Namvazhvu
‘இறைவன் அன்பாய் இருக்கிறார்’ 57-வது உலகத் தொடர்பு நாளுக்கான செய்தி
Thursday, 06 Jul 2023 05:58 am
Namvazhvu

Namvazhvu

மொழியாக்கம்: மேதகு ஆயர் முனைவர் சிங்கராயர்

“அன்பின் அடிப்படையில் இதயத்திலிருந்து உண்மையைப் பேசுதல்!” (எபே 4:15)

அன்புக்குரிய சகோதரர்களே, சகோதரிகளே!

கடந்த ஆண்டுகளில் உலகத் தொடர்பு நாளுக்கான செய்திகளில், மக்களிடையே தொடர் பாடலுக்கான அடிப்படைகளாக ‘சென்று பார்’, ‘செவிமடு’ என்ற கருத்துகளைச் சிந்தித்தோம். இந்த ஆண்டு 57வது உலகத் தொடர்பு நாளில் ‘இதயத்திலிருந்து உண்மையைப் பேசுதல்’ என்பதைப் பற்றிச் சிந்திக்க விரும்புகிறேன். சென்று பார்க்கவும், செவிமடுக்கவும் நம்மைத் தூண்டுவது நமது இதயமே. திறந்த மனத்துடன் வரவேற்கத்தக்கத் தொடர்பாடலுக்கு நம்மைத் தூண்டுவதும் இந்த இதயமே. தனது கருத்துகளைத் திணிக்கும் முன்சார்பு எண்ணங்கள் இன்றி, பொறுமையாகக் காத்திருந்து, பிறருக்குச் செவிமடுக்கும்போதுதான் அன்பின் அடிப்படையில் உண்மையைப் பேச (எபே 4:15) நம்மால் முடியும். ஒருவேளை நமக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டாலும், உண்மையை எடுத்துரைக்க நாம் தயங்கக்கூடாது. எனினும், இதயத்திலிருந்து எழும்பாததும், அன்பின் அடிப்படையில் இல்லாமலும் உண்மையை உரைத்தல் கூடாது.

திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் கூறியது போன்று, “ஒரு கிறிஸ்தவனின் செயல்பாடுகள் இதயத்தால் பார்த்தல் ஆகும்” (‘இறைவன் அன்பாய் இருக்கிறார்’ என்ற மடல் -25.12.2005 -  எண் 31). நமது ஆளுமையின் இருத்தல் தன்மையை எடுத்துக் காட்டுவது நம் இதயம். எனவே, இதயத்தின் குரலுக்கு ஒருவர் செவிமடுத்தல் அவசியம். இதனால் கேட்பவர் தாம் யாருக்குச் செவிமடுக்கிறாரோ அவரது உள்ளத்தின் கருத்துகளைப் புரிந்து கொள்ளவும், அடுத்தவரது இதயத்துடிப்பை உணரவும் முடிகிறது. அப்போது இருவரிடையே உண்மையான ‘சந்திப்பு’ என்னும் புதுமை நிகழ்கிறது. இதனால், ஒருவர் மற்றவரை கனிவுடன் நோக்கவும், தமக்கிடையே உள்ள வேறுபாடுகளையும், குறைகளையும் ஏற்றுக்கொள்ளவும், செவிவழிச் செய்திகளின் அடிப்படையில் தீர்ப்பிடுதலால் விளையும் பிளவுகளையும், வேற்றுமைகளையும் களைய முடியும். “ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும்” (லூக் 6:44) என்று இயேசு எச்சரிக்கிறார். “நல்லவர் தம் உள்ளமாகிய கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பார். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக்கொடுப்பார். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்” (லூக் 6:45). இதனால் அன்பின் அடிப்படையில் உண்மையை எடுத்துக்கூற ஒருவரது இதயம் தூய்மையாய் இருக்க வேண்டியது அவசியம். தூய்மையான இதயத்தினால் செவிமடுப்பதாலும், பேசுவதாலும் மட்டுமே, இன்று நாம் வாழும் உலகில் வரும் வலம், வெற்று ஓசையை எழுப்பும் வெளித்தோற்றங்களிலிருந்து உண்மையைக் கண்டறிய முடியும். இது தொடர்பாடல் துறைக்கும் பொருந்தும். இதயத்திலிருந்து அன்பின் அடிப்படையில் உண்மையை எடுத்துரைப்பது என்பது, நாம் வாழும் இவ்வுலகில் காணப்படும் வெறுப்பும், பாராமுகமும் கொண்ட பண்பாட்டிற்கும், உண்மையை மறைத்து, பொய்மையை எடுத்துரைக்கும் நடைமுறைக்கும் பெரும் சவாலாக உள்ளது.

