‘எதிர்பார்ப்பு’ இல்லாமல் நம்மால் வாழ முடியுமா? என்ற ஒரு கேள்வியை நாம் எழுப்பும் அதே நேரத்தில், ‘எதிர்பார்ப்பு இல்லை என்றால் ஏமாற்றம் இல்லை’ என்று நம் மனம் சொல்லி முடிக்கிறது.
பெக்கி மற்றும் கான் தம்பதியினர் திருமணம் முடிந்து, இருபது ஆண்டுகள் கழித்து, பெக்கி ஒரு நாள் தன் கணவன் கானிடம், ‘நான் உங்களைப் பற்றிய எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன்!’ என்கிறாள். அதற்கு கான் அவளிடம், திருமணத்தில் வரும் பெரும்பாலான பிரச்சனைகளையும், மகிழ்ச்சியின்மையும் மூன்று வகையான எதிர்பார்ப்புகளிலிருந்து வருகிறது என்கிறார்.
(அ) நியாயமற்ற எதிர்பார்ப்பு: திருமணம் முடிக்கும்போது, குடும்பத்தில் நிலவிய பணக்குறையை அறிந்த பெக்கி, கானிடம், தினமும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேலை செய்யுமாறு சொல்கிறாள். ஆனால், ஒன்றிரண்டு மாதங்களில் அவனிடம், ‘நீங்கள் என்னுடன் நேரம் செலவழிப்பதே இல்லை. வேலை, வேலை என்று இருக்கிறீர்கள்’ என்று குறைபட்டுக்கொள்கிறாள். இது பெக்கியின் நியாயமற்ற எதிர்பார்ப்பு. ஏனெனில், கான் ஒரே நேரத்தில் வேலைக்குச் செல்லவும், வீட்டில் இருக்கவும் முடியாது.
(ஆ) தெளிவற்ற எதிர்பார்ப்பு: பத்தாம் ஆண்டு திருமண நாளில், பெக்கிக்கு ஒரு பரிசு கொடுக்க விரும்புகிறான் கான். என்ன வேண்டும் எனக் கேட்கிறான். அவள் சேலை, மோதிரம், நெக்லஸ் என நாளுக்கு ஒன்று சொல்கிறாள். குழம்பிப் போகின்ற கான். அவளுக்கு அழகான சேலை ஒன்று எடுத்துக்கொடுக்கிறான். அது அவளுக்குப் பிடிக்கும் என நினைத்து, ஆவலுடன் அதை அவளிடம் நீட்ட, ‘ஐயோ! இதே மாடல், கலர் என்னிடம் ஏற்கெனவே இருக்கிறதே!’ என அழத் தொடங்குகிறாள் பெக்கி. இங்கே, பெக்கியின் எதிர்பார்ப்பு தெளிவற்றதாய் இருந்ததால் கான் அதை நிறைவேற்ற முடியவில்லை.
(இ) நிறைவேறாத எதிர்பார்ப்பு: சில நேரங்களில் எதிர்பார்ப்புகள் நியாயமானதாகவும், தெளிவானதாகவும் இருக்கும். ஆனால், நிறைவேறாமலேயே போய்விடும். எடுத்துக்காட்டாக, இவர்கள் காதல் செய்யும்போது இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், திருமணத்திற்குப் பின் நடந்த ஒரு விபத்தினால் கருத்தரித்தல் பாதிக்கப்படுகிறது. ஆக, அங்கே இவர்கள் இருவரின் எதிர்பார்ப்புகளும் நிறைவேறாமலேயே போய்விடுகின்றன.
இவற்றை சொல்லி முடித்த கான், இனி ‘எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்ளலாம்’ என நினைக்கிற பெக்கியைப் பாராட்டுகிறான்.
கானின் இந்தப் பட்டியலோடு நாம் இன்னும் மூன்று எதிர்பார்ப்புக்களை இணைத்துக்கொள்ளலாம்:
(ஈ) அதீத எதிர்பார்ப்பு: அதாவது, ஒருவருடைய ஆற்றலை அல்லது திறனை நாம் அறிந்தாலும், அதைவிட அதிகம் எதிர்பார்த்தல். இது நபர்களுக்கும் பொருந்தும், பொருள்களுக்கும் பொருந்தும். நினைவுத்திறன் குறைவாக உள்ள என்னுடைய மாணவர் தேர்வில் அனைத்தையும் நினைவுகூர்ந்து எழுதுவார் என நினைப்பதும், நம்முடைய குட்டிக் கார் மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்ல வேண்டும் என நினைப்பதும் அதீத எதிர்பார்ப்புகளே.
