Namvazhvu
நூற்றாண்டில் மறைமாவட்டம் மறைத்தள விரிவாக்கம்
Friday, 09 Jun 2023 05:35 am
Namvazhvu

Namvazhvu

திருத்தந்தை பதினோறாம் பத்திநாதரால் “Quae Catholic Nomin” எனும் அவரது அதிகாரப்பூர்வ ஆணையினால் 1923 ஆம் ஆண்டு, ஜூன் திங்கள் 12 ஆம் நாள், தூத்துக்குடி மறைமாவட்டம் பிறந்தது.

திருச்சிராப்பள்ளி மறைமாநிலத்துக்கு உட்பட்ட, “முத்துக்குளித்துறை” என வழங்கி நிற்கும் கடற்கரை தீரத்தில், புதிய மறைமாவட்டம் அமைக்கப்படுவதாகத் திருத்தந்தை தன் ஆணையில் கூறுகிறார்.

இந்தியாவில், இலத்தீன் வழிபாட்டு முறையில், வெளிநாட்டைச் சார்ந்த ஆயரோ, மறைப்பணியாளரோ தலைமை ஏற்காத, முதல் மறைமாவட்டமாகத் தூத்துக்குடி உருவாக்கப்பட்டது. இயேசு சபையைச் சார்ந்த, தூத்துக்குடி மறைமாவட்ட மண்ணின் மைந்தரரான, பேரருட்டிரு. கபிரியேல் திபூர்சியஸ் ரோச் அவர்கள், இந்திய இலத்தீன் ரீதியில் ஆயராகும் முதல் இந்தியக் குடிமகன் எனும் பெருமை பெற்றார்.

23 குருக்களையும் 18 பங்குகளையும் கொண்டதாக தூத்துக்குடி மறைமாவட்டம் தோன்றியது. வேம்பாறு, தூத்துக்குடி (பிரஞ்சு மிஷன்) பழையகாயல், மணப்பாடு, வீரபாண்டியன்பட்டணம், ஆலந்தலை, பெரியதாழை, உவரி, இடிந்தகரை, கூட்டப்புளி, அழகப்பபுரம், வடக்கன்குளம், காவல்கிணறு, கள்ளிகுளம், சாத்தான்குளம், பிரகாசபுரம், சொக்கன்குடியிருப்பு, தருவைக் குளம் என்பவைகளே மறைமாவட்டத்தின் முதல் பங்குகள். சிறிது காலத்தில் மறைமாவட்டத்தில் சேர்க்கப்பட்டு பங்குகளின் எண்ணிக்கை இருபது ஆகியது. 1930 ஆம் ஆண்டு, மயிலாப்பூர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த பதுர்வாதோ (போர்ச்சுகீசு மிஷன்) பங்குகள் என அழைக்கப்பட்ட வைப்பாறு, தூத்துக்குடி பனிமய அன்னை ஆலயப்பங்கு, மணப்பாடு தூய ஆவியார் ஆலயப்பங்கு, புன்னைக்காயல் மிக்கேல் ஆலயப் பகுதி, கூடுதாழை எனும் ஐந்து பங்குகளும் தனி ஒப்பந்தத்தின்மூலம் மறைமாவட்டத்தோடு சேர்க்கப்பட்டன.

மறைமாவட்டத்தின் எல்லா ஆயர்களும், குறிப்பாக முதல் இரு ஆயர்களும் மறைமாவட்டத்தையும் மறைத்தளங்களையும் விரிவாக்கம் செய்வதில் மிகவும் அக்கறை காட்டினர். அணைக்கரை, சிந்தாமணி, சாத்தான்குளம், கொம்பாடி, நாகலாபுரம் போன்ற மறைத்தளங்கள் பரந்து பரவின. இன்று அவைகளின் கிளையூர்கள் பல தனிப்பங்குகளாகத் துலங்குகின்றன.

தூத்துக்குடி மறைமாவட்டக் கத்தோலிக்கர் எண்ணிக்கை நாலரை இலட்சத்துக்கும் மேலாகிவிட்டது. ஐந்து மறைவட்டங்களில் 119 பங்குகளும் முந்நூறுக்கும் மேற்பட்ட கிளைப்பங்குகளும் கொண்டதாக மறைமாவட்டம் தமிழகத்திலே மிகவும் பெரிய மறைமாவட்டமாகவும் இந்தியாவில் மூன்றாவது பெரிய மறைமாவட்டமாகவும் விளங்குகிறது.

