Namvazhvu
சகோதரிகளின் அருள்பணிகள் அயல்நாட்டில் அன்சால்தோ வழியில் கொன்சாகா சபையினர்
Friday, 23 Jun 2023 07:17 am
Namvazhvu

Namvazhvu

“உலகெங்கும் சென்று, படைப் பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறை சாற்றுங்கள்” (மாற் 16:15) என்பது இறைமகன் இயேசுவின் கூற்று. இயேசுவின் பாதையில் பயணித்து, நம் சகோதரிகள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியாகவே வாழ்கின்றனர். இதற்கு அவர்கள் வாழ்வில் அடித்தளமாக விளங்கியது இறை ஊழியர் மிக்கேல் அன்சால்தோ அவர்களின் ஆன்மிக வழிகாட்டுதல் ஆகும். அவர்களின் பணிகள் குறித்து பகிர விழைகிறோம்.

அந்நிய தேசத்தை நோக்கிய பயணம்

தமிழகத்தின் அனைத்து மறைமாவட்டங்கள், ஆந்திராவின் சில மறைமாவட்டங்கள்,  மியான்மர்  மட்டுமல்லாது,  நமது கொன்சாகா சபை பணியானது சிறு ஆலம் விழுது போல் அந்நிய தேசத்தில் ஊன்றப்பட்டு, இன்று பல விருட்சங்களாகக் கிளை பரப்பி உலகின் பல பகுதிகளிலும்  பரவி வருகின்றது. இது இறைவனுக்கு மகிமை சேர்க்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி,  இஸ்ரேல்  ஆகிய நாடுகளில் 70 சகோதரிகள் பணிபுரிந்து வருகின்றனர். ‘தேசப் படத்திற்கு எல்லையுண்டு, தேய்ந்து வரும் ஏழைகளுக்குத் தொண்டாற்ற எல்லையா உண்டு?’ என்பது மறைப்போதகரின் தாரக மந்திரம். இக்கருத்தாக்கத்தின் அடிப்படை யிலே உருவாக்கம் பெற்று, சகோதரிகளும் பணியாற்றும் ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டனர். மக்கள் பணிக்காக திசை எட்டும் சென்றனர்.

சகோதரிகளின் அருள்பணிகள்

1968 ஆம் ஆண்டு நமது சகோதரிகள், அன்னை டெனிஸ் மேரி சபைத் தலைவியாக இருந்தபோது முதல் முதலாக மேலை நாடுகளுக்குச் சென்றனர். வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு உதவியாகவும், காரணமாகவும் இருந்தவர் இயேசு சபையைச் சார்ந்த அருள்திரு. இராபர்ட் கௌசினா ஆவார்.  வெளிநாடு நோக்கிய நம் சகோதரிகளின் முதல் பயணம் 1969, செப்டம்பர் 29 ஆம் தேதி தொடங்கியது.  முதன் முதல் ஆஸ்திரியாவை அடைந்தனர். அருள்தந்தையர் இவான், கௌசினோ ஆகியோரால் சிறப்பாக வரவேற்கப்பட்டனர்.

சகோதரிகள் முதன் முதல் செவிலியர் பயிற்சியைப் பெற அருள்பணி. இவான் அவர்கள் உடன் இருந்து உதவினார். சகோ. கயத்தான், சகோ. பிளா ரன்ஸ் இருவரும் சாம்ஸ் மருத்துவமனையில் தாதியர் பயிற்சிக்கென அனுப்பப்பட்டனர்.

இன்று இந்தியாவிலிருந்து செல்லும் நம் கொன்சாகா அருள்சகோதரிகள் சிறிது காலம் மொழியையும், சூழலையும் கற்கின்றனர். தொடர்ந்து மருத்துவப் பயிற்சி பெறுகின்றனர். படிப்பு முடிந்தவுடன் அங்குள்ள முதியோர் இல்லங்களிலும், மருத்துவமனைகளிலும் பணியாற்றுகின்றனர்.

