“மனித சமூகம் ஒரு மாண்புமிக்க சமூகம். அதன் மாண்பு மங்காமலிருக்க துன்புறுபவனுக்கு உதவி செய்து, அவனது மாண்பினை உயர்த்திப் பிடித்து, அதன் வாயிலாக சமூகத்தின் மாண்பினை நிலைநாட்டுவதையே இயேசு விரும்புகிறார்” (அனைவரும் உடன்பிறந்தோர் சுற்று மடல், எண் : 71). மனித மாண்பினைக் காக்கும் செயல்களில் பல நூற்றாண்டுகளாக கிறித்தவ சமயம் தொடர்ந்து போராடி வருகிறது. சாதியப் பிரிவினையின் பெயரால், மனித மாண்பு சீர்குலைக்கப்பட்ட காட்சிகள் வலுப்பெற்றிருந்த காலக்கட்டத்தில் நிகழ்ந்ததுதான் தோள்சீலைப் போராட்டம். மானம் காக்கும் மேலாடை மறுப்பிற்கு எதிராக எழுந்த இப்புரட்சியில் கிறித்தவமும் பங்களிப்பு நல்கியது என்பதனை மறைக்க இயலாது.
சாதியப்பிடியில் அன்றைய தென் திருவிதாங்கூர்
கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும், தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கி, மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இந்து நாடாக இருந்ததே அன்றைய திருவாதங்கூர் சமஸ்தானம். இங்கு ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் ஜன்மி சம்பிரதாயமும், 10 - 11 ஆம் நூற்றாண்டுகளில் ஆரியப் பார்ப்பனர்கள் (நம்பூதிரிகள்) ஆதிக்கமும் ஒன்று சேர்ந்து, வலுப்பெறத் துவங்கிய வேளையில், சாதிக் கட்டுப்பாடுகள் உருவெடுத்தன. மேல் சாதி இந்து, கீழ் சாதி இந்து என்றும், பாகுபாடுகள் உருவாகி, தொடாமை, நெருங்காமை, காணாமை போன்ற தீட்டு முறைகளும் முளை விட்டன. இந்தத் தீமைகளில் ஒன்றுதான் தாழ்த்தப்பட்டவர்கள் இடுப்புக்கு மேலும், முட்டுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்கிற கட்டுப்பாடு. உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும். இந்த உடைக் கட்டுப்பாட்டை மீறினால் மரணத் தண்டனை.
சாதிய அடிக்கணக்குத் தீண்டாமை : குறிப்பாக, சாணார் என்றழைக்கப்பட்ட நாடார் சாதியின மக்கள் ஆதிக்க சாதிகளாக இருந்த நம்பூதிரிகள், நாயர்கள், வேளாளர்கள் உள்ளிட்டவர்களால் கடுமையான இன்னலுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாகினர். உயர் சாதியினருக்கும், தாழ்ந்த சாதியினருக்கும் இடையே அடிக்கணக்கு வைத்து, தீண்டாமை பேணப்பட்டது. கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் சொந்தமாக பனந்தோப்புகள் வைத்திருந்த வசதி படைத்த சாணார்கள் தங்கள் தோப்புகளில் கூலி வேலை செய்த ஏனைய சாணார்களை மேல் சாதி ஆதிக்க மனப்பான்மையிலேயே நடத்தினர். இதனை, துரியோதனனும், பஞ்சவரும் சேர்ந்து ஒரு வயிற்றில் பிறக்கக் கண்டேனே சிவனே, ஐயா என்று வேதனையோடு சாமித்தோப்பு அய்யாவை குண்டசாமி தனது அகிலத்திரட்டில் பதிவு செய்திருக்கிறார்.
உழைப்புச் சுரண்டல் : திருவிதாங்கூர்ப் பகுதிகளில் வாழ்ந்த சாணார் சமூக மக்களின் உழைப்பும், அதிகார வர்க்கத்தினரால் மிகக் கடுமையாக சுரண்டப்பட்டது. கூலி மறுக்கப்பட்ட அடிமைகளாய் சாணார்கள், விலங்குகளைவிடக் கேவலமாக நடத்தப்பட்டனர். அரசுக்கும், ஆதிக்க சாதிகளுக்கும் அடங்க மறுத்தவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். உழைப்பிற்கான ஊதியத்தை தர மறுக்கின்ற வேலையை ‘ஊழியம்’ என்று அழைத்து, அவ்வேலைகளையெல்லாம் சாணார் மக்களைச் செய்யப் பணித்தனர். இதனை ‘உப்பு ஊழியம்’ என்றும், அரசு அலுவலகங்களில் எழுதுவதற்காக வழங்கப்படுகின்ற பனை ஓலைகளை இலவசமாகத் தருகின்ற வேலைக்கு ‘ஏட்டோலை ஊழியம்’ என்றும் அழைத்து, அந்த வேலைகளையெல்லாம் சாணார் மக்களைச் செய்ய வைத்தனர் என்று வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.
