Namvazhvu
கிருஷ்ணகிரி புனித பாத்திமா அன்னை திருத்தலம் பசிலிக்கா ஆகுமா?
Saturday, 29 Apr 2023 06:30 am
Namvazhvu

Namvazhvu

கிருஷ்ணகிரி - ‘கிருஷ்ணஎன்றால் கறுப்பு நிற - கரிய - கருநிறம்; கிரி என்றால் மலை. கருநிற கிரானைட் மலைகளுடன் அமைந்துள்ளதால் இவ்வூர் அல்லது இம்மாவட்டம் கிருஷ்ணகிரி என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ண தேவராயரின் ஆட்சியின் கீழ் இப்பகுதி ஆளப்பட்டதால் இம்மன்னர் பெயர் தழுவி கிருஷ்ணகிரி என்றும் அழைக்கப்படலாம்.

 எங்கும் கருநிற மலைகள் மற்றும் கற்களை ஒன்று மேல் ஒன்று அடுக்கி வைத்தாற்போன்று அழகிய குன்றுகள், பசும்புல்வெளிகள் நிறைந்த பசுமையான பள்ளத்தாக்குகள்! தமிழகத்தின் உயிர்மூலமான காவிரி நதி நுழைந்து அருவியின் இரைச்சலுடன் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்பூமிதான் இந்த கிருஷ்ணகிரி மாவட்டம்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 44 - ம், சென்னை - பெங்களூரு தங்க நாற்கர சாலையும், கிருஷ்ணகிரி - வாலாஜா நெடுஞ்சாலையும், கிருஷ்ணகிரி -பாண்டிச்சேரி நெடுஞ்சாலையும் சந்திக்கும் மையப்புள்ளிதான் இந்த கிருஷ்ணகிரி நகரம்.

தமிழ் - தெலுங்கு - கன்னடம் - (புலம்பெயர்ந்தவர்களின்) மலையாளம் என்று தென்னிந்தியாவின் சங்கமம் இங்கு மட்டுமே சாத்தியம். மேற்கே கர்நாடக மாநிலத்தையும் வடக்கே ஆந்திராவையும் தன் எல்லையாக கொண்டுள்ள மாவட்டம். மேலும் இந்து - முஸ்லீம் - கிறிஸ்தவம் என்று மும்மதங்களும் புரிந்துணர்வோடும் பரஸ்பர நட்போடும் கோலோச்சும் சமரச பூமி.

