உயிர்ப்பு உண்மையே
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தழைத்தோங்கும் கிறிஸ்தவம், உறுதியாக நின்றுகொண்டிருக்கும் ஓர் அடித்தளம் உயிர்ப்பு என்ற உண்மையான நிகழ்வில்தான். இதைத்தான் புனித பவுல், “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்.” (1கொரி 15:14) என்கிறார். இயேசுவின் உயிர்ப்பு, உண்மையாகவே அவர் கடவுளின் மகன் என்றென்றும் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதையும், நாமும் ஒருநாள் உயிர்த்தெழுந்து, முடிவில்லா வாழ்வில் பங்கெடுப்போம் என்பதையும் நமக்கு உணர்த்துகிறது.
(1) உயிர்ப்பும் வெறுமையும்
உயிர்ப்பு என்றாலே நம் மனக்கண்முன் வருவது வெறுமையான கல்லறை. இருப்பினும் வெறும் காலியான கல்லறையில் மட்டும் நாம் உயிர்ப்பின் அர்த்தத்தை அடக்கிவிட முடியாது. வெறுமையான கல்லறை உயிர்ப்பு என்னும் நிகழ்வின் அர்த்தமாகவும், அடையாளமாகவும் ஆதாரமாகவும் இருந்தாலும், வெறுமை என்னும் எதார்த்தம், இயேசுவின் வாழ்வின் தொடக்கம் முதல் இறுதிவரை தொட்டுத் தொடர்ந்தது என்பதுதான் உண்மை.
எனவே கல்லறையில் காணப்பட்ட வெறுமை ஒரு தனித்த, மற்றவைகளோடு தொடர்பற்ற ஒன்றல்ல; “வெறுமை” என்பது இயேசுவின் விருப்பத் தேர்வு, அது ஒரு விபத்தல்ல. தான் மகிழ்வோடு வாழ்ந்துகாட்டிய வெறுமையின் முழுமையாக, உச்சமாக, சிகரமாக இருப்பதாகவே காலியான கல்லறையை நாம் பார்க்கிறோம். ஏனென்றால், ஒருவரின் வாழ்வோடு முற்றிலும் தொடர்பற்ற ஒரு விசயம், அவரின் வாழ்வின் நிறைவாகவும், புதுவாழ்வின் தொடக்கமாகவும் இருக்குமா என்பது வினாவே.
எனவே, காலியான கல்லறையின் வெறுமை, கிறிஸ்து மரணத்தை வென்றார் என்பதை நேரடியாக குறித்தாலும், தனது வாழ்நாட்களில் வெறுமை வழியே நிறைவுகண்டு சான்று பகர்ந்தவர், வெறுமையில் முழுமைகாண போதித்தவர், தனது இறப்பிற்குப் பின்னரும் வெறுமை வழியே தனது உயிர்ப்பிற்கு சான்று பகர்கிறார் என்பதையும் நமக்கு முன்வைக்கிறது.
இயேசுவும் வெறுமையும்
“கடவுள் வடிவில் விளங்கிய அவர்... தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்றார்” (பிலி 2:6-7). இயேசு பிறப்பதற்கு” விடுதியில்... இடம் கிடைக்கவில்லை. “குழந்தை இயேசுவை துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில்” கிடத்தினார்கள் (லூக் 2: 7). “மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” (மத் 8:20). உண்மைச் செல்வத்தைப்பற்றி பேசும்போது, “மண்ணுலகில் உங்களுக்கென செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம் (மத் 6:19) எனவும், உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடுத்தால்” (மாற் 10:21) நிலை வாழ்வை நாம் உரிமையாக்கலாம் என்கிறார். “உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும்... எடுத்துக்கொள்ள விட்டு விடுங்கள்” (மத் 5:40) என்று வெறுமையிலே நிறைவுகாண அழைக்கிறார்.
