திருத்தந்தைக்கு திருஅவை நிர்வாகத்தில் உதவும் C-9 என்னும் கர்தினால்கள் அவையின் இவ்வாண்டு முதல் கூட்டம் ஏப்ரல் 24 ஆம் தேதி திங்களன்று திருத்தந்தையின் தலைமையில் வத்திக்கானில் துவங்கியது. Praedicate Evangelium என்ற புதிய விதிமுறை சீர்திருத்தங்கள் திருத்தந்தையால் கொணரப்பட்டபின் இடம்பெறும் இக்கூட்டத்தில் பழைய C-9 அங்கத்தினர்களுடன் புதிய அங்கத்தினர்களும் பங்கேற்கின்றனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், வத்திக்கான் நகர நிர்வாகத்தின் தலைவர் கர்தினால் பெர்னாண்டோ வெர்கெஸ் அல்சகா, காங்கோ குடியசின் கின்ஷாசா பேராயர், கர்தினால் ஃப்ரிடோலின் அம்போங்கோ பெசுங்கு, மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியாஸ், அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாஸ்டன் பேராயர், கர்தினால் சீன் பேட்ரிக் ஓ’மல்லி, இஸ்பெயினின் பர்ச்சலோனா பேராயர், கர்தினால் ஜுவான் ஜோஸ் ஒமெல்லா, கானடாவின் கியூபெக் பேராயர், கர்தினால் ஜெரால்ட் லாக்ரோயிக்ஸ், லக்சம்பர்க் பேராயர், கர்தினால் ஜீன்-கிளாட் ஹோலெரிச், பிரேசிலின் சான் சால்வடார் டி பாஹியா பேராயர், கர்தினால் செர்ஜியோ டா ரோச்சா, மற்றும் இக்கர்தினால்கள் அவையின் செயலர் ஆயர் மார்கோ மெலினோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருத்தந்தையின் திரு அவை நிர்வாகப் பணியில் உதவுவதற்கென 2013 செப்டம்பர் 28 ஆம் தேதி துவக்கப்பட்ட இந்த C-9 கர்தினால்கள் அவை, அதே ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேதி தன் முதல் கூட்டத்தை நடத்தியது.