Namvazhvu
தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு ஜூபிலிக் கொண்டாட்டத்தில் நன்றியுணர்வுடன் நம் நல்லாயன் ....
Wednesday, 07 Jun 2023 09:48 am
Namvazhvu

Namvazhvu

நீ தூங்கச் செல்வதற்கு முன் உனது நாளின் இறுதி வார்த்தையாக அமைவதுநன்றியாக இருக்கட்டும் என்று மைஸ்டர் எக்கார்ட் கூறுகிறார். நமது வாழ்க்கையே நன்றியாக அமைந்ததெனில் அதைவிட மிகப்பெரிய பேறுண்டோ?!

இயேசுவின் வாழ்வே ஒரு நன்றி வாழ்வாக அமைந்தது என்பது நமக்கு விந்தையாக உள்ளது. தமது வாழ்க்கையின் இறுதி நேரத்தில் தம் சீடர்களோடு விருந்து கொண்டாடிய இயேசு அப்பத்தை எடுத்துத் தந்தைக்கு நன்றி கூறினார். அதேபோல திராட்சை இரச கிண்ணத்தையும் எடுத்து நன்றிக் கூறி இது என் இரத்தம் என்றார். இயேசுவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறிய அப்பமும் இரசமும்நற்கருணையாககொண்டாடப்படுகிறது என்பது நமக்குத் தெரியும்.

திருப்பலியில் இவ்வார்த்தைகளை ஒவ்வொரு நாளும் கூறுகிறோம். இவை நாம் நமது மறைமாவட்ட நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகின்றபோது எதிரொலிக்க வேண்டும். ‘நன்றிஎன்ற வார்த்தை பலுகிப் பெருக வேண்டும். இதுவே இறைவனுக்கு நாம் அளிக்கும் சிறப்பு ஆராதனையாக அமைய வேண்டும்.

ஆயர் பெருமகனார்களுக்கு நன்றி !

முத்துக்குளித்துறை தூத்துக்குடி மறைமாவட்டத்தைத் தோற்றுவித்த திருஅவைக்கும், பாப்பிறைக்கும் நன்றி! அதன் ஆயராக நியமிக்கப்பட்ட பேரருள் பெருந்தகை ஆயர் திபூர்சியுஸ் ரோச் அவர்களுக்கு நன்றி. அயராது உழைத்து மறைமாவட்டத்திற்கு உருகொடுத்தவர்கள் அவர்கள். அதைத் தொடர்ந்து வந்த ஆயர் தாமஸ் பெர்னாண்டோ, ஆயர் அம்புரோஸ், ஆயர் அமலநாதர், ஆயர் பீட்டர் பெர்னாண்டோ, ஆயர் இவோன் அம்புரோஸ் அவர்களின் அளப்பரிய உழைப்புக்கு நன்றி.

சபைகளுக்கு, பணிக்குழுக்களுக்கு நன்றி !

மறைமாவட்ட மக்களின் வளர்ச்சிக்காக, கல்விபெற, நம்பிக்கையில் ஊன்றி நிற்க, தியாகத்தோடு உழைத்த துறவியர் சபைகளுக்கு என் உளமார்ந்த நன்றி. பல சபைகளைச் சார்ந்த அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி. பணிக்குழுக்களுக்கு செயலர்களாயிருந்து, பலரின் அறிவுத்திறன் ஆற்றல்கள், பண்புகள் இவைகளை மக்களுக்கு ஊட்டி வளர்த்த, அருட்பணியாளர்களுக்கு நன்றி. இளைஞர்கள், திருமணத் தயாரிப்பு, தம்பதியர்கள் இவர்களை அன்போடு கண்காணித்த, கண்காணித்துவரும் அனைவருக்கும் நன்றி. அன்பியங்களை ஏற்படுத்தி, பங்குப் பேரவை அமைத்து, நிர்வாகக்குழு, பொதுக்குழு, நிதிக்குழு போன்றவற்றை உருவாக்கி பங்குகளை பாங்குடன் வழிநடத்த உதவிய அனைவருக்கும் நன்றி!

ஆற்றுப்படுத்துவோருக்கு நன்றி !

