Namvazhvu
பேராயர் பீட்டர் மச்சாடோ குறிவைத்து தாக்கப்பட்ட மணிப்பூர் கிறிஸ்தவ மக்கள்
Friday, 12 May 2023 05:03 am
Namvazhvu

Namvazhvu

மெய்டேய் என்னும் பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்த இந்துக்களுக்கும், இந்து மலைவாழ் மக்களுக்கும் குக்கி என்கிற சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மலைவாழ் மக்களுக்கும் இடையே நடந்த வன்முறை சம்பவமானது இந்திய நாட்டையே அச்சத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது.

மெய்டேய் என்னும் பெரும்பான்மை சமுதாயமானது ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு மேலாக, தங்களுக்கும் பட்டியலின பழங்குடிகள் அந்தஸ்து வழங்கி, தங்களை அரசாங்க பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கையை விடுத்து வந்தனர். இதை விசாரித்த மணிப்பூர் உயர்நீதிமன்றம் மே 21 ஆம் தேதி மாநில அரசாங்கத்திடம், ஒன்றிய அரசின் பழங்குடி அமைச்சகத்திடம் மெய்டேய் இன மக்களை பட்டியலின பழங்குடிகளாக சேர்க்க பரிந்துரைக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பினை எதிர்த்து குக்கி, நாகா போன்ற 10 பழங்குடியின சமுதாயங்களின் இளைஞர்கள் ஒன்று கூடி, மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் என்ற அமைப்பாக திரண்டு எதிர்ப்பு பேரணி மேற்கொண்டனர். ஏறக்குறைய 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாத மெய்டேய் சமூகத்தை சார்ந்த இந்துக்கள், கிறிஸ்துவ மக்களை தாக்கத் தொடங்கினர். இத்தாக்குதல் சில மணி நேரங்களில், மிகப்பெரிய கலவரமாக மாறியது. பல தேவாலயங்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. குக்கி மக்களின் வீடுகள் அனைத்தும் தீ வைக்கப்பட்டன.

50 வயது நிரம்பிய கோங்சாய் எனும் மறைபோதகர் இறையில் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். தற்போது இவர் மணிப்பூரில் வெடித்த கலவரத்தால் அசாம் முகாம்களில் தங்கியுள்ள ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுள் ஒருவராக இருக்கிறார்.

எங்கள் வீடுகள் தாக்கப்பட்டன. நான் பணிபுரிந்து வந்த இறையியல் கல்லூரி தாக்கப்பட்டது. எனது குடும்பம் எங்கே இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. இப்பொழுது நான் ஒரு டி-ஷர்ட்டையும் ஒரு அரைக்கால் சட்டையை மட்டுமே அணிந்திருக்கிறேன். வன்முறையாளர்கள் எங்கள் இல்லத்தில் எதையும் விட்டு வைக்கவில்லை அனைத்தையும் நாசம் செய்து விட்டு கொள்ளையடித்துபோனார்கள்என்று கோங்சாய் கூறினார்.

பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ, “மணிப்பூரில் வாழும் கிறிஸ்தவர்கள் தாங்கள் அச்சத்தில் பாதுகாக்கப்படாத நிலையில் இருப்பதை உணர்கிறார்கள். பல தேவாலயங்களும் கிறிஸ்தவ மக்களின் தங்குமிடங்களும் தீக்கிரையாக்கப்பட்டு இருக்கின்றன. ஒன்றிய அரசு உடனடியாக செயல்பட்டு அமைதியை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்என்று கேட்டுக்கொண்டார். மணிப்பூரை சேர்ந்த ஒலிம்பிக் வீராங்கனை மேரி கோம்எங்கள் மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆகவே விரைந்து அமைதியை கொண்டு வருவதற்காக உதவுங்கள் என்று ஒன்றிய அரசையும் மக்களையும்கேட்டுக் கொண்டார். குக்கி, நாகா போன்ற 10 பழங்குடியின மக்கள் கலந்து கொண்ட இப்போராட்டத்தில் கிறிஸ்தவ மக்களும் அவர்களின் வீடுகளும் தேவாலயங்களும் மடடுமே குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன.