திருப்பலி முன்னுரை
இன்று நாம், நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவினை கொண்டாடி மகிழ்கிறோம். ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு செய்தி முதன்முதலாக மகதலா மரியாவிற்கு வழங்கப்பட்டது. அவர், தாம் பெற்ற நற்செய்தியை, திருத்தூதர்களுக்கு அறிவித்தார். திருத்தூதர்களும் கல்லறைக்கு விரைந்து சென்று, அந்த உயிர்ப்பு செய்தியை தங்கள் கண்களால் கண்டு, அதை நம் அனைவருக்கும் பறைசாற்றினார்கள். ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழாவை கொண்டாடும் இன்று, நாமும் அதே உயிர்ப்பு செய்தியை ஒவ்வொருவருக்கும் அறிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம். இதையே ஒவ்வொரு திருப்பலியிலும், இது நம்பிக்கையின் மறைபொருள் என்று குருவானவர் கூறும்போது, ஆண்டவரே நீர் வரும்வரை உமது மரணத்தை அறிக்கையிடுகிறோம். உமது உயிர்ப்பையும் எடுத்துரைக்கின்றோம் என்று நாம் அறிக்கையிடுகின்றோம். மனிதராக பிறந்த ஒவ்வொருவரும், இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்பதை எண்பித்துக்காட்டவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும், இறந்து உயிர்த்தெழுந்தார். அந்த உயிர்ப்பை நமக்கு பரிசாகவும் தந்திருக்கிறார். ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழாவை கொண்டாடும் இன்று, அவர் நமக்கு பரிசாகத் தந்திருக்கும் உயிர்ப்பைப் பெறும் வரை, ஆண்டவர் இயேசு நமது பாவங்களுக்காக பாடுகள் பட்டு, மரித்து, சாவையும், சாத்தானையும் வென்று, வெற்றியின் அரசராக உயிர்த்தெழுந்தார் எனும் உயிர்ப்பு செய்தியை நமது வாழ்வாலும், வார்த்தையாலும் இவ்வுலகிற்கு அறிவித்திடும் வரம்வேண்டி இவ்வுயிர்ப்புப் பெருவிழா திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.
முதல் வாசக முன்னுரை
ஆண்டவர் இயேசுவை மக்கள் சிலுவையில் அறைந்தார்கள். ஆனால், கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்தார். உயிர்த்தெழுந்தவர், அனைவருக்கும் அல்ல; மாறாக, தெரிந்து கொள்ளப்பட்ட சாட்சிகளுக்கு மட்டுமே காட்சியளித்தார் என்றுரைக்கும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
ஆண்டவரோடு இணைந்திருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள். கெட்ட ஊழியர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். உடல் சார்ந்தவற்றில் நம்பிக்கை கொள்ளாமல் ஆவிக்குரியவற்றில் நம்பிக்கை கொள்ளுங்கள் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.
மன்றாட்டுகள்
1. நிலைவாழ்வு அளிப்பவரே! உமது திருமகனின் உயிர்ப்புப் பெருவிழாவை கொண்டாடும் உமது திருஅவை இந்நம்பிக்கையின் மறைபொருளை உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் தன் வார்த்தையாலும், செயல்களாலும் அறிவித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. எங்களை அனுதினமும் காப்பவரே! எம் நாட்டில் மதத்தின் பெயரால் நிகழும் வன்முறைகள், குழப்பங்கள் அனைத்தும் முடிவுற்று, உம் திருமகன் தமது உயிர்ப்பின் மூலம் கொண்டுவந்த அன்பு, மகிழ்ச்சி, உண்மை, நீதி இங்கு ஆட்சி புரிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. அற்புதங்கள் புரிபவரே! ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவிலே திருமுழுக்கின் போது தந்த வாக்குறுதிகளை மீண்டும் புதுப்பித்திருக்கும் நாங்கள், அதன்படி நம்பிக்கையில் வளர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. வரங்களை பொழிபவரே! உயிர்ப்புப் பெருவிழாவை கொண்டாடும் எங்கள் பங்கு தந்தையையும், எங்களையும் நிறைவாக ஆசீர்வதித்து, நாங்கள் அனைவரும் இன்று போல் என்றும் வேற்றுமை களைந்து, ஒன்றுபட்டு வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. நம்பிக்கையை அருள்பவரே! உமது திருமகனின் உயிர்ப்பில் நம்பிக்கை இல்லாத மக்களையும், இந்த உயிர்ப்புப் பெருவிழாவை கொண்டாட முடியாத மக்களையும் ஆசீர்வதித்து, அவர்கள் உள்ளத்திலே உயிர்ப்பின் நற்செய்தி பற்றியெறிய செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.