மத மாற்றங்களைத் தடுக்க ஒரு தேசிய சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் நாடு நிராகரிப்பதாகவும், மதமாற்றத் தடைச்சட்டங்கள் கிறிஸ்தவர்களைக் குறிவைத்து மிகவும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், தமிழ்நாட்டில், அரசியலமைப்பு விழுமியங்களை சரியான உணர்வில் நிலைநிறுத்தியதற்காக தமிழக அரசை பாராட்டுவதாகவும் டெல்லி மாநில சிறுபான்மை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் மைக்கேல் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வலுக்கட்டாயமாக மதமாற்றம் என்ற தலைப்பில் இந்திய உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில், மாநிலங்கள் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்து வரும் நிலையில் இவ்வாறு யுனைடெட் கிறிஸ்டியன் ஃபோரம் என்னும் கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரான ஏ.சி.மைக்கேல் கூறியுள்ளார்.
பொய் வழக்குகளின் அடிப்படையில் கிறிஸ்தவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் மற்றும் அவர்களின் வழிபாடுகளுக்கானக் கூட்டங்கள் மதமாற்றக் கூட்டங்கள் என்று கூறி சீர்குலைக்கப்படுகின்றன என்று கூறிய மைக்கேல் அவர்கள், தமிழக அரசு தனது வரலாற்றில் கட்டாய மதமாற்றம் குறித்த வழக்கை மறுத்ததுடன், ஒவ்வொரு நபருக்கும் அவரவர் மதத்தைப் பரப்ப, பிரச்சாரம் செய்ய, உரிமை உண்டு என்பதை வலியுறுத்துகின்றது என்றும் கூறியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டம் எந்தவொரு நபரும் அவர் விரும்பும் மதத்திற்கு மாறுவதைத் தடுக்கவில்லை என்றும், மக்கள் தங்கள் நம்பிக்கைகளை மாற்றுவதற்கும் தங்கள் அடிப்படை மதப்பிரிவுகளுக்குத் திரும்புவதற்கும் கூட விருப்பம் உள்ளது என்றும் அரசு ஆணை எடுத்துரைப்பதையும் மைக்கேல் சுட்டிக்காட்டினார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் மதத்தைப் பரப்புவதற்கான உரிமையை உறுதி செய்கிறது. எனவே, கிறிஸ்தவ மதத்தை பரப்பும் மறைப்பணியாளார்களின் செயல்களைச் சட்டத்திற்கு எதிரான ஒன்றாகப் பார்க்க முடியாது. மதத்தைப் பரப்பும் செயலானது பொது ஒழுங்கு, ஒழுக்கம், சுகாதாரம் மற்றும் அரசியலமைப்பின் பிற விதிகளுக்கு எதிரானது என்றால், அதை தீவிரமாகப் பார்க்க வேண்டும் என்று ஏப்ரல் 29 அன்று உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த உறுதி அறிக்கையில் அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசியலமைப்பில் மத சுதந்திரத்திற்கான உறுதி என்று கூறி டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞரும், இந்து ஆதரவு பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) தலைவருமான அஸ்வினி உபாத்யாய், ஒரு பொதுநல வழக்கு (பிஐஎல்) வழியாக நாடு முழுவதும் வலுக்கட்டாயமாக நடைபெறும் மதமாற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று இவ்வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
சில ஊடக அறிக்கைகள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மின்னணு கணக்கெடுப்பு ஆதாரங்களின் அடிப்படையில், இந்தியாவின் பல பகுதிகளில் கிறிஸ்தவ மறைப்பணியாளர்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றங்களில் ஈடுபடுவதாக அம்மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
“மிரட்டல், வஞ்சகம், பரிசுகள், மூடநம்பிக்கை போன்றவற்றால் ஏழைகள் மதம் மாறியதாக தமிழகம் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை என்றும், குடிமக்களின் மதத் தேர்வில் தலையிடுவதில் மாநில அரசும் உடன்படவில்லை என்றும் அரசு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.