2021 ஆம் ஆண்டு பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ, தேசிய ஒற்றுமை மற்றும் இந்திய இவாஞ்சலிக்கல் பெல்லோஷிப் எனும் கிறிஸ்தவ சபைகளுடன் இணைந்து, இந்தியாவில் இந்து அடிப்படைவாதிகளால், கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ தேவாலயங்களும், நிறுவனங்களும் தாக்கப்படுவதை தடுக்கவும், போதிய பாதுகாப்பு வழங்கவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தனர்.
2022 இல் இவ்வழக்கு விசாரிக்கப்பட்ட போது, கிறிஸ்துவ ஐக்கிய மன்றம் 2022 இல் மட்டும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 597 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவித்தது. இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றம், 2022, செப்டம்பர் ஒன்றாம் தேதி 20 கிறிஸ்தவர்களுக்கு மேல் தாக்கப்பட்ட எட்டு மாநில அரசிடம் அவர்கள் தாக்கப்பட்ட விவரங்கள், காவல்துறை அறிக்கைகள், விசாரணை நிலைகள், குற்றம் சாட்டப்பட்டவர்களின் நிலை போன்ற விவரங்களை வழங்குமாறு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் அடுத்த அமர்வானது நடத்தப்படும் என்றும் கூறியது. அதன்படி 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வானது இவ்வழக்கை மீண்டும் விசாரித்தது. அப்போது மத்திய அரசின் தரப்பில் ஆஜரான பொதுநல வழக்கறிஞர் துஷார் மேத்தா, “எதிர்த்தரப்பினர் கொடுத்திருக்கும் வழக்கு திட்டமிடப்பட்டவை அல்லது போலியாக தயாரிக்கப்பட்டவை. 500க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளதாக கூறியிருக்கிறார்கள், ஆனால் இதுவரை 155 வன்முறை சம்பவங்கள் மட்டுமே காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் தாங்கள் எப்பொழுதும் ஆபத்தான நிலையில் இருப்பது போலவே ஒரு பிம்பத்தை இங்கு கிறிஸ்துவர்கள் உருவாக்குகிறார்கள். மேலும் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற ஒரு பொய் பிம்பத்தை உருவாக்கி, உலக கிறிஸ்துவ நாடுகளிடம் இந்தியாவுக்கு அவப்பெயரை உண்டாக்கவே மனுதாரர்கள் இப்படி செய்வதாக தெரிகிறது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கூறினார். இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத கத்தோலிக்க திரு அவைத் தலைவர் ஒருவர் UCA செய்தி நிறுவனத்திடம் “கிறிஸ்தவர்களாகிய நாங்கள் இங்கே சிறுபான்மை மக்களாக இருக்கிறோம். தாக்குதல்களும் வன்முறைகளும் நடக்கிற போது நாங்கள் காவல்துறையைத்தான் முதலில் நாடுகிறோம். ஆனால் காவல்துறையினர் எங்கள் புகார்களை பதிவு செய்ய மறுக்கின்றனர். சில நேரங்களில் பாதிக்கப்பட்ட எங்கள் மீதே அந்த வழக்குகளை பதிவு செய்கின்றனர். ஒரு சில காவல் அதிகாரிகள் மட்டுமே பலத்த அழுத்தங்களுக்கு பிறகு வழக்குகளை பதிவு செய்கின்றனர்” என்று கூறினார்.
கிறிஸ்தவர்கள் தரப்பு வழக்கறிஞர், ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையை ஆய்வு செய்து, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார், நீதிமன்றம் அவர்களுக்கு மூன்று வார காலம் அவகாசம் அளித்துள்ளது.