நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் மற்றும் சுற்றறிக்கைகளின் சாரல்
“திரு அவைக்கும், சமூகத்திற்கும் முதியவர்கள் தேவை; ஏனென்றால், அவர்கள் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பத் தேவையான கடந்த காலத்தை நிகழ்காலத்தில் ஒப்படைக்கிறார்கள். ஆகவே, அவர்களைக் கௌரவிப்பதுடன், அவர்களின் உறவை நாம் இழக்காமல் இருக்க வேண்டும். ஒருபோதும் அவர்களை ஒதுக்கி வைப்பதை நாம் அனுமதிக்கக்கூடாது.”
- ஜூன் 15, முதியவர்களுக்கான உலக தினச் செய்தியில்...
“கடவுளுக்கு மிகவும் பிடித்தமான வழிபாடு என்பது நம்முடன் வாழும் அயலாரைக் கவனித்துக் கொள்வது. இயேசு காயப்பட்ட மனிதகுலத்தைச் சந்தித்து, துன்பப்பட்ட முகங்களை அன்புடன் வருடி, உடைந்த இதயங்களைக் குணப்படுத்தி, ஆன்மாவைச் சிறைப்படுத்தும் விலங்குகளை உடைத்தெறிந்து விடுதலையளித்தார். இவ்வாறாக, நம் அயலாரைக் கவனித்துக் கொள்வதே கடவுளுக்கு மிகவும் பிடித்தமான வழிபாடு.”
- ஜூன் 17, மரியாவின் மாசற்ற திருஇதய விழாவில்
“ஆன்மிக மற்றும் மேய்ப்புப்பணிக்கான புதிய பாதைகளை அடையாளம் கண்டு வாழ வேண்டும்; மறைப்பணியாளர்கள் தாங்கள் வாழும் இடங்களில், தங்கள் உடனிருப்பாலும், செயலாலும் நற்செய்திக்கு உயிர் கொடுக்கும் ஒளியாகத் திகழ வேண்டும்.”
- ஜூன் 18, கன்சோலாட்டா சபையாளர்களுக்கான செய்தியில்,,,
“திருநற்கருணை முன் அமர்ந்து செபிப்பதும், மௌனத்தில் இறைவனோடு உரையாடுவதும் குறைந்து வரும் இக்காலத்தில், திருநற்கருணை என்பது இறைவனின் உண்மையான இருப்பைக் குறித்து நிற்கின்றது என்பதை திரு அவை திருப்பணியாளர்கள் நம்பிக்கையாளர்களுக்கு வலியுறுத்திக் கூறவேண்டியது அவசியம்.”
- ஜூன் 19, USA தேசிய நற்கருணைக் குழுவினருக்கு...
“விவிலியப் பாரம்பரியத்தில் வரும் ஜூபிலிக் கொண்டாட்டங்கள், இறைவனுடனும், நம்மைச் சுற்றியிருப்பவர்களுடனும், நம்முடனும் ஒப்புரவு கொள்ள வேண்டிய தேவையை உணர்த்துகின்றன.”
- ஜூன் 19, இத்தாலி தின இதழில்...
“துறவு சபைகளின் ஒவ்வோர் அங்கத்தினரும் சுயநலத்தில் தன்னை இழந்துவிடாமல், திரு அவைக்கான சேவை உணர்வுடன் செயல்பட வேண்டும். ஒரே குடும்பமாகத் துறவு சபையினர் வாழும்போது, அனைத்தையும் பொதுவில் வைத்து மற்றவர்களுடன் அவைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.”
- ஜூன் 20, இலாத்தரன் துறவு சபைக்கு...
“தங்கள் தொழிலை வாழ்வின் மறைப்பணியாகப் பார்க்கும் தகவல் தொடர்பு பணியாளர்கள் செவிமடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, உண்மையைச் சேகரிக்கும் குறிப்பேடு போலவும், சிந்தனையை விரிவுபடுத்த உதவும் எழுதுகோல் போலவும், இதயத்திலிருந்து செலுத்தப்படும் பார்வை கொண்டும் வாழ வேண்டும்.”
- ஜூன் 24, வத்திக்கான் பன்னாட்டு இதழியல் மற்றும் தகவல் தொடர்பு அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு...
“இளையோர் தங்களது வாழ்க்கை முழுவதும் இதயத்தின் மொழி, கைகளின் மொழி, அறிவின் மொழி என்னும் மூன்று வாழ்க்கை மொழிகளைக் கொண்டு வாழ வேண்டும். அறிவின் மொழி நாம் உணர்வதையும், செய்வதையும் தெளிவாகச் சிந்திக்க உதவுகின்றது. கைகளின் மொழி, உணர்வதையும் நினைப்பதையும் சீர்தூக்கிப் பார்க்க உதவுகின்றது. இதயத்தின் மொழி நினைப்பதையும், செய்வதையும் ஆழமாக உணர உதவுகின்றது.”
- ஜூன் 25, உலக இளையோர் விழாக் குழுவினருக்கு...
“தூய ஆவியானவரின் செயல்பாடுகளுக்குத் தங்களைக் கையளிக்கும் அருள்பணியாளர்களின் ஆன்மிக வாழ்க்கை வளர்கிறது. இதனால், போலித்தனம் அழிக்கப்பட்டு, ஆவியின் வெளிச்சத்திற்கு அனைத்துச் செயல்களும் கொண்டு வரப்பட்டு, நமது காயங்கள் அனைத்தும் ஆற்றப்படுகின்றன.”
- ஜூன் 24, பரிந்து பேசும் தூய ஆவியார் ஊழியர் சபையினருக்கு...
“கடவுளோடு கொண்டுள்ள பரிச்சயமான உறவு மற்றும் நம்பிக்கையை, வாழ்க்கையின் இரகசியமாகக் கொண்ட புனிதர்கள், அப்பண்புகளோடு வளர்ந்து, கடவுளுக்கு விருப்பமானது எது என்பதை எளிதில் கண்டுணர்கின்றனர். கடவுளோடு கொண்ட இந்தப் பரிச்சயமான உறவே, ‘கடவுளின் விருப்பம் நமது நலனுக்கு நல்லதல்ல’ என்ற பயத்தையும், சந்தேகத்தையும் நீக்குகின்றது.”
- ஜூன் 24, புனித திருமுழுக்கு யோவானின் பிறப்புப் பெருவிழாவில்...
“இயேசு கிறிஸ்துவின் அன்பும், தொண்டுப் பணிகளும் நாம் நம்முடைய பணிகளைத் தாராளமாகச் செய்வதற்கான ஆற்றலைத் தருகின்றன. அந்த அன்புதான் எல்லா நன்மைகளின் அடையாளமாகத் தந்தையாம் கடவுளை ஏற்றுக்கொள்ள நம்மை அழைக்கின்றது.”
- ஜூன் 24, இலத்தீன் அமெரிக்கத் தொண்டு நிறுவனங்களுக்கு
“வாழ்க்கையை மிகவும் அர்த்தமுடன் வாழத் தூண்டாத அற்பமான காரியங்களைத் துரத்திச் செல்வதற்குப் பதிலாக, நற்செய்திக்கு உண்மையாக இருக்கும் பொருட்டு, தவறான புரிதல்கள் மற்றும் விமர்சனங்கள், மதிப்பு மற்றும் பொருளாதார நன்மைகளை இழப்பது எவ்வளவோ நல்லது.”
- ஜூன் 25, ஞாயிறு மூவேளை செப உரையில்...