Namvazhvu
“உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்” அயலார் மிகைக் குடியேற்றம்
Wednesday, 17 May 2023 08:52 am
Namvazhvu

Namvazhvu

குடியேற்றம் என்பது மானுட வாழ்வின் ஒரு மிக முக்கியமான வாழ்வியல் அம்சம். இன்று உலகெங்கும் வியாபித்திருக்கும் பனிரெண்டு கோடிக்கும் அதிகமான தமிழர்களாகிய நமக்கு இது நன்றாகவே தெரியும். ஐ.நா. மனித உரிமைப் பிரகடனத்தின் ஷரத்து 13, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஷரத்து 19 போன்றவை மக்களின் இடப்பெயர்ச்சி மற்றும் குடியேற்ற உரிமைகளை அங்கீகரிக்கின்றன.

ஆனால், உலக நாடுகள் அனைத்துமே குடியேற்றத்தை ஓர் ஆபத்தாகவே பார்க்கின்றன. குறிப்பாக, செல்வந்த நாடுகளில் ஆதிக்கச் சக்திகள் தங்களின் எண்ணிக்கை நாளடைவில் குறைந்து தாங்கள் சிறுபான்மையினர் ஆகிவிடுவோமோ, தாங்கள் அனுபவித்து வரும் வசதி வாய்ப்புகளை வந்தேறிகள் அதிகமாகக் குடியேறி குறைத்து விடுவார்களோ என்றெல்லாம் அஞ்சுகின்றனர்.

மெக்சிகோவிலிருந்து ஏராளமான வந்தேறிகள் அமெரிக்காவில் குடியேறுகிறார்கள். எனவே, இருநாட்டு எல்லை நெடுக ஒரு பெருஞ்சுவர் கட்டப் போகிறேன் என்றார் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அண்மையில் பிரிட்டன் அறிமுகப்படுத்தி இருக்கும் அகதிகள் கொள்கையும் ஆவணங்கள் இல்லாமல் வருவோர் மற்றும் புகலிடம் கோருவோர் போன்ற அன்னியர் குடியேற்றத்தை அறவே நீக்க முயல்கிறது. இந்தியக் குடியேறிகளின் குடும்பங்களைச் சார்ந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், உள்துறை அமைச்சர் சுவேல்லா பிரேவர்மேன் போன்றோர் முன்னின்று இந்த சட்டவிரோதச் சட்டத்தை நிறைவேற்றுவது ஒரு நகைமுரண்.

அந்நியர் குடியேற்றம் என்பது இப்போது தமிழ்நாட்டிலும் ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுக்கிறது. தமிழ்நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், வட இந்தியத் தொழிலாளர்கள் நிறைந்திருக்கின்றனர். கட்டிடத் தொழில், தொழிற்சாலைகள், ஓட்டல்கள், செங்கல் சூளைகள், ஜவுளிக் கடைகள், தோட்டங்கள், தனியார் எஸ்டேட்டுகள், போக்குவரத்து என அவர்கள் இல்லாத உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் இல்லவே இல்லை எனுமளவுக்கு வடநாட்டவர் குவிந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் தற்போது ஏறக்குறைய ஆறு லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர் என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி. வி. கணேசன் தெரிவித்திருக்கிறார்.

“உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்” என்று அறைகூவல் விடும் இடதுசாரிகள் மற்றும் குடியேற்ற ஆதரவாளர்கள் இந்தப் பிரச்சனையை வெறும் தொழிலாளர் நலம் மற்றும் மனித உரிமைகள் சார்ந்த பிரச்சனையாக மட்டுமே பார்க்கிறார்கள். இந்த அமைப்பு சாராத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காக மற்றும் வயிற்றுப்பிழைப்புக்காக வருகிறார்கள், குடும்பமின்றி, சமூகப் பாதுகாப்பின்றி, பஞ்சம் பிழைக்க வரும் இவர்களின் உழைப்பைச் சுரண்டுகிறோம், வேற்றுப்படுத்துகிறோம் என்றெல்லாம் விசனப்படுகிறார்கள் இவர்கள்.

ஆனால், நேர் எதிர் துருவமான மண்ணின் மைந்தர்கள் மற்றும் குடியேற்ற எதிர்ப்பாளர்கள் பிரச்சனையை அன்னியர் படையெடுப்பாகவும், ஆக்கிரமிப்பாகவும் பார்க்கிறார்கள். இலங்கை ஓர் எடுத்துக்காட்டாக அமைகிறது. அந்நாடு விடுதலை அடைந்தது முதல், சிங்களப் பேரினவாத அரசு தமிழர் பகுதிகளில் சிங்களக் குடும்பங்களை ஆயிரக்கணக்கில் குடியமர்த்தி வருகிறது. விடுதலைக்குப் பிறகு தொடங்கிய இந்த காலனிமயமாக்கல் திட்டத்தால் 1953 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டுகளுக்கிடையேயான 28 ஆண்டுகளில் மட்டுமே 165,000 சிங்களர்கள் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் குடியேற்றப்பட்டனர். இக்குடியேற்ற நடவடிக்கையால், புவிசார் தன்மைகள், அடையாளங்கள் அழித்தொழிக்கப்பட்டு, மன்ணின் மக்கள் மைனாரிட்டிகளாக மாறிக் கொண்டிருக்கின்றனர்.

பண்டாரநாயகே - செல்வநாயகம் ஆகியோரின் 1957 உடன்படிக்கை, சேனநாயகா-செல்வநாயகம் ஆகியோரின் 1965 ஒப்பந்தம் போன்றவை, நில ஒதுக்கீடு மற்றும் குடியேற்றம் குறித்து விரிவாக விவாதித்தன. நில அபிவிருத்திச் சட்டத்தின்படி, அந்தந்த மாவட்டங்களிலுள்ள நிலமற்றோருக்கே நிலம் வழங்கப்பட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியிலுள்ள தமிழ் மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். வெளியாருக்கு நிலம் வழங்குவதாக இருந்தால் தீவின் பிற பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம் உடன்பாடாயிற்று.

தமிழர்கள் இலங்கையின் தெற்குப் பகுதியில் எவ்விதத் தடையுமின்றி குடியேறி, நிலம் வாங்குகிறார்கள், வேலை பார்க்கிறார்களே என்று சிங்களர்கள் வாதிட்டனர். ஆனால், அவர்களை இலங்கை அரசே முன்னின்று குடியேற்றவில்லையே என்று தமிழர்கள் பதிலிறுத்தனர். காலனிமயமாக்கலால் மக்கள்தொகை அமைப்பை மாற்றும் முயற்சிகளைத்தான் தாங்கள் எதிர்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இலங்கையைப் போலவே தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் அயலார் மிகைக் குடியேற்றமும் மக்கள்தொகை அமைப்பை மாற்றும் எண்ணத்தோடு திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது என்று குடியேற்ற எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர்.

இந்திய தேசியவாதப் பார்வையோ ‘எல்லாரும் இந்தியர்’ என்று மேலோட்டமாகப் பார்த்துவிட்டுக் கடந்து செல்கிறது. ஆளும் பாஜக மார்வாடிகள், பனியாக்கள் போன்ற தங்களின் ஆதரவாளர்கள், நன்கொடையாளர்கள் நலன்களை மனதிற்கொண்டு கள்ள மவுனம் சாதிக்கிறது.

திராவிட மாடல் ஸ்டாலின் அரசோ வீட்டோடு மாப்பிள்ளையாய் வந்திருக்கும் புதிய மருமகனை வரவேற்பது போலவே, வடமாநிலத் தொழிலாளர்களை வருந்தி வருந்தி உபசரிக்கிறது. தமிழ்நாட்டில் வட இந்தியத் தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று பொய்யான காணொளிப் பதிவுகளுடன் வதந்திகள் பரவியதும் நாகர்கோவிலில் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு, தூத்துக்குடிக்குச் சென்று கொண்டிருந்த முதல்வர் போகும் வழியில் காவல்கிணறு பகுதியில் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்த ஜார்க்கண்ட் மாநிலத் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர்களின் உணவு, தங்குமிடம், பணிச்சூழல், வேலை நேரம், அவர்களுக்கு வழங்கப்படும் பிற வசதிகள் குறித்தெல்லாம் கேட்டறிந்தார். “உங்களைப் பாதுகாப்பதற்கு நாங்கள் இருக்கிறோம். எனவே, நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்” என்று அவர்களைத் தேற்றினார்.

