திருப்பலி முன்னுரை
இன்று நாம் பாஸ்கா காலத்தின் இரண்டாவது ஞாயிறு திருவழிபாட்டைக் கொண்டாடுகிறோம். உயிர்ப்பு ஞாயிறுக்கு அடுத்து வரும் ஞாயிறை இறைஇரக்கத்தின் ஞாயிறாக கொண்டாட, தாயாம் திரு அவை நமக்கு அழைப்பு விடுக்கின்றது. இந்த இறைஇரக்கத்தின் ஞாயிறு, பாவத்தினால் ஆண்டவருடைய அன்பையும், இரக்கத்தையும் இழந்த மனித குலத்திற்கு, அந்த அன்பும், இரக்கமும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்பு வழியாக, மீண்டும் பரிசாக தரப்பட்டதை கொண்டாடிடவே, இஞ்ஞாயிறு இறைஇரக்கத்தின் ஞாயிறாக சிறப்பிக்கப்படுகிறது. இறைவனின் இரக்கமானது, சிலுவையில் அறையப்பட்ட ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இதயத்தின் வழியாக நம்மை வந்தடைகிறது என்று திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் கூறியுள்ளார். தனது உடலின் கடைசி சொட்டு இரத்தத்தையும், தண்ணீரையும் தருமளவிற்கு, இறைவன் நம் மீது அன்பு கொண்டார். இதையே, இறைஇரக்க பக்தியை பரப்புவதற்கு வித்திட்ட, போலந்து நாட்டு அருள்சகோதரி பாஸ்டினா, ஆண்டவரின் இரக்கம், சிவப்பு மற்றும் நீல நிற ஒளிக்கதிர்களாய் அவரது இதயத்திலிருந்து வெளிப்பட்டன என்று கூறியுள்ளார். உங்கள் வானகத் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாக இருங்கள் என்று மொழிந்த நமதாண்டவர் இயேசு கிறிஸ்து, தனது பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்பு வழியாக அதை செய்து காட்டி, நாமும் அவர் வழி நடக்க நமக்கு அழைப்பு விடுத்துள்ளார். இறக்கத்தான் போகிறோம் அதுவரை இரக்கமுள்ளவர்களாக இருப்போம் எனும் புனித அன்னை தெரசாவின் வார்த்தைகளையும் நினைவில் கொண்டவர்களாய் இந்த இறைஇரக்க ஞாயிறு திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.
முதல் வாசக முன்னுரை
ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பில் நம்பிக்கை கொண்ட மக்கள், திருத்தூதர்களோடு இணைந்து, அப்பம் பிடுவதிலும், இறை வேண்டலிலும் நிலைத்திருந்து, தங்கள் உடைமைகளையெல்லாம் பகிர்ந்து கொண்டார்கள் என்று கூறும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
இறந்துபோன இயேசு, தந்தைக் கடவுளின் பேரிரக்கத்தால் உயிர்த்தெழுந்து, இவ்வுலகை மீட்டார் எனும் நம்பிக்கையை நாம் கைவிடாமல் இருந்தால், அனைவருமே ஆன்ம மீட்பை பெற்றுக் கொள்வோம் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.
மன்றாட்டுகள்
1. இரக்கமுள்ள தந்தையே! உமது திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் தங்களது இறைப்பணியால், உமது இரக்கத்தை இவ்வுலகத்தில் விதைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. கருணைக் கடவுளே! உலக நாடுகளை ஆளும் தலைவர்கள், கொடுங்கோலர்களைப் போல ஆட்சி செய்யாமல், இரக்கமுள்ளவர்களாகவும், கனிவுள்ளவர்களாகவும், நீதியுள்ளவர்களாகவும் ஆட்சி புரிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. பரிவுள்ள தந்தையே! உமது இரக்கத்தை பெருவிழாவாக கொண்டாடும் இந்நாளில், எங்கள் பங்கில், வீடுகளில் ஏற்பட்டிருக்கும் கசப்புணர்வுகளை களைந்து, ஒருவர் மீது ஒருவர் இரக்கமுள்ளவர்களாக வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. கனிவுள்ள தந்தையே! ஆணவத்தால், பலவீனத்தால், சூழ்நிலைகளால் பல்வேறு குற்றங்கள் புரிந்து, சிறைகளில் வாடுவோர் மீது நீர் உமது இரக்க கண்களை திருப்பி, மன்னித்து, மறுவாழ்வளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. அன்பு தந்தையே! இக்கால இளையோர்கள் உம் திருமகன் கற்றுத்தந்த இரக்கத்தை, கனிவை, பரிவை தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்தி, அனைவரோடும் நட்பு பாராட்டுபவர்களாக மாறிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.