Namvazhvu
நற்செய்திப் போராளி புனித பவுல் “உடலில் தைத்த முள்” (2 கொரிந்தியர் 12:7-9)
Saturday, 15 Apr 2023 07:40 am
Namvazhvu

Namvazhvu

பவுல் மட்டுமல்ல; மாறாக, பவுலின் எழுத்துகளும் வியப்பானவை. புதிய ஏற்பாட்டில் இதற்கான தரவுகளை நாம் பார்க்கின்றோம். பேதுரு எழுதிய இரண்டாம் திருமடலில், பவுலுடைய இறையியல் தவறாக புரிந்து கொள்ளப்படும் என்கிற அச்சத்தை பேதுரு பதிவு செய்கின்றார் (2 பேது 3:15-16). எனினும், பவுலின் இறையியலும், இறை நம்பிக்கையும் அவருடைய இறைஎண்ண அலைகளும் தொடக்ககால திருஅவையைப் பாதித்தன. தொடக்ககால திருஅவைக்கு பவுலின் இறையியல் உரமிட்டது, உருக்கொடுத்தது, உயர்த்தியது, ஓங்கி ஒலித்தது என்பது கண்கூடு. திருத்தூதர் பவுல் சொன்னஉடலில் தைத்த முள்எனும் கூற்று ஆழ்ந்த இறையியல் நோக்கமும், மானுடவியல் பார்வையும், பணிவாழ்வின் பளுவையும் உளவியல் ஏக்கங்களையும் அருள் வாழ்வின் ஆதங்கங்களையும் கொண்டிருக்கின்றது என்ற எண்ணம் அதைப் பற்றிய ஆய்வுக்கு நம்மை இட்டுச் செல்கிறது.

விவிலியப் பாடங்களில் புரிந்து கொள்வதற்கு சற்றுக் கடினமான பகுதிகளில் ஒன்று, 2 கொரிந்தியர் 12:7-9 (“உடலில் தைத்த முள்”) என்னும் பாடமாகும். திருஅவை தந்தையர்களும் அருள் வாழ்வு நெறியாளர்களும் விவிலிய பொருள்கோளியல் அறிஞர்களும் பல்வேறு சொல்லாய்வு விளக்கங்களையும், புரிதல்களையும் வடித்திருக்கின்றார்கள். இந்த விவிலியப் பகுதியில் ஆய்வுசெய்வது விவிலிய உலகிற்கு புதிதான ஒன்றல்ல; ஆனால், இந்த விவிலியப்பாடத்தை விமர்சனக் கண்ணோட்டத்தோடு ஒரு சூழமைவு வாசிப்பு செய்ய, தமிழகத் திரு அவையின் சூழமைவோடு உரசிப் பார்க்கின்றபோது பவுலின் இந்தச் சொல்லாடல் ஆழம் பெறுகிறது, அர்த்தம் பெறுகிறது.

பவுல் தன் பணி வாழ்வின் உச்சத்தில், தன் பணியில் இன்னலுற்றார் என்பதையும், அவருடைய மனப்போராட்டமும், உடல் வலுக்குறைவும் தான் ஏற்படுத்திய திருஅவைகளில் இருந்த பிளவுகளும் போராட்டங்களும் அவருக்கு மிகுந்த வலியைத் தந்தன என்பதும் உண்மை. ஆயனின் மேய்ப்புப் பணியில், ஒரு திருத்தூதரின் நற்செய்திப் பணியில், ஒரு பணியாளரின் அருள்பணிகளில் வருகின்ற துன்பங்கள், போராட்டங்கள், சவால்கள் தான் இந்த முள்ளாக இருக்குமோ?

உடல்என்ற பதம், திருஅவையின் மறையுடலாகவும்முள்என்ற பதம், இன்றைய திருஅவை சந்திக்கின்ற சவால்களையும், சறுக்கல்களையும் திருஅவையின் மறையுடலை காயப்படுத்தும் முட்களாக பார்க்க முடியும் அல்லவா? பவுலின் உடலை தைத்த முள் அவருக்கு கிடைத்த வெளிப்பாடுகளில் தற்பெருமை பாராட்டாது இருக்க தாழ்ச்சியுடன் பணியாற்ற கடவுள் கொடுத்தது என்னும் கருத்தும் உண்டு. இதன்படி பார்க்கின்ற போது, நம் நிறுவன மையத் திருஅவை தன்னையே தாழ்ச்சியுடன் பணியாற்ற அழைப்பினைப் பெறுகிறது.