தமிழகத்தில் உள்ள 18 இலத்தீன் ரீதி மறைமாவட்டங்களில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பங்குகளையும் இறைமக்களையும் கொண்ட ஓர் இளம் மறைமாவட்டம்தான் தருமபுரி. 1997 ஆம் ஆண்டு சேலம் மறைமாவட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்ட இம்மாவட்டம் இதுவரை இரண்டு ஆயர்களைக் கண்டிருக்கிறது. தருமபுரி மறைமாவட்டத்தின் முதல் ஆயர் மேதகு ஜோசப் அந்தோணி இருதயராஜ் . அவர்கள். தற்போதைய ஆயர் மறைமாவட்டத்தைப் போன்றே ஆயர் நிலையில் வெள்ளி விழாக் காணும் மேதகு ஆயர் லாரன்ஸ் பயஸ். சேசு சபையினரின் மறைப்பணியில் உருவாக்கப்பட்டு, பாரிஸ் மறைபரப்பு சபையின் அரவணைப்பில் வளர்ந்து, சேலம் மறைமாவட்டத்தின் நற்செய்தி அறிவிப்புப் பணியில் பூத்து குலுங்கி, மாங்கனியைப் போல காய்த்து கனிந்துள்ளதுதான் தருமபுரி மறைமாவட்டம். இது விசுவாசத்தின் விளைநிலம். அன்றைய ஒருங்கிணைந்த சேலம் மறைமாவட்டத்தின் குறிப்பிடத்தக்க பங்காக எல்லாராலும் கொண்டாடப்பட்டது கிருஷ்ணகிரி பங்கு. காமராஜர் காலத்தில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தத்தின் காரணமாக பெங்களூருவை ஒட்டி அமைந்துள்ள ஓசூர் தொழிற்நகரமானபோது, கிருஷ்ணகிரியும் வளர ஆரம்பித்தது. 1930 முதல் இங்குள்ள கல்வி நிலையங்களும் மருத்துவமனையும் கிறிஸ்தவத்தின் விளக்குமுகங்களாயின. சேலம் மறைமாவட்டத்தின் கடைகோடியில் அமைந்துள்ள இப்பகுதியை வளர்க்க 1950களிலிருந்து பெருமுயற்சி எடுக்கப்பட்டது. 1958 இல் புதிய ஆலயம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. அதிலிருந்து விசுவாசத்திற்கான கோபுரம் எழுந்தது. 1972 இல் ஆலயம் இறைமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. கல்விக்கும், தொழிற்சாலைக்கும், விவசாயத்திற்கும் ஏற்ப நிலமாக இதனையொட்டிய பகுதிகள் அமைந்த காரணத்தினால் தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கிறிஸ்தவர்கள் அடைக்கலமாயினர். அன்னை மரியின் குறிப்பாக புனித பாத்திமா அன்னையின் புகழ் திக்கெட்டும் பரவியது. தென் தமிழகத்திற்கு ஒரு வள்ளியூர், சென்னைக்கு ஒரு கோடம்பாக்கம், வட தமிழகத்திற்கு ஒரு கிருஷ்ணகிரி. ஆம். புனித பாத்திமா அன்னையின் புகழ் விளங்கும் புண்ணிய பூமி. 1973 ஆம் ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து, புனித பாத்திமா அன்னை காட்சியைக் கண்டு தரிசித்த சிறுமி ஜெசிந்தா, பிற்காலத்தில் ஓர் அருட்சகோதரியாகி, தாம் காட்சிக் கண்ட புனித பாத்திமா அன்னையின் திருவுருவத்தை சிற்பி அவ்லினோ மொரைரா வின்ஹாஸ்யிடம் தத்ரூபமாக விவரிக்க, அவர் அதற்கேற்ப பிரத்யேகமாக வடிவமைத்து, திருஅவை அங்கீகரித்த திருச்சுரூபங்களுள் ஒன்று அருள்பணி. ஐசக் புத்தனாங்காடி (ஐசக் சீனியர்) அவர்கள் மிகுந்த சிரத்தையெடுத்து, போர்த்துக்கல் லிஸ்பன் துறைமுகத்திலிருந்து கொச்சின் துறைமுகத்திற்கு வரவழைத்தார். அதன் பிறகு சாலைமார்க்கமாக இவ்வாலயம் கொணர்ந்து, 1973 முதல் திருப்பீடம் அமைத்து புனித பாத்திமா அன்னை பக்தி முயற்சியை வளர்த்தார். இன்னும் ஏழு ஆண்டுகளில் நூற்றாண்டு விழாக் காணப் போகும் (1930-2030) கிருஷ்ணகிரி பங்கின் புனித பாத்திமா ஆலயத்திற்கு மட்டும் பொன்விழா (1972-2022) அல்ல, புனித பாத்திமா திருச்சுரூபத்திற்கும் (1973-2023) பொன்விழாதான்.