அடிப்படை உரிமைகள் மறுப்பு : சாணார் சமூக மக்கள் குடைப்பிடிக்கக்கூடாது, செருப்பு அணிதல் கூடாது, மாடி வீடு கட்டக்கூடாது, தங்க நகைகள் அணியக் கூடாது, பசு மாடுகள் வளர்க்கக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை ஆதிக்கவர்க்கம் திணித்தது. இதற்கு பணக்கார சாணார்களும் உடந்தையாக இருந்தனர். இவை அனைத்திற்கும் மேலாக, மனித மாண்பினைக் காக்கும் ஆடை அணிவதில் கட்டுப்பாடுகள் கொடுமையிலும் கொடுமையே! இந்து ஆதிக்க சாதிகளான நம்பூதிரிகள், நாயர்கள், வேளாளர்கள், தமிழ்ப் பார்ப்பனர்கள் சாணார், ஈழவர், காவேரி நாவிதர், பறையர், புலையர், சாம்பவர், வள்ளுவர், சேரமர் போன்ற சாதிகளில் உள்ள பெண்கள் மேலாடை அணிவதற்கு தடை விதித்தனர். பெண்கள் தங்களது மார்பினை மேலாடைகளால் மறைக்கக்கூடாது, முழங்காலுக்குக் கீழே உடுத்தக்கூடாது.
ஆடை - மனித மாண்பின் அடையாளம்
மனித மாண்பினை காப்பதில் ஆடைக்கு பெரும் பங்குண்டு என்பதாலே ஆடை அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக உள்ளது. கவிக்கோ அப்துல் ரகுமான் “ஆடை மனிதனின் முதல் கண்டுபிடிப்பு. அந்த ஆடையே மனிதனை மற்ற உயிரினங்களிலிருந்து பிரித்தது, உயர்த்தியது” என்கிறார். யோனத்தன் ஸ்விஃப்ட் “மனிதனே ஆடைதான்” என்கிறார். அதாவது, மனிதன் தோன்றுவதற்கு முன் பூமி நிர்வாணமாக இருந்தது. “அறிவியலின் சாரமே ஆடை பற்றிய தத்துவத்தில் அடங்கியிருக்கிறது” என்கிறார் கார்லைல். கணவன் - மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்க வந்த திருக்குர் ஆன், ஆண்களை நோக்கி, “அவர்கள் உங்களுக்கு ஆடை, நீங்கள் அவர்களுக்கு ஆடை” என்கிறது. அதாவது, மனைவி கணவனுக்கு ஆடை. கணவன் மனைவிக்கு ஆடை.
இவ்வளவு மகத்துவம் நிறைந்த அடிப்படை உரிமையான ஆடை அணிவதில் பெண்களுக்கு ஆதிக்கவர்க்கம் விதித்தக் கட்டுபாடுகள் ஏராளம். குறிப்பாக, அரசில் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் முன்பு திறந்த மார்போடுதான் இருக்க வேண்டும். அதனை மீறுவது சாதியக் குற்றம். சமூகத்தில் பெரும் மரியாதைக்குரிய ஒரு மனிதரிடம் ஒரு பெண் தனது மார்பைக் காட்டுவது என்பது அந்நபருக்கு சமூகம் அளிக்கும் மரியாதையாகவே கருதப்பட்டது என்று, சாமுவெல் மேட்டீர் திருவிதாங்கூரின் இயல்பு வாழ்க்கை என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். திருவிதாங்கூர் மகாராணியின் முன் ஒரு சாணார் சாதிப் பெண் ரவிக்கை அணிந்து வந்தார் என்பதற்காக, அவரது மார்பை வெட்ட திருவிதாங்கூர் நிர்வாகம் உத்தரவிட்டது. கன்னியாகுமரி அருகேயுள்ள கொட்டாரத்தில் திருமணமான சில நாட்களில் தாலி, மேலாடையுடன் வந்த புதுப்பெண் அரசாணையை எதிர்த்த குற்றத்திற்காக பொது இடத்தில் தாலியறுத்து, உடை களைந்து, அரசுப் படையால் கொலை செய்யப்பட்டார். அந்த இடம் இன்றும் ‘தாலியறுத்தான் சந்தை’ என்றே அழைக்கப்படுகிறது.
