2024 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வதற்கான ஒரு வாய்ப்பு என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ள 33வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்பியுள்ள தனது வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகிற்குப் பெரிதும் தேவைப்படும் உடன்பிறந்த உறவை வளர்க்கும் ஒரு வாய்ப்பாக இவ்விளையாட்டுகள் அமையும் என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு மக்கள், கலாச்சாரங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த அனைத்து தரப்பு மக்களிடையேயும் ஆழமான மற்றும் பயனுள்ள சந்திப்பிற்கான ஒரு வழியாகவும் இவ்விளையாட்டுகள் அமையும் என்று தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒட்டுமொத்த உலகத்தையும் பிரான்ஸ் நாட்டிற்கு வரவேற்பதற்கான பொறுப்புணர்வையும் மகிழ்வையும் இது வெளிப்படுத்துகிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.
இந்தத் தனித்துவமான நிகழ்வை அனைவருக்கும் ஒரு நேர்மறையான அனுபவமாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து வருமாறு அந்நாட்டிலுள்ள கத்தோலிக்கர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நிகழ்விற்காக வரும் அனைவரின் தேவைகளுக்காக உங்கள் வழிபாட்டுத்தலங்கள், பள்ளிகள் மற்றும் வீடுகளைத் திறந்து உதவக் காத்திருக்கும் தன்னார்வலர்களாக மாற நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்" என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்லாவற்றிக்கும் மேலாக, உங்களின் வரவேற்கும் குணம், அர்ப்பணவுணர்வு மற்றும் தாராள மனப்பான்மையால், உங்களில் வாழும் கிறிஸ்துவுக்கு நீங்கள் சாட்சிகளாய் இருப்பீர்கள் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஊனமுற்றோர், ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களை இந்த அழகான விளையாட்டு திருவிழாவில் ஒருங்கிணைப்பதற்கான வழிகளைக் கண்டறியுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
திருத்தந்தையின் சார்பாக, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கையெழுத்திட்டுள்ள இவ்வாழ்த்துச் செய்தி ஏப்ரல் 18 ஆம் தேதி, செவ்வாயன்று வெளியிடப்பட்டது.