Namvazhvu
தூத்துக்குடி மறைமாவட்ட திருமறைப்பணி நிலையம் பங்குகள் நடத்திய பயிற்சிகள் மற்றும் வெளியீடுகள்
Friday, 09 Jun 2023 06:14 am
Namvazhvu

Namvazhvu

கத்தோலிக்க அவையில் 21 பொதுச்சங்கங்கள் நடந்துள்ளன என வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இவற்றுள் 2 ஆம் வத்திக்கான் சங்கமே அதற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று திருஅவை வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில் 1962 முதல் 1965 வரை நடைபெற்ற 2 ஆம் வத்திக்கான் பொதுச்சங்கம் எந்தக் குறிப்பிட்ட கோட்பாடுகளையோ, மறையுண்மைகளை வரையறுக்கவோ, தப்பறைகளைத் திருத்தவோ கூட்டப்பட்ட சங்கமல்ல. அது ஒரு சுய பரிசோதனை முயற்சி. அதன் அடிப்படையில் மாற்ற வேண்டியதை மாற்றி, புகுத்த வேண்டியதைப் புகுத்தி தன்னையே புதுப்பித்துக் கொண்ட முயற்சி. எனவேதான் அச்சங்கத்தை ஒரு திருப்புமுனை என்று அழைக்கிறார்கள்.

திருஅவையின் இயல்பையும் இருத்தலையும்

வரலாற்று ஆய்வு, கோட்பாடு ஆய்வு, இன்றைய உலகின் தேவைகள், சவால்கள் முதலிய கோணத்திலிருந்து ஆய்வு செய்து 1962 முதல் 1965 வரை ஏறக்குறைய 4 ஆண்டுகள் இந்த சங்கம் நீடித்தது.

அதன் பயனாக,

1. திருவழிபாடு,

2. சமூகத்தொடர்பு கருவிகள்,

3. திருச்சபை,

4. கத்தோலிக்க கீழைச்சபைகள்,

5. கிறிஸ்தவ ஒன்றிப்பு,

6. திருச்சபை ஆயர்களின் மேய்ப்புப் பணி,

7. தழுவி அமைத்துத் துறவற வாழ்வை புதுப்பித்தல்,

8. குருத்துவ பயிற்சி,

9. கிறிஸ்தவ கல்வி,

10. கிறிஸ்தவமில்லா மறைகளோடு திருச்சபைக்குள்ள உறவு,

11. இறைவெளிபாடு,

12. பொதுநிலையினரின் மறைதூதுப்பணி,

13. மறைச்சுதந்திரம்,

14. திருச்சபையின் மறை அறிவிப்புப் பணி,

15. குருக்களின் பணியும் வாழ்வும்,

16. இன்றைய உலகில் திருச்சபை போன்ற ஆவணங்களை  உருவாக்கி கத்தோலிக்கத் திருச்சபைக்குத் தந்துள்ளது. இந்த ஆவணங்கள் எல்லாம் அலங்கார ஏட்டுச்சுரைக்காயல்ல. கத்தோலிக்கத் திருஅவையின் மக்கள் எல்லாரும் செயல்படுத்த வேண்டிய செயல்திட்டம் இது என்றும் அது பல்வேறு முறைகளில் உணர்த்தியும் வந்துள்ளது.

இத்திட்டத்தைத் தூத்துக்குடி மறைமாவட்டம் செயல்படுத்தத் தொடங்கியதைத் தொடர்ந்து 1968 டிசம்பர் 18,  19, 20 ஆகிய நாட்களில்இன்றைய இந்தியாவில் திருஅவைஎன்ற தலைப்பில் மறைமாவட்டக் கருத்தரங்கம் ஒன்று அடைக்கலாபுரத்தில் கூட்டப்பட்டது. இக்கருத்தரங்கம் பல இந்திய மறைமாவட்டங்களில் 2 ஆம் வத்திக்கான் சங்க தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயர் மேதகு. தாமஸ் அவர்கள் தூத்துக்குடி மறைமாவட்டத்தில் நடக்க இருந்த கருத்தரங்கிற்கு என்னைப் பொறுப்பாளராக நியமித்தார்.

2 ஆம் வத்திக்கான் சங்கம் அனைத்துலகக் கத்தோலிக்க திருஅவைக்கு 16 தலைப்புகளில் தன் ஆய்வறிக்கைகளைத் தந்துள்ளது. தூத்துக்குடி மறைமாவட்டம் அத்தனை ஆய்வறிக்கைகளையும் ஒட்டுமொத்தமாக ஆய்ந்து உடனடியாகச் செயல்படுத்துவது இயலாததும் தேவையற்றதுமாகும். எனவே அவைகளில் 9 ஆய்வறிக்கைகளின் பின்னணியில் ஆய்வும், கருத்தரங்கும், தீர்மானங்களும் மேற்கொள்ளப்படலாம் என்ற எண்ணம் மலர்ந்தது.

