Namvazhvu
தலையங்கம் கரித் தின்னுமா நம் தமிழ்நாடு?
Tuesday, 11 Apr 2023 12:40 pm
Namvazhvu

Namvazhvu

காவிரி! தமிழகத்தின் உயிர்நாடி! காவிரி டெல்டா பகுதி தமிழகத்தின் உயிர்மூலம்! இது திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி டெல்டா பகுதி. தற்போதுதான் மத்திய அரசின் மீத்தேன் எரிவாயு கிணறுகள் அமைப்பதை நெடுவாசல், கதிராமங்கலம் ஆகிய களங்களை முன்வைத்து, எதிர்த்துப் போராடி, ஓஎன்ஜிசி நிறுவனத்தை ஓரமாக ஓய்வெடுக்க வைத்து, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் 2020- ஏற்படுத்தி முறைப்படி அறிவித்தது. அதன் அடிப்படையில் பிரிவு 4 (1)-ன் படி புதிதாக அங்கு எந்தப் பணியும் மேற்கொள்ள இயலாது. இந்த நிலையில்தான் கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு தற்போதுதான் இரண்டு ஆண்டுகளாக இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

இந்த நிலையில், மத்திய நிலக்கரி அமைச்சகம் நாடு முழுவதும் 102 இடங்களில் பூமிக்கு அடியில் நிலக்கரி அல்லது நிலக்கரி படுகை மீத்தேன் அல்லது நிலத்தடி நிலக்கரியை வாயுவாக மாற்றி (Underground Coal Gaszification - UCG) எடுக்கும் திட்டத்திற்கு கடந்த மார்ச் 29 ஆம் தேதி டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மே 30 ஆம் தேதிக்குள் நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏல அறிவிப்பில் தமிழகத்தின் வடசேரி, சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி ஆகிய மூன்று நிலக்கரி வட்டாரங்கள் அமைந்துள்ளன.

ஆம். தஞ்சை மாவட்டத்தில் ஓரத்த நாடு வட்டத்தில் உள்ள வடசேரி பகுதியை மையப்படுத்தி 68.30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள பகுதிகளில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள கீழக்குறிச்சி, ஆவிக்கோட்டை, அண்டமி, மோகூர் கருப்பூர், பரவாத்தூர், கண்ணுகுடி, கொடியாளம், வடசேரி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மகாதேவப்பட்டினம், உள்ளிக்கோட்டை, கண்டிதம்பேட்டை, கண்ணாரப்பேட்டை, கூப்பாச்சிக்கோட்டை, பரவாக்கோட்டை, தளிக்கோட்டை ஆகிய 15 கிராமங்களில் நிலக்கரி சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொள்ள ஏலம் விடப்பட்டுள்ளது. வடசேரி பழுப்பு நிலக்கரி வட்டாரம் எனப் பெயரிட்டு, இத்திட்டத்திற்காக 66 ஆழ்துளை கிணறுகள் மூலம் ஆய்வு செய்து, 463 அடியிலிருந்து, 740 அடி வரை சுமார் 755 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரி படிமங்களை Minerals Exploration and Consultancy Ltd – MECL என்ற மத்திய அரசு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கொள்ளிடம் கரையில் அமைந்துள்ள பட்டையடி-மைக்கேல்பட்டி நிலக்கரி படுகையில், மைக்கேல்பட்டி, பருக்கல், அழிசுகுடி, வாத்திகுடிகாடு ஆகிய 4 கிராமங்களின் 14.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் முதல் கட்டமாக ஏலம் விடப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக மைக்கேல்பட்டி நிலக்கரி வட்டாரத்தில் 19 ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலக்கரி படிம அமைப்பை MECL நிறுவனம் சோதித்துள்ளது.

மேலும் மூன்றாவதாக, கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு கிழக்குப் பகுதி 84.41 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள நிலங்களில் சுரங்கம் அமைக்க ஏலம் விடப்பட்டுள்ளது. இதில் விருத்தாசலம் அருகே உள்ள புவனகிரி வட்டத்தில் உள்ள 21 ஊர்கள் அடங்கும்.

இந்த ஏல அறிவிப்பு தமிழகத்திற்கே மிகப்பெரிய அதிர்ச்சியாகவும் பேரிடியாகவும் அமைந்துள்ளது. தமிழகத்தின் அடிமடியிலேயே கைவைக்க மத்திய அரசு துணிந்துள்ளது. அதுவும் மத்திய அரசு மாநில அரசிடம் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து, அதாவது மாநில முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வராமலேயே, காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சார்ந்த திட்டங்களை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளது. ஏலத்திற்கான நிபந்தனையில் நிலக்கரி படுகை மீத்தேன் எடுத்தல் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கனவே மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்தால் காவிரி படுகை தகித்த காரணத்தினாலோ என்னவோ, அதானி - அம்பானி போன்ற பண முதலைகள் ஏலம் எடுக்க முன்வரவில்லை. தமிழக அரசுக்கு முறைப்படி தெரிவிக்காமல், கொள்ளைப்புறமாக நுழைய முயன்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தமிழக முதல்வர், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய அரசுக்கு கடுமையான கடிதம் அனுப்பியுள்ளார்.