கிறித்தவத்தின் பங்களிப்பு: பெண்கள் மேலாடை அணிவதற்குத் தடை என்கிற அடக்குமுறையை எதிர்த்து, சீர்திருத்த கிறித்தவத்தை ஏற்றுக் கொண்ட சாணார் (நாடார்) சாதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் சாதிப் பெண்களுக்கு மார்பை மறைத்து, சேலை அணிய உரிமை கோரிப் போராடத் தொடங்கினர். காரணம், தாழ்த்தப்பட்ட இந்துச் சாதியினர் கிறித்தவ மதத்திற்கு மாறினாலும் கூட, இந்துக் கோயில்களுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்தாக வேண்டும் என்பதை சட்டமாக வலியுறுத்தியது ஆதிக்க வர்க்கம். இதுவே, தோள் சீலைப் போராட்டம் பிறக்க அடிப்படைக் காரணம். 37 ஆண்டுக்கால நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, திருவிதாங்கூர் அரசு நாடார் கிறித்தவ பெண்கள் தோள்சீலை அணியவும், மார்பகங்களை மறைக்கவும் உரிமை வழங்கியது. இப்போராட்டம் மூன்று கட்டங்களில் நடைபெற்றது.
முதல் கட்டப் போராட்டம் (1822-1823)
சீர்திருத்தக் கிறித்தவ மதப்போதகர் சார்லஸ்மீட் மற்றும் இவரது துணைவியாரின் பங்களிப்பு மிகப்பெரிது. வரலாற்றாசிரியர் சங்குண்ணிமேனம் குறிப்பிடுகையில், “மேலாடைப் போராட்டத்திற்குத் தலைவராக மீட் அவர்களே இருந்தார். அவரே இதற்குக் காரணகர்த்தா” என்கிறார். போதகர் மீட் கிறித்தவ பெண்கள் மார்பகங்களை மறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆலயங்களுக்கு வரும் பெண்களுக்கென்றே ஆடை ஒன்றை வடிவமைத்து, அதனை அணியச் செய்தார். இதனால் கிறித்தவ பெண்கள் தங்கள் மார்பகங்களை துணிந்து மறைத்தது மட்டுமல்லாமல் அதற்குமேல் ஒரு மேலாடையையும் பயன்படுத்தினர். இதைக் கண்டமேல் சாதியினர் கலவரம் செய்ய துவங்கினர்.
மே மாதம் 1822 ஆம் ஆண்டு, கல்குளம் மற்றும் இரணியல் பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதன் காரணமாக மீட் ஐயர் என்ற ஐரோப்பிய மறைப்பணியாளர் ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் என்பவருக்கு நடைபெற்ற நிகழ்வுகளின் அடிப்படையில் விரிவாக கடிதம் ஒன்றை எழுதினார். அதன் பயனாக ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் பத்மநாபபுரம் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டார். இறுதியில் 1823 ஆம் ஆண்டு நீதிமன்றம் கிறித்தவ பெண்கள் மட்டும் ‘குப்பாயம்’ என்ற உடையை அணியலாம் என்று தீர்ப்பளித்தது. இந்த உத்தரவு இந்து சமயத்தில் நீடித்த சாணார் பெண்களுக்கு தங்களது மார்பகங்களை மறைப்பதற்கு உரிமை வழங்கவில்லை.
