Namvazhvu
‘ஒளியேற்றிய வெற்றித் தீபம்’ எம் சபை நிறுவனர் இறை ஊழியர் மிக்கேல் அன்சால்தோ ‘தீ’
Thursday, 22 Jun 2023 07:40 am
Namvazhvu

Namvazhvu

தீ நாக்கு தூய ஆவியா!

அதன் தீப்பிழம்பு உந்தன் ஆவியா!!

தீமைகளைச் சுட்டெரிக்குமே - அதன்

தீச்சுடரில் வளர்ச்சி தோன்றுமே!

ஆம், 1739, செப்டம்பர் 29 இல் புனித மைக்கேல் அதிதூதர் தேவாலயத்தைத் தங்கள் பங்காகக் கொண்ட தம்பதியருக்கு எம் சபை நிறுவனர் இறை ஊழியர் மிக்கேல் அன்சால்தோ தீமைகளைச் சுட்டெரிக்கும் தீயாய் பிறந்தார். வளர்ச்சியையும்,  சாதனைகளையும் இயேசு விரும்பிய அதே இறையாட்சி சமூகத்தைக் கட்டி எழுப்ப உதவும் தீச்சுடராக இத்தாலியில் உள்ள சிசிலி தீவின் மெசினாவில் வந்துதித்தார்.

இறைநம்பிக்கையும்,  தெய்வ பயமும் கொண்ட பக்தி நிறைந்த குடும்பத்தில் பிறந்த எம் சபை நிறுவனர், இயேசுவின் அடிச்சுவட்டை அப்பழுக்கின்றி பின்பற்றி, மறைப்போதகராக மாற வேண்டும் என்று நினைத்ததில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. ஆனால், அன்சால்தோவுடன், அவர்தம் மூத்த  சகோதரர் அதேபோல் இயேசுவின் அடிச்சுவட்டைப் பின்பற்ற விரும்புகிறார் என்பதையறிந்து, இருவருமாய் இணைந்து, குருத்துவ வாழ்வை மேற்கொள்ள விழைந்தது பெற்றோரை, உற்றார் உறவினரை ஆச்சர்யப்பட வைத்தது.

இயேசு விரும்பிய இறையாட்சியை இம்மண்ணில் தானும் பரப்ப வேண்டும் என்ற வேட்கைத் தீ எம் சபை நிறுவனர் தந்தையை ஒரு தீயாகவே மாற்றிவிட்டது என்றால் அது மிகையல்ல. எனவே, மறை போதகராக வேண்டும் என்ற தாகம் கொண்டவராய் தன் 15வது வயதில் ஜனவரி 15 ஆம் நாள் 1754 ஆம் ஆண்டு சிசிலி தீவில் உள்ள இயேசு சபை மறை மாநிலத்தில் தன்னை விருப்பமாய் இணைத்துக் கொண்டார். அவர் சகோதரரும் அவரைத் தொடர, ஆரம்பப் பயிற்சிகளை ஒன்றாய் பெற்றனர். இறையியல் படிப்பைத் தொடர்வதற்கு  வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எம் சபை நிறுவனர் மிக்கேல் அன்சால்தோ நவத்துறவறப் பயிற்சியை, சிசிலி தீவில் உள்ள பலேர்மோவில் பெற்றார்.

1768 இல் அவர்தம் சகோதரருடன் இணைந்து குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். பணி செய்ய உரோமைக்கு இரு சகோதரக் குருக்களும் அனுப்பப்பட, மூத்த சகோதரர் ஜோசப் அன்சால்தோ உடல் நலமின்மை காரணமாக இறக்க நேரிட்டது. சகோதரரின் இழப்பு  எம் நிறுவனரின் மறைபரப்புப் பணி செய்ய வேண்டும் என்ற தாகத்திற்கு அணை போடவில்லை. மாறாக,  அதன் பிறகுதான் அவர் உள்ளத்தில் இருந்த மறைபரப்புத் தீ சுடர்விட்டு எரிந்து எம் நிறுவனரைத் தீயாய், தீச்சுவாலையாய், தீப்பிழம்பாய் மாற்றியது.

அந்தத் தீ 1771 ஆகஸ்டில்  இறுதி அர்ப்பணத்தை இயேசு சபை வழி இறைவனுக்கு அளித்து, முழுமையாய், தகுதி பெற்றவராய் பிரான்சிலிருந்து புறப்பட்ட கப்பல் வழி பாண்டிச்சேரிக்கு தன் பயணத்தைத் தொடங்கினார்.