சமூகத் தளத்திலிருந்து, சமயத் தளத்திலிருந்து, உளவியல் தளத்திலிருந்து, கிறித்தவ உருவாக்கத் தளத்திலிருந்து நம் திருஅவையைக் காயப்படுத்தும் தீமைகள் அனைத்துமே திருஅவையின் உடலில் தைத்த முட்கள் எனக் கூற இயலுமா? நிறுவனத்தன்மை, அதிகார பலம், செல்வச் செழிப்பு, சாதியம், வன்கொடுமைகள், பாலியல் முறைகேடுகள் இவையெல்லாம் இன்று உடலாகிய திருஅவையை தைத்துக்கொண்டேயிருக்கின்றன என்று சொல்வது சரியா இருக்கும் தானே? இவை நம் குடும்பங்கள், பங்குத் தளங்கள் மற்றும் நம் சமூகத்திலும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதை பவுலின் துன்பங்களோடு ஒப்பிட முடியும் என நினைகின்றேன். பவுலின்உடலில் தைத்த முள்என்ற கூற்றில் பவுலின் எண்ணம், பகிர்வு, அனுபவம் எது எனக் கூற முடியுமா என்பதை விட அவை இன்று நமக்கு கொடுக்கும் அழைப்பை உணர்ந்து பதிலிறுப்பு தர வேண்டும். உடல் மற்றும் முள் என்ற இந்த இரண்டு எதிரெதிர் பதங்களை ஒப்புரவாக்கும்அருள்இன்று திருஅவைக்கு தேவைப்படுகின்றது.

உண்மையிலேயே பவுல் முள் என்று எதை கூறினார் என நாம் அறுதியிட்டுச் சொல்லமுடியாது. பவுலின் குணநலன்களை வைத்தும், பவுலின் வாழ்வியல் எதார்த்தங்களை வைத்தும், பவுலின் பணி பளுவினை வைத்தும், பவுலின் எதிரிகளை மனதிற்கொண்டும், பவுலின் உடல் உள்ள குறைபாடுகளை வைத்தும், இதெல்லாம் முள்ளாக இருக்கக்கூடுமோ என்று நாம் யூகம் செய்ய முடியுமே தவிர முடிவு செய்ய முடியாது. ஆயிரக்கணக்கான வருடங்களாக எத்தனையோ நபர்கள் இந்த உடலில் தைத்த முள் பற்றி அருள் வாழ்வு ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும், இறையியலை பேசியிருந்தாலும் இன்னமும் இது ஒரு புதிய தலைப்பாகவே, புதிய கருப்பொருளாகவே இருக்கின்றது. புதியது மட்டுமல்ல; புதிரானதும் கூட.

உடலில் தைத்த முள்என்பதை குறித்து புதிதாக எதையும் நான் கட்டமைக்கவில்லை மாறாக இந்த முள் தமிழகத் திருஅவைக்கு எப்படிப்பட்ட ஒரு புரிதலை கொடுக்கின்றது என்ற சூழல் மைய வாசிப்பை மட்டும் செய்திருக்கின்றேன். இதன் அடிப்படையில் விவிலியப் பார்வையையும் இறையியல் கண்ணோட்டத்தையும் வரிசைப்படுத்துகிறேன்.

முள்என்பது ஒரு சீடரின் உடைய வெகுமதியாக, திருத்தூதரின் அங்கீகாரமாக, அருள் பணிகளின் அடையாளமாக, போராட்ட வாழ்வின் பரிசாக, கிறிஸ்துவின் பாடுகளின் பகிர்தலாக இருக்கின்றது. இன்றைய சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வில், எவையெல்லாம் நம்மை வளர விடாமல் குத்திக் கிழித்துக் காயப்படுத்திக் கொண்டிருக்கின்றனவோ அவைகளெல்லாம் முட்கள். இந்த முட்கள் அன்று பவுலின் வாழ்வை பாதித்தன. பவுலின் திருஅவையை பாதித்தன. இன்று நம்மையும் பாதிக்கின்றன. நமது திருஅவையையும் பாதிக்கின்றன. இவற்றோடு போராடும் வாழ்வை வென்றெடுக்க இறைவன் விரும்புகிறார். துன்பத்தின் வழிதான் மீட்பு. வலிகளின் வழியில்தான் தான் நிறைவாழ்வு என்பதை உடலில் தைத்த முள் நமக்கு எடுத்தியம்புகிறது. போராட்டம்தான் ஒரு பணியாளருக்கு அர்த்தத்தை, அருளை, அங்கீகாரத்தை தருவது. அத்தகைய ஒரு போராளியாக நம்மை உருவாக்கக்கூடிய இந்தஉடலில் தைத்த முள்அனுபவம் அருளில் எதிர் கொள்ளப்படுகின்றது. இன்று நமது அருள்பணிகளுக்காக திருஅவைச் சமூகம் தவித்துக் கொண்டிருக்கிறது. நமது பணிகள் அருள் நிறைந்த பணிகளாக மாற முட்களாக நமது தமிழக திருஅவையை வாட்டும் சாதியம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, திருநிலையில் ஆதிக்கம், இன்னும் பற்பல முட்களை களைந்து முன்னேற முற்படுகின்ற போது இயேசுவின் இறையாட்சி கனவும் பவுலின் கிறிஸ்து உருவாக்கமும் நம் திருஅவையின் இலக்காக மாறி நிலை வாழ்வை இவ்வுலகில் பரிசளிக்கும்.

