முதல் வாசகப் பகுதி எரேமியா இறைவாக்கினரின் முறைப்பாடு அல்லது அருள் புலம்பலாக அமைந்துள்ளது. எரேமியா, எருசலேமில் இறைவாக்கு உரைக்கின்றார். பாபிலோனியப் படையெடுப்பால் யூதா நாடும், எருசலேம் நகரமும் அழிந்து போகும் என அவர் இறைவாக்குரைத்தது, கேட்போருக்குத் திகிலாக இருந்தது. அழிவின் செய்தியை அறிவிக்கும் இறைவாக்கினரையும், இறைவாக்கினரின் செய்தியையும் எருசலேம் நகரத்தார் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். மேலும், எரேமியாவை அழிக்க சூழ்ச்சி செய்கிறார் கள். இந்தப் பின்புலத்தில் ஆண்டவரின் திருமுன்னிலையில் வருகிற எரேமியா, “ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்; நானும் ஏமாந்து போனேன்” (20:7) என முறையிடுகிறார். தான் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை என்றாலும், தன்னகத்தே கொண்டிருக்கிற செய்தியைத் தன்னால் அடக்கி வைக்க முடியவில்லை என்றும், அச்சம் நிறைந்த நேரத்திலேதான் ஆண்டவரின் உடனிருப்பைக் கண்டு கொள்கிறேன் என்றும் ஆறுதலடைகிறார் எரேமியா.
‘கடவுளால் ஏற்புடையவராக்கப்படுதல்’ என்னும் கருத்துரு பற்றி உரோமை நகர மக்களுக்கு எழுதுகிற பவுல், முதல் ஆதாம் மற்றும் இரண்டாம் ஆதாம் (கிறிஸ்து) என்னும் இருவரும் முறையே ‘பாவம்’ மற்றும் ‘அருள்கொடையை’ இவ்வுலகுக்குக் கொண்டு வந்தார்கள் என மொழிகிறார். திருச்சட்டம் முன்வைக்கும் செயல்களை விட, கடவுளின் அருள் மேன்மையானது என்பது பவுலுடைய கருத்து.
‘திருத்தூதுப் பொழிவு’ என்னும் பெரும் பிரிவின் ஒரு பகுதியாக இருக்கும் நற்செய்தி வாசகத்தில், தம் சீடர்கள் அடையும் துன்பங்கள் பற்றி முன்னுரைக்கும் இயேசு, துன்பங்கள் திருத்தூதர்களின் அறிவித்தல் பணியை நிறுத்திவிடக்கூடாது என்றும், அஞ்சாமல் தொடர்ந்து அவர்கள் முன்னேற வேண்டும் என்றும், கடவுளிடமிருந்து அவர்கள் ஆற்றல் பெறுவார்கள் என்றும் அறிவுறுத்துகிறார்.
இந்நாளின் இறைவார்த்தைப் பகுதிகளை ‘அறிவித்தல்’, ‘அஞ்சாதிருத்தல்’, ‘ஆற்றல் பெறுதல்’ என்னும் சொற்கள் வழியாகப் புரிந்து கொள்வோம்: அ) மறைவாகக் கேட்டவற்றை வெளிப்படையாக அறிவித்தல். ஆ) உடலைக் கொல்பவர்களுக்கு அஞ்சாதிருத்தல். இ) ‘ஆண்டவர் வலிமைமிகுந்த வீரரைப் போல என்னோடு இருக்கிறார்’ என ஆற்றல் பெறுதல்.
அ. மறைவாகக் கேட்டவற்றை வெளிப்படையாக அறிவித்தல்
திருத்தூதுப் பணிகளில் முதன்மையான பணி அறிவித்தல். இயேசு தம் பணி வாழ்வின் தொடக்கத்தில் ‘விண்ணரசு நெருங்கி விட்டது; மனம்மாறி, நற்செய்தியை நம்புங்கள்’ என அறிவிக்கிறார். விண்ணரசின் மறைபொருளைப் பல்வேறு உவமைகள் வழியாகவும், சொல்லோவியங்கள் வழியாகவும், போதனைகள் வழியாகவும் எடுத் துரைக்கிறார். உவமைகளுக்கான விளக்கங்களை மறைவாகத் தம் சீடர்களுக்கு வழங்கி, போதனை யைத் தெளிவுபடுத்துகிறார். இவ்வாறு, இயேசு விடம் கற்றுக்கொண்ட அனைத்தையும் சீடர்கள் மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும் என இயேசு கட்டளையிடுகிறார்.
முதல் வாசகத்தில் எரேமியா, தான் மறைவாகக் கேட்ட செய்தியை வெளிப்படையாக எருசலேம் மக்களுக்கு அறிவிக்கிறார். தான் அறிவித்த செய்தியை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், தொடர்ந்து அதை அறிவிக்கிறார். ஏனெனில், கடவுளின் செய்தியை, வார்த்தையைத் தன்னகத்தே வைத்துக்கொள்ள அவரால் இயல வில்லை. கெரசேனர் பகுதியில் பேய் பிடித்தவரை நலமாக்குகிற இயேசு அவரிடம், “உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கம் கொண்டு, உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்” (மாற் 5:19) என அனுப்புகிறார்.