பல குடும்பங்களைப் பிரிவிலிருந்து காத்த தந்தையருக்கு நன்றி. கல்வி கற்க உதவித் தொகை வழங்கும் மறைமாவட்ட மக்கள் அனைவருக்கும் நன்றி. மறைக்கல்வி, விவிலியம், கோடைவிடுமுறை விவிலியக்கல்வி இவைகளில் ஆர்வம் காட்டி, குழந்தைகளை உற்சாகப்படுத்தும் ஆசிரியப் பெருமக்கள், பொதுநிலையினர், பங்கேற்போர் அனைவருக்கும் நன்றி. ஊடகம் வழியாகக் கலை நிகழ்ச்சிகள் நடத்தும், ஊக்குவிக்கும் பணிக்குழுக்களுக்கு நன்றி.

ஆன்மீக பொருளாதார வளர்ச்சிக்கு நன்றி !

தூய ஆவியின் எழுப்புதல் கூட்டங்கள் நடத்தி, மக்களை வேண்டுதலுக்குத் தூண்டும் எல்லாருக்கும் நன்றி. ஆலயங்கள், கல்விக்கூடங்கள், கெபிகள் அமைக்க உதவிடும் நன்கொடை வள்ளல்களுக்கு நன்றி. பல்வகையான வளர்ச்சித் திட்டங்களுக்குத் தோள் கொடுத்த நண்பர்கள், ஊர்ப் பெரியவர்கள், நலம் விரும்பிகளுக்கு நன்றி. பல்வேறு பணிகளில் ஈடுபட்டு மக்களின் வளர்ச்சிக்கு உழைக்கும் அருட்பணியாளர் களுக்கு நன்றி. உண்மைக்கும், நேர்மைக்கும், மனித மாண்புக்கும், மனிதாபிமானத்துக்கும், உழைக்கும் அனைவருக்கும் நன்றி.

மனித வாழ்வை மேம்படுத்தும் இயற்கைக்கு நன்றி!

தென்னையின் வழியாய் வீசும் தென்றலுக்காய்,

மீன்கள் கொணரும் மானமிகு வாழ்வுக்காய்,

முத்துக்களில் மிளிரும் மேலான அழகுக்காய்,

செந்நெல்லும் வாழையும் தருகின்ற உணவுக்காய்,

கருப்பட்டி உருவாக்கும் இனிமைமிகு சுவைக்காய்,

உப்பளங்கள் ஏழைகளைத் தூக்கிவிடும் மேன்மைக்காய்,

உலகிலுள்ள கப்பல்களைத் தாங்கும் நல் துறைமுகத்துக்காய்,

ஆங்காங்கே உள்ள பள்ளிகளுக்காய், கல்லூரிகளுக்காய்,

பாங்கான பணிகளிலே ஈடுபடும் மக்களுக்காய்,

நன்றி என்றும் கூறுகின்றோம்.

அனைவருக்கும் அனைத்துக்கும் நன்றி !

வாழ்வளிக்கும் மாசற்ற இதயங்கள், தூய அன்னை திருத்தலங்கள்,

ஏற்றமிகு சவேரியார், பாசமிகு குழந்தை தெரசா எல்லாவற்றிற்கும் நன்றி.

ஆயர் இல்ல சகோதரிகள், அங்குப் பணி செய்யும் ஊழியர்கள், எங்களைத் தாங்கிப் பிடிக்கும் உபகாரிகள், உறவுக்குக் கை கொடுப்போர், நம்பிக்கையின் விளக்காய் நிற்போர், அருட்பணியாளர்கள், அன்பு இறைமக்கள், ஆற்றல்மிக்கத் தூதுவர்கள், அனைவருக்கும் நன்றி.

நேயமிகு மக்கள் கொண்ட செம்மையான மறைமாவட்டத்திற்காய், மண்டலங்களாய் அமைத்து வளர்ச்சியில் முன்னேறும் மகத்தான செயலுக்கு நன்றி.

விண் முட்டும் ஆலயங்கள், நம்பிக்கையில் உயர்ந்து நிற்கும் தோழர்கள், தோழிகளுக்கு நன்றி! உறவுக்குப் பாலம் அமைக்கும் அனைவருக்கும் நன்றி.