இரண்டாம் கட்டப் போராட்டம் (1827-1829)
1823 ஆம் ஆண்டு, வெளியிடப்பட்ட அரசாணை ஒரு நிரந்தரமான தீர்வை அளிக்கத் தவறியது. இந்த ஆணையின் அடிப்படையில் கிறித்தவப் பெண்கள் உயர்சாதிப் பெண்கள் அணிவதுபோன்ற ஆடைகள் அணியக்கூடாது என்று தடை விதித்தது. இதனால் கிறித்தவ நாடார் பெண்களிடம் அதிருப்தி ஓங்கியது. கிறித்தவ நாடார் பெண்கள் தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட குப்பாயம் என்ற மேலாடையைவிட ஐரோப்பிய மறைப்பணியாளர்கள் மற்றும் உயர் சாதிபெண்கள் அணியும் உடைகளை அணிய ஆரம்பித்தனர். இவர்களைப் பின்பற்றி இந்து நாடார் பெண்களும் மேலாடை அணிய ஆரம்பித்தனர். இதற்கு ஆட்சியில் இருந்த நாயர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, மீண்டும் 1827 ஆம் ஆண்டு, இரண்டாவது போராட்டம் வெடித்தது. இக்கலவரமும் கிறித்தவப் பெண்களுக்கு எதிராகவே நடைபெற்றது. தாங்கள் வகுத்திருந்த விதிகளும், தங்களது ஆதிக்கமும் கண் முன்னே சிதைவதைக் கண்ட நாயர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். கிறித்தவத்திற்கு மதம் மாறிய நாடார்களை அச்சுறுத்தினர். தோள் சீலை அணிந்து கொண்டுவரும் பெண்களின் ஆடைகள் கிழித்தெறியப்பட்டன. அடித்து, உதைக்கப்பட்டார்கள். திருவிதாங்கூர் அரசும் ஆதிக்க சாதிகளின் அடிவருடியாகவே செயல்பட்டது. ஆத்தூர், திற்பரப்பு, கண்ணனூர், அருமனை, உடையார்விளை, புலிப்புனம் ஆகிய இடங்களில் போராட்டத் தீ வேகமாகப் பரவியது. இப்போராட்டத்தில் ஆதிக்க நாயர்களுக்கு எதிராய்க் குரலெழுப்பிய மீட் பாதிரியாரைக் கொலை செய்ய பெரும் முயற்சியும் நடைபெற்றது என்கிறது வரலாறு.
இறுதியாக, திருவாதங்கூர் மன்னர் உத்திரம் திருநாள், 1847 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 19 ஆம் நாள், ஒரு நீதிமன்றத் தீர்ப்பை வெளியிட்டார். அதன்படி, முதலில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பை ஒட்டியே கூடுதலாக யாரும் மதம் மாறிச் செல்வதற்கும் தடையில்லை என்று அறிவிக்கப்பட்டது. இத்தீர்ப்பு ஏற்படுத்திய விளைவே குமரியில் இன்று கிறித்தவ மதம் வேரூன்றி இருப்பதற்கு காரணம். அத்தீர்ப்புக்குப்பின் 80க்கும் அதிகமான நாடார் இன மக்கள் இந்து மதத்திலிருந்து கிறித்தவ மதத்திற்கு மாறினர். பல்வேறு போராட்டங்களின் மூலம் கிடைக்கப் பெறாத தோள்சீலை அணியும் உரிமை கிறித்தவ மதத்திற்கு மாறியதன் மூலமே அங்குள்ள நாடார்களுக்குக் கிடைத்தது. இருப்பினும், ஒடுக்கப்பட்ட இந்துக்கள் மேலாடை அணியவோ, நகைகள் அணியவோ உரிமை அளிக்கப்படவில்லை. ஆனால், கிறித்தவ மதத்துக்கு மாறியவர்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது.
மூன்றாம் கட்டப் போராட்டம் (1858-1859)
கிறித்தவ சமயத்திற்கு மாறியவர்கள் தவிர, ஏனைய நாடார் பெண்கள் மேலாடை அணிவதற்கு தடை என்கிற நிலையில் மீண்டும் மூன்றாவது போராட்டம் எழுந்தது. இதனை போதகர் காக்ஸ் மற்றும் மறை போதகர்கள் பொறுப்பேற்று நடத்தினர். இப்போராட்டத்தைப் பூனூல் அணிந்த சத்திரிய நாடார்கள் எதிர்த்தனர். ஆனாலும், சாணார் கிறித்தவர்கள் சற்றும் சளைக்காமல் நாயர்களை எதிர்த்துப் போராடி 1859 இல் வெற்றியும் பெற்றனர். அதன்விளைவாக 1859 ஆம் ஆண்டு, ஜுலை 26 ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக மீண்டும் அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, அனைத்து சமயத்தைச் சேர்ந்த நாடார் பெண்களும், கிறித்தவப் பெண்களைப் போன்று, குப்பாயமிட்டுக் கொள்ளவோ, மீனவப் பெண்களைப் போன்று கட்டிச் (Charse) சீலை உடுத்திக் கொள்ளவோ செய்யலாம். ஆனால், உயர் சாதிப் பெண்கள் (நாயர், நம்பூதிரிகள், வெள்ளாளர்கள்) மேலாடை அணிவது போன்று அணியாமல், வேறு எவ்விதத்திலாவது மார்பை மறைத்துக் கொள்வதற்கு எந்த விதத் தடையும் இல்லை. இந்த அறிவிப்பின் விளைவுதான், இந்து சமயத்தில் நீடித்த சாணார் பெண்களுக்கும் பூனூல் பூண்ட நாடார் பெண்களுக்கும் சேர்த்து குப்பாயம் அணியும் உரிமை கிடைத்தது.