நம் மறைமாவட்டக் குருக்களின் எண்ணிக்கை 247 பேர். மறைமாவட்டத்தின் பணியாற்றி இறைவனில் இளைப்பாறுவோர் 137 பேர். மறைமாவட்டத்தில் பணியாற்றும் துறவறக் குருக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ அறுபது. துறவறச் சகோதரர்கள் ஏறத்தாழ 40 பேர். 770க்கும் மேற்பட்ட அருட்சகோதரிகள் நம் மறைமாவட்டத்தில் பணியாற்றுகின்றனர். முறையாக இறையியல் பயிற்சி பெற்ற வேதியர்கள் பலர் நம் மறைமாவட்டத்தில் அளப்பரிய பணியாற்றியுள்ளனர். இன்னும் ஏழு பேர் நற்பணியாற்றுகின்றனர்.

மறைமாவட்டத்தில் பிறந்து வெவ்வேறு துறவற சபைகளிலும் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு மறைத்தளங்களிலும் பணியாற்றும் அருட்தந்தையர், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகளைக் கணக்கெடுத்தால் தொகை ஆயிரத்தை மிஞ்சும். மறைமாவட்டமும் துறவற சபைகளும் தனித்தனியாக நடத்தும் இளம்நிலைப் பயிற்சித் தளங்கள், குருமடங்கள் 7, தியான இல்லங்கள் 5, இத்தகைய அருள்வளம் ஈந்த இறைவனுக்கு நன்றிப் புகழ் செலுத்த வேண்டியது நம் கடமை.

கல்விப் பணியில் நாம்

ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே புன்னைக்காயலில் முதல் கல்லூரி, முதல் குருமடம், முதல் மருத்துவமனை, முதல் அச்சுக்கூடம் என அமைத்த பெருமை நம் மண்ணுக்கும் மறைப்பணியாளர்களுக்கும் உண்டு. பல்வேறு வரலாற்றுக் காரணிகளால் அவைகள் செயல்பட முடியாமல் தடைப்பட்டன. திருச்சி மறைமாவட்டத்தில் இருக்கும்போதும் நம் மறைமாவட்டம் தொடங்கப்பட்ட பின்பும் சமூக வளர்ச்சிக்கேற்ப நாமும் கல்விச் சாலைகளைத் தொடங்கியுள்ளோம். பிற சமயத்தவர் கல்விக்கூடங்களை அமைப்பதற்கு முன்பே நாம் முன்னோடிகளாகச் செயல்பட்டுள்ளோம். வடக்கன்குளம் புனித தெரசா பள்ளி, மணப்பாடு, புனித யோசேப்புப் பள்ளி, திசையன்விளை உலக இரட்சகர் பள்ளி எல்லாம் மறைமாவட்டத்தின் பொதுப் பள்ளிகளாக அமைக்கப்பட்ட வரலாறும் நம்மிடம் உண்டு. அந்தந்தக் காலக்கட்டத்திற்குத் தேவையான கல்வி நிலையங்களின் ஆர்வம் காட்டியுள்ளோம்.

இன்று நம்மிடம் உள்ள பாலர் பள்ளிகள் 7, தொடக்கப்பள்ளிகள் 134, நடுநிலைப்பள்ளிகள் 60, உயர்நிலைப்பள்ளிகள் 20, மேல்நிலைப்பள்ளிகள் 30, மறைமாவட்டமும் துறவற சபைகளும் நடத்தும் ஆங்கிலவழிப் பள்ளிகள் 20, ஆசிரியர் பயிற்சிப்பள்ளி 1, தொழிற்பள்ளிகள் 10, கல்வியியல் கல்லூரி 1, கல்லூரிகள் 5.

நம்மிடம் கல்லூரிகள் குறைவு எனச் சிலர் வருத்தம் தெரிவிக்கின்றனர். ரோச் ஆண்டகை அவர்களின் சிந்தனையில் உருவாகி, செயல் வடிவம் பெற்று, மரியன்னை ஊழியர் சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆயர் அமலநாதர் அவர்களின் இடைப்பட்ட காலம்வரை ஆயரே மேலாளராக விளங்கிய தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி, நம் பெண்களுக்கும், இயேசு சபையினரின் பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி நம் பையன்களுக்கும் தாராளமாக இடம் தந்து உதவியதால் ஒரு கல்லூரி தேவை என்ற அழுத்தம் நம்மிடம் இல்லாமல் போயிருக்கலாம்.