திருத்தூதர்களை அனுப்பும்போது, எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம் (லூக் 9:3) என அறிவுறுத்துகிறார். தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே காணிக்கைப் பெட்டியில்போட்ட (மாற் 12:44) ஏழைக் கைம்பெண்ணை மனதார பாராட்டுகிறார். மனமாறிய சக்கேயு, பன்மடங்காக ஏழைகளுக்கு தன் செல்வத்தை திருப்பிக்கொடுக்க வாக்களித்தபோது, “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று” (லூக் 19:1-10) என ஆசீர்வதிக்கிறார். உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வை இழந்தால் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? (மத் 16:26) என்று வினவுகிறார்.
கோதுமை மணி “மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்” (யோவா 12:24) என்று துறப்பதில் நிலைவாழ்விற்கான வழியைக் காட்டுகிறார். “மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் வாழ்வு வந்துவிடாது” (லூக் 12:15) என்றதோடு,” நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு... நண்பர்களைத் தேடிக்கொள்ள” (லூக் 16:9) பணிக்கிறார். தான் இறப்பதற்கு முன்பு தன்னுடைய உடலையும் இரத்தத்தையும் பிரியாவிடை பரிசாகக் கொடுத்து (மத் 26:26-28) வெறுமையாகிறார். சிலுவைப் பயணத்தின்போது, சீடர்கள் அனைவரும் ஓடிவிட (மத் 26:56) உறவுகளற்ற தனிமையெனும் வெறுமையில் தள்ளாடுகிறார். தனது ஆடையை படைவீரர்கள் பிரித்தெடுக்க (யோவா 19:23) சிலுவையில் உடுப்பற்ற வெறுமை கண்டார்; உயிர் துறக்குமுன் தமக்கிருந்த ஒரே இரத்த உறவான தாயை நமக்கென ஈந்து (யோவா 19:27), தமது வெறுமையில் நம்மை நிறைவாக்கினார்.
இறந்தபின் மாற்றான் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டாலும் (லூக் 23:50-53), மூன்றாம் நாளில் தனக்கு சொந்தமில்லாத அந்த கல்லறையையும் வெறுமையாக்குகிறார் (லூக் 24:2-3). ஆக, இயேசுவின் பிறப்பு, வாழ்க்கை, போதனைகள், சோதனைகள், பணிகள், உறவுகள், பாடுகள், இறப்பு, உயிர்ப்பு என, அவரது வாழ்வின் வைர முத்துக்களாகிய அனைத்து நிலைகளும் “வெறுமை” என்னும் இழையில் கோர்க்கப்பட்டு இன்றளவும் மங்காமல் ஒளிர்ந்துகொண்டிருக்கின்றன. “என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியாய் யான் வந்தேன்; அங்கே திரும்புகையில் பிறந்த மேனியாய் யான் செல்வேன்” (யோபு 1:21) என்பதை வாழ்வாக்கியவர் இயேசு.
நாமும் வெறுமையாவோம்
வாழ்விலே அதிக சுகத்தை எதிர்பார்த்து, நாம் மிகுதியாக சேர்த்து, குவிக்கிறோம். மடியில் கனத்தை (அழிந்து போகும் செல்வங்களை) வைத்துக்கொண்டு, பயத்தோடு அவற்றை இழக்காமலிருப்பதிலே நம் வாழ்வை வீணடிக்கிறோம். “உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்” (மத் 6:21) என்பதுபோல, நிலையான செல்வத்திலிருந்து நம் கவனத்தை திருப்பி, நிலையற்றவைகளில் அதனை விரயம் செய்கிறோம்.
சில நேரங்களில், நமது கிறிஸ்தவ வாழ்விற்கு உதவாத, புறம்பான மதிப்பீடுகளால் நம் மனங்களையும், தான்மையையும் நிரப்பி, செருக்குடன், நமது அயலாரிடமிருந்து நம்மை தனிமைப்படுத்தி, வெகு தூரத்தில் வாழ்கிறோம். உயிர்த்த நம் ஆண்டவர், எதையும் பற்றிக் கொள்ளாமல் வெறுமையில் வாழ நம்மை அழைக்கின்றார் நமக்கு சுமையாக இருந்து, பிறரிடமிருந்து நம்மை பிரிக்கும் எதுவுமே குப்பைதான். எனவே, நம்மை வெறுமையாக்கி, “அவருக்கு ஏற்புடையவற்றை” (மத் 6:33) மட்டும் நாடுவோம். அப்போது அனைத்தும் நமக்கு சேர்த்துக் கொடுக்கப்படும் (மத் 6:34) என்ற எதிர்நோக்கோடு தொடர்ந்து உயிர்ப்பின் பாதையில் வெறுமையாக பயணிப்போம்.
