உயிர்ப்பு என்னும் வியப்பு
பாஸ்கா இரவுத் திருப்பலியில், ஏழு முதல் ஏற்பாட்டு வாசகங்களும், ஒரு திருமுகமும், ஒரு நற்செய்தி வாசகமும் என மொத்தம் ஒன்பது வாசகங்கள் வாசிக்க வேண்டிய அறிவுறுத்தல் இருந்தாலும், இவற்றில் ஐந்து வாசகங்களையாவது வாசிக்க வேண்டியது கட்டாயம்.
ஒளி, இறைவார்த்தை, திருமுழுக்கு, நற்கருணை என இன்றைய வழிபாடு ரொம்ப கலர்ஃபுல்லாக இருக்கிறது. இந்த இரவு திருவிழிப்புதான் எல்லா திருவிழிப்புகளுக்கும் தாய் என்றும் அழைக்கப்படுகின்றது. முதல் ஏற்பாட்டு நிகழ்வான விடுதலைப்பயணத்தையும், இயேசுவின் உயிர்ப்பையும் இணைத்து இன்றைய வழிபாடு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இன்றைய முதல் வாசகத்தில் (தொடக்கநூல்) ‘இல்லாமையிலிருந்து இருப்புக்கும்’, ‘குழப்பத்திலிருந்து தெளிவுக்கும்,’ ‘இருளிலிருந்து ஒளிக்கும்’ உலகம் கடந்து வருகிறது. இதுதான் படைப்பு.
இரண்டாம் வாசகத்தில் (விடுதலைப்பயணம்) ‘எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து ‘வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கும்,’ ‘பாரவோனை அரசனாகக் கொண்டதிலிருந்து,’ ‘யாவேயை அரசனாகக் கொள்வதற்கும்,’ ‘வாக்குறுதிக்கான காத்திருப்பிலிருந்து ‘வாக்குறுதியின் நிறைவேறுதலுக்கும்’ கடந்து செல்கின்றனர் இஸ்ரயேல் மக்கள். இதுதான் விடுதலைப்பயணம்.
மூன்றாம் வாசகத்தில் (எசேக்கியேல்) ‘உலர்ந்த நிலையிலிருந்து,’ ‘உயிர்பெற்ற நிலைக்கு’ எலும்புகளும், ‘நாடுகடத்தப்பட்ட நிலையிருந்து,’ ‘சொந்த நாடு திரும்பும் நிலைக்கு’ இஸ்ரயேல் மக்களும் திரும்புகின்றனர். இது அவர்களுக்கு இரண்டாம் மீட்பு.
நான்காம் (உரோமையர்) மற்றும் ஐந்தாம் வாசகங்களில் (லூக்கா), இயேசுவின் உயிர்ப்பு மையமாக இருக்கின்றது. ‘இறப்பிலிருந்து,’ ‘உயிர்ப்புக்கு’ இயேசு கடந்து போனதை கிறிஸ்தவ வாழ்வின் உருவகமாக பவுலும், ‘உயிரற்ற அவர்,’ ‘உயிரோடிருக்கும் நிலைக்கு’ என நேரிடையாக லூக்காவும் சொல்கின்றனர்.
ஆக, மேற்காணும் இந்த ஐந்து நிலைகளிலும், முன்னால் இருந்தது இப்போது இல்லை.
முன்னால் இருந்த குழப்பம் இல்லை.
முன்னால் இருந்த அடிமைத்தனம் இல்லை.
முன்னால் இருந்த நாடுகடத்தல் இல்லை.
முன்னால் இருந்த பாவ இயல்பு இல்லை.
முன்னால் இருந்த இறப்பு இல்லை.
‘முந்தைய நிலை’ மாறிவிட்டது அல்லது ‘கடந்து விட்டது’.
எதற்காக மனித மனம் இந்த கடத்தலை அல்லது மாற்றத்தை விரும்புகிறது? இந்த ஐந்து நிகழ்வுகளும் அறிவியல் கோட்பாட்டிற்கும், லாஜிக்கிற்கும் அப்பால் இருக்கின்றன. இருள் ஒளியாகிறது. தண்ணீர் வறண்ட நிலமாகிறது. எலும்பில் சதையும் உயிரும் பிறக்கிறது. பாவம் புதுவாழ்வாகிறது. உயிரற்ற உடல் உயிர் பெறுகிறது.
இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு விட்டனர். பாதி வழி வந்துவிட்டனர். தங்களுக்கு முன்னால் செங்கடல். தங்களுக்குப் பின்னால் பாரவோனின் குதிரைப் படைகள். இரண்டு பக்கம் சென்றாலும் அழிவுதான் என நினைத்தவர்கள் கண்முன், செங்கடல் இரண்டாகப் பிளக்கின்றது. உலர்ந்து தரை உருவாகிறது. கால்கள் நனையாமல் கடந்து செல்கின்றனர்.
