“காலுக்கு செருப்பும் இல்லை,
கால் வயிற்று கூழும் இல்லை,
பாழுக்கு உழைத்தோமடா என் தோழனே” என்கிறார் பொதுவுடைமை சிற்பி ஜீவா அவர்கள். இது பொதுவுடைமைவாதியின் உயிர் துடிப்புமிக்க வலிகளின் வரிகள்.
ஆம்! அன்றும், இன்றும் சில இடங்களில் தொழிலாளர்கள் அனுபவிக்கும் வலிகளின் உணர்வுகள். இன்று வடஇந்தியத் தொழிலாளர்கள் தென்னகம் நோக்கி படையெடுக்கிறார்கள் என்றால், வட இந்தியாவில் தொழிலாளர்களின் நிலைமை அப்படித்தான் இருக்கிறது என்பதே உண்மை.
மே முதல் நாள் என்றாலே உலகத் தொழிலாளர்களின் திருநாள். இந்த திருநாள் சும்மா கிடைத்ததா என்றால் இல்லவே இல்லை. அன்று உலகம் முழுவதும் தொழிற்சாலைகளில் பணி செய்த தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 14 மணி நேரம் 16 மணி நேரமென வேலைச்செய்து, தளர்ந்து, செத்து மடிந்தார்கள்.
இந்நிலையில்தான் அமெரிக்காவில் சிகாகோவில் 8 மணி நேர வேலை, குறைந்தபட்ச ஊதியம் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடினார்கள். அந்த போராட்டத்தில் அரசு அடக்கு முறைகளுக்கு உட்பட்டு, தத்தம் செங்குருதியை இம்மண்ணில் விதைத்ததோடு, உயிரையும் இழந்தனர். இதன் பின்னரே தொழிற்சாலையின் அதிபர்கள், தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு பணிந்தனர். சலுகைகளையும், உரிமைகளையும் வழங்கினர். அந்தப் பொன்னாளை தான் ‘மே தினம்’ என நாம் இன்று கொண்டாடுகிறோம்.
அமெரிக்கத் தொழிலாளர்களின் போராட்டம்தான் இந்தியத் தொழிலாளர்களுக்கும் உரிமைகளையும், சலுகைகளையும் பெற்றுத் தந்ததா என்றால் அப்படி இல்லவே இல்லை. எண்ணற்ற தியாக சீலர்களின் இரத்தமும், வியர்வையும் சங்கமித்திருக்கிறது. இன்று இந்தியாவில் தொழிலாளர்களின் நலனுக்காக உழைத்த முன்னோடி பிதாமகன் டாக்டர் அம்பேத்கர் ஆவார். புதுச்சேரியில் 12 ஆயிரம் தொழிலாளர்களை ஒருங்கிணைத்துப் போராடிய சுப்பைய்யா, தமிழகத்தில் சங்கரைய்யா முதலிய எண்ணற்ற இடதுசாரி சிந்தனையாளர்கள் மற்றும் தியாக செம்மல்களின் உழைப்பும், தியாகங்களும் காரணமாகும்.
டாக்டர் அம்பேத்கர்
அதிலும் டாக்டர் அம்பேத்கர் என்றாலே இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியவர் எனவும், ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்காக அரும்பாடுபட்ட ஒப்பற்ற தலைவர் என்றுதான் பேசப்படுகிறார். ஆனால், உழைக்கும் தொழிலாளி வர்க்கத்திற்காக அரும்பாடுபட்டு, உரிமைகளை பெற்றுத் தந்த தியாக சீலர் என்பதைச் சொல்ல ஏனோ மறந்து விட்டோம். அவர் பற்றி பேசுவதாக இருந்தால் அவரது சாதனையில் மிஞ்சி நிற்பது அரசியல் நிர்ணய சட்டம் உருவாக்கியதா? ஒடுக்கப்பட்ட மக்களின் கதிரவனா? தொழிலாளர்களின் விடிவெள்ளியா என விவாதம் செய்யவும் தகுதியானவர்.
அரசியல் கட்சி
அவர் 1932 ஆம் ஆண்டு, தொழிலாளர் நலனுக்காகவே ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கினார். அக்கட்சியின் பெயர் “சுதந்திர தொழிலாளர் கட்சி” என்பதாகும். அந்தக்கட்சி தேர்தலில் போட்டியிட்டு, 15 பேர் பம்பாய் மாகாண சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்தனர்.