திருஅவை தந்தையர்களின் படிப்பினைகள் முள் என்பது அருள் வாழ்வுக்கான போராட்டம் என்கிறது. இறையியலாளர்கள், விவிலிய வல்லுநர்களின் கருத்துப்படி இது மனித எதிரிகளின் போராட்டம். ஒரு சில விவிலிய ஆய்வாளர்களின் கருத்துப்படி, இது உடல் உள்ள போராட்டம் எதுவாக இருந்தாலும் போராட்டம் என்பது அங்கு பொதுவான ஒரு முள்ளாக இருப்பதை பார்க்கிறோம். இந்த போராட்டம் நவீன முறைகளில் இன்றும் நமது திருஅவையின் மறை உடலைக் குத்திக் கிழித்துக் கொண்டிருக்கின்றன என்பது உண்மை. இதற்கு எதிராக நாம் போராட வேண்டும். கடவுளின் அருள் ஒன்றே போதுமானது என்ற பவுலின் கூற்றுப்படி இன்று கூட்டு இயக்க திருஅவையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்ற நம்மை அருளுக்கான பாதைகளைக் கண்டுபிடிக்க பவுலின் போராட்டமும் பவுலின் இந்த உணர்ச்சிமிகு கூற்றும் அழைப்பு விடுக்கின்றன.

வரலாற்றுப் பின்னணி, விவிலிய பின்னணி, பொருள்கோள் பின்னணி, இவற்றின் அடிப்படையில் பவுலுக்குஉடலில் தைத்த முள் அவரது வலுவின்மை, மனப்போராட்டம், திருஅவை பிளவுகள் என எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், நம் திருஅவைக்கும் நம் கிறிஸ்தவ வாழ்விற்கும்உடலில் தைத்த முள்என்பது சாதியம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, அதிகார பலம், நிறுவனத் தன்மை, திருநிலையினர் ஆதிக்கம் பாலியல் முறைகேடு, உளவியல் கோளாறுகள், அருள்பணி உருவாக்கத்தில் நம்பகத்தன்மையின்மை இவைகளெல்லாம் முட்கள் இன்று பவுலைப் போல கடவுளின் அருள் போதுமானது என்று சொல்ல நாம் பங்கேற்பு திருஅவையாக மாற வேண்டும். பாமரர் திருஅவையாக மாற வேண்டும். உடன் பயணிக்கும் திருஅவையாக மாற வேண்டும்.

இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்கு சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம்” (2 கொரி 4:10) என்று சொன்ன பவுல் போல, துணிவைப் பெறுவோம். எந்நேரமும் சாவின் வாயிலில் நின்று கொண்டிருக்க (2 கொரி 4:11) நமக்கு முட்கள் அதிகமாகவே இருக்கின்றன. இந்த முட்களை களைந்திட அருளுக்காக போராடும் உலக திருஅவையின் முன்னெடுப்புகள், தமிழக திருஅவையின் முயற்சிகளும் நம் வலுவின்மையில் வலிமை காண, மனநிலையில் இயேசுவாய் பணியில் பவுலாய் பாங்காய் செயல்பட, கூட்டியக்க திருஅவை கடவுள் தந்த போதுமான அருள் என்று உணர்ந்து முனைப்புடன் முன்னேற அழைப்பு விடுக்கின்றது பவுலின்உடலில் தைத்த முள்எனும் கூற்று.