சிலுவை, இறப்பு, கல்லறை என்று எதுவும் இயேசுவைத் தன்னகத்தே வைத்துக்கொள்ள முடியவில்லை. சிலுவையை, இறப்பை, கல்லறையை வெறுமையாக்கி வெளியே வருகின்றார் இயேசு.
‘உலர்ந்த தரை’ முதல் ஏற்பாட்டு பாஸ்காவின் அடையாளம். ‘வெற்றுக்கல்லறை’ இரண்டாம் ஏற்பாட்டு பாஸ்காவின் அடையாளம்.
1. இயேசுவின் வார்த்தைகளும், வெற்றுக் கல்லறையும்
நடுவில் கல்லறை. இந்தப் பக்கம் இருந்து பெண்கள் சிலர் தங்கள் கைகளில் நறுமணப் பொருட்களை எடுத்துக்கொண்டு கல்லறை நோக்கிச் செல்கின்றனர். அந்தப் பக்கம் இருந்து வானதூதர்கள் இருவர் இறங்கி வந்துகொண்டிருக்கின்றனர். பெண்கள், ‘இறந்துவிட்டார்’ என நினைக்கின்றனர். வானதூதர்கள் ‘உயிர்த்துவிட்டார்’ என்கின்றனர். ஆபிரகாமைப் போல இருக்கிறார்கள் இந்தப் பெண்கள். ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கை மலைக்கு இந்தப் பக்கம் கூட்டிக் கொண்டு ஏறியபோது, மலைக்கு அந்தப் பக்கம் ஆண்டவர் ஆட்டுக்குட்டி ஒன்றை ஏற்றிக்கொண்டு வருகின்றார். ஆபிரகாம் நம்பினார். கடவுள் தன் மகனைத் திருப்பித் தருவார் என்று நம்பவில்லை. மாறாக, தன் வாக்குறுதியை அவர் நிறைவேற்றுவார் என நம்பினார்.
இயேசுவின் வார்த்தைகளில் இருந்து வாக்குறுதியை மேற்காணும் பெண்கள் புரிந்து கொள்ளவில்லை. அதை நம்பவும் இல்லை. ஆகையால்தான் வானதூதர்கள், “கலிலேயாவில் இருக்கும்போது அவர் உங்களுக்குச் சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். மானிட மகன் பாவிகள் கையில் ஒப்புவிக்கப்பட்டுச் சிலுவையில் அறையப்பட வேண்டும். மூன்றாம் நாளில் உயிர்த்தெழ வேண்டும் என்று சொன்னாரே” (லூக் 24:6-7) என அவர்களுக்கு நினைவுபடுத்துகின்றனர்.
ஆக, இயேசுவின் உயிர்ப்பை நம்ப வேண்டுமெனில், அவரின் வார்த்தைகளை நம்ப வேண்டும். இயேசுவின் உயிர்ப்பை அவருடைய பணிவாழ்வு மற்றும் இறப்பிலிருந்து பிரித்து தனியாகப் பார்க்க முடியாது. தனியாகப் பார்ப்பதால் பயன் ஒன்றும் இல்லை. ஏனெனில், இயேசுவின் வாழ்வில் உயிர்ப்பு அவரின் இறப்பின் மூன்றாம் நாள் நடந்த நிகழ்வு மட்டுமல்ல; அவரின் வாழ்வின் ஒவ்வொரு நாளும் உயிர்ப்பு நாளாக இருந்தது. ‘அகிலத்தை படைத்த ஆண்டவர் எப்படி மனுவுருவாக முடியும்?’ என்று நினைத்தபோது, மரியாவின் வயிற்றில் மனுவுரு ஏற்றார். ‘எல்லாக் குழந்தைகளோடும் சேர்த்து இவரை அழித்தாயிற்று’ என்று ஏரோது தன் நாற்காலியில் சாய்ந்து ஓய்ந்திருந்தபோது, தன் வளர்ப்புத் தந்தையின் பாதுகாவலில் எகிப்துக்குச் சென்றார். அலகையின் சோதனைகளை வென்றபோது, ‘எங்களுக்கு அரசனாக இரும்!’ என்று மக்கள் தந்த சோதனைகளை வென்றபோது, ‘திராட்சை ரசம் தீர்ந்துவிட்டது,’ ‘மக்கள் பசியாக இருக்கிறார்கள்,’ ‘பேய் பிடித்திருக்கிறது,’ ‘முடக்குவாதம்,’ ‘தொழுநோய்,’ ‘விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்,’ என எல்லாரும் தங்கள் வாழ்வு முடிந்து விட்டது என நினைத்தபோது, அவர்கள் வாழ்விலும் ‘விடிவை’ ஏற்படுத்துகிறார். மீன் வலைகளையும், சுங்கச் சாவடியையும் தாண்டிச் சிந்திக்கத் தெரியாத திருத்தூதர்களை தன்னகத்தே வைத்துக்கொண்டு, ‘கடவுளை தந்தை’ என்ற அழைக்கக் கற்றுக்கொடுத்தார். ‘மன்னிப்பு,’ ‘இரக்கம்,’ ‘அமைதி’ என மக்கள் கேட்டிராத, அனுபவித்திராத எல்லாவற்றையும் போதித்தார். ஒவ்வொரு நாளும் உயிர்ப்பு அனுபவம் பெற்றவருக்கு, இறப்புக்கு பின் நிகழ்வதும் உயிர்ப்பு அனுபவமே. இப்படி ‘முடிவு என நினைத்த எல்லா நிகழ்வுகளிலும் விடிவு’ என எழுந்தவர், இறப்பிலும் உயிர்த்தார் என நம்ப வேண்டுமெனில் இயேசுவின் வார்த்தைகளோடு இந்த வெற்றுக்கல்லறையைப் பார்க்க வேண்டும்.