அதுபோல அரசுப்பணிகளுக்கான பயிற்சி பெறும் ஆர்வமும் கடந்த இருபது ஆண்டுகளாகத் தான் தமிழகத்தில் பெருகியுள்ளது. அதன்படி நாமும் சிந்தித்துச் செயல்படத் தொடங்கியுள்ளோம். கடல்சார் பயிற்சி நிறுவனம் ஒன்று அமைப்பதற்கான முயற்சியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கால ஓட்டத்திற்கு ஏற்ப இன்னமும் பல்வேறு முனையங்களில் நாம் வெவ்வேறு முனைப்பு காட்ட இறைவன் நம்மை வழி நடத்தட்டும்.

சமூகப் பணியில் மறைமாவட்டம்

தூத்துக்குடி மறைமாவட்டம் தொடங்குவதற்கு 69 ஆண்டுகளுக்கு முன்பே, ஆலந்தலையில் தொடங்கப்பட்டு பின்னர் அடைக்கலாபுரத்தில் நிலை நிறுத்தப்பட்ட, புனித சூசையப்பர் அறநிலையம் நமமவர் சமூக ஈடுபாட்டிற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

தாயின் கருவிலே சுமக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பிறந்த உடனே கைவிடப்பட்ட குழந்தைகள் முதல் சாகும் வரை உள்ள பல்வேறு வயதினரும் ஆயிரம் பேர் அளவில் ஒரே வளாகத்தில் வாழும் நிறுவனம் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை.

சிசு நிலையம், குழந்தைக் காப்பகம், பல்வேறு வயதினருக்கும் கல்வி நிலையங்கள், அறநிலையத்திலே வளரும் பெண்குழந்தைகளுக்கு ஆசிரியப் பயிற்சி நிறுவனம், உடல், உள்ள, மனநோயாளிகள், முதியோர் இல்லங்கள் என அனைத்துப் பணிகளும் ஒரு சேர நடக்கும் இடம் அடைக்கலாபுரம். மக்களின் தாராள உதவிக்கரத்துடன் செவ்வன மறைமாவட்டத்தின் இதயமாகச் செயல்படுகிறது.

அதோடு, காலகட்டத்திற்கு ஏற்ப சமூகப் பணிகளை விரிவுபடுத்துவதிலும் மறைமாவட்டம் தொடர்ந்து முனைப்பு காட்டியுள்ளது. என் எளிய சகோதரருக்குச் செய்தவை எல்லாம் எனக்கே செய்தீர்கள்’ (மத் 25:40) எனும் இயேசுவின் கூற்றை வாழ்வாக்கிக் கொண்டிருக்கிறது மறைமாவட்டம்.

மறைமாவட்டமும் துறவற நிறுவனங்களும் தனித்தனியாக நடத்தும் மாற்றுத் திறனாளிகள் பள்ளிகள் 2, வளர்வாழ்வு உருவாக்க நடுவங்கள் 2, பல்நோக்கு சமூகச் சங்கங்கள் 2, அச்சகங்கள் 3, மருத்துவமனைகள் 5, மருந்தகங்கள் 10, விடுதிகள் 16, கருணை இல்லங்கள் 8, குடும்ப ஆலோசனை நடுவம் 1, நலவாழ்வு நடுவங்கள் 3, H.I.V மறுவாழ்வு இல்லம் 1 எதிலியர் இல்லம் 2, முதியோர் இல்லங்கள் 7, குழந்தைகள் காப்பகம் 7, மாற்றுத்திறனாளிகள் காப்பகங்கள் 4, பெண்கள் விடுதி 1, மதுபோதை நோயாளர் மறுவாழ்வு இல்லங்கள் 2.

எல்லாப் பணிகளிலும் இறைவனின் அருட்கரமும் நம் மக்கள் அனைவரின் தாராள உதவிக்கரமும் இணைந்தே செயல்படுவது வியப்புக்குரியது.