(உ) தாழ்வான எதிர்பார்ப்பு: இது, அதீத எதிர்பார்ப்புக்கு முரணானது. ஒருவரின் ஆற்றலை அறியாத நாம் மிகவும் தாழ்வாக எதிர்பார்த்தல். சில நேரங்களில் இது ஆச்சர்யத்தையும், பல நேரங்களில் அதிர்ச்சியையும் கொடுக்கும். எடுத்துக்காட்டாக, பெலிஸ்தியன் கோலியாத்தைக் கொல்வதற்காக ஒரு கவனுடனும், சில கூழாங்கற்களோடும் அவரை எதிர்கொள்கின்ற தாவீது தன்னிடம் வருவதைப் பார்க்கின்ற கோலியாத், தாவீதிடம் கொண்டிருக்கின்ற எதிர்பார்ப்பு மிகவும் தாழ்வானது. விளைவாக, கோலியாத்து தன்னுடைய தாழ்வான எதிர்பார்ப்பாலேயே இறந்து விடுகிறார்.
(உ) தவறான எதிர்பார்ப்பு: இது ஏறக்குறைய நியாயமற்ற எதிர்பார்ப்பை ஒத்திருக்கிறது. பொருந்தாத ஒன்றை எதிர்பார்ப்பது. கோழி முட்டையை அடைகாக்க வைத்துவிட்டு, மயில் குஞ்சுகளை எதிர்பார்ப்பது தவறான எதிர்பார்ப்பு.
இவ்வளவு பெரிய முன்னுரை எதற்கு?
‘நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும், மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும், செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலே மீட்கப் போகிறார் என நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம்.’
‘…நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம்’ - இப்படித்தான் தங்களுடைய எம்மாவு வழிப்பாதையில் தங்களோடு கரம் கோர்த்த, முன்பின் தெரியாத வழிப்போக்கனின் கேள்விக்கு விடையளிக்கின்றார் கிளயோப்பா.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 24:13-35) எம்மாவு நிகழ்வை நம் கண்முன் கொண்டு வருகிறது.
‘நாசரேத்து இயேசு இஸ்ரயேலை மீட்கப் போகிறார்’ என சீடர்கள் எதிர்பார்த்ததை மேற்காணும் பட்டியலில் எந்த வகையில் சேர்க்கலாம்?
நியாயமற்ற எதிர்பார்ப்பு - ஏனெனில், இறைவாக்கினராக, வல்ல செயல்கள் செய்தவர் உரோமை அரசை எதிர்த்துச் சண்டையிடுவார் என நினைத்தது.
தெளிவற்ற எதிர்பார்ப்பு - இயேசுதரும் விடுதலை அல்லது மீட்பு என்பது அரசியல்சார் நிகழ்வா அல்லது ஆன்மீகம்சார் நிகழ்வா என்ற தெளிவில்லாமல் இருக்கின்றனர் சீடர்கள்.
நிறைவேறாத எதிர்பார்ப்பு - இவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. ஆகவே, எருசலேமை விட்டு எம்மாவு நோக்கிச் செல்கின்றனர்.
மேலும், இவர்களுடைய எதிர்பார்ப்பை அதீத மற்றும் தவறான எதிர்பார்ப்பு வகையிலும் சேர்க்க முடியும்.
இப்படியாக, இங்குமங்கும் அலைக்கழிக்கப்பட்ட அவர்களின் எதிர்பார்ப்புகளின் திசையைத் திருப்புகின்றார் இயேசு. விளைவாக, அவர்கள் தாங்கள் எங்கிருந்து வந்தார்களோ அதே திசையை நோக்கித் திரும்பிச் செல்ல ஆரம்பிக்கிறார்கள்.