இறைவார்த்தையை நாம் வாசிக்கிறோம், கேட்கிறோம். அதை அறிவிக்கின்றோமா? ‘அறி வித்தல்’ என்பதை ‘வாழ்ந்து காட்டுதல்’ என்றும் புரிந்து கொள்ளலாம். நாம் வாசிக்கிற, கேட்கிற வார்த்தைக்கு ஏற்ற வாழ்க்கை நிலையை நாம் அமைத்துக் கொள்கிறோமா?
ஆ) உடலைக் கொல்பவர்களுக்கு அஞ்சாதிருங்கள்
அச்சம், சீடத்துவத்தை நிலைகுலைக்கும் என்பதை அறிந்தவராக இருக்கிறார் இயேசு. தம் சீடர்கள் அச்சம் இல்லாதவர்களாக இருப்பர் என்னும் போலி வாக்குறுதியை அவர் வழங்கவில்லை. மாறாக, சீடர்கள் தம் அச்சங்களை-துன்புறுத்தல் களை, எதிர்ப்புகளை, நிராகரிப்புகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
‘அஞ்ச வேண்டாம்’ என்னும் அறிவுரை இன்றைய நற்செய்தி வாசகத்தில் மூன்று முறை உள்ளது (மத் 10:26,28,31). ‘உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம்’ (10:26, 28); ‘சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே, அஞ்சாதிருங்கள்’ (10:31). கடவுளுக்கு மட்டுமே அஞ்சுவதற்கு இயேசு மூன்று காரணங்கள் தருகிறார்: ஒன்று, அவர் மட்டுமே ஆன்மாவைக் கொல்ல வல்லவர். இரண்டு, கடவுள் நம்மேல் தொடர்ந்து அக்கறை கொண்டவராக, நம் தலை முடியையும் எண்ணிக் கொண்டிருப்பவராக இருக்கிறார். குருவிகளைவிட மேன்மையானவராக, தம் சாயலில் அவர் நம்மைப் படைத்துள்ளார். மூன்று, கடவுளுக்கு மட்டுமே நம் அர்ப்பணம் இருத்தல் வேண்டும்.
அச்சம் நம் வாழ்வின் மிகப்பெரிய எதிரி. நாம் எடுக்கும் முயற்சிகளுக்கெல்லாம் இது தடை இடுகிறது. சீடத்துவத்தில் நிலைத்திருக்கும் நம்மை நிலைகுலைய வைக்கிறது அச்சம். ஒரு பக்கம் அச்சம் களைந்து நாம் வாழ வேண்டும். இன்னொரு பக்கம், கடவுளுக்கு மட்டுமே நாம் அஞ்சி வாழ வேண்டும். அதாவது, நம் அர்ப்பணம் பிளவுபடாததாக இருத்தல் வேண்டும்.
2மக்கபேயர் நூலில் நாம் வாசிக்கும் அன்னையும், ஏழு மகன்களும் கடவுளுக்கு அஞ்சு கிறார்கள். அரசனைப் பற்றிய அச்சம் அவர்களுக்கு அறவே இல்லை. இறப்பை ஏற்கவும் துணிகிறார்கள்.
இ) ‘ஆண்டவர் வலிமை மிகுந்த வீரரைப் போல என்னோடு இருக்கிறார்’ என ஆற்றல் பெறுதல்
தன்னுடைய நகரினர் தன்னை எதிர்த்தபோது அச்சம் கொண்ட எரேமியா, ‘ஆண்டவர் வலிமை மிகுந்த வீரரைப் போல என்னோடு இருக்கிறார்’ என்று ஆற்றல் பெறுகிறார். தன் வலுவின்மையில் இறைவனின் வல்லமையைக் கண்டு கொள்கிறார். இயேசுவின் சமகாலத்தில் சிட்டுக்குருவி விற்கும் போது ‘காசுக்கு இரண்டு’ என விற்பர். இப்படி வாங்கப்படும் இரு குருவிகளில் ஒன்றைப் பறக்க விட்டு, அதன் தன்மையைச் சோதிப்பார் வாங்குபவர். அப்படிப் பறக்கவிடப்படுகிற குருவியைப் பற்றியும் அக்கறை காட்டுகிறவர் கடவுள்! நம் தலை முடியையும் எண்ணிக் கொண்டிருப்பவராக அதாவது, முழு நேரமும் நம்மேல் அக்கறை கொண்ட வராக, நம்மீது மாறாத அன்பு கொண்டவராக இருக்கிறார். ‘வலிமை மிகுந்த வீரர்’ என்னும் உருவகம் தொடர்ந்து உடன் நிற்கிற பிரசன்னத்தைக் குறிக்கிறது. அச்சங்களை அகற்று வதற்கான எளிய வழி ஆண்டவரின் உடனிருப்பை உணர்வதும், அவர் மேல் நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதும் ஆகும்.
நிற்க:
இன்றைய பதிலுரைப் பாடலில் (திபா 69), “கடவுளே! உமது பேரன்பினால் எனக்குப் பதில் மொழி தாரும்” என இறைவேண்டல் செய்கிறார் தாவீது. துணை செய்வதில் ஆண்டவர் மாறாதவர் என்னும் உறுதியான நம்பிக்கைக் கொண்டிருக்கிறார் அவர்.