இத்தகைய பெருமிதத்துடன் மறைமாவட்டம் 100 ஆண்டுகளாக வாழ்ந்து, வளர்ந்து பணியாற்றுகிறது. இன்னமும் நம் பணிகள் நம் மக்களின் மாண்புறு வாழ்வுக்கு வழிகாட்டும் வகையில் கூர்மை பெற வேண்டும். ‘இறையாட்சி மலர இணைந்தே பயணிப்போம்’.

சில வரலாற்றுப் பதிவுகள்

சில தொடக்கக்கால வரலாற்றுக் குறிப்புகளையும் சில முதன்மையான சிறப்புகளையும் இங்கே காண்போம்.

1905 ஆம் ஆண்டில், இன்றைய மறைமாவட்டத் தலைமை ஆலயம் அருகில், புனித ஞானப்பிரகாசியார் பெண்கள் தொடக்கப்பள்ளி உருவாகியது. ஆனால் மறைமாவட்டம் உதயமாகி இரண்டு ஆண்டுக்குள் 1925 ஆம் ஆண்டிலே புனித அலாய்சியஸ் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மரியின் ஊழியர் சபைச் சகோதரிகள் பொறுப்பில், தொடங்கப்பட்டது. பெண் கல்வியின் முகாமையை வலியுறுத்திய ஆயர் ரோச் அவர்களின் ஆசியும் அழுத்தமும் நிச்சயம் இருந்திருக்கும்.

மக்கள் தொடர்புக்கான சிறந்த ஊடகமாக அன்றைய நாட்களில் இதழ்கள் விளங்கின. எனவே மறைமாவட்டம் தொடங்கிய 5 ஆம் ஆண்டிலே, 1928 இல் ‘அர்ச். சவோரியாரின் ஞானதூதன்‘ எனும் திங்கள் இதழ் மறைமாவட்டத்தால் தொடங்கப்பட்டது. 95 ஆண்டுகளாகத் தூதனின் பணி தொடர்கிறது. 1976 இல் நம் வாழ்வு இதழ் தமிழக அளவில் தொடங்கப்பட்ட போது எல்லா மறைமாவட்டங்களிலும் அவர்களது இதழ்கள் நிறுத்தப்பட்டன. புதுவை உயர் மறைமாவட்ட இதழான “சர்வவியாபி” இதழும் ஞானதூதன் இதழும் நிறுத்தப்படவில்லை. தூதனோடு சேர்ந்து தொடங்கப்பட்ட “கத்தோலிக்க சுத்தவீரன்” எனும் இதழ் 1941 இல் நிறுத்தப்பட்டது, ஞான தூதன் நூற்றாண்டை நோக்கி நடைபோடுகிறது!

‘தூதன்’ தொடங்கப்பட்டபோது தூத்துக்குடியில் அன்று இருந்த ஒரே அச்சகமான, இந்து சமயச் சகோதரர் ஒருவர் நடத்திய அச்சகத்தில், பதிப்பிக்கப்பட்டது. ஆனால் ஓராண்டுக்குள் தூதனுக்கென சொந்த அச்சகம் தொடங்கப்பட்டது. 1929 ஆம் ஆண்டு புனித சவேரியார் ஆண்கள் மத்திய தொடக்கப்பள்ளியின் மேல்மாடியில் அச்சகம் செயல்பட்டது. பின்னர் புனித சவேரியார் கெபியின் அருகில் பெரிய கட்டடத்தில் நிறுவப்பட்டது. தூத்துக்குடியில் செயல்பட்ட மிகப்பெரிய அச்சகமாக விளங்கியது. சுவரொட்டிகள் அச்சிடக்கூடிய பெரிய இயந்திரங்கள் இருந்தன. 1979 இல் ரோச் ஆண்டவர் பிறப்பின் நூற்றாண்டு கொண்டாடப்பட்ட போது சவேரியார் அச்சகக் கட்டடம் ரோச் மண்டபமாக மாற்றப்பட்டது. இன்று அதில் ஓர் அழகிய ரோச் மண்டபம் தலை நிமிர்ந்து நிற்கிறது.