அவர்களின் எதிர்பார்ப்புகள் நியாயமற்றவை, தெளிவற்றவை, அதீதமானவை என நினைக்கின்ற இயேசு மறைநூலின் உதவியுடன் அவர்களுக்கு விளக்குகின்றார். இறுதியில், உணவு அருந்தும்போது அவர்கள் கண்கள் திறக்கப்பட்ட அந்த நேரத்தில், தங்களுடைய எதிர்பார்ப்புகள் தவறானவை என உணர்கின்றனர். ‘வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?’
சீடர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனதால் நடந்த சிலவற்றை இன்றைய நற்செய்தி நமக்குச் சுட்டிக்காட்டுகிறது:
அ. எதிர்திசை நோக்கிச் செல்கின்றனர்
சீடர்கள் எம்மாவு நோக்கிச் செல்கின்றனர். அவர்களுடைய இல்லம் அங்கே இருந்ததா அல்லது உறவினர்கள் அல்லது நண்பர்களின் இல்லம் அங்கே இருந்ததா என்று தெரியவில்லை. எருசலேமில் இருந்தால் தங்களுக்கும் ஆபத்து என்று தப்பி ஓடுகிறார்களா அல்லது இனி இங்கே இருந்து பயன் ஒன்றுமில்லை, எல்லாம் முடிந்துவிட்டது என்று தப்பி ஓடுகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், எருசலேமை தங்கள் முதுகின்பின் தள்ளி எதிர்திசையில் நடக்கின்றனர். இனி இங்கே வரவே கூடாது என்பதுதான் அவர்களுடைய எண்ண ஓட்டமாக இருந்திருக்கும்.
ஆ. நடந்து செல்கின்றனர்
ஏறத்தாழ 11 கி.மீ நடந்து செல்ல முயல்கின்றனர். ஒன்று, அவர்களால் கழுதை அல்லது குதிரை வாகனம் ஏற்பாடு செய்ய முடியாமல் போயிருக்கலாம் அல்லது அதை எல்லாம் தேடாமல், ஓட்டமும், நடையுமாக யார் துணையுமின்றி ஓடிவிட முயன்றிருக்கலாம். மனித விரக்திக்கும் ஆற்றல் உண்டு என்பது இதற்குச் சான்று.
இ. உரையாடிக்கொண்டு செல்கின்றனர்
அமைதியற்ற உள்ளம் நிறையப் பேசும். தாங்கள் இயேசுவால் ஏமாற்றப்பட்டதைப் பேசியே தீர்த்துக்கொள்ள நினைக்கின்றனர். ஊர் போய்ச் சேரும் வரை நன்றாகப் பேசிவிட்டு, உள்ளத்தில் உள்ளதை எல்லாம் கொட்டிவிட்டு, போய் ஒரு நல்ல குளியல் போட்டு, இயேசுவைத் தலைமுழுகிவிட வேண்டும் என்பது இவர்களின் எண்ணமாக இருந்திருக்கலாம்.
ஈ. முகவாட்டம்
முன்பின் தெரியாத மற்றொரு வழிப்போக்கன் கேள்வி கேட்டாலும், தங்களுடைய உள்ளுணர்வுகளை மறைக்கத் தெரியாமல் அல்லது மறைக்க முடியாமல் நிற்கின்றனர் அப்பாவி சீடர்கள். அவர்களின் முகவாட்டம் அவர்கள் அடைந்த ஏமாற்றத்தின் அறிகுறி.
உ. கோபம்
‘எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்கு மட்டும்தான் நிகழ்ந்தவை தெரியாதோ!’ எனக் கோபம் கொள்கின்றனர். வழக்கமாக, ஏமாந்து போயிருப்பவர் எல்லார் மேலும் கோபப்படுவார். அதுதான் இங்கே நிகழ்கிறது.
ஊ. வரவேற்பு
இறுதியாக, ஏமாந்த உள்ளம் தன்னுடைய கதையைக் கேட்ட ஒருவரை உடனே அரவணைத்துக்கொள்ளும். அப்படித்தான் இங்கேயும் நடக்கிறது. முன்பின் தெரியாத ஒருவரை தங்களோடு இரவில் தங்குவதற்கு அழைக்கும் அளவிற்கு அவர்களுடைய மனம் சோர்ந்து போயிருக்கிறது. முன்பின் தெரியாத இந்த நபர் இரவில் கத்தியை எடுத்துக் குத்தினால் என்ன நடக்கும்? என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், அவர்கள் அடைந்த ஏமாற்றம் இந்தக் கேள்வியை அப்புறப்படுத்தி விடுகிறது.
அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாததால், அவர்கள் பெற்ற இந்த ஆறு உணர்வுகளையும், செயல்களையும் இயேசுவின் ஒற்றைச் செயல் புரட்டிப்போட்டு விடுகிறது. அப்பத்தைப் பிட்கும்போது, இயேசுவைக் கண்டுகொள்கின்றார்கள்.
‘அவர்கள் அந்நேரமே திரும்பிப் போனார்கள்’ எனப் பதிவு செய்கிறார் லூக்கா.
அதாவது, உணவருந்தி முடித்த அந்த இரவிலேயே, இரவோடு இரவாக எருசலேம் நோக்கித் திரும்புகிறார்கள். அவர்களுடைய எதிர்பார்ப்பின் திசையைத் திருப்பிவிடுகிறார் இயேசு.
அவர்களின் இந்த விரைவான பயணத்தில் அவர்கள் தங்களின் மனச்சோர்வு, விரக்தி, ஏமாற்றம் அனைத்தையும் மறந்துவிடுகிறார்கள். ‘இயேசு இருக்கிறார்’ என்ற அனுபவம் அவர்களின் எதிர்பார்ப்பின் திசையைத் திருப்பிவிடுகிறது.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 2:14,22-33), பெந்தகோஸ்தே நிகழ்வுக்குப் பின், பேதுரு எருசலேமில் ஆற்றிய பேருரையின் ஒரு பகுதியை வாசிக்கிறோம். தாவீது அரசரின் திருப்பாடல் வரிகளை (காண். திபா 32:11, 2 சாமு 7:12,13) மேற்கோள் காட்டுகின்ற பேதுரு, அவர் தன்னைப் பற்றி அல்ல; மாறாக, தனக்குப் பின்வரும் மெசியா பற்றி முன்னுரைத்திருப்பதாக எழுதுகின்றார். பேதுருவின் உரையின் சாரம் என்னவென்றால், தன்னுடைய சமகாலத்து யூதர்களின் தாழ்வான எதிர்பார்ப்பை இயேசுவின் உயிர்ப்பு தவிடு பொடியாக்கியிருக்கிறது என்பதுதான். இயேசுவைக் கொன்றுவிடலாம் என்பது யூதர்களின் எதிர்பார்ப்பாக இருந்து, அவர்கள் இயேசுவைக் கொல்லவும் செய்கின்றனர். ஆனால், அவருடைய உடல் படுகுழியைக் காணவிடாமல் கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்கிறார். பாதாளத்தைப் பார்த்துக்கொண்டு, தங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறிவிட்டதாக எண்ணிக்கொண்டிருந்த யூதர்களின் திசையைத் திருப்பி, வான் நோக்கிப் பார்க்க அவர்களை அழைக்கின்றார் பேதுரு.
இரண்டாம் வாசகம் (காண். 1 பேது 1:17-21), பேதுருவின் கடந்த வார அறிவுரைப் பகுதியின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இயேசுவின்மேல் நம்பிக்கை கொண்டதால் தாங்கள் அனுபவித்த பல்வேறு துன்பங்களால் மனம் துவண்டு போன மக்களுக்கு, ஆறுதல் சொல்லும் பேதுரு, அவர்கள் பெற்ற மீட்பின் மேன்மையை - ‘விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை பொன்னும், வெள்ளியும் அன்று, கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தம்’ - எடுத்துக்காட்டி, கீழானவற்றிலிருந்து தங்கள் முகத்தை மேலானது நோக்கித் திருப்ப அழைக்கின்றார்.
இறுதியாக
‘நீ விழுந்து கிடக்கும் இடத்தை அல்ல; நீ வழுக்கிய இடத்தையே கவனிக்க வேண்டும்’ என்பது பழமொழி. தங்களுடைய எதிர்பார்ப்புகளில், எதிர்பார்ப்புகளால் வழுக்கிய சீடர்களின் திசையைத் திருப்புகின்றனர் இயேசுவும், பேதுருவும்.
திசைதிரும்பிய எதிர்பார்ப்புகள் புதிய பயணத்தின் மைல் கற்கள்!