(2) உயிர்ப்பும் கடப்பும்
இறந்த இயேசுவைக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டாலும், அவரது அடக்கம் அவரை முடக்கவில்லை. அது புது வாழ்வின் தொடக்கமாக அமைந்தது. கல்லறை இயேசுவை அடக்கிவைக்க முடியவில்லை. மாறாக, வியக்கும் விடுதலையோடு வீறுநடை போடவைத்தது. ஈமக்குழி அவரை புதைத்து, சிதைக்கவில்லை. மாறாக, அவரை விதைத்து, வீரியமான எழுச்சியுடன் வெளிக்கொணர்ந்தது. கல்லறையை வெறுமையாக்கி, வெற்றியோடும் வாஞ்சையோடும் வெளியே வந்தார் மீண்டும் வாழ்வுதர வந்தார். அனைத்திற்கும் மேலாக, இயேசு கல்லறையைக் கடந்து வந்தார் என்பதே சிறப்பு. கல்லறையைக் கடந்து வந்ததால், காலியானது அவரது கல்லறை மட்டுமல்ல; மாறாக அவரை கொன்று புதைத்துவிட்டால் அனைத்தையும் (கிறிஸ்துவையும் அவரது மதிப்பீடுகளையும்) அழித்துவிடலாம் எனத் திட்டமிட்ட தீய எண்ணங்கள் அடங்கிய பல மனித மனங்களும் தான். அதோடு, இனி எல்லாம் முடிந்துவிட்டது என்றெண்ணிய சீடர்களின் விரக்தியும், அவநம்பிக்கையும், கையறுநிலையும் நிறைந்த இதயங்களும் காலியாயின.
இயேசுவின் கடந்து செல்லுதல் என்பது, அவரது இறப்பிற்கு பின்பு மட்டும் நடந்த ஒரு நிகழ்வல்ல; தனது வாழ்நாளிலேயே “கடந்து செல்லுதல்” என்பதை வாழும் முறையாக அவர் கொண்டிருந்தார். அதன் முத்தாய்ப்பாக நிலைப்பதுதான் உயிர்ப்பு என்னும் “கடத்தல்”.
இயேசுவும் கடத்தலும்
“இதுவும் கடந்து போகும்” என்ற கூற்று, வாழ்வில் எதுவுமே நிரந்தரமில்லை என்பதை எடுத்தியம்பி, நம்மை பக்குவப்பட்ட, சார்பற்ற மனநிலையோடு வாழ்வை எதிர்கொள்ள அழைக்கிறது. இது பெரும்பாலும் “காலம்” சார்ந்தது. இதில் நமது ஆளுமையின் ஈடுபாடு குறைவாகத்தான் இருக்கும். அதாவது, நாம் எதிர்கொள்ளும் ஒரு எதார்த்தம் “தானாகவே,” காலத்தின் ஓட்டத்தில் “நம்மைக்” கடந்து சென்றுவிடும் என்பதுதான் புரிதல்.
ஆனால் இயேசுவின் வாழ்வில் கடந்து செல்லுதல் என்பது, அவரின் முழுமனித ஆளுமையின் ஈடுபாடு, அர்ப்பணம், தன்விருப்பார்ந்த ஒரு தெரிவாக இருக்கிறது. வாழ்வின் எதார்த்தங்களில் (நல்லதோ, கெட்டதோ) சிக்கிக் கொள்ளாமல், தனது வாழ்வின் இலக்கை சென்றடைவதே, இயேசுவின் வாழ்வில் “கடத்தல்” என்பதன் பொருளாகிறது.
மனிதர்கள், நிகழ்வுகள், மரபுகள், பாரம்பரியங்களிலோ, சமூக - பண்பாட்டு - இடம் - இனம்சார் கருத்தியல்களிலோ தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு, அதன் பின்னே ஒளிந்துகொண்டு தனது தான்மையைச் சுருக்கிக் கொள்ளாமல், அவற்றின் கீழ் தனக்கான நிழலைத் தேடாமல், அவற்றை அவற்றிற்காகவே தக்கவைத்துக்கொள்ள ஒருபோதும் இயேசு விரும்பியதில்லை. மாறாக, காலத்தின் ஓட்டத்திற்கேற்ப தாம் அவற்றைத் தாண்டிச் (கடந்து) செல்ல வேண்டும், தேவைப்பட்டால் மாற்றியமைக்கவும் தயங்கலாகாது என்பதை தனது வாழ்வியலாகவே கொண்டாடினார்.
தன் தாயின் கருவில் இருக்கும்போதே, உறவினருக்கு உதவ விரும்பிய தாயுடன் தன் சொந்த ஊரைக் கடந்து சென்றார் (லூக் 1:39). குழந்தையாக இருந்தபோதே எதிரிகளின் சூழ்ச்சிக்குள் சிக்காமல் எகிப்திற்கு பெற்றோருடன் கடந்து போனார் (மத் 2:13-15). சோதனை நேரங்களில் அலகை முன்வைத்த உலகுசார் மாயைகளை (மத் 4:1-11) நேர்த்தியாகக் கடந்து துணிந்தார். சீடர்களை தெரிவு செய்யும்போது பாவிகளையும், தீவிரவாதிகளையும் உள்ளடக்கி (மத் 10:1-4) மாறா மரபு முறைகளை மிஞ்சினார்.
மலைப்பொழிவில் பழைய “கண்ணுக்குக் கண்” மதிப்பீட்டைத் தாண்டி (மத் 5) உயர்ந்தார். நம்மை அன்பு செய்பவர்களையும் தாண்டிச்சென்று பகைவர்களுக்கும் பாசம் காட்டச் சொன்னார் (லூக் 6:31-35). நீதிமான்களைக் கடந்து சென்று “வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும்” உண்டு குடித்தார் (லூக் 5:30). “மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை” (மாற் 2:27) என்றவாறு ஓய்வு நாள் சட்டத்திலிருந்து மீண்டெழுந்தார். குழந்தைகளையும் (மத் 19:14), பெண்களையும் (லூக் 8:1-3) எளிதாக தம்மை அணுகும்படி செய்தார். “தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போன” ஓர் ஆட்டை தேடிச் செல்லும் (லூக் 15:1-7) புதிய தலைமைத்துவத்திற்கு நல்ல ஆயனாக கடந்து பேணினார்.
நீதியை சமரசம்செய்யாமல், அனைவரின் நலனில் அக்கறைக் கொண்டு, “கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்” (மத் 20:1-16) என்ற புதிய மேலாண்மைக்கு கடந்து சென்றார். திரளான மக்கள் கூட்டம் தன்னைப் பின்தொடர்கிறதே என்பதற்காக, அங்கேயே தனக்கு கூடாரம் அமைக்காமல், பிற ஊர்களுக்கும் கடந்து சென்று (லூக் 4:42-43) அனைவருக்கும் அனைத்துமானார். தனது போதனையின் பொருட்டு தன்மீது கல்லெறியவும், தன்னைப் பிடிக்கவும் யூதர்கள் முற்பட்டபோது (யோவா 8:59; 10:31-39), அங்கிருந்து கண்ணியமாக கடந்து நழுவினார்.
யூத இனத்தைத் தாண்டிச் சென்று, யூதரல்லாத சமாரியர்களோடு பழகி (யோவா 4), அவர்களின் நற்குணங்களை பாராட்டினார் (லூக் 10:25-37). தன்னுடைய இரத்த உறவைக் கடந்து சென்று, தன்னுடைய (இறையரசுக்) குடும்பத்தை விசாலமாக்கினார் (மத் 12:48).பாவிகள் மீதான வெறுப்பைத் தாண்டிச் சென்று, “உங்களுள் பாவம் இல்லாதவர் கல் எறியட்டும்” (யோவா 8:7) என்று அன்றைய நடைமுறைத் தீர்ப்பிற்கே மறுதீர்ப்பு வழங்கினார். இவ்வாறாக, தன்னுடைய வாழ்நாள் முழுக்க கடந்து செல்வதில் அர்த்தம் கண்டவர், இறுதியில் தனது மரணத்தையும் கடந்துசென்று உயிர்ப்பில் வெற்றி கண்டார்.