1929 - 30 களில் வத்திக்கானுக்கும், போர்த்துக்கல்லுக்குமிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் பலனாக, ஞானாதிக்க சலுகையைப் பெற்ற போர்த்துக்கீசிய மிஷனைச் சார்ந்த, மயிலை ஆயரின் ஆளுகைக்குக் கீழ் இருந்த, மணப்பாடு தூய ஆவியார் ஆலயம், வைப்பாறு பங்கு, தூத்துக்குடி பனிமய அன்னைப் பங்கு, புன்னைக்காயல் மிக்கேல் அதிதூதர் பங்கு, கூடுதாழைப் பங்கு ஆகியன தூத்துக்குடி மறைமாவட்டத்தோடு இணைந்தன.

1984 ஆம் ஆண்டு முதலே இயேசு சபையார் நடத்திய சவேரியார் உயர்நிலைப்பள்ளி தூத்துக்குடியில் செயல்பட்டது. ஆயினும் 1932 ஆம் ஆண்டு வடக்கன்குளத்தில் புனித தெரசா உயர்நிலைப்பள்ளி மறைமாவட்டத்தின் முதல் உயர்நிலைப்பள்ளியாகத் தொடங்கப்பட்டது. தூத்துக்குடி நகரத்தவரும், இம்மறைமாவட்ட பள்ளியில் தங்கிப் படித்த வரலாறு உண்டு.

எனவே 1938 இல் வடக்கன்குளத்தில் 4 மாணவர்களுடன் சிறுமலர் குருமடம் தொடங்கப்பட்டது. பங்குத்தந்தை இல்லத்திலே உதயமானது. பின்னர் வடக்கன்குளம் அமலி நகரில் பெரிய கட்டத்தில் வளர்ந்தது. 1946-ல் மறைமாவட்டத் தலைநகரில், இஞ்ஞாசியார்புரத்திற்கு குருமடம் மாற்றப்பட்டது. ஆயர் தாமஸ் அவர்களின் தொடக்கக்காலத்தில் சவேரியார் பள்ளி அருகில் எழும்பிய புதுக்கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. இப்போது மீண்டும் இஞ்ஞாசியார் புரத்தில்!

1896 ஆம் ஆண்டிலே மயிலாப்பூரைத் தலைமையகமாகக் கொண்ட அடைக்கல அன்னைச் சகோதரிகள் தூத்துக்குடி பனிமய அன்னை ஆலயப் பங்கில் பணிபுரிய வந்தனர். ஆலய வளாகத்திலே இருந்த ஓர்னலாஸ் பள்ளி (1896) களை நிர்வகித்தனர். இப்பொழுது அவை புனித தெலசால் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி எனப் பரிணாமம் பெற்றுள்ளன.

1904 ஆம் ஆண்டில் திருச்சிலுவைக் கன்னியர் அவையினர் தூத்துக்குடியில் பணியாற்ற வந்தனர். 1942 இல் திருச்சிலுவை ஆங்கிலோ இந்தியன் பெண்கள் ஆங்கிலப் பள்ளி தொடங்கப்பட்டது. இன்றுவரை பெயர் பெற்று விளங்குகிறது.

1943 இல் பணகுடியில் செபமாலை தாசர் அவை இல்லம் தொடங்கப்பட்டு, பின்னர் வடக்கன்குளத்தில் இன்றுள்ள இடத்தில் வளர்ந்து புனிதம் கமழ்கிறது. 1943 இல் புனித பிரான்சிஸ்குவின் மறைப்பரப்புச் சபையின் சகோதரிகள் (FMM) மணப்பாட்டில் மருத்துவமனை தொடங்கிப் பணியாற்றினர். அடைக்கலாபுரம் அறநிலையத்திலும், உதவிக்கரம் நீட்டினர்.

1948 இல் புனித மரியன்னைக் கல்லூரி முதலில் அலாய்சியஸ் உயர்நிலைப்பள்ளி வளாகத்திலே தொடங்கப்பட்டு, பின்னர் இன்றைய இடத்திற்கு மாற்றப்பட்டது. மரியின் ஊழியர் அவைச் சகோதரிகள் அளப்பரிய பணியாற்றுகின்றனர். 1949 இல் பிரான்சிஸ்கு மறைப்பரப்பு அவைச் சகோதரிகளின் ஈடுபாட்டுடன் தொழுநோயாளர் இல்லம் தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தில் தொடங்கப்பட்டது. ஆல் போல் தழைத்துப் பெருகி, கத்தோலிக்கத் திருஅவையின், தூத்துக்குடி மறைமாவட்டத்தின் அன்பு அறப்பணிக்கு மிகப்பெரும்சான்றாக விளங்குகிறது. இன்று தொழுநோயாளர் மிகவும் குறைந்த நிலையில், எய்ட்ஸ் நோய் தொடர்பான அத்தனைப் பணிகளும் அங்கு ஆற்றப்படுகின்றன.