“உங்களில் ஒருவன்” எனும் ஒரு கேள்வி-பதில் தொடரில் முதல்வர் இப்படி எழுதினார்: “பாஜகவுக்கு எதிரான அரசியல் இயக்கங்கள் அகில இந்திய அளவில் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை நான் எடுத்துக்கூறிய மறுநாளே இப்படிப்பட்ட பொய் பரப்பப்பட்டத்தை கவனித்தீர்கள் என்றாலே இதற்குப் பின்னால் இருக்கும் சூழ்ச்சி புரியும்.”

வட மாநிலங்களைச் சார்ந்த பாஜக நிர்வாகிகளே இதனைச் செய்திருப்பது உள்நோக்கம் கொண்டது என்று முதல்வர் குற்றஞ்சாட்டினார். அதேநேரம், ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசாங்கமே வரிந்துக்கட்டிக்கொண்டு வட மாநிலத் தொழிலாளர்களின் நலன்களைப் பேண முற்பட்டது. பீகார் மாநிலத்திலிருந்து வந்த ஆய்வுக்குழுவிடம் தமிழக தலைமைச் செயலாளரே கலந்தாலோசித்து, ஆதரவு தெரிவித்தார். மொத்தம் 11 விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு, வட மாநிலத்தவர்கள் சுதந்திரமாக உள்ளனர் என்பதை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

தமிழ்நாடு முழுவதுமுள்ள காவல் நிலையப் பகுதிகளில் வட மாநிலத்தவர் எவ்வளவு பேர் உள்ளனர், எங்கே தங்கியிருக்கின்றனர், எந்த நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள், யார் மூலம் அழைத்து வரப்பட்டார்கள், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் எப்படி உள்ளன என்றெல்லாம் ஆய்வுசெய்து, அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வட மாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் மற்றும் அவர்கள் தங்கி உள்ள இடங்களில் காவல்துறை சார்பில் காவல் நிலைய எண்களும், உதவி மையங்களின் செல்போன் எண்களும் எழுதப்பட்ட பேனர்கள் கட்டப்பட்டுள்ளன. உதவி தேவைப்பட்டால் மேற்படி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு இந்தி மொழியில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நடக்கும் வளக்கொள்ளையை, மணற்கொள்ளையை, போதைப் பொருள் வியாபாரத்தை இப்படித் தடுக்க அரசு இயந்திரம் முன்வரவில்லை, வேலையின்றித் துவண்டுகிடக்கும் தமிழக இளைஞர்களின் துயர்துடைக்க அரசு இப்படி வேலைச் செய்யவில்லை. அடுத்து வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொங்கு மக்களவை உருவாகி, 30-35 உறுப்பினர்கள் இருந்தால், பிரதமர் பதவியே கைகூடலாம் என்கிற நப்பாசையுடன்தான் திமுக கட்சியும், ஆட்சியும் இப்படி வரிந்துக்கட்டிக்கொண்டு வேலை செய்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. வட இந்தியர்களுக்கு எதிரானவர்கள் என்கிற தோற்றம் உருவாகிவிடக்கூடாது என்பதில் திமுக சிறப்பு கவனம் செலுத்துகிறது.

வடமாநிலத் தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்துக்கு அதிக நேரம் வேலை செய்கிறார்கள்.

தகுதியில்லா வாழ்விடம், பாதுகாப்பில்லாப் பணியிடம், உழைப்புச் சுரண்டல் போன்ற பல்வேறு இடர்களை எதிர்கொள்கிறார்கள் என்பவையெல்லாம் ஓரளவு உண்மைதான். அதேநேரம், தமிழர்கள் மத்தியில் தொழில்முறை விழுமியங்கள் மறைந்து வருவதும், கடின உழைப்புக்கு பலரும் அணியமாக இல்லை என்பதையும் நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். இப்போதெல்லாம் பல வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை, கிடைத்தாலும் அவர்கள் வேலைக்கு ஒழுங்காக வருவதில்லை, வேலைக்கு வந்தாலும் கவனத்தோடு, பொறுப்பாக வேலை செய்வதில்லை என்பன போன்ற பல பிரச்சனைகள் உள்ளன.

உள்ளுக்குள் சீர்திருத்தம் செய்ய முயலாமல், வெளியாரை மட்டுமே குற்றம் சுமத்திக் கொண்டிருப்பது சரியாகாது. அயலார் மிகைக் குடியேற்றம் இப்படியே தொடர்ந்தால், மக்கள்தொகை அமைப்பு மாறும், தமிழர்களின் வாய்ப்புகள் பறிபோகும், சொந்த மண்ணிலேயே அகதிகள் ஆவோம், சமூகக் குற்றங்கள் அதிகரிக்கும், பொருளாதாரச் சுரண்டல் அதிகமாகும், அரசியல் அதிகாரம் பறிபோகும்.

