மத்திய அமெரிக்க நாட்டின் நிக்ராகுவாவில் உள்ள அருள்சகோதரிகளின் துறவற இல்லத்தை நாட்டின் வேளாண் தொழில் நுட்ப நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் தொமெனிக்கன் சபை அருள்சகோதரிகள் இருவரை நாட்டிலிருந்து அரசு வெளியேற்றியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
1958 ஆம் ஆண்டு முதல் ரிவாஸ் இல்லத்தின் பொறுப்பாளர்களாக பணியாற்றிய தொமெனிக்கன் சபை அருள்சகோதரிகளாகிய, இசபெல் சிசிலியா, பிளாங்கோ குபிலோ மற்றும் முதியோர் இல்லத்தில் பணிபுரிந்த அருள்சகோதரிகள் பலரும் நிக்ராகுவாவிலிருந்து ஏப்ரல் 12 ஆம் தேதி புதனன்று வெளியேற்றப்பட்டுள்ளதாக அச்சபை தெரிவித்துள்ளது.
மேலும் 2001 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவிலிருந்து நிக்ராகுவாவுக்கு வந்து பணிபுரிந்து கொண்டிருந்த டிரப்பீஸ்ட் சபை அருள்சகோதரிகளின் துறவற இல்லத்தை பறிமுதல் செய்து அதனை நிக்கராகுவா வேளாண் தொழில்நுட்ப நிறுவனத்திடம் ஒப்படைத்து அச்சகோதரிகளையும் நாட்டிலிருந்து அரசு வெளியேற்றியுள்ளது.
ஏற்கனவே நிக்கராகுவாவில் பணியாற்றி வந்த புனித அன்னை தெரசாவால் நிறுவப்பட்ட அன்பின் பணியாளார்கள் சபையினரின் சட்டப்பூர்வமான உரிமையை இரத்து செய்து அவர்களையும் நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புனித வாரத்தின் தொடக்கத்தில், பனாமா நாட்டின் கிளரீஸியன் சபை மறைப்பணியாளரான அருள்பணி டொனாசியானோ அலார்கான் அவர்கள் மதகல்பா மறைமாவட்டத்தின் ஆயரான ரோலண்டோ அல்வாரெஸுக்காக செபித்ததற்காக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், பாரம்பரிய பொது நிகழ்வுகளை அரசுத்தலைவர் ஒர்தேகா தடை செய்த பின்னர் கத்தோலிக்க மக்கள் கடினமான நிலையில் புனித வார நிகழ்வுகளில் பங்கெடுத்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டில் 3000க்கும் மேற்பட்ட ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டுள்ளதுடன் ஏறக்குறைய இருபது பேர் இந்நாள்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.