1921 இல் அயர்லாந்தில் தொடங்கப்பட்ட மரியாயின் சேனை 1931 இல் இந்தியாவில் சென்னையில் அமைக்கப்பட்டது. 1940 இல் தூத்துக்குடியில் பிரசீடியமாகத் தொடங்கப்பட்டு, 1941 இல் கியூரியாவாகி, 1966 இல் கொமித்சியமாக உயர்ந்தது. 1933 இல் தூத்துக்குடி கத்தீட்ரல் பங்கில் வின்சென்ட் தே பவுல் தொடங்கப்பட்டது. 1968 இல் கத்தீட்ரலிலிருந்து வேறு பங்குகள் பிரிக்கப்பட்ட பின்னர்தான் பிற பங்குகளில் தொடங்கப்பட்டன. மறைமாவட்டம் முழுவதும் பரவியது, 1960 இல் இஞ்ஞாசியார்புரத்தில் சுவிட்சர்லாந்து புனித அன்னாள் அவைக் கன்னியர்கள் ஆயர் தாமஸ் அவர்களின் அழைப்பின் பேரில் திருஇருதய மருத்துவமனையைத் தொடங்கினர். மறைமாவட்டத்தின் ஆதரவு அதற்குப் பக்கபலமாக இருந்து வளர்த்துவிட்டது.

1972 இல் மறைமாவட்டப் பொன்விழா கொண்டாடும் போது அடிக்கல் ஆசீர்வதிக்கப்பட்ட முதியோர் இல்லம் எட்டயபுரம் சாலையில் ஏழைகளின் சிறிய சகோதரிகளின் தன்னலமற்றப் பணியால், திருஅவையின் அறப்பணி அர்ப்பணத்திற்குச் சான்றாக விளங்குகிறது.

தனது 38 வயதில் பார்வையை இழந்த தந்தை A. அந்தோனி அவர்கள் மேலை நாடுகளில் பயிற்சி பெற்று, பார்வையற்றவரின் வாழ்வில் ஒளியேற்ற, ஆயர் அம்புரோஸ் மதலைமுத்து அவர்களின் ஆதரவில், 1978 அக்டோபர் திங்களில் இஞ்ஞாசியார்புரத்தில் லூசியா பார்வையற்றோர் மறுவாழ்வு இல்லத்தைத் தொடங்கினார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் தங்கி வாழ்வில் ஒளிபெறுவதற்கு வசதியாக, தூத்துக்குடி சில்வர்புரத்தில் உள்ள பெரிய பரப்பளவுமிக்க இல்லத்தில் 1985 லிருந்து லூசியா இல்லம் செயல்படுகிறது. உபகாரிகளின் பேராதரவுடன் லூசியா இல்லம் ஆண்டுதோறும் பலநூறு பேருக்கு மறுவாழ்வு அளிக்கிறது.

முதன்மைகளும் சிறப்புகளும்

மறைமாவட்டத்தில் தனிநாயகம் அடிகளார் தொடங்கிய தமிழ் இலக்கியக்கழகம் நமக்குப் பெருமை! வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு, சிறுசிறு நூல்களாக, திருப்பலி நூல் தமிழ்மொழி பெயர்ப்பும், நல்ல தமிழில் விவிலியமும் தமிழ் இலக்கிய கழகத்தாலே வெளியிடப்பட்டது.

1970 இல் தமிழ்நாட்டில் முதல் திருமறைப்பணி நிலையம் தூத்துக்குடியில் ஆயர் தாமஸ் அவர்களால் தொடங்கப்பட்டது. தந்தை ஸ்டீபன் கோமஸ் அவர்களின் அரும்முயற்சியால் தமிழகத் திருஅவையின் முதல் ஒலிப்பதிவுக் கூடமும் திருமறைப்பணி நிலையத்தில் அமைக்கப்பட்டது. நம் திருமறைப் பணியகத்தில் தான் தமிழகத்திலே முதன்முதலான வாசக நூல்கள், பதிலுரை நூல்கள், மாலை வழிபாட்டு நூல்கள், அடக்கநிகழ்வுகள், மறையுரைக் குறிப்புகள் வெளியிடப்பட்டன.