அவர்கள் பம்பாய் ஆலைத் தொழிலாளர்களின் நலனுக்காக சட்டமன்றத்தில் போராடி, வாதாடி பல சலுகைகளைப் பெற்றுத் தந்தார்கள். 1938 ஆம் ஆண்டு, இரயில்வே தொழிலாளர் அமைப்பில் கலந்துக் கொண்டு, பார்ப்பனியத்திற்கு எதிராகவும், முதலாளிகளுக்கு எதிராகவும் போராட அழைப்பு விடுத்தார் அம்பேத்கார். 1942 ஆம் ஆண்டு, தொழிலாளர்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதன் மூலம் பல சலுகைகளையும், தொழிலாளர் நல திட்டங்களையும் தந்தார்.
இன்று தொழிலாளர்கள் அனுபவிக்கும் பல சலுகைகள் அவரால் உருவாக்கப்பட்டவையே. எடுத்துக்காட்டாக, தொழிலாளர்களின் அகவிலைப்படி, தொழிலாளர் மருத்துவ காப்பீட்டு வசதி, வீட்டுவசதி, சேமநலன், இ.எஸ்.ஐ., வைப்பு நிதி, பெண்களுக்கான பிரசவ விடுப்பு போன்றவையும் அன்று அவர் சிந்தனையில் உதித்தவையே. அது போல வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கும் திட்டம் கொண்டுவந்தது போன்ற செயல் திட்டங்களும் டாக்டர் அம்பேத்கரையே சேரும். இவற்றுக்கெல்லாம் அவர் மிக சாதாரணமாக ஆட்சியாளர்கள் பெருந்தொழிலதிபர்கள் மற்றும் பணக்காரர்களின் பலருடைய கடும் எதிர்ப்புகள், இகழுரைகள், அவமானங்கள் என பெரும் பிரச்சனைகளை எதிர் கொண்டார். இன்னும் சொல்லப்போனால், பல வகைகளில் பலகட்ட போராட்டங்களுக்குப் பின்னரே, இன்றைய தொழிலாளர் நலச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்தது. இதனால் இன்று தொழிலாளர்களின் வாழ்விலும் ஓரளவு வளம் காண முடிகிறது.
தொழிலாளர் நலச்சட்டங்களின் இன்றைய நிலைமை
இந்த தொழிலாளர் நலச்சட்டங்கள் இன்னும் எத்தனை ஆண்டு காலத்திற்கு தாக்குப்பிடிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, எங்கெல்லாம் கல்வி வளர்ச்சி தடைப்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் தொழிலாளர் நலன்களும் தடைப்பட்டிருக்கிறது என்பதே பொது நிலவரம்.
இன்றைய ஒன்றிய அரசு சார்ந்த கட்சி, ஆளும் மாநிலங்களில் தொழிலாளர் நலச்சட்டங்கள் தலைகீழாக மாறத்தொடங்கியிருக்கின்றன. உத்திரப்பிரதேச மாநிலத்தில் பல தொழிலாளர் நலச்சட்டங்கள் 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்துள்ளது மாநில அரசு. இனி இவை உயிர் பெறுமா எனபதே கேள்விக்குறி. தொழிலாளர் நலச்சட்டம் 1948 பிரிவு 54 இன் படி, ஒரு தொழிலாளி உணவு நேரத்தோடு 9 மணி நேரம்தான் வேலை எனக் கூறுகிறது. இது நீங்கலாக உழைக்கும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரட்டைச் சம்பளம் வழங்க வேண்டும். ஆனால், அரசு மற்றும் பல தனியார் நிறுவனங்களில் இது நடைமுறையில் இல்லவே இல்லை. தொழிலாளர் நலனுக்காக போராடும் கிறிஸ்தவ திரு அவைச் சார்ந்த நிறுவனங்களில்கூட தொழிற்சங்க உரிமைகள் வழங்கப்படவே இல்லை. அதுபோல, குறைந்தபட்ச கூலி அல்லது ஊதியம் நடைமுறையில் இன்னும் அமல்படுத்தப்படவே இல்லை. மாறாக, கொத்தடிமை போன்ற மனநிலையே தொடர்கிறது. தொழிற்சங்கம் என்றாலே வேலை இழப்புக்கும் தயாராக வேண்டும். இது ஒருபுறமிருக்க இன்றைய தொழிற்சங்க தலைவர்கள் சிலர் சுயநல பேர்வழிகளாகவே உள்ளனர்.