செப்டம்பர் மாத இறுதியில் பாண்டிச்சேரி அரிக்கமேடு பகுதியில்  காலடித் தடம் பதித்தவுடனேயே அவரது இளமைத்துடிப்பையும்,  மறைபரப்புப் பணியைச் செய்வதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும் கண்ணுற்ற கேர்து அடிகளார், தனக்குப் பின் தன் பணிகளைச் செய்யத் தகுதியான ஆள்  கிடைக்க வேண்டுமென  நற்கருணை ஆண்டவரிடம் செபித்துக் கொண்டிருக்கையில், எம் சபை நிறுவனர் இறைத்தூதுவராய் அவர் கண்ணுக்குத் தென்பட, இறை ஊழியர்  மிக்கேல் அன்சால்தோவை தன் உதவியாளராக அமர்த்திக்கொண்டார்.  தந்தை மிக்கேல் அன்சால்தோவும் தந்தை கேர்துவின்  பணிகளை அவரது வலக்கரமாயிருந்து செயல்படுத்தினார்.

1779 ஆம் ஆண்டு ஜூன் 15, கேர்து அடிகளாரின் மறைவுக்குப் பின் அவரது மூளையாகவும், இதயமாகவும் இருந்து முழுமையாய் செயல்பட்டார். இவ்வாறு கேர்து அடிகளாரின் பணிகளுக்குத் தன்னலம் கருதாது, தியாகமிக்கச் செயல்பாடுகளால் அழகு சேர்த்தார். அவருக்காய் பணி செய்த காலங்களில் பணியை மட்டும் செய்யவில்லை. அத்துடன் பணி செய்த இடங்களின் சூழ மைவுகளை, கலாச்சார,  பழக்க வழக்கங்களை,  உற்றுநோக்கத் தொடங்கினார்.

18 ஆம் நூற்றாண்டில் உலக வரலாற்றின் ஆட்சி அதிகாரங்கள் ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், போர்த்துக் கீசியர்கள், டச்சுக்காரர்கள் ஆகியோரைச் சுற்றியே  அமைந்திருந்தன. அதனால் எப்போ தும் போர் பதற்றம்  இருந்துகொண்டே இருந்தது. மக்கள் உயிர் பயத்துடன் வாழும் சூழலும் இருந்தது. போர் பதற்றம், ஆட்சி அதிகார ஆசை பாண்டிச்சேரியையும் விட்டு வைக்கவில்லை. பிரெஞ்சு ஆட்சி, டச்சு ஆட்சி,  ஆங்கிலேய ஆட்சி என மாறி மாறி வந்து, இறுதியில் உலக அளவில் பிரான்சு நாட்டின் செல்வாக்கு  அதிகரிக்கையில், ஆங்கிலேய, பிரெஞ்சு  ஒப்பந்தம் ஏற்பட பாண்டிச்சேரி  பிரெஞ்சு   ஆளுகைக்குட்பட்டதாகவே மாறிப்போனது.

இச்சூழலில் தந்தை அன்சால்தோ பாண்டிச்சேரி சமூக,  அரசியல், கலாச்சார, பண்பாட்டுப் போக்கை வாசிக்கத் தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாய் சுவாசிக்கத் தொடங்கினார். சமூகத்தின் சீரழிவுகள்,  சீர்கேடுகள்,  அவலங்கள்  அவரது தூக்கத்தைக் குலைத்திருந்தது.

மடல் மரியா மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்த எம் சபை நிறுவனருக்குப் பெண்களுக்கு இழைக்கப் படும் அநீதிகள் பெருஞ்சுமையாய் நெஞ்சத்திற்கு பாரமாகிப் போனது. சமூகத்தில் பெண்களின் இழிநிலைக் கண்டு உள்ளம் குமுறினார். பெண் விடுதலைக்கு ஏதாவது செய்ய வேண்டும்,  அதுவும் உடனே செய்ய வேண்டும்  என்ற எண்ணம் அலை ஓயாக் கடல்போல அவரை ஆட்கொண்டது.