பிரிவு 4(1)-ன் படி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இரண்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்தவொரு புதிய திட்டத்தையும் அல்லது புதிய செயல்பாட்டையும் எந்தவொரு நபரும் மேற்கொள்ளக் கூடாது. இரண்டாவது அட்டவணை என்பது மிகத் தெளிவாக, நிலக்கரி படுகை, மீத்தேன், ஷெல் எரிவாயு, பிற ஒத்த ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வு செய்தல் - துளைத்தெடுத்தல் - பிரித்தெடுத்தல் ஆகிய திட்டங்களை தடைசெய்யப்பட்ட திட்டங்களாக தெளிவாக வரையறுத்துள்ளது. தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டத்தின்படி மத்திய அரசு மேற்சொல்லப்பட்ட தடைசெய்யப்பட்ட எந்தத் திட்டத்தையும் மேற்கொள்ள முடியாது.

தமிழகத்தின் நெற்களஞ்சியம், இனி நிலக்கரி களஞ்சியமாகி, கஞ்சிக்கு பதிலாக, கரித்தண்ணீரைப் பருகப் போகிறது. அரிசிக்குப் பதிலாக நிலக்கரியைத் தின்னப் போகிறது. மக்களின் அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி என்று எதுவுமே பெற வேண்டியின்றி, சட்டம் சர்வாதிகாரத்தன்மையுடன் திருத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மத்திய அரசின் நிறுவனம் ஆய்வை மேற்கொண்டு வருகிறது MECL நிறுவனம். நெய்வேலியைச் சுற்றி சேத்தியாத்தோப்பு, பாளையங்கோட்டை, வீராணம் ஆகிய இடங்களிலும் தஞ்சையில் வடசேரி, ஜெயங்கொண்டம் மைக்கேல்பட்டி உட்பட ஆறு இடங்களில் நிலக்கரி எடுக்க ஏலம் விடப்பட்டுள்ளது. ஏறக்குறைய இந்த முதல் கட்டத்தில் மட்டும் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. தமிழகமே நிலக்கரி புகையும் சுடுகாடாகப் போகிறது.

தமிழகத்தில் ஏற்கனவே நெய்வேலியில் உள்ள 1, 1. 2, 3 மூன்று சுரங்கங்களைத் தொடர்ந்து. நான்காவதாக, நெய்வேலி நிலக்கரி மூன்றாவது சுரங்கம் ஐந்தாவதாக, வீராணம் நிலக்கரித் திட்டம், ஆறாவதாக, பாளையம்கோட்டை நிலக்கரித் திட்டம், ஏழாவதாக, சேத்தியாத்தோப்பு கிழக்கு நிலக்கரித் திட்டம், எட்டாவதாக, வடசேரி நிலக்கரித் திட்டம், ஒன்பதாவதாக, மைக்கேல்பட்டி நிலக்கரித் திட்டம் என்று தமிழகம் கருவறுக்கப்படவுள்ளது. தமிழகத்தின் விளைநிலம் அனைத்தும் மலட்டு நிலமாக்கப்படவுள்ளது. நிலத்தடி நீர் ஏற்கனவே அதாள பாதாளத்தில் உள்ள நிலையில், 3000 அடி அளவிற்கு நிலக்கரிச் சுரங்கம் அமைக்கும் பட்சத்தில், தமிழகத்தின் மையப் பகுதியில் அமையவுள்ள நிலக்கரிச் சுரங்கங்களால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படவுள்ளது. வட்டில் நிலக்கரி படிமங்களே நிறைந்திருக்கும். தமிழ் நிலம் இனி மலட்டுத்தன்மையுடன் விளங்கும். திருவாரூர் மாவட்டம் வடசேரி முதல் கடலூர் மாவட்டம் புவனகிரி வரை, அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் முதல் புதுச்சேரி காரைக்கால் வரை மிகப்பெரிய சேதாரம் ஏற்படும். தமிழகமே பாலைவனமாகும் நாள் வெகுதொலைவில் இல்லை. கடல்நீர் நிலத்தடி புகும். நிலம் மலடாகும்.

தமிழக அரசு மிகப்பெரிய அளவில் இதனை எதிர்த்து, இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் முடக்கிவிடவேண்டும். ஏற்கனவே தமிழகம் மின் மிகை மாநிலமாக வளர்ந்துள்ள நிலையில், சுற்றுச்சூழலைக் கெடுத்து, மக்கள் விரோத இத்திட்டம் அமுல்படுத்தப்படவே கூடாது. சொந்த மக்களே அகதிகளாக ஏதிலிகளாக கைவிடப்படக்கூடாது. தமிழகத்தின் மின் உற்பத்தி 30 ஆயிரம் 652 மெகாவாட்டாக உள்ள நிலையில் தேவையோ அதிகப்பட்சமாக 19 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. எனவே மாநில அரசின் இறையாண்மையைப் பாதுகாத்து, மாநிலத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டும். தமிழகம் கருவறுக்கப்பட ஒருபோதும் தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது. நெற்களஞ்சியம் கொள்ளையடிக்கப்பட்டால், நிலக்கரியை ஒருபோதும் நாம் உண்ண முடியாது. சோறுதின்னும் ஒவ்வொருவரும் சொரணையுடன் மத்திய அரசின் இத்திட்டத்தை எதிர்த்து களமிறங்க வேண்டிய நேரமிது. பசுமை மண்டலம் ஒருபோதும் பாலைவனமாகி விடக்கூடாது. எச்சரிக்கை! அரசியல் கட்சிகளே! அணி திரண்டு இத்திட்டத்தை முறியடித்திடுங்கள். உழவர்களின் கலப்பைகள் ஒருபோதும் ஆயுதங்களாக்கப்படக் கூடாது. தட்டில் நிலக்கரி வேண்டாமே?!