Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் கீழைரீதி திரு அவைகளில் வாக்குப்பதிவில் வயது வரம்பு
Thursday, 20 Apr 2023 07:31 am
Namvazhvu

Namvazhvu

கீழைரீதி திரு அவைகளில் புதிய முதுபெரும் தந்தையர்கள், பேராயர்கள் மற்றும் ஆயர்களை தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவில் திருத்தந்தை பிரான்சிஸ் புதியதொரு திருத்தத்தை கொணர்ந்துள்ளார்.

திருத்தந்தையை தெர்ந்தெடுக்கும் கர்தினால்களுக்கு வயதுவரம்பு இருப்பதுபோல் கீழைரீதி திரு அவைகளிலும் வாக்குப்பதிவில் கலந்துகொள்வோருக்கு வயது வரம்பு கொணரப்பட வேண்டும் என அத்திரு அவைகளின் தலைவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அது குறித்த திரு அவைச் சட்டத்தில் மாற்றத்தைக் கொணர்ந்து தன் சுயவிருப்பத்தின் பேரில் எனும்  Motu Proprio ஒன்றை ஏப்ரல் 16 ஆம் தேதி கையெழுத்திட்டு, எப்ரல் 17 ஆம் தேதி, திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டார்.

80 வயதிற்கு மேற்பட்ட முதுபெரும் தந்தையர்கள் மற்றும் ஆயர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள தடைச் செய்யும் இப்புதிய சட்ட திருத்தம், ஒரு விதிவிலக்கையும் கொணர்ந்துள்ளது. அதாவது, 80 வயதானபோதிலும், அவர்கள் பதவியில் இருந்தால் அவர்களுக்கு வாக்குரிமை உண்டு என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

கீழைரீதி திரு அவைகளின் உயர் அதிகாரிகளின் விண்ணப்பதை ஏற்று, கீழைரீதி திரு அவைகளுக்கான துறை மற்றும் சட்ட ஏடுகளின் துறை ஆகியவற்றின் கலந்தாலோசனையுடன் இம்முடிவை எடுத்துள்ளதாக திருத்தந்தை தன் Motu Proprio அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கீழைரீதி திரு அவை ஒன்றின் முதுபெரும் தந்தைக்கான தேர்வில் அத்திரு அவையின் ஆயர் மாமன்றத்தின் அங்கத்தினர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை உண்டு என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

80 வயதிற்கு மேல் வாக்குரிமை இல்லையெனினும், முதுபெரும் தந்தை விரும்பினால் அவர்களை ஆலோசனைகளுக்கென அழைக்கலாம் எனவும், ஆயர் ஒருவர் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும்போது, மூன்று பெயர்கள் தேர்வுச் செய்யப்பட்டு முதுபெரும் தந்தை வழியாக இரகசியமாக திருத்தந்தைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வேண்டும் எனவும் திருத்தந்தையின் புதிய அறிக்கை கோருகிறது.