நாமும் கடந்து செல்வோம்
இயேசு உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டு, அந்த அடித்தளத்தில் நமது வாழ்வைக் கட்டி எழுப்ப விரும்பினால், நாம் “கடந்து செல்வதற்குத்” தயாராக இருக்க வேண்டும். விடுதலைப் பயணத்தில் இஸ்ராயேல் மக்கள் செங்கடலைக் கடந்து சென்று, வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு சென்றதுபோல, நாமும் நம்முடைய வாழ்வில் எவற்றையெல்லாம் கடந்து செல்ல வேண்டுமோ, அவற்றைக் கடந்து, களைந்து உயிர்ப்பின் (பாஸ்கா) மக்களாக வாழ வேண்டும். ஆனால், கல்லறையைக் கடந்து சென்ற இயேசுவிடமிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளாமல், நாம் நமக்கும், மற்றவருக்கும் கட்டுகிற கல்லறைகளிலே சுகம் கண்டு, அவற்றைவிட்டு வெளிவரத் தயங்குகிறோம். நமது மனித பலவீனத்தாலும், ஆணவத்தாலும், சுயநலத்தாலும் நமது உறவுகள், உணர்வுகள், விழுமியங்கள், கருத்தியல்களுக்கு கல்லறை கட்டி, அவற்றை கடந்துவர மறுக்கிறோம்.
மேலும் சாதி, சாரமற்ற மரபுகள், வெற்று விளம்பரங்கள், ஆதாய அரசியல்கள், பாகுபாடுகள், கலியுக அடிமைத்தனங்களில் நம்மையே சுயஅறிவோடு புதைத்துவிட்டு அவற்றிலிருந்து கடந்துவர மறுக்கிறோம். இத்தகைய சூழலில், இயேசு நிக்கேதேமுக்கு கூறியதுபோல (யோவா 3:5), உயிர்ப்பின் மக்களாக, தூய ஆவியில் புதிதாய் பிறக்க அழைக்கிறார். எனவே, நாம் உயிர்ப்பின் மக்களென்பதை உணர்ந்து, முடக்குவாதமுற்றவன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து சென்றதுபோல (யோவா 5:8), நம்முடைய பாவ வாழ்விலிருந்து விலகி, கடந்து செல்வோம்.
(3) உயிர்ப்பும் அமைதியும்
உயிர்ப்பிற்குப் பின்னர் தனது சீடர்களுக்குத் தோன்றும்போது, இயேசு கூறிய “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” (யோவா 20:19,21) என்பது வெறும் வாழ்த்து மட்டுமல்ல; ஓர் உறுதியூட்டும் ஊக்கமும்கூட. இயேசுவின் இறப்பிற்குப் பின்னர், அவரைப் பின்தொடர்ந்தவர்களிடம் எஞ்சி நின்றது அழுகையும் (யோவா 20:11), அச்சமும் (யோவா 20:19), குழப்பமும் (லூக் 24:4), நம்பிக்கையின்மையும் (மாற் 16:12), கவலையும் (லூக் 24:17), ஏமாற்றமும் (லூக் 24:21), கடின உள்ளமும்தான் (மாற் 16:12). இந்த தருணத்தில் இயேசு அவர்களுக்கு கொடுத்த பரிசு “அமைதி.” சீடர்களிடமிருந்த அனைத்து கையறுநிலைக்கும், அந்த அமைதி ஒரு சிறந்த மருந்து பலத்துடன் கூடிய உந்துதல்; இயேசுவின் போதனையின் இலக்கும் சிகரமும்; அதோடு, சீடர்களுக்கான “பணியிலக்கு அறிக்கை” எனவும் கொள்ளலாம். இந்த அமைதியோடு தனது உயிர் மூச்சையும் (ஆவியையும்) சேர்த்து அவர்கள்மீது ஊதி “தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” (யோவா 20:21-22) என்று பணி வாழ்விற்கு அனுப்பி வைக்கிறார். அந்த அமைதியின் வழியே “உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (மத் 28:20) என்கிறார். கடவுள் அமைதியாக உருவெடுத்து, அதனை நம் மத்தியில் விதைத்து, நாமும் அமைதியில் வாழ்ந்து, மற்றவர் மத்தியிலும் அதனைப் பரப்பும் தூதர்களாக வாழ, அமைதியை நமக்கு கொடையாக விட்டுச் சென்றார்.
