திருப்பலி முன்னுரை
இன்று நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் விண்ணேற்றப் பெருவிழாவினை கொண்டாடி மகிழ்கிறோம். தனது பணியை துவங்குவதற்கு முன்பாக, 40 நாட்கள் பாலைவனத்திலே தவத்திலும், செபத்திலும் ஈடுபட்ட நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, தான் உயிர்த்தெழுந்த பிறகு, 40 நாட்கள் தமது சீடர்களுக்கு காட்சி தந்து, இறைபணி செய்ய அவர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்துகிறார். அவர்களை நம்பிக்கையில் திடப்படுத்திய பின்பு, விண்ணேற்றம் அடைவதற்கு முன்பாக எல்லா மக்களினத்தாரையும் என் சீடராக்குங்கள். தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்கு கொடுங்கள், நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள் என்ற கட்டளையை இறுதியாக அவர்களுக்கு கொடுத்துச் செல்லுகிறார்.
சிதறிப்போன இஸ்ரயேல் மக்களிடமே நீங்கள் முதலில் செல்லுங்கள் என்று சொன்னவர், இப்பொழுது அனைத்து மக்களிடமும் செல்லுங்கள், அவர்களை என் சீடராக்குங்கள் என்று கூறுகிறார். எவ்வாறு அனைத்து மக்களையும் ஆண்டவரின் சீடராக மாற்றுவது? நீங்கள் அன்பு செய்வதிலிருந்து, நீங்கள் என் சீடர்கள் என்பதை பிறர் அறிந்து கொள்ளட்டும் என்று, இதற்கான பதிலையும் ஆண்டவர் இயேசுவே நற்செய்தியில் தருகிறார். எனவே, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சீடராய் இருக்க வேண்டும் என்றால், நாம் ஒருவரை ஒருவர் அன்பு செய்ய வேண்டும். கடவுளே அன்பாய் இருக்கிறார். எனவே, நாம் அன்பு செய்கிறபோது பிறருக்கு கடவுளைத் தருகிறோம். திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவருக்கும் அன்பு செய்யும் கடமை உண்டு. அன்பு செய்யும் ஒவ்வொருவருக்கும் விண்ணேற்ற ஆண்டவரைச் சந்திக்கும் உரிமைபேறு உண்டு என்பதை உணர்ந்தவர்களாய், இத்திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.
முதல் வாசக முன்னுரை
நீங்கள் தூய ஆவியினால் திருமுழுக்கு பெறுவீர்கள். அந்த தூய ஆவியார் உலகின் கடையெல்லைவரைக்கும் எனது சாட்சிகளாக நீங்கள் இருக்க, உங்களை உறுதிப்படுத்துவார் என்றுரைத்து, ஆண்டவர் இயேசு விண்ணேற்றம் அடைந்தார் என்று கூறும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
ஆண்டவர் இயேசுவின் தந்தை மாட்சி மிகுந்தவர். தமது மகனை அனைவருக்கும் மேலாக உயர்த்தியவர். மேலும், திருஅவையின் தலைமையாக அவரை நியமித்து, அனைத்தையும் அவருக்கு அடிபணியச் செய்தார் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.
மன்றாட்டுகள்
1. எங்கள் அன்பு தந்தையே! உமது திருமகனின் உடலாகிய திருஅவையையும், அதன் திருப்பணியாளர்களையும் நிறைவாக ஆசீர்வதியும். உமது திருமகனை போலவே உமக்கு கீழ்ப்படிந்து, உமது ஆட்சியை இவ்வுலகில் விதைத்திட இவர்கள் பணிபுரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. எங்கள் பரம தந்தையே! உமது திருமகனின் விண்ணேற்றப் பெருவிழாவினை கொண்டாடும் இந்நாளில், உலக நாடுகளின் தலைவர்கள், உமது திருமகனைப் போலவே மக்களுக்காக தங்களது வாழ்வை அர்ப்பணிக்க கூடியவர்களாக வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்கள் விண்ணகத் தந்தையே! விண்ணேற்ற ஆண்டவரின் பெருவிழாவிலே நாங்கள் ஒருவரையொருவர் அன்பு செய்து, அன்பின் நற்செய்தியை எங்களது வாழ்வின் எடுத்துக்காட்டால் பிறருக்கு அறிவித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. பரிவுள்ள தந்தையே! நாங்கள் பெற்றுக் கொண்ட திருமுழுக்கு என்னும் அருள்சாதனத்திற்கு ஏற்றவாறு உண்மையான, நேர்மையான, பணிவுள்ள கிறிஸ்தவர்களாக வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. கனிவுள்ள தந்தையே! உமது திருமகன் வழியாக நீர் எங்களுக்கு கற்பித்த கட்டளைகளின்படி வாழ்ந்து, நாங்கள் உமது சீடர்களாக மாறவும், பிறரையும் உமது சீடர்களாக மாற்றவும் அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.