மூடப்பழக்க வழக்கங்களால் முடங்கிக் கிடந்த பெண்களின் வாழ்வை உற்றுநோக்கினார். சமுதாயச் சீர்கேடுகளினால், உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்ற பாகுபாட்டினால் சிதைந்துகிடந்த சமூகத்தின் அவலங்கள் அவர் கண்களை இமைமூட விட வில்லை. கிறித்தவ ஒடுக்கப்பட்ட பெண்கள் சிறிய வயதிலேயே பால்ய விவாகம்  புரிந்து,  அதனால் இளம் விதவைகள் அதிகரிக்கும் சூழல்;  ‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?’ என்ற பழமைவாத அழுத்தத்தால் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட நிலை; கணவன்களால் கைவிடப் பட்டு ஆதரவற்றவர்களாய் கூனிக்குறுகி  நின்ற நிலை; பெற்றோர், உற்றார்,  உறவினர் களால் பெண் என்பதாலேயே துரத்தி அடிக்கப்பட்ட அவலம்; தலித் என்பதால் இழிந்த சாதி,  தாழ்ந்த சாதி என முத்திரைக் குத்தப்பட்டு  ஓரங்கட்டப்பட்டு, விலக்கி வைக்கப்பட்ட இழிநிலை; போகப்பொருளாக நடத்தப்பட்ட பெண்கள்; பெற்றவர்கள் இல்லாமல் அனாதைகள் ஆக்கப்பட்ட குழந்தைகள்; அதிலும் பெண் குழந்தைகள், அப்பா முகம் அறியாத பிஞ்சுக் குழந்தைகள்; உலகைப் பார்த்து விடுவார்களோ என அஞ்சி கருவிலேயே சிதைக்கப்பட்ட பெண் சிசுக்கள்;  உயர் சாதியினர் என்ற வன்முறையாளர்களால் சீரழிக்கப்பட்டு,  உணர்வற்ற சடமாக, சுய மரியாதை இழந்தவர்களாக விழி பிதுங்கி, வாழ்விழந்து, வழியிழந்து நின்ற பெண்களின் வாழ்வின் இழிநிலைகளை எந்தவித மிகைப்படுத்தலுமின்றி, அப்படியே உள்ளது உள்ளபடியே தெரிந்து கொண்டார். பெண்களுக்கு நேரிட்ட இத்தனை கொடுமைகளும்  அவரை ஒரு தீயாய், அதுவும்  தீமைகளைச் சுட்டெரிக்கும் தீயாய், தீச்சுவாலையாய் மாற்றியது. வீறுகொண்டெழுந்தார்.  ‘என் தந்தையின் இல்லத்தைக் கள்வர் குகையாய் மாற்றாதீர்கள்’ என, சாட்டை எடுத்து எல்லாரையும் துரத்திய இயேசுவின் அறச்சினம் இவரையும்  தொற்றிக்கொண்டது. சமூகத்தின் அவலங்களைச் சுட்டெரிக்கும் தீயாய் மாறிய எம் சபை நிறுவனர் மிக்கேல் அன்சால்தோ,  தீமைகளை, தீய சக்திகளைச்  சுட்டெரிப்பதோடு நின்றுவிடாமல், அதற்குப் புத்தொளி பாய்ச்ச வேண்டும்,  புத்துயிர் கொடுக்க வேண்டும் என்று புரட்சித் தீயாய் புறப்பட்டார். அதில் உருவானதே  எம் கொன்சாகா பெருங்குடும்பம். 1775 இல் புனித அலோசியஸ் கொன்சாகாவின் பாதுகாப்பில் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் சிறிய மடமாக அதனை உருவாக்கினார். அன்சால்தோ  எனும் தீ  தீமையைச் சுட்டெரித்தது; அன்சால்தோ எனும் தீப்பிழம்பு பெண்களின் வாழ்வைப் புடமிட்டது.

எம் சபை நிறுவனர் மிக்கேல் அன்சால்தோ மறைத்தூதுப் பணி செய்ய பாண்டிச்சேரி நோக்கி பயணம் மேற் கொண்டிருந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாக 1767 இல் இஸ்பானியா, அதன் குடியேற்ற நாடுகள், சிசிலி தீவு உட்பட,  அனைத்து இடங்களிலும்  இயேசு சபை முடக்கப்பட்டது. இருப்பினும்,  உரோமைக்கு வந்து பணி செய்யத் தொடங்கி, அங்கிருந்தே 1771 இல்  பாண்டிச்சேரி நோக்கி தொய்வின்றி, அதே உற்சாகத்துடன்  கடல் பயணம் மேற்கொண்டு நம் மண்ணில் தடம் பதித்தது நாம் அறிந்ததே. ஆனால், அந்தோ பரிதாபம்!  ‘பட்ட காலிலேயே படும்’ என்பதற்கிணங்க, மேலும் ஒரு சவால் அன்சால்தோவுக்குக் காத்திருந்தது.

