Namvazhvu
எல்லா இந்தியர்களும் சமம் சமத்துவத்தைத் தேடி தலித் கிறித்தவர்கள்
Wednesday, 03 May 2023 12:55 pm
Namvazhvu

Namvazhvu

இந்திய நாடும், தலித் கிறித்தவர்களும்

மனித வாழ்வில் போராட்டம் என்பது, கருவறை முதல் கல்லறை வரை பின்னிப்பிணைந்து இருக்கும் ஓர் எதார்த்தமாகும். இந்திய வரலாற்றில் உரிமைகளுக்கான பல போராட்டங்கள் நடந்தேறியுள்ளது. ஒவ்வொரு இந்தியனும் என் சகோதர, சகோதரிகள் என்ற ஒருமைப்பாட்டுடன் வாழ வழி செய்கிறது நம் இந்திய அரசியலமைப்புச் சட்டம்.

மதம், இனம், மொழி கடந்து செல்வது சகோதரத்துவம். இதனடிப்படையில் எல்லா இந்தியர்களும் சமம் என்ற கொள்கையைத் தாங்கி நிற்பது நம் இந்திய நாடு! வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நமது இந்திய நாட்டில், ஆன்மீகம் வளர்ந்த அளவுக்கு சமத்துவம் வளரவில்லை என்பதே உண்மை. சாதியப் பாகுபாடு மட்டும் ஒற்றுமையை சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், ஜனநாயகத்தின் அடிப்படைத் தன்மையையே ஆட்டிப் பார்க்கிறது.

மக்களைப் பாகுபடுத்தும் வருணாசிரமம் மனிதனை பிரித்தாளும் சக்தியாகவே செயல் படுகிறது.   இதனடிப்படையில், சகோதரத்துவம் சீர்குலைந்து, இச்சமூகத்தின் ஒருசாரார் மட்டும் ஏன் விலங்குகளைவிட மிகவும் மோசமாக இச்சமூகத்தில் நடத்தப்படுகின்றனர் என்பது உலகறிந்த உண்மை.

சுதந்திரப் போராட்டத்தில் ஒன்றிணைந்த நாம், ஆங்கிலேயர்களிடம்  விடுதலை பெற்ற பின்னும், சாதி என்னும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.

இந்தியர்களுக்கு மீட்பைக் கொண்டு வந்த அரசியலமைப்புச் சட்டமே நம் நாட்டில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மதம் மாறிய கிறித்தவர்கள் தங்களையே ஒடுக்கப்பட்ட கிறித்தவர்கள் (தலித் கிறித்தவர்கள்) என அழைத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.

மதமோ, இனமோ, மொழியோ, நிலப்பரப்போ நம்மை பிரிக்கக்கூடாது என்று, நம் தலைவர்களால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டமே தலித் கிறித்தவர்களையும், தலித் இசுலாமியர்களையும், தலித் இந்துக்களும், தலித் சீக்கியர்களும், தலித் பௌத்தர்களும் பெற்றிருக்கும் இடஒதுக்கீட்டை பெறத் தடையாக நிற்கிறது.

தலித் கிறித்தவர்களின், தலித் இசுலாமியர்களின் உரிமைப் போராட்டம் நேற்று, இன்று தொடங்கியதல்ல. கடந்த 72 ஆண்டுகளாக கல்வியிலும், பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பிலும், அரசியலிலும் சம உரிமை இல்லாமல் தேசிய, மாநில, மாவட்ட அளவில் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

குடியரசுத் தலைவர் ஆணை

1950 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 10 ஆம் நாள், நம் நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத் அவர்கள் வெளியிட்ட ஆணையில், இந்து மதத்தைத் தவிர, பிறமதத்தைச் சார்ந்த பட்டியலினத்தார் யாவரும் பட்டியலினத்தார் என கருதப்பட மாட்டார்கள் என்று வெளியிட்டார். இந்த ஆணை தீண்டாமை கொடுமையால் துவண்டு போயிருந்த பூர்வீகக் குடிகளை வலுவிலக்கச் செய்தது. மேலும், இம்மக்களை சமூகத்தால், பொருளாதாரத்தால் பின்தங்கச் செய்யும் பேரிடியாக விழுந்தது. ஒவ்வொரு ஆண்டும் தலித் கிறித்தவர்கள் தங்கள் பட்டியலின உரிமைகளை இழந்த ஆகஸ்ட் 10 ஆம் நாளை, கருப்பு நாளாக, துக்க நாளாக அனுசரிக்கின்றனர்.