ஆயினும், இவ்வுரிமை தாழ்த்தப்பட்ட, பிற சமுதாயத்தினருக்கு இவ்வறிப்பால் உரிமை கிடைக்கவில்லை. எனவே, இந்த ஆணையைக் கண்டித்து மறைபோதகர்கள் ஆங்கில அரசிடம் மீண்டும் மேல்முறையீடு செய்தனர். சென்னை மாகாண ஆளுநர் சார்லஸ்ட்ரெவிலின் திருவிதாங்கூருக்கான ஆங்கிலப் பிரதிநிதி மால்ட்பியை நேரடியாக அழைத்துப் பேசினார். திருவிதாங்கூரில் பெண்கள் உடை அணிவதில் இருக்கின்ற எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்க ஆங்கிலப் பிரதிநிதி மகாராஜாவிடம் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மால்ட்பி இதனைக் குறித்து மகாராஜாவிடம் பேசினார். ஆங்கில அரசின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காவிட்டால் ஆங்கில அரசுடனான தங்களது உறவு பாதிக்கப்படும் என்றுணர்ந்த மகாராஜா 1865 ஆம் ஆண்டு, இன்னொரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி இந்து மதத்திலிருந்து மதம் மாறி கிறித்தவ சமயத்திற்கு வந்த நாடார் பெண்களுக்கு மேலாடை அணிவதற்குக் கொடுக்கப்பட்ட உரிமை அனைத்து சாதியைச் சேர்ந்த பெண்களுக்கும் கொடுக்கப்பட்டது.
நமக்கெல்லாம் மாபெரும் சவால்
இங்ஙனம் சாதிய படிநிலை கட்டமைப்புகளில் அடிப்படை உரிமைகளை இழந்து நின்ற மக்களை குறிப்பாக, பெண்களை மாண்பு மிக்கவர்களாக மாற்றியதில் கிறித்தவ மத போதகர்களின் பங்கை நாம் ஒருபோதும் மறந்து விடலாகாது. மேலும், கல்வியின் மூலமே மாற்றங்களை உருவாக்க முடியும் என்கிற வகையில், கிறித்தவ மத போதகர்கள் கல்வி மற்றும் மருத்துவத்திற்கும் நம் நாட்டிற்கு வழங்கிய பங்களிப்பை ஒருபோதும் மறுக்க இயலாது. கிறித்துவின் மதிப்பீடுகளை நம் மண்ணில் விதைத்துச் சென்ற இம்மாபெரும் மறைபோதகர்களின் வாழ்வு இன்றும் நமக்கு மிகப்பெரும் சவாலே!
இன்றளவும் நம் கிறித்தவ சமயத்திலே தொடரும் சாதியப் பாகுபாடுகளை எப்பொழுது நாம் குழிதோண்டி புதைக்கப்போகிறோம்? இன்றளவும் மனுவின் வர்ணாசிரமக் கொள்கையைப் பிடித்துக் கொண்டு, அதிகார மையங்களில் தொடரும் சாதியவன் முறைகளை எப்பொழுது கூண்டோடு அழிக்கப்போகிறோம்? சாதிய கொடுங்கிளைகளை வெட்டி எறிய நம் முன்னோர் தொடுத்த தியாகங்களை மீண்டும் நினைவு கூர்வதன் வாயிலாக, இன்று நாம் முன்னெடுக்க வேண்டிய செயல்திட்டங்களை யோசிப்பது அவசியம். மனித மாண்பினை சீர்குலைக்கும் செயல்களைக் களைய முற்போக்கு சக்திகளோடு இணைந்து போராட வேண்டும். தாழக் கிடப்பாரைக் கை தூக்கிவிட்ட சார்லஸ்மீட் போன்ற போதகர்களாக நாம் செயல்பட தயாரா? “இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை. ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை. கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்” (கலா 3:28). தூய பவுலடியாரின் இச்செய்தியே இனி நம் வாழ்வியலாக மாறட்டும்.