இயேசுவும் அமைதியும்
எசாயா (14:27) முன்னறிவித்த “அமைதியின் அரசராகிய” இயேசு பிறந்தது அமைதியான இரவில் வானதூதர்கள் கொடுத்த மகிழ்ச்சியின் செய்தியும் “அமைதி உண்டாகுக” (லூக் 2:13-14) என்பதே. “அமைதி ஏற்படுத்துவோர் பேறு பெற்றோர்” (மத் 5:9) என்று தனது பணிவாழ்வில் இயேசு அதிகம் போதித்ததும் அமைதியைப் பற்றியே. பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களிடம், “நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத் 11:28) என்று ஊக்கமூட்டினார். தன்னுடைய சீடர்களைப் பார்த்து, எந்த வீட்டிற்குச் சென்றாலும் “இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!” என்று ஆசி வழங்கப் பணித்தார். கடவுளுக்கும் நமக்குமிடையேயான உறவு, நம்முடன் இருப்போருடனான உறவில் வெளிப்படவேண்டும் என்பதை, நாம் பலிசெலுத்த வருமுன்பே, மனத்தாங்கலோடு இருக்கும் நம் சகோதரரிடம் போய் நல்லுறவு (அமைதி) ஏற்படுத்திக்கொள்ள (மத் 5:24) அறிவுறுத்துகிறார். அவர் வழியாகவே நாம் அமைதியை காண வேண்டும் (யோவா 16:33) என்றதோடு, இவ்வுலகைவிட்டுச் செல்லுமுன் தனது அமைதியையே நமக்கு பிரியாவிடை பரிசாக (யோவா 14:27) கொடுத்துச் சென்றார்.
நாம் செய்ய வேண்டியதை செய்யும்போது அமைதி விளைகிறது. இயேசுவே “வழியும் உண்மையும் வாழ்வுமாக” (யோவா 14:6) இருக்கிறார். இயேசு நம்மில் இருந்தால், அவரோடு நாமிருந்தால், அமைதி நிச்சயம். புனித பவுலைப்போல, “வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்” (கலா 2:20) என்ற மெய்ம்மையே அமைதி. ஒருவர் கடவுளைவிட்டு தொலைவில் இருந்தால், அவரால் நீடிக்கும் அமைதியை அனுபவிக்க முடியாது. நம்முடைய சிந்தனை கடவுளை நோக்கியதாகவும், மொழி இறைவனுடையதாகவும், செயல்கள் தெய்வீகமாகவும் இல்லையெனில், நாம் அமைதியை விட்டு தொலைவிலோ (அ) தொலைத்துவிட்டோ நிற்கிறோம் என்று அர்த்தம். அதனால்தான் புனித அகுஸ்தினார், “கடவுளே! நீ எங்களை உமக்காக உருவாக்கினீர். உம்மில் இளைப்பாறும் வரை எங்கள் இதயங்கள் அமைதியின்றிருக்கும்!” என்கிறார். எந்த சூழலிலும், கடவுளின் விருப்பத்திற்காக எதையும் செய்யத் தயாராக இருப்பவர்கள் இயேசுவின் வழியில் அமைதிக்கு சொந்தக்காரர்களாவர்கள்.