அன்றிலிருந்து தீண்டாமை கொடுமையோடு சேர்த்து பட்டியலின உரிமையும் மறுக்கப்பட்டது.

எல்லா மதங்களையும் ஏற்றுக்கொள்ளும் மதச் சார்பற்ற நாட்டில், மதம் மாறிய ஒரே காரணத்திற்காக கல்வியில், வேலை வாய்ப்பில், அரசியலில் முன்னுரிமை இல்லாமல், இவர்களை யார் துன்புறுத்தினாலும், சாதிப்பெயர் சொல்லி அழைத்தாலும், தலித் கிறித்தவ பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கினாலும், இட ஒதுக்கீடு பெரும் ஏனைய தலித்துகளை பாதுகாக்கும் 1989 வன்கொடுமை தடுப்புச் சட்டம் இவர்களைப் பாதுகாப்பதில்லை.

பரிந்துரைக் குழுக்களும்,

நீதிக்கான முன்னெடுப்பும்

தலித் கிறித்தவர்கள் மேற்கொண்ட தொடர் உரிமைப் போராட்டத்தினால், 1980 இன் மண்டல் குழு அறிக்கை, தேசிய சிறுபான்மை ஆணையம் (1981-82) மற்றும் 2007 இன் இரங்கநாத் மிஸ்ரா குழு அறிக்கை போன்ற பல அதிகாரப்பூர்வமான குழுக்கள் தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் முஸ்லீம்களுக்கு பட்டியலின உரிமையை ஆதரித்தாலும், இந்திய ஒன்றிய அரசு அனைத்து பரிந்துரைகளையும் நிராகரித்தது.

கிறித்துவத்தைத் தழுவிய பின்னும் இவர்களின் சமூக, பொருளாதார நிலை மாறவில்லை என பல கமிஷன்கள் பரிந்துரை செய்த போதிலும், ஒன்றிய அரசு மக்களுக்கான நீதியை வழங்குவதில் தாமதிக்கிறது.

எனது சகோதரன் இந்து மதத்தைப் பின்பற்றியதால், அவனுக்கு கிடைக்கும் உரிமைகள், கிறித்தவத்தை தழுவிய சூசையான எனக்கு கிடைக்கவில்லை என, இந்திய அரசியலமைப்பு 1950 பிரிவுகள், 14 முதல் 17 மற்றும் 34, 1 % அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள்) ஆணை 1950, பத்தி 3 ஐ எதிர்த்து ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியை 1983 ஆண்டு, உச்சநீதி மன்றத்தை அணுக வைத்தது. அதற்கான வழக்கும் Writ Petition No. 9596 of 1983 தொடரப்பட்டது.

1995 ஆம் ஆண்டு, நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா தலித் கிறித்தவர்களை பட்டியலினத்தில் சேர்க்கக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு அன்றைய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு, போராடினர்.

உச்சநீதி மன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றும் பிராங்கிளின் சீசர் தாமஸ் தம்முடைய அரசுப்பணியை இராஜினாமா செய்து விட்டு, தமிழ்நாட்டிலிருந்து டெல்லி சென்று, தலித் கிறித்தவர்களைப் பட்டியலினத்தில் சேர்க்கக் கோரி 2004 ஆம் ஆண்டு, ஒரு வழக்கை Writ petition (180/ 2004) தொடர்ந்தார். அவருடன் 2013 ஆம் ஆண்டு, அகில இந்திய ஆயர்கள் பேரவையும் (CBCI), தேசிய இந்திய திருஅவைகளின் பேரவை (NCCI)யையும் மனுதாரர்களாக இணைந்தனர். அதைத் தொடர்ந்து, பலவிதமான வழக்குகள், போராட்டங்கள், கூட்டங்கள், அரசியல் சந்திப்புகள் என தேசிய, மாநில அளவில் இன்றளவும் நீதிக்கான நெடும் பயணம் தொடர்கிறது.

“தலித் கிறித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும்” என்று, இந்தியா ஸ்பென்ட் இதழுக்கு அளித்துள்ள ஒரு நேர்காணலில்

சமூகவியலாளர் தேஷ் பாண்டே கூறியுள்ளார். தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தேஷ் பாண்டே கடந்த முப்பதாண்டுகளாக சாதி மற்றும் சாதிய வேறுபாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார் என்பதுடன் ‘சாதிப் பிரச்சனைகள்’ என்ற நூல் உட்பட வேறு மூன்று புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

