வத்திக்கானின் சுவிஸ் மெய்க்காப்பாளர்கள் அமைப்பு என்பது ஒரு பெரிய குடும்பம் என்றும், உயிரோட்டமுள்ள உடன்பிறந்த உறவுடன் கூடிய ஒரு குழுமம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
மே 6 ஆம் தேதி சனிக்கிழமை வத்திக்கானின் சாந்தா கிளமெந்தினா அறையில் வத்திக்கானின் சுவிஸ் மெய்க்காப்பாளர்களின் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களைச் சந்தித்த போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்ப வளர்ச்சிக்கான இடமாகவும், வாழ்க்கைக்குப் பயனுள்ளவற்றைக் கற்றுக்கொள்ளும் இடமாகவும் மெய்க்காப்பாளர்கள் அமைப்புத் திகழ்கின்றது என்றும் எடுத்துரைத்தார்.
திருத்தந்தைக்குக் காவல் புரிவதைத் தங்களது நோக்கமாகக் கொண்டுப் பணியாற்றும் அம்மெய்க்காப்பாளர்கள், தாங்கள் வாழும் சூழல் மற்றும் செயல்பாடுகள் வழியாக திருத்தூதர் பேதுருவின் வழித்தோன்றல்களாகத் திகழும் திருத்தந்தையர்களுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக, மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படுவதற்கான தனதுப் பாராட்டுக்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.
மனித மற்றும் கிறிஸ்தவ உருவாக்கத்தின் சூழலை அனைவருக்கும் வழங்கும் இடம் என்றும், இளைஞர்கள் முதியவர்களின் அனுபவத்தால் செழுமைப்படுத்தப்பட்டு, தங்களது திறந்த மனப்பான்மை, உற்சாகம், நேர்மறையான ஆர்வம் கொண்டு தொடர்ந்து பணியாற்றுவதற்கு வழிவகுக்கும் இடமாக விளங்குகின்றது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
தங்கள் வாழ்க்கையின் சில ஆண்டுகளை திருத்தந்தை மற்றும் திருப்பீடத்திற்காக அர்ப்பணிப்பது தனிப்பட்ட நம்பிக்கைப் பயணத்திற்கு புறம்பானதல்ல என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானில் அவர்கள் ஆற்றும் பணி, திருமுழுக்கை வாழ்வதற்கும், கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கைக்கு மகிழ்வான சான்றாக இருப்பதற்கும் கடவுள் அமைத்து கொடுத்தப் பாதை என்றும் கூறினார்.
ஒவ்வொரு நாளும் சந்திக்கும் மனிதர்களிடத்தில் கடவுளின் அன்பை உறுதிப்படுத்தவும், பகிர்ந்து கொள்ளவும் அழைக்கப்படுகின்றார்கள் என்று எடுத்த்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு சூழ்நிலையும், சந்திப்பும் கிறிஸ்துவின் நற்செய்தியை நடைமுறைப்படுத்துவதற்கும், அவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும், அவருடைய பெயரிலும் ஆற்றலிலும் சகோதர அன்பை வாழ்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் எடுத்துரைத்தார்.
திருவிவிலியத்தைப் படித்தல், ஆன்மிக நூல்களைத் தியானித்தல் போன்றவற்றின் வழியாக உயிர்த்தெழுந்த இறைவனின் ஆற்றல் தரும் மகிழ்ச்சியான உடனிருப்பை தங்களது வாழ்க்கையில் அறிந்து கொள்ள, நேரத்தை நன்கு பயன்படுத்துமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் கேட்டுக்கொண்டார். மகிழ்ச்சியான மற்றும் கடினமான தருணங்களில் இறைவன் எப்போதும் நம் பக்கத்தில் இருக்கிறார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனுடைய ஒளிமயமான மற்றும் இரக்கமுள்ள நெருக்கத்தின் ஆறுதலை உணரவும், ஒவ்வொரு நாளும் விடாமுயற்சி மற்றும் தாராளமான ஒத்துழைப்புடன் தொடர்ந்து செயல்படவும் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.