1773  இல் திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற 14 ஆம் கிளமெண்ட் ஐரோப்பிய மன்னர்களின் நெருக்கடிக்குக் கட்டுப்பட்டு ஜூலை 21 இல் இயேசு சபையினர் பணிகள் எதுவும் செய்யக்கூடாது என்று ஒட்டுமொத்தத் திருஅவைக்கும் கட்டளை பிறப்பித்தது,  இயேசு சபையினரின் வாழ்வுக்கு ஒரு கறுப்பு தினமாக, சோக நாளாக அமைந்தது. இருப்பினும், இந்தியாவில் பணி செய்த இயேசு சபையினருக்கு மாற்று வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அவர்கள் தங்கள் சொந்த மண்ணிற்குத் திரும்பிச் செல்வது அல்லது இந்திய மண்ணில் பணி செய்ய விரும்பினால் வேறு சபையில் தங்களை  இணைத்துக்கொண்டு இறைப்பணி செய்வது. ஆனால், இந்தியா வந்தவர்களில் 52 பேர் தாங்கள் சேர்ந்த இயேசு சபைக்குத் துரோகம் நினைக்காமல்,  தாய் சபைக்கு நன்றி மறக்காதவர்களாக தொடர்ந்து அதிலேயே இருக்க முற்பட்டனர். அவர்களில் ஒருவர் எம் சபை நிறுவனர்  மிக்கேல் அன்சால்தோ ஆவார். அன்று முதல் ‘கைவிடப்பட்ட இயேசு சபைக் காக’ தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

“கைவிடப்பட்ட இயேசு சபையினரின் அங்கத்தினர்”  என்று உரக்கச் சொல்லி இயேசு விரும்பிய சமத்துவ இறையாட்சியைப் பாண்டிச்சேரி மண்ணில் பொலிவுடன் செயல்படுத்தினார் எம் சபை நிறுவனர் மிக்கேல் அன்சால்தோ அவர்கள். இவருக்கு உந்து சக்தியாய் இருந்தது இயேசுவின் பணி பிரகடனமே.

இயேசு ஆண்டவர், தாம் திருமுழுக்குப் பெற்றப் பின் பணி செய்யத் தொடங்குகையில், ஆவியின் அருள் பெற்றவராய் எசாயாவின் சுருளேட்டில் 61 வது அதிகாரம் 1 முதல் உள்ள இறை வார்த்தைகளை தமது பணி பிரகடனமாக முன்னறிவித்தார். “ஆண்டவராகிய தலைவரின் ஆவி என்மேல் உள்ளது. ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஒடுக்கப்பட் டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும்,  சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோர்க்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஆண்டவர் அருள் தரும் ஆண்டினை முழங்கவும், அநீதிக்குப் பழிவாங்கும் நாளை அறிவிக்கவும்,  துயருற்று அழுவோர்க்கு ஆறுதல் அளிக்கவும், நலிவுற்ற நெஞ் சத்திற்குப் பதிலாக, புகழ் என்னும் ஆடையைக் கொடுக்கவும் என்னை அனுப்பியுள்ளார்.”

இதே இறைவார்த்தைக்கு 18 ஆம் நூற்றாண்டில் உயிரளிக்க முன் வந்தவர்தான் எம் சபை நிறுவனர்  மிக்கேல் அன்சால்தோ தீ! அதனால்தான் எம் சபையின் உள்ளுயிராக இதே பணிகளை நாங்கள் செய்யப் பணித்தார். எளியோர்க்கு நற்செய்தி’  என்ற விருதுவாக்கை எங்கள் இதயத்தில் சுமக்கச் செய்து, ஈரமுள்ள நெஞ்சுடையவர்களாய் நாங்கள் வாழ முன்னுதாரணமாய், தீச்சுவாலையாய் பிரகாசித்து நிற்கிறார். தாழ்த்தப்பட்டோர் வாழ்வில் ஒளியேற்றிய வெற்றித் தீபம்’,  பெண்களின் கடைநிலை கண்டறிந்து, ஒடுக்கப்பட்டவர்களை, சீர ழிக்கப்பட்டவர்களை,  மனித உரிமை மறுத்து மாண் பிழந்தவர்களை,  பாலியல் வன்கொடுமைக்குப் பலியானவர்களை, இளம் விதவைகளாய் இருந்து சமுதாயத்தின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்களை, கணவனால் கைவிடப்பட்டு ஆதரவற்றவர்களாய், அபலைகளாய் நின்றவர்களை, கல்வி இருந்தால் முன்னேறி விடுவார்கள், சமத்துவம் பேச புறப்பட்டு விடுவார்கள் என்பதனால் கல்வி அறிவு பெற மறுக்கப்பட்டவர்களை,  தாய்-தந்தை இழந்த அனாதை பெண் குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்காய் பல துன்பங்களைத் தான் ஏற்று, பிறரின் சுமைகளைச் சுமப்பவர்களாக நாங்கள் மாற வேண்டும் என்பதைச் சிலுவைப் பக்தியில் சொல்லிக் கொடுத்து, தன்னை பலியாகக் கையளித்த வேள்வித் தீ அவர்.