 2000 ஆம் ஆண்டு மறைமாவட்டத் திருத்தலமாக அமைந்தாலும், நகரமயமாக்கலின் விளைவாக, தற்சமயம் ஆயிரம் குடும்பங்கள் சூழ்ந்துள்ள இப்பங்கின் ஆலயம் பங்கு இறைமக்களுக்கு மட்டுமன்று, ஒவ்வொரு மாதமும் தவறாமல் பங்கேற்கும் புனித பாத்திமா அன்னை நவநாள் பக்தர்களுக்கும் போதுமானதாக இல்லை. ஆகையால்தான் 2020 ஆம் ஆண்டு பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்ற அருட்பணி.இசையாஸ் சாந்தப்பன் அவர்கள், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தையும் பொருட்படுத்தாமல் பெரும் பொருட்செலவில் ஆலயத்தை விரிவாக்கம் செய்து, எழிலுற விண்ணுயர்ந்த கோபுரம் அமைத்து, அனைவருக்கும் விசுவாசத்தின் விளக்குமுகமாக அமையும் வண்ணம் இப்புதிய ஆலயத்தை இறைமக்களின் பெருந்துணையுடன் கட்டியெழுப்பியுள்ளார். புனித பாத்திமா அன்னை பங்கு பல்வேறு செயலாக்கங்களுக்கு பெயர் போன பங்கு. பேரார்வமிக்க இளைஞர்கள் - இளம்பெண்கள், கருணையுள்ளமிக்க பக்த சபைகள், ஈடுபாடுமிக்க துறவறச் சபைகள், கொடையுள்ளமிக்க ஆசிரியப் பெருமக்கள் - உழைப்பாளர்கள், தாராள உள்ளமிக்க விவசாய பெருங்குடிகள் என்று எல்லாரும் பங்களிக்க, இப்பிரமாண்டமான ஆலயம் ஒரு புதுப்பிக்கப்பட்ட ஆலயம் என்பதைவிட ஒரு பேராலயம் என்றே தோன்றுகிறது. அழகிய கலை வேலைப்பாடுகள் நிறைந்து, ஆன்மீக அமைதி தவழ்ந்து, அன்னையின் ஆசீர் நிறைந்து, ஆண்டவரின் திருப்பிரசன்னம் அமைந்த இடம் புனித பாத்திமா அன்னை பேராலயம்.

தமிழகத்தில் பெரும்பாலான பசிலிக்கா பேராலயங்கள் தென் தமிழகத்தில் தான் அமைந்துள்ளன. வடமேற்கில் கோவையில் ஒன்றும், சென்னையில் ஒன்றும் உள்ளன. அவ்வகையில், சேலம் - தர்மபுரி - வேலூர் மறைமாவட்டம் ஆகிய மூன்று மறைமாவட்டங்கள் ஒன்று சேரும் கிருஷ்ணகிரி புனித பாத்திமா அன்னை திருத்தலத்தை, தலத்திருஅவையின் ஆயர் அவர்கள் தமிழக ஆயர்பேரவையின் பரிந்துரையோடு ஒரு பசிலிக்காவாக தகுதி உயர்த்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். எளிய மக்கள் வாழும் இந்தப் பகுதியில் அவர்களின் விசுவாசத்திற்கு நீரூற்ற, பக்தி முயற்சிக்கு வழிகாட்ட, கூட்டியக்கத் திருஅவையாக அணியமாக்க, இத்திருத்தலம் பசிலிக்காவானால் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.

இரயில் போக்குவரத்திற்கும் (ஓசூர்) சாலைப் போக்குவரத்திற்கும் விமானப் போக்குவரத்திற்கும் (உடான்-ஓசூர்) மையமாக விளங்கும் கிருஷ்ணகிரி, தென் இந்திய மொழிகள் அனைத்தும் பேசும் கிறிஸ்தவர்கள் அனைவரும் சங்கமிக்கும் கிருஷ்ணகிரி, நாளை ஒரு கிறிஸ்துகிரியாக வளர்வதற்கு இது நிச்சயம் உதவும். ஆடு மேய்க்கும் சிறுவர் சிறுமியருக்குத்தான் புனித பாத்திமா அன்னை காட்சிக் கொடுத்து இறைவனின் எச்சரிக்கையை எடுத்துரைத்தார். பசிலிக்காக்கள் தமிழகம் முழுவதும் பரவலாக்கம் செய்யப்பட்டால் விசுவாசம் இன்னும் வளரும். வலிமையாகும். தருமபுரி மறைமாவட்ட இறைமக்களும், அருள்பணியாளர்களும், துறவிகளும் ஆயர் பெருமகனாரோடு இணைந்து, கலந்தாலோசித்து, கிருஷ்ணகிரி பசிலிக்காவாக முயற்சியெடுக்க வேண்டும். இச்சிறப்பிதழ் வெளிவர உதவிய பங்குத்தந்தை அருட்பணி. இசையாஸ் சாந்தப்பன் அவர்களுக்கும், கிருஷ்ணகிரி பங்குப் பேரவையினருக்கும் பங்கு இறைமக்களுக்கும் மனமார்ந்த நன்றி!