நாமும் அமைதியின் தூதராவோம்
கருவறையிலும், கல்லறையிலும் மட்டும் தான் மனிதன் நிம்மதியாக இருக்கிறான். இரண்டிற்கும் இடைப்பட்ட வாழ்வில் அவனது ஒட்டுமொத்த போராட்டமும் இந்த நிம்மதிக்காகத்தான். அதனால் தான் கவிஞர் கண்ணதாசன் (1964), எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்று கேட்கிறார். நாமும் “அருள்வாய், யாம் ஏங்கித் தேடுகின்ற அமைதி,” என்று ஏக்கத்தோடு செபிக்கிறோம். அமைதியைப் பற்றிய புரிதல் மட்டும் நமக்கு நிம்மதியைத் தராது. அமைதியை நாம் எங்கு தொலைத்தோமோ அங்கு தேடவேண்டும். நம்மிடம் இல்லாதது கிடைக்கும்போது அமைதியை பெறுவதாக சிலர் நம்பலாம்; வேறு சிலரோ என்னிடம் இருக்கும் சிலவற்றை இழந்தால் அமைதி கிடைக்குமே எனலாம். மற்றும் சிலரோ என்னிடம் இருப்பவற்றை முன்னுரிமை வரிசைப்படுத்தி, அதில் நான் நிறைவைக் கண்டால் அதுவும் அமைதிதானே எனலாம். இதையும் தாண்டி, இன்னும் பலர் கல்வி, செல்வம், வீரம், பதவி, புகழ், இளமை, திறமைகள், சாதனைகள், படைப்புகள், ஆள்பலம், அதிகாரம், அரசியல், குடும்பம், சொந்தங்கள், நட்பு, ஆன்மீகம், சமயம், சமூகம், வரம்பற்ற சுதந்திரம், மனம்போல வாழ்க்கை போன்றவற்றில் அமைதியைத் தேடுகிறோம். ஆனால், இவற்றில் அமைதியைத் தொலைத்தவர்களே அதிகம். இவை அனைத்துமே ஒருவேளை வழிகளாக இருக்கலாம். ஆனால், சேருமிடமாக இருக்குமா என்பது ஐயமே. பின்னர் அமைதியை அடைவதெப்படி? உயிர்ப்பு தரும் அமைதியைத் தக்கவைத்துக் கொள்வதெப்படி?
திருத்தந்தை புனித 23 ஆம் யோவான் கூறுவதுபோல, “உண்மையான அமைதி” வெறுமனே கடவுளிடமிருந்து வராது; நாமும் அதற்கான சரியான முயற்சி செய்ய வேண்டும். ஒருவரது முறையான அக நல்லிணக்கமே புற நல்லிணக்கமாக மாறுகிறது என்கிறார் புனித அக்குவின் தோமா. நானும் என் உள்ளமும் பகைமை, வெறுப்பு, அகங்காரம், கோபம், வஞ்சகம் போன்றவற்றால் உடைபட்டிருக்கும் வரை, என் குடும்பமும், என்னைச் சார்ந்தவர்களும், என் உலகமும் உடைந்தே இருக்கும். நமது தேர்வுகளை உன்னிப்பாக கவனிப்போம். நமது உறவுத்தோட்டங்கள், கடவுளின் சிங்காரத் தோட்டங்களாக மாற வேண்டுமென்றால், கடவுள்முன் வைக்கும் உண்மையும், பிறரன்பும், மன்னிப்பும், சமாதானமும், பொறுமையும், தாழ்ச்சியும் நம்மையும் ஆள வேண்டும். கடவுளின் அருளோடு சேர்ந்து நமது கடமையை ஒத்துழைப்பு வழி வெளிப்படுத்தும்போதுதான் அமைதி எஞ்சி நிற்கும், நம்மை மிஞ்சியும் பரவும். நம்மைவிட்டு பிரிந்துபோன (அ) நாம் தொலைத்து நிற்கும் ஏதாவது ஓர் உறவையாவது தேடி, மீட்டெடுத்து, இந்த விழா நாட்களில் நம்மோடு இணைத்துக் கொள்வோம். அமைதியின் வழியில் கிறிஸ்துவின் உயிர்ப்பை அர்த்தமுடன் கொண்டாடுவோம். நமக்கு சுமையாக இருக்கும் தீமைகளை நமது மனங்களிலிருந்து துப்புரவு செய்து, கடவுளோடும் மற்றவர்களோடும் ஒப்புரவாக தடையாக நிற்கும் சுவர்களைக் கடந்து, தாண்டி, மீண்டு வருவோம் இயேசுவைப்போல! அமைதி நமதாகும்! அமைதியில் நிறைந்து, அதைப் பரப்பும் உயிர்ப்பின் தூதுவர்கள் நாமாவோம்!