18 ஆம் நூற்றாண்டின்  சமூகச் சீர்கேடுகளை, மூடப் பழக்கவழக்கங்களை, உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்ற சமுதாயப் பாகுபாடுகளை, அதுவும் கிறிஸ்தவ சமூகத்திலே பரவிக்கிடந்த அநீதிகளைத் தோலுரித்துக் காட்டிய புரட்சித் தீ அவர்.

பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டதை உணர்ந்து, கல்வியை பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே வழங்கிட, முதல் பள்ளியைப் பாண்டிச்சேரி மண்ணில் நிறுவிய அறிவுத் தீ அவர்.

கல்விக் கண்ணைத் திறந்து விட்டால் மட்டும் போதாது; அவர்கள் சுயமாக, சுதந்திரமாக, தங்கள் சொந்தக் காலில் நின்று சமூகத்தில் சம அந்தஸ்து பெற, இழந்த மாண்பை மீட்டுக்கொள்ள, தொழிற்கல்வியை அளித்து, கைத்தறி நெசவுத் தொழிலைத் தாழ்த்தப்பட்டோரிடம் அறிமுகம் செய்த அன்புத் தீ அவர். மொத்தத்தில் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றிய தெய்வத் தீ அவர்.  “நானே உலகின் ஒளி!” என்று சொன்ன இயேசுவின் ஒளியில் காலடித் தடம் பதித்து வாழ்ந்த உண்மை இலட்சியத் தீ அவர். தாழ்த்தப்பட்டோரின் வாழ்வில் ஒளியேற்றிய வெற்றித் தீ அவர்.

கலைக்கப்பட்ட இயேசு சபையினராய் இருந்தும் ஒரு சிறிதும் கறை படியாத,  இறை நம்பிக்கை, நற்கருணை ஆண்டவர் பக்தி,  ஓயாத தனி செபம், பல மணி நேரம் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கி விசுவாசிகளுக்கு அருள் வரம் பெற்றுத்தந்த ஆன்மிகத் தீ அவர்.

எம் சபை நிறுவனர் இறை ஊழியர் மிக்கேல் அன்சால்தோ, எம் சபைக்கு இறைவனால்  கொடுக்கப்பட்ட மாபெரும் வரம்! 

“பித்தளையாக இருந்த உங்களை வெள்ளியாக மாற்றினேன். நீங்கள் பசும் பொன்னாக மாற வேண்டும் என்பதே என் பேராவல்.” இந்த வாக்கு எம் சபை நிறுவனர் மிக்கேல் அன்சால்தோவின் பொன் வாக்கு. பசும் பொன் ஜொலிக்க வேண்டும் என்றால்,  அது தீயில் இடப்பட்டு பொசுக்கப்பட வேண்டும்.

எனவே, எம் சபை நிறுவனரின் குமாரத்திகள் நாங்கள் ‘இறை ஊழியர் மிக்கேல் அன்சால்தோ என்ற  தீயால்’ புடமிடப்பட்டு, இன்று சமுதாயத்தின்  தீமைகளைச் சுட்டெரிக்கும் தீப்பிழம்புகளாய்  மாற இறை ஊழியர் மிக்கேல் அன்சால்தோ  எங்கள் ஒவ்வொருவருக்காகவும் பரிந்து பேசுவாராக!

எம் சபைக்கு உரியவர் அருளாளராய், திருச்சபைக்குரியவராய், பாருலகத்திற்கும் அன்சால்தோ தீ’  உலகத் தீமைகளைச் சுட்டெரிக்கும் தீயாய், அகில உலகத் திருஅவையில் வலம் வர இணைந்து செபிப்போம்.