“தலித் இஸ்லாமியர்களையும், தலித் கிறித்துவர்களையும் பட்டியலினப் பிரிவில் சேர்ப்பதற்கான ஒரு வலுவான நிலை உள்ளது என்பது சிறுபான்மையோருக்கான தேசிய ஆணையம் 2008 இல் கொடுத்துள்ள அறிக்கையின் முடிவு. தேஷ் பாண்டே அந்த அறிக்கையின் முன்னணி ஆசிரியராக இருந்தார். வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த தலித்துகளில் நகர்புற இந்தியாவில் கிட்டத்தட்ட 47% பேர், தலித் முஸ்லீம்கள் என 2004-05 ஆம் ஆண்டு, தரவு ஒன்று கூறுகிறது. இது இந்து தலித்துகள் மற்றும் தலித் கிறித்தவர்களைவிட கணிசமாக அதிக விழுக்காடு ஆகும். கிராமப்புற இந்தியாவில், 40% தலித் முஸ்லீம்களும், 30% தலித் கிறித்தவர்களும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர்.

மக்களின் தொடர் போராட்டங்கள்:

தலித் கிறித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்பதை வலியுறுத்தி, அகில இந்திய ஆயர்கள் பேரவை (CBCI), தேசிய இந்திய திரு அவைகளின் பேரவை (NCCI) தேசிய தலித் கிறித்தவப் பேரவை (NCDC) டெல்லி ஜந்தர் மந்தரில் 2009 ஆம் ஆண்டு, பிப்ரவரி 24 ஆம் நாள் நடத்திய போராட்டத்தில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த திருமிகு பக்ஷி மசி என்ற தலித் கிறித்தவர் காலமானார்.

தமிழக ஆயர் பேரவை பட்டியலினத்தார்/பழங்குடியினர் பணிக்குழு கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடத்திய நீதி கோரிய நெடும் பயணத்தின் நிறைவில் துணை முதலமைச்சராக இருந்த மாண்புமிகு ஸ்டாலின், ஆயர்களையும், மக்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 2013 ஆம் ஆண்டு, டிசம்பர் 10 இல் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுநிலையினர், ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருட்சகோதரிகள் மீது தண்ணீர் பீரங்கி கொண்டு அழுக்கு நீரை வாரி இறைத்து, தடியடி நடத்தி, சிறை பிடித்தது எல்லாம் தங்கள் உரிமை வேண்டி நடத்திய போராட்டங்கள். இந்த 72 ஆண்டுகளில் தலித் கிறித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டி எத்தனையோ குறிப்பாணைகள், கடிதங்கள் என மக்கள் இன்றும் போராடுவது வேதனையளிக்கிறது. சொந்த நாட்டிலேயே அந்நியர்களாக இருப்பது கொடுமையிலும் கொடுமை.

ஜனவரி 2020 இல், தேசிய தலித் கிறித்தவர்கள் குழு என்ற தனியார் அமைப்பு, இட ஒதுக்கீட்டை “மத நடு நிலைமைக்கு”கொண்டு வர வேண்டும் என்றும் அதனால் தலித் கிறித்தவர்களும், இஸ்லாமியர்களும் அதன் பலனைப் பெறமுடியும் என்றும் கோரி உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்று, அது அதன் கோரிக்கையை பரிசீலனைச் செய்வதாக ஒப்புக் கொண்டது. அந்த மனு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. தலைமையில் புதிய கமிஷனை சமீபத்தில் மத்திய அரசு அமைத்தது. பாலகிருஷ்ணன், “வரலாற்று ரீதியாக பட்டியல் சாதியினரைச் சேர்ந்தவர்கள். ஆனால், இந்து, பௌத்தம் மற்றும் சீக்கியம் அல்லாத பிற மதங்களுக்கு மாறிய புதிய நபர்களுக்கு” பட்டியல் சாதி அந்தஸ்து வழங்குவது குறித்த கேள்விக்கு அறிக்கை தயாரிக்க இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளித்தார்.

மாநில அரசுகளின் நிலைப்பாடு

ஆந்திர அரசு தலித் கிறித்தவர்களுக்கு பட்டியலின இட ஒதுக்கீட்டை வழங்க இந்த வருடம் 2023, ஏப்ரல் 14 ஆம் நாள், கொண்டு வந்த அரசாணையைத் தொடர்ந்து, தமிழக அரசும் இந்த தீர்மானத்தை 19.04.2023 அன்று, சட்ட சபையில் முழு மனதாக கொண்டு வந்திருக்கிறது.

