங்குதந்தைக்கு உற்ற பாதுகாப்பாக துணையாக இருந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. இரக்கமுள்ள தந்தையே! உமது இறையாட்சிப் பணியை, உமது திருமகனைப் போல முழு அர்ப்பணத்துடன் செய்திட, பிறர்நல மனம் கொண்ட இளையோர்கள், இறையழைத்தலை ஏற்றிட முன்வந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. கனிவுள்ள தந்தையே! எங்கள் ஆண்டவர் இயேசுவைப்போல நாங்கள் அனைவரும் தாழ்ச்சியுள்ளம் கொண்டவர்களாக, பிறருக்கு தொண்டாற்றக்கூடிய கிறிஸ்தவர்களாக என்றும் வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.