Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் துறவுமட வாழ்வும் பரிந்துரைகளின் வல்லமையும்
Wednesday, 03 May 2023 08:50 am
Namvazhvu

Namvazhvu

நற்செய்தி அறிவிப்புக்கான பேரார்வம்  என்ற தலைப்பில், குறிப்பாக சான்று பகர்தல் என்ற உட்தலைப்பின் கீழ் துறவுமட வாழ்வும் பரிந்துரைகளின் வல்லமையும் (எசா53:11-12)கருப்பொருளில் திருத்தந்தை வழங்கிய மறையுரை:

"அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, அப்போஸ்தலிக்க பேரார்வம் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, ஒவ்வொரு காலத்தின் புனிதர்களின் எடுத்துக்காட்டு குறித்து நோக்குவோம். முதலில் துறவுமட வாழ்வைத் தேர்ந்துகொண்டவர்கள் குறித்துக் காண்போம்.

ஏழ்மை, கற்புடைமை, கீழ்ப்படிதல் போன்றவைகளில் இயேசுவைப் பின்பற்றிய இவர்களின் வாழ்வு, நற்செய்தியைப் பரப்புதல் மற்றும் திருஅவை வளர்ச்சிக்கான பரிந்துரை இறைவேண்டலுடன் பின்னிப் பிணைந்திருந்தது. இன்று நாம், மத்திய காலத்தைச் சேர்ந்த அர்மேனிய துறவியும், திரு அவையின் இறைவல்லுநருமாகிய நரேக்கின் புனித கிரகோரி குறித்து நோக்குவோம். நற்செய்தியை முதலில் ஏற்றுக்கொண்ட அர்மேனிய மக்களின் ஆழமான கிறிஸ்தவ பாரம்பரியத்தை உள்ளடக்கியதாக அவரின் எழுத்துகள் இருந்தன. தன் துறவுமட மறைவான வாழ்வில் புனித கிரகரி, முழு திருஅவையோடும், அனைத்து நாடுகளுக்கும் மக்களுக்கும் நற்செய்தியை அறிவிக்கும் திரு அவையின் மறைப்பணியோடும் ஆழமான ஒருமைப்பாட்டை உணர்ந்தவராயிருந்தார். பாவம் நிறைந்த மனிதகுலத்தோடு தன்னை அடையாளப்படுத்தியவராக, இயேசுவின் மன்னிப்பும் குணப்படுத்தலும் தேவைப்படும் பாவிகளுக்காகவும், மக்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் செபிப்பதற்கென தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார். மனிதகுலமனைத்திற்கும் ஒப்புரவு, மீட்பு மற்றும் அமைதியின் நற்செய்தியை எடுத்துரைக்கும் திருஅவையின் பணியில் நாமும் நம் பரிந்துரை செபத்தின் வழியாக ஒத்துழைக்க வேண்டிய  நம் கடமையை நமக்கு நினைவூட்டுவதாக நரேக்கின் புனித கிரகோரியின் வாழ்வு எடுத்துக்காட்டாக உள்ளது" என்றுரைத்து, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் திருத்தந்தை பிரான்சிஸ் அளித்தார்.