தலித் கிறித்தவர்களின் உணர்வைப் புரிந்து கொண்டு, 72 ஆண்டுகளாக இழந்த பட்டியலின உரிமை கிடைக்க இன்று சட்ட சபையில் “கிறித்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களை பட்டியலினத்தில் சேர்த்து, அவர்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் ஒன்றிய அரசு வழங்க வேண்டும்” என்று, தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் செய்த பரிந்துரை 12 மில்லியன் தலித் கிறித்தவர்களின் வாழ்வில் ஒளியேற்றியிருக்கிறது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தனித் தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு அனைத்து தலித் கிறிஸ்தவர்கள், தலித் ஆர்வலர்கள், தலித் இயக்கங்கள் போராளிகள் மற்றும் பத்திரிகை நண்பர்கள் சார்பிலும், நன்றியைத் தெரிவித்துள்ளது தமிழக ஆயர்கள் பேரவையின் பட்டியலினத்தார்/பழங்குடியினர் பணிக்குழு.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் மாண்புமிகு ஆ. சிந்தனை செல்வன் முதன் முதல் சட்டப் பேரவையில் குரல் எழுப்பி, கடந்த இரண்டு சட்டப் பேரவை கூட்டத்தொடரிலும் தீர்மானம் நிறைவேற்ற குரல் கொடுத்து வந்தார். திராவிட முன்னேற்ற கழக அரசு தலித் கிறித்தவர்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. குறிப்பாக, தலித் கிறித்தவர்களை பட்டியலினத்தில் சேர்க்க முன்னாள் முதல்வரும் முத்தமிழ் அறிஞருமான கலைஞர் மு. கருணாநிதி அவர்கள், தன் ஆட்சி காலத்தில் நான்கு முறை இந்த கோரிக்கையினை பிரதமருக்கு கடிதம் எழுதி, ஒன்றிய அரசினை தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறார்.

பட்டியலின மக்களுக்கு இணையாக கிறித்தவ பட்டியலின மக்களும் முன்னேற்றம் பெறும் வகையில், பல்வேறு அரசாணைகள் இயற்றி கல்வி உதவித் தொகை திட்டங்களை தலித் கிறித்தவ மாணவர்களும் பெற்று, பயனடைய தமிழக அரசு உதவுகின்றது. இவையனைத்தோடும் சேர்ந்து தலித் கிறித்தவர்கள் பட்டியலின உரிமை பெற தமிழக அரசு முனைப்போடு செயல்பட்டு வருகின்றது. இதை நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றோம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், நாடாளுமன்றத்தில் பட்டியலின கிறித்தவர்களின் உரிமைகளுக்காக ஓயாது குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு தொல். திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் (சிதம்பரம் தொகுதி) அவர்களுக்கும், இத்தனித் தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய மாண்புமிகு சிந்தனைச் செல்வன், சட்டமன்ற உறுப்பினர், (காட்டுமன்னார் கோவில்), மாண்புமிகு இனிகோ இருதயராஜ், சட்டமன்ற உறுப்பினர், (திருச்சி-கிழக்கு) ஆகிய அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தலித் கிறித்தவ மக்களின் சார்பாகவும், தமிழக ஆயர் பேரவை, தமிழக ஆயர்கள் பேரவையின் பட்டியலினத்தார், பழங்குடியினர் பணிக்குழு, இயக்கத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகை நண்பர்கள் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்துணை முயற்சிகளும் ஒன்றிய அரசு கருத்தில் கொண்டு, தலித் கிறித்தவர்களைப் பட்டியலினத்தில் சேர்த்து, சம உரிமை வழங்கிடவும், மக்களுக்கான அரசாக செயல்பட வேண்டும். மக்களின் நெடுங்கால போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசியலமைப்புச் சட்டத்தின் மையத்தன்மையை நிலைநாட்ட பரிந்துரைக்கிறது தலித் கிறித்தவச் சமூகம்.

தலித் கிறித்தவர்களின் துயரங்களை களைந்திடவும், அவர்களுக்குரிய இந்திய அரசியலமைப்பு வழங்குகின்ற உரிமைகளை உறுதிப்படுத்திடவும், அதை காலதாமதமின்றி உடனடியாக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தலித் கிறித்தவர்களைப் பட்டியலினத்தில் சேர்த்திட எல்லா மாநிலங்களும் பரிந்துரை செய்யவும், பரிந்துரை செய்த மாநில முதல்வர்களின் தொடர் பரிந்துரையால் தாமதிக்கப்பட்ட நீதி கிடைத்திட செயல்பாடுகளை முன்னனெடுப்பதுதான் வெற்றிக்கான வழி. உடனே செய்வோம், உணர்ந்து செய்வோம், உரிமைகளை வென்றெடுப்போம்.