2. “உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்? அவர் இங்கே இல்லை” (லூக் 24:5-6).
இரண்டு வாக்கியங்கள். முதல் வாக்கியம் ஒரு கேள்வியாகவும், அடுத்த வாக்கியம் ஒரு செய்தியாகவும் இருந்தாலும், இரண்டு வாக்கியங்களின் பொருள் ஒன்றுதான்: “இயேசு கல்லறையில் இல்லை.” இயேசுவின் பிறப்பின்போது, வானதூதர் கபிரியேல் பெண் மரியாவுக்கு மங்கள வார்த்தை அறிவித்தார். அவர் இறந்தபின், வானதூதர் இருவர், பெண்கள் சிலருக்கு மங்கள வார்த்தை அறிவிக்கின்றனர். மரியாவும் தயக்கத்தில், ‘இது எங்ஙணம் ஆகும்? நானோ கணவனை அறியேனே!’ என்றார். இங்கே பெண்கள் தயக்கத்தில் தலைகுனிந்து நிற்கின்றனர். மரியாவிடமும் வானதூதர் இதே வாக்கியத்தைத்தான் சொல்லியிருப்பார்: “அவரை இனி வானத்தில் தேடுவதேன்! அவர் அங்கு இல்லை. இதோ உன் வயிற்றில் இருக்கின்றார்.”
‘அவர் இங்கு இல்லை’ என பதிவு செய்கிறார் லூக்கா. இதை வாசிப்பவர்களுக்கு உடனே கேள்வி வரும். அப்படியென்றால், ‘அவர் எங்கே இருக்கிறார்?’ இந்தக் கேள்விக்கு விடையாக லூக்கா தொடர்ந்து இரண்டு நிகழ்வுகளைப் பதிவு செய்கின்றார்: (அ) எம்மாவு நிகழ்வு (லூக் 24:13-35), (ஆ) இயேசு சீடர்களுக்குத் தோன்றும் நிகழ்வு (லூக் 24:36-49). வேறு எந்த நிகழ்வுகளும் இதற்குப் பின் இல்லை. எம்மாவு நிகழ்வில் பயணம் செய்யும் சீடர்களோடு இயேசு பயணம் செய்கின்றார். ஒரே அறையில் கூடியிருந்த சீடர்களுக்குத் தோன்றி அவர்களைத் தேற்றுகின்றார். ஆக, கல்லறையில் இல்லாத இயேசு எங்கே இருக்கிறார்? நாம் பயணம் செய்யும் இடத்திலும், நாம் வாழும் இடத்திலும். நம் பயத்தில், குழப்பத்தில், அமைதியின்மையில், வெறுமையில், தயக்கத்தில் அவர் நம்மோடு வழிநடக்கின்றார். மரியாவின் தயக்கத்திற்கு வானதூதர்களின் வார்த்தைகள் மருந்திட்டதுபோல, நம் தயக்கத்திற்கும் இந்த இரண்டு வானதூதர்களின் வார்த்தைகள் மருந்திடட்டும்.
3. “பேதுரு ஓடினார். கல்லறைக்குள் சென்றார். துணிகளை மட்டுமே கண்டார். நிகழ்ந்தவற்றைக் குறித்து வியப்புற்றார்” (லூக் 24:12).