YCS, YSM எனும் உலகளாவிய இளைஞர் பணிக்குழுக்கள் தொடங்கும் முன்பே, “தேவனுக்காக, தேசத்துக்காக எனும் இலக்குடன் தேன்கூடு இளைஞர் இயக்கம் 1956 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் தொடங்கப்பட்டு இந்தியா முழுவதும் பரவியது.

1894 இல் மணப்பாட்டைச் சார்ந்த லாரன்ஸ் சேவியர் என்பவர் தான் முதல் இந்தியராகக் குருப்பட்டம் பெற்றவர். அதுபோல் ஆயர் ரோச் முதல் இந்திய சுதேசி ஆயர், தூத்துக்குடி முதல் இந்திய சுதேசி மறைமாவட்டம். விடுமுறை விவிலியப் பள்ளி தமிழகத்திலே தூத்துக்குடியில் தான் தொடங்கி பின்னர் தமிழகமெங்கும் பரவியது. மாதா தொலைக்காட்சி தொடங்குவதற்கு முன், தூத்துக்குடியின் பவளம் தொலைக்காட்சி மிகவும் பேர் பெற்றது. அந்தோனி சூசைநாதர் அடிகளாரின் மதுவிலக்கு சபை போல் தமிழகத்தில் வேறு எந்த மறைமாவட்டத்திலும் இல்லை.

பொதுநிலையினர் பணியகம், நற்செய்தி நடுவம், கல்லாமொழி மீனவர் மையம், பட்டியலின மக்களுக்காக முக்தியுடையான் நடுவம் எல்லாம் தமிழகத் திருஅவையின் முதன்மைகள்.

தமிழகத்திலே முதல் கிறிஸ்தவப் பெண் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. ஜெயமணி மாசில்லா மணி அவர்கள் தூத்துக்குடியைச் சார்ந்தவர். கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களில் முதல்முதலாக மாநகராட்சி சார்பில் மணிமண்டபம் பெறுபவர் திரு. குருஸ் பர்னாந்து அவர்கள்.

1931 இல் வடக்கன்குளத்தைச் சார்ந்த, 60 ஆண்டுகள் உபதேசியராகப் பணிபுரிந்த யாகப்பப்பிள்ளை, 1940 இல் மணப்பாட்டைச் சார்ந்த பிச்சையம்மாள், 1950 இல் இடிந்தகரையில் 60 ஆண்டுகள் உபதேசியராகப் பணிபுரிந்த திரு. அந்தோனி மிக்கேல் பர்னாந்து, 2012 இல் வேம்பாறு தம்பியா பிள்ளை ஆகியோர் திருத்தந்தையின் பெனேமெரந்தி விருது பெற்றார்கள். 1952 இல் திரு. J.L. ரோச் அவர்களும், 1964 இல் C.I.R. மச்சாது அவர்களும், 1985 இல் புன்னைக்காயலில் பிறந்து சென்னையில் வாழ்ந்த பிஞ்ஞேரா அவர்களும் திருத்தந்தையின் செவாலியேர் உயர் விருதைப் பெற்ற பொதுநிலையினர்.

இறையடியார் பட்டம் பெற்றுள்ள அந்தோனி சூசைநாதர், அகுஸ்தின் பெரைரா, பரதேசி பீட்டர், கௌசானல் அடிகள், புனிதரான தேவசகாயம் பிள்ளை, புனிதர் ஜாண் தே பிரிட்டோ, தேம்பாவணி வீரமாமுனிவர் எல்லாரும் நம் மறைமாவட்டத்தோடு தொடர்புடையவர்கள்.

நம் மறைமாவட்டத்தில் 5 குருக்கள் திருத்தந்தையிடமிருந்து அதிகாரப்பூர்வமான மொன்சிஞ்ஞோர் பட்டம் பெற்றுள்ளார்கள். மொன்.மரியதாஸ் (மீனவன்குளம்), மொன். B.S. சூசைநாதர் (மரியன்னைக் கல்லூரி), மொன். ஜோசப் சேவியர், மொன். மரியதாஸ் (அழகை) மொன். சிலுவை இஞ்ஞாசி ஆகியோர்.