பிரச்சனைக்குத் தீர்வாக கீழ்க்காணும் கோரிக்கைகளை முன்வைப்போம்:

1. தமிழ்நாட்டு அரசு வேலைகள் நூறு விழுக்காடு தமிழக மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்.

2. தமிழ்நாட்டில் இயங்கும் இந்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வேலைகள் 90 விழுக்காடு தமிழர்களுக்கே தரப்பட வேண்டும்.

3. தமிழ்நாட்டிற்குள் வரும் அயலார் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளது போல உள்நுழைவுச் சீட்டுடன்தான் அனுமதிக்கப்பட வேண்டும். உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளுக்குப் போவதற்கு முன்னால், விசா என்கிற முன் அனுமதி பெறுகிறோம். அதேபோல, ஒரு நாட்டுக்குள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்வதற்கு அந்நாட்டின் அரசால் வழங்கப்படும் அதிகாரப்பூர்வமான உரிமம்தான் உள்ளக அனுமதி (Inner Line Permit - ILP) என்றழைக்கப்படுகிறது. இந்தியாவில் பழங்குடி மக்கள் வாழும் அருணாச்சல் பிரதேசம், மிசோரம், நாகாலாந்து போன்ற மாநிலங்களுக்கு வேலை நிமித்தமாகச் சென்றால் ஓராண்டு காலமோ அல்லது இரண்டு முறை புதுப்பிக்கத்தக்க அளவில் ஆறு மாதங்களோ மட்டுமே அனுமதி அளிக்கிறார்கள்.

4. அயல் மாநிலத்தாருக்கு வாக்காளர் அட்டை, நியாய விலை அட்டை போன்றவை தமிழ்நாட்டில் வழங்கப்படக் கூடாது.

5. தமிழ்நாட்டில் அயலார் நிலம் வாங்குவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட வேண்டும். பதினெட்டு வயது நிரம்பியவர்கள் நாட்டில் எங்கே வேண்டுமானாலும் நிலம் வாங்க முடிந்தாலும், மகாராஷ்டிரா, குஜராத், இமாச்சல் பிரதேசம், கர்நாடகா, அசாம், நாகாலாந்து, சிக்கிம் போன்ற மாநிலங்களில் விவசாயிகள் அல்லாதோர் விளைநிலங்கள் வாங்குவது தடைசெய்யப் பட்டிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் 371F ஷரத்தின்படி, வெளியாள் சிக்கிம் மாநிலத்தில் நிலம் வாங்குவதோ, விற்பதோ தடை செய்யப்பட்டிருக்கிறது. சிக்கிம் மாநிலத்தில் வாழும் மக்கள் மட்டுமே அங்கே நிலம் வாங்க முடியும். அம்மாநிலத்தின் ஆதிவாசிகள் வாழும் பகுதியில் ஆதிவாசிகள் மட்டும்தான் நிலமோ, சொத்துகளோ வாங்க முடியும்.

6. தமிழ் இளைஞர்களுக்கு தொழிற்கல்வி, தொழில்முறை திறன்கள், மென்திறன்கள் முறையாக வழங்கப்பட வேண்டும். வேலைக்கமர்த்தும் தகுதிகள், திறமைகளை வளர்ந்தோங்கச் செய்ய வேண்டும். இதற்கென தனித் துறை தொடங்கப்பட வேண்டும்.

இடம்பெயர் தொழிலாளர்களின் வேலை, பணியிடச்சூழல் போன்றவற்றை உறுதிசெய்யும் The Interstate Migrant Workmen Act 1979 சட்டம் இப்போது Occupational Safety, Health and Working Conditions Code, 2020 எனும் ஓர் உப்புசப்பற்றச் சட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

நடப்புச் சட்டங்களை அமுல்படுத்தி தொழிலாளர் நலன்களைப் பாதுகாத்தவாறே, உள்ளூர் மக்களின் நலன்களையும் பேணிக் கொள்வதுதான் சிறந்தது. அயலார் மிகைக் குடியேற்றம் அறவே தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.