‘கல்லறையிலிருந்த கல் புரட்டப்பட்டது இயேசு வெளியே செல்வதற்காக அல்ல. சீடர்கள் உள்ளே செல்வதற்கே!’ என்கிறார் அகுஸ்தினார். ஏனெனில், பூட்டிய அறைக்குள் நுழைந்த இயேசுவுக்கு, சீல் வைக்கப்பட்ட கல்லறையிலிருந்து வெளியே வருவது எளிதுதானே.
கல்லறைக்குள் சென்று, இயேசுவின் உடலைக் காணாமல், துணிகளை மட்டுமே கண்ட பேதுருவின் உள்ளுணர்வை, ‘வியப்பு’ என்று பதிவு செய்கின்றார் லூக்கா. ஆனால் யோவானோ, “கண்டார், நம்பினார்” (20:8) என எழுதுகின்றார். மேலும், யோவான் நற்செய்தியில் பேதுரு தனியே கல்லறையை நோக்கி ஓடவில்லை. யோவானும் உடன் ஓடுகின்றார். ஆனால், லூக்காவில், பேதுரு தனியாக ஓடுகின்றார். இது எதற்காக? இறுதி இராவுணவின்போது பேதுருவிடம் தனியாக பேசும் லூக்காவின் இயேசு, “சீமோனே, நீ மனந்திரும்பிய பின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து’ (லூக் 22:32) என்கிறார். ஆக, இப்போது தன் கல்லறை அனுபவத்தால் உறுதிபெற்ற பேதுரு இனி தன் உடன் திருத்தூதர்களை உறுதிப்படுத்துவார்.
‘வியப்படைதல்’ என்னும் வினைச்சொல் இரண்டாம் ஏற்பாட்டு நூல்களில் மொத்தம் 43 முறையும், லூக்கா நற்செய்தியில் 13 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 13 முறைகளும் இறைவனின் ஆற்றல்மிகு செயல்களை நினைத்து கதைமாந்தரும் மக்களும் வியப்படைவதையே இது குறிக்கின்றது. சக்கரியா சிலேட்டில், ‘இவன் பெயர் யோவான்’ என எழுதியபோது (லூக்1:63), இயேசுவின் பிறப்பை இடையர்கள் கேட்டபோது (லூக் 2:18), இயேசுவை அவருடைய பெற்றோர் எருசலேம் ஆலயத்தில் கண்டபோது (2:33), இயேசுவின் தொழுகைக்கூட உரையைக் கேட்டபோது (லூக் 4:22) என மக்களின் வியப்பை இது குறித்தாலும், ஒரே ஒரு முறை ‘இயேசு வியப்படைந்தார்’ என பதிவு செய்கின்றார் லூக்கா. நூற்றுவர் தலைவனின் நம்பிக்கையை பாராட்டுகின்ற இயேசுவை இப்படி வர்ணிக்கின்றார் லூக்கா: “இவற்றைக் கேட்ட இயேசு வியப்புற்றார்... மக்கள் கூட்டத்தைப் பார்த்து, ‘இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை’ என்றார்” (லூக் 7:9). இயேசுவின் இறப்பின்போது இறுதி வார்த்தை பேசியது யார்? நூற்றுவர் தலைவன்தான் (லூக் 23:47). நூற்றுவர் தலைவனின் நம்பிக்கை நிகழ்வை மறைமுகமாக இங்கே பதிவு செய்து, இயேசுவுக்கு தான் பயன்படுத்திய ‘வியப்பு’ என்ற வார்த்தையை ‘பேதுருவுக்கு’ பயன்படுத்துகின்றார் லூக்கா. இந்த இரண்டு நிகழ்வுகளையும் இணைத்துப் பார்த்தால் நமக்கு என்ன தெரிகிறது? நம்பிக்கைதான் வியப்பின் முதல் படி. நம்பிக்கை இல்லாமல் வியப்பு இல்லை. பேதுரு நம்பிக்கை கொண்டதலே வியப்படைகின்றார்.
வெற்றுச் சிலுவை இயேசுவின் இறப்பிற்கும், வெற்றுக் கல்லறை அவரின் உயிர்ப்பிற்கும், வெற்று ஆடைகள் அவரின் உடனிருப்புக்கும் சான்றாய் இருக்கின்றன.
ஆண்டவரை அவரின் வார்த்தைகள் மற்றும் வாக்குறுதிகளோடு இணைத்துப் பார்ப்பதும்,
அவரை நம் பயத்திலும், பயணத்திலும், வாழ்விடத்திலும் கண்டுகொள்வதும்,
வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நம்பிக்கையும், வியப்பும் கொண்டிருத்தலுமே உயிர்ப்பு அனுபவம்.
உயிர்ப்பு திருநாள் வாழ்த்துகளும், செபங்களும்!