அமைப்பு சாரா தொழிலாளர்கள்
சுமார் 130 கோடி மக்கள் தொகையுள்ள நம் நாட்டில், சுமார் 55 கோடி பேர் உழைக்கும் பாட்டாளிகளும், தொழிலாளர்களும் ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் அமைப்பு சாரா தொழிலாளர்கள்.
சமூகத்தின் அடிமட்ட நிலையில் கடைக்கோடியில் இருப்பவர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்களே. துணி வீணாகக் கிடந்தும் கோவணம் இல்லாதவனுக்கு கொடுக்க மறுப்பது போல் உள்ளது இன்றைய நிலைமை. பொதுவாக, வறுமையில் வாடும் குழந்தைகள் பற்றி நினைத்தால், உடனே நினைவுக்கு வருவது சஹாரா பாலைவனத்து ஆப்பிரிக்க நாடுகள்தான். ஆனால், உண்மை அதுவல்ல; நம் நாட்டில் அதைவிட 2 மடங்கு குழந்தைகள் அதுவும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் குழந்தைகளே வறுமையில் வாடுகின்றனர்.
உலகில் பசியால் வாடும் 100 கோடி மக்களில் மூன்றில் ஒருவர் அதாவது, 33 கோடி பேர் இந்திய தொழிலாளிகளின் குடும்பத்தினர். ஒவ்வொரு இரவும் எட்டில் ஒரு இந்திய தொழிலாளியின் குடும்பம் பட்டினியோடு படுக்கைக்கு செல்கிறது.
2009 ஆம் ஆண்டு, கணக்குபடி, நாட்டின் ஒட்டுமொத்த உணவு உற்பத்தி 22 கோடி டன். ஆனால், சேமிப்பு கிடங்குகளின் மொத்த கொள்ளளவு 2.5 கோடி டன்தான். பஞ்சாப் மாநில உணவு கிடங்குகளுக்கு வெளியே கொட்டி கிடக்கும் உணவுகளால் பீகார் மாநில தொழிலாளர்களின் பசியைப் போக்க இயலவில்லை. எனவே, பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு படையெடுக்கிறார்கள்.
இதற்கு தடையாக இருக்கும் முள்வேலிகளை அகற்ற எந்த ஆட்சியாளர்களும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. டன் டன்னாக உணவு உற்பத்திச் செய்து, நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயத் தொழிலாளர்கள் தங்கள் பசியைப்போக்க பிறரிடம் கையேந்தும் நிலையில் உள்ளனர்.
சுதந்திர இந்தியாவில் வறுமையை பொறுக்க முடியாமல் இதுவரை சுமார் 5 இலட்சம் விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
‘இந்தியா வளர்கிறது, மிளிர்கிறது’ என மார்தட்டிக் கொள்கிறோம். அம்பானிகளும், அதானிகளும் குஜராத்தைச் சேர்ந்த பல பெருந்தொழில் அதிபர்களும் வளர்கிறார்கள் மறுக்கவில்லை. அதுவும், குஜராத்தைச் சேர்ந்த மார்வாடிகள் நாட்டின் சில்லறை வர்த்தகத்தின் பெரும்பகுதியை கவர்ந்து விட்டார்கள்.
வாய்ப்பு உள்ளவர்கள் அரசிடமிருந்து கடன்வாங்கி, நாட்டை விட்டே ஓடி விட்டார்கள். இது வளர்ச்சியாகுமா? இது வீக்கம் என்னும் வியாதியே.
நம் வளர்ச்சி முழுமையான வளர்ச்சியாக வேண்டுமானால், உழைப்பவர் அனைவரும் வளமுடன் வாழ வழிகாண வேண்டும். “தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையேல் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்” என்று முழங்கிய பாட்டுக்கொரு புலவன் பாரதியின் உணர்வு என்றைக்கு ஆட்சியாளர்கள் மனங்களில் உருவாகிறதோ, அன்றைக்குதான் ஏழைத் தொழிலாளி வர்க்கத்தின் கண்ணீர் துடைக்கப்படும்.
அதுவே மே தினத்தின் சிறப்புச் செய்தியும் ஆகும்.