Namvazhvu
நீதிபதி சந்துரு அருள்பணி ஸ்டான்சுவாமி புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறார்
Thursday, 04 May 2023 10:37 am
Namvazhvu

Namvazhvu

இந்தியாவின் பூர்வீகஇன மக்களிடையே இயேசுசபை அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி அவர்களின் பணியைத் தொடர்ந்து ஏற்று நடத்தும் நோக்கத்தில் இயேசு சபையினருடன் இணைந்து நண்பர்கள் குழுமம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

பூர்வீகக் குடிமக்களின் உரிமைகளுக்காகப் போராடியவேளையில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார் என்ற பொய்க் குற்றச்சாட்டின் பேரில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி இந்திய தேசிய பயங்கரவாத தடுப்பு விசாரணை அமைப்பால் கைது செய்யப்பட்ட 84 வயதான இயேசுசபை அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி அவர்கள், 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் தேதி சிறைத்தண்டனை காலத்தின்போதே மும்பை மருத்துவமனையில் காலமானார்.

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களால் துவக்கப்பட்ட  Bagaicha என்ற இயேசு சபை அமைப்புடன் இணைந்துள்ள அவரின் நண்பர்கள், தோழமை அமைப்பு என்ற ஒன்றை உருவாக்கி பூர்வீக மக்களிடையே அருள்பணி ஸ்டான் சுவாமியின் பணியைத் தொடர உள்ளனர். அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி பெயரிலான இந்தத் தோழமை இயக்கம் பெண்கள், பூர்வீக இனத்தவர், தலித் சமூகத்தினர், புலம்பெயர்ந்தோர் ஆகியோரிடையே பணிபுரிவதைத் தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளது,.

அருள்பணி ஸ்டான் சுவாமியின் கணினியிலிருந்து எடுக்கப்பட்டதாக காவல்துறை கூறிய அனைத்துக் குற்ற நிரூபணங்களும் அவருக்குத் தெரியாமலேயே அவரது கணினியில் நிறுவப்பட்ட பொய் ஆதாரங்களாகும் என அண்மையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இயேசுசபை அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி மரணமடைந்துள்ள போதிலும், அவரின் குற்றமற்றத்தன்மையை நிரூபிக்க மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி அவர்கள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறார் என சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு அவர்களும், பூர்வீக மக்களின் உரிமைகளுக்காக அருள்பணி ஸ்டான் சுவாமிப் போராடியதே ஆட்சியாளர்கள் மற்றும் பெரும் வர்த்தக நிறுவனங்களின் கோபத்திற்கு காரணமாகியுள்ளது என சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்களும் கூறியவை இங்கு குறிப்பிடத்தக்கன.