ஜெர்மனியில் ம்யூனிக், பிரின் என்ற இடங்களிலும், ஆஸ்திரியாவில் வியன்னாவிலும்  சகோதரிகள் பணியாற்றி வருகின்றனர். பங்கு செயல்பாடுகளிலும் முழுமையாகப் பங்கேற்கின்றனர். கடல் கடந்து, பிறந்த மண்ணையும், மக்களையும் பிரிந்து சென்று, அயல் தேசத்தில் ஆசையோடு பணி செய்ய புறப்பட்டாலும், மனிதன் என்ற முறையில் சில சிக்கல்கள் எழுவது இயல்பு தானே! அவ்வாறே அந்நிய தேசத்தில் அந்நிய மொழி மற்றும் அந்நிய கலாச்சாரத்தில் இனம் காணா தவிப்பு ஒருபுறம்;  இயேசுவையே இறுகப் பற்றிக் கொள்ளும் தவவாழ்வு ஒருபுறம் என இரு திசைகளில் இழுக்கப்பட்டாலும் மிகவும் தெளிவுடன் மனம் தளராது இலட்சிய நோக்குடன் சகோதரிகள் பயணிக்கின்றனர்.

‘எந்நாளும், எப்போதும், என்றும் எங்களை விட்டுப் பிரியாத இயேசு எங்களோடு இருக்கின்றார்’ என்ற ஆழமான நம்பிக்கையே அவர்களுக்குள் வேரூன்றி இருக்கிறது. அந்நிய தேசத்தில் ஆண்டவர் இயேசுவைப் பற்றி அறியாத மக்களுக்கு ஆண்ட வர் இயேசுவை அறிகின்ற அறிவின் வாசனையை நுகரச் செய்கின்றார்கள்.

அந்நிய தேசத்தில் ஆத்துமாவை ஆதாயம் செய்யும் எங்கள் அருள்சகோதரிகள் உடல் நோயைத் தீர்க்கும் ஒப்பில்லா நலவாழ்வு பணியும் செய்கின்றார்கள். மானுடம் மகிழ்வுடன் வாழ, மக்கள் நோயின்றி இருக்க வேண்டும். இயேசு கிறிஸ்து தாம் வாழ்ந்த காலங்களில் ஏராளமான புதுமைகளைச் செய்தார். அதில் பெரும்பாலானவை  மக்களுக்கு சுகத்தைத் தந்ததுதான். “அவர் நம் நோய்களைச் சுமந்தார்” என எசாயா 53:5 இல் வாசிக்கின் றோம். அதுபோல் அந்நிய தேசத்தில் பணியாற்றும்  சகோ தரிகள் மறு கிறிஸ்துவாக,  மருத்துவ, நற்செய்திப் பணி யைச் செய்து வருகின்றனர்.

அன்சால்தோவின் உள்ளுயிரில்

வலுவூட்டுகிறவராம் ஆண் டவரின் அருள் துணையோடு அன்னிய தேசத்தில் மருத்துவப்பணி, முதியோர் பராமரிப்புப் பணி, நற்செய்திப் பணியை நிறுவனரின் உள்ளுயிருடன் இணைந்து சகோதரிகள் செய்கின்றனர்.

சபையின் பாதுகாவலர் புனித அலோசியஸ் கொன்சாகா பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்க்குச் செய்த பணியை, ஒழுங்கு தந்த தந்தை பிரான்சிஸ் அசிசி தொழுநோயாளிகளுக்குச் செய்த பணியை, நிறுவனர் மிக்கேல் அன்சால்தோ பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களுக்குக் கொடுத்த ஆற்றுப் படுத்தும் பணியை இரவு-பகல் பாராது மகிழ்வாக முழு மனதுடன் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.  அந்நிய தேசத்தில் எவ்வித எதிர்பார்ப்புமின்றிச் செயல்படும் கொன்சாகா துறவியரின் சேவையை நிறுவனர் மிக்கேல் அன்சால்தோ வழியாக இறைவன் என்றென்றும் ஆசீர்வதிப்பாராக!