அருள்பணி. ஜெ. ஞானசேகரன்
கோட்டாறு மறைமாவட்டம், சகாயபுரம், இடைவிடா சகாய அன்னை திருத்தலத்தின் முதல் அருள்பணியாளர் இவர். இவர் தனது மெய்யியல் மற்றும் இறையியல் படிப்பைப் பூனேவில் உள்ள திருத்தந்தை குருமடத்தில் பயின்றார். 2017, ஏப்ரல் 30 ஆம் நாள் கோட்டாறு மறை மாவட்டத்திற்காக அருள்பணியாளராகத் திருநிலைப் படுத்தப்பட்டவர்.
வாணியக்குடி, தேவசகாயம் மவுண்ட், மேலராமன் புதூர் போன்ற பங்குகளில் மூன்று ஆண்டுகள் இணைப் பங்குத்தந்தையாகவும், பொழிக்கரை பங்கில் மூன்று ஆண்டுகள் பங்குத் தந்தையாகவும் பணியாற்றியுள்ளார். இவர் ‘தீயை மூட்டிய அமைதிப் புறாக்கள்’, ‘அறிய வேண்டிய மாமனிதர்கள் 1, 2, 3’, ‘இரக்கத்தின் முகம் குடும்பம்’, ‘நல்ல கண்கள் நல்ல எண்ணங்கள்’, ‘கடவுளோடு வழக்காடலாம் வாங்க’, ‘மீட்பரின் பாதையில் தடம் பதிக்க’, ‘கல்வாரி நாயகனின் அன்புக் கடிதம்’, ‘சிலுவைப்பாதை சிறகடிக்கத் தூண்டும் பாதை’, ‘இயேசுவின் வல்ல செயல்கள்’, ‘சிலுவைப்பாதை நம்மைச் சீராக்கும் பாதை’, ‘லூயி மார்ட்டின் - செலி கெரின்’ ஆகிய 13 நூல்களை எழுதியுள்ளார்.
அருள்பணி. ம. அருண் பிரசாத்
திருச்சி மறைமாவட்ட அருள்பணியாளர். 1988 ஆம் ஆண்டு பிறந்த இவர், பள்ளிப் படிப்பை முடித்து 2005 ஆம் ஆண்டு புனித அகுஸ்தினார் இளம் குருமடத்தில் இணைந்தார். பின்பு, திருச்சி புனித பவுல் இறையியல் கல்லூரியில் இறையியலை முடித்து, 2018 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் நாள் ஆயர் அந்தோணி டிவோட்டா அவர்களால் அருட்பொழிவு செய்யப்பட்டார். மணப்பாறை புனித லூர்து அன்னை ஆலயத்திலும், பாலக்கரை உலக மீட்பர் பசிலிக்கா ஆலயத்திலும் உதவி பங்குத் தந்தையாகவும் பணியாற்றி, திருச்சி மறைமாவட்டத்தின் திருத்தலமாகிய மலம்பட்டி, புனித சவேரியார் ஆலத்தில் பங்கு தந்தையாகப் பணியாற்றி நிறைவு செய்திருக்கின்றார். ‘இளம் தளிர்’ இயக்கத்தின் வழியாக வெளியிடப்படும் ‘வாழ்வாகும் வார்த்தை’ மாத இதழில் கடந்த இரண்டு வருடங்காகப் பல்வேறு தலைப்புகளில் எழுதி வருகின்றார்.
இந்த இரு அருள்பணியாளர்களும் நம் வாழ்வின் துணை ஆசிரியர்களாகப் பணியாற்ற நம்மோடு இணைந்துள்ளார்கள். இருவரையும் ‘நம் வாழ்வு’ மகிழ்வோடு வரவேற்கிறது. தமிழக ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணிக்கு இவர்களை மனமுவந்து அளித்துள்ள கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு நசரேன் சூசை அவர்களுக்கும், திருச்சி மறைமாவட்ட ஆயர் மேதகு ஆரோக்கியராஜ் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை ‘நம் வாழ்வு’ தெரிவித்துக் கொள்கிறது.
- ஆசிரியர்