அவை

1. கிறிஸ்தவ வாழ்வுக்கும், பணிக்கும் தேவையான ஆன்மீகம்,

2. வழிபாடு, மறைக்கல்வி, பங்குப்பணி,

3. மறைபரப்புப் பணி,

4. பிற சமயங்களோடு உரையாடுதல்,

5. கல்விப் பணி,

6. சமூக பொருளாதாரப் பணிகள்,

7. சமூக அரசியல் வாழ்வு,

8. சமூகத் தொடர்புக் கருவிகள்,

9. குடும்பம்

மேலே குறிப்பிட்ட தலைப்புகள் பற்றி கருத்துப் பகிர பங்கேற்பாளர்கள் 9 ஆய்வகங்களாகப் பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு ஆய்வகமும் தனித்தனியே கூடி தங்கள் ஆய்வுப்பொருள் பற்றிய தங்கள் கருத்துகள், சிக்கல்கள், பரிந்துரைகள், தீர்வுகள் இவற்றைப் பதிவு செய்தனர். இறுதிப் பொது அமர்வில் அவைகள் தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இத்தகைய திருஅவைப் பணிகளை ஒருங்கிணைந்து வழிநடத்த மறைமாவட்ட அளவில் ஒரு திருப்பணி நிலையம் உருவாக்கப்பட வேண்டும் என்பது பொது முடிவாக அமைந்தது. அந்தப் பொது விருப்பத்தின்படியே தூத்துக்குடியில் திருமறைப்பணி நிலையம் உருவானது.

செயல்பாடுகளில் இந்நிலையம் பங்குத்தந்தையருக்கு பங்குப் பணியில் உதவிட பல வெளியீடுகளை வெளியிட்டுள்ளது. முன்பு இலத்தீன் மொழியில் கொண்டாடப்பட்ட மாலை ஆராதனை (Vespers) தமிழ் மொழிப்பெயர்ப்பாகப் பாடல்களோடு வெளியிடப்பட்டது. அவ்வாறே திருமுழுக்குச் சடங்கு பாடல்களோடும் அடக்கச் சடங்குகள், உள்ளத்தை உருக்கும் பாடல்களோடு (சென்று வா கிறிஸ்தவனே!) வெளியிடப்பட்டன.

மேலும் பங்குத்தந்தை இல்லாத சிற்றூர்களில் இரவு மன்றாட்டு சொல்வதற்காகஅப்பா-தந்தாய்என்ற மன்றாட்டு சிற்றேடுஇல்லங்களில் இரவு மன்றாட்டுக்காகத் திருஅவையின் திருப்புகழ் மாலையைத் தழுவி, “இருள் சூழ்ந்ததும் இறைவனை இறைஞ்சுவோம்என்ற மன்றாட்டு சிற்றேடும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுநிலையினரின் மன்றாட்டுச் சிற்றேடாக, தமிழ் இசையோடுக் கூடிய, “பொதுநிலையினரின் திருப்புகழ்மாலைஎன்ற நூலும் வெளியிடப்பட்டு பரவலாக்கப்பட்டது.

திருமறைப்பணி நிலையம் 1968 முதல் 1980 வரை பங்குகள் தோறும் நடத்திய பயிற்சிகள் மற்றும் வெளியீடுகள்

மொத்த வெளியீடுகள் 134 தொடர்பு கொண்ட தொடர்பாளர்கள் 3949; பங்குகளில் காட்டப்பட்ட திரைப்பட நிகழ்ச்சிகளும் திறனாய்வுகளும் 822; வானொலி நிகழ்ச்சிகள் 67; பங்குகளில் நடத்திய கருத்தரங்குகளில் பயிற்சி பெற்றோர் 4939; அஞ்சல் வழி நற்செய்தித் தகவல் கேட்டோர் 26271; அஞ்சல் வழி நற்செய்தித் தகவல் பெற்றோர் 39736.

1968 முதல் 1973 வரை கத்தீட்ரல் அருகில் உள்ள குருக்கள் இல்லத்தின் ஓரிரு அறைகளில் செயல்பட்டு வந்த திருமறைப்பணி நிலையம் 1947 ஆம் ஆண்டு, ஆயர் இல்லத்தின் புதிய கட்டிடத்தில் தரைத்தளத்திலிருந்து இயங்கியது. மறைமாவட்டங்களில் தமிழகக் கத்தோலிக்கத் திருஅவையில் முதன் முதலாக, தூத்துக்குடி மறைமாவட்டத்தில் ஒலிநாடா ஒலிப்பதிவகம் ஒன்று அமைக்கப்பட்டது. தமிழகத்தின் தென் மறைமாவட்டங்கள் தொடக்கத்தில் நமது ஒலிப்பதிவகத்தில் தங்களது நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்தனர். நமது திருமறைப் பணியகத்தால் தயாரிக்கப்பட்ட வானொலி நிகழ்ச்சிகள் கிழமைதோறும் இலங்கை வானொலியிலும், மணிலாவின் வேரித்தாய் வானொலியிலும் ஒலிப்பரப்பப்பட்டன. திருமறைப் பணி நிலையத்தால் தயாரிக்கப்பட்ட நாட்டிய நாடகங்களும், பல அரங்கு நாடகங்களும், பல்லாயிரக்கணக்கான மக்களைக் கவர்ந்தன.

12 ஆண்டுகள் இவ்வாறு பணியாற்றிய திருமறைப் பணிநிலையம் காலத்தின் அறிகுறிகளைக் கண்டுணர்ந்து நற்செய்தி நடுவம், டிவைன் நற்செய்தி தியான இல்லம், பொதுநிலையினர் பணிநிலையம், பவளம் தொலைத் தொடர்பு நிலையம், இளையோர் பணிநிலையம் போன்ற மற்ற நிலையங்களோடு தன் பணிகளை இணைத்துக் கொண்டது. அன்றைய திருமறைப்பணி நிலையம் இப்போது திருப்பொருட்கள் விற்பனை நிலையமாக மட்டும் உள்ளது.