இதயத்திலிருந்து தொடர்பாடல்

இதயத்திலிருந்து தொடர்பாடல் மேற்கொள்ளும்போது, நாம் வழங்கும் செய்திகளையும், நிகழ்ச்சிகளைக் கேட்போரும், காண்போரும் நம்முடன் தம் வாழ்வையும் தம் மகிழ்ச்சி, நம்பிக்கை, அச்சம், துன்பங்களையும் பகிர்ந்துகொள்ள முன்வருகின்றனர். இவ்வாறு நிகழ்ச்சிகளை வழங்குவோர் தாம் வழங்கும் செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் பார்ப்போரை அன்பு செய்கின்றனர். அவர்களது சுதந்திரத்திற்கு ஊறு விளைவிக்காமல் அதை மதிக்கின்றனர். இவ்வாறே கொல்கொத்தா சோக நிகழ்விற்குப் பிறகு, இயேசுவின் இரண்டு சீடர்கள் எம்மாவுஸ் பாதையில் சென்றபோது அவர்களுடன் வந்த இயேசு வழிப்போக்கராக நடந்து கொள்கிறார். உயிர்ந்த இயேசு அவர்களுடன் தம் இதயத்திலிருந்து உரையாடுகிறார். துயரம் நிறைந்த பயணத்தில் சீடர்களின் உணர்வுகளை மதிக்கிறார். தம்மை அவர்கள்மீது திணிக்காமல், தம்மை கனிவுடனும், அன்புடனும் அறிமுகப்படுத்துகிறார். நடந்ததை அவர்கள் புரிந்துகொள்ள, அவர்களது இதயங்களை அன்புடன் திறக்கின்றார். இதனாலேயே பின்னர் அவர்கள் மகிழ்ச்சியுடன் ‘அவர் வழியில் நம்மோடு பேசி மறைநூலை விளக்கும் போது, நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?’ என்று பேசிக்கொண்டனர் (லூக் 24:32).

இன்றைய உலகில், திருஅவை உள்பட அனைத்து நிலைகளிலும் பிரிவினையும், வேறுபாடுகளும் மலர்ந்துள்ள இவ்வேளையில், ‘திறந்த உள்ளத்தோடும், விரித்த கரங்களோடும் பேசுதல்’ தொடர்பாடல் துறையில் இருப்பவருக்கு மிகவும் அவசியமானது. நாம் எல்லோருமே உண்மையைத் தேடிக் கண்டுணர்ந்து, அதை அன்பின் அடிப்படையில் பேசுதல் மிகவும் தேவையானது. சிறப்பாக கிறிஸ்தவர்கள் ‘தீச்சொல்லிலிருந்து தம் நாவைக் காத்திட’ (திபா 34:13) அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனெனில், மறைநூல் கூறுவதுபோல ’கடவுளைப் போற்றுவதும், அவர் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதரைத் தூற்றுவதும் ஒரே வாயிலிருந்தே வருகின்றன’ (யாக் 3:9). நம் வாயிலிருந்து தீச்சொல் எதுவும் வரக்கூடாது. மாறாக, ‘கேட்போர் பயனடையும்படி தேவைக்கு ஏற்றவாறு, அருள் வளர்ச்சிக்கு ஏற்ற நல்ல வார்த்தைகளையே பேசுங்கள்’ (எபே 4:29).

நட்புடன் கூடிய உரையாடல் சில வேளைகளில் கடின இதயங்களுக்கிடையேயும் இணைப்பை உருவாக்க முடியும். இலக்கியங்களிலும் இதற்கான எடுத்துக்காட்டுக்களைக் காண்கிறோம். ‘நிச்சயதார்த்தம்’ ((Betrothed) என்னும் இலக்கியத்தில் 21 ஆம் அதிகாரத்தில் மிகவும் குழப்பத்தில் உள்ள பெயர் குறிப்பிடாதவரிடம் லூசியா அன்புடன் பேசி அவர் தன்னிடம் அன்பை வெளிப்படுத்தச் செய்கிறார். இதையே இன்றைய சமுதாயத்திலும் பார்க்கிறோம். பிறரிடம் பரிவு காட்டுவது ஒரு நல்ல பழக்கம் மட்டுமல்ல; கொடிய மனங்களை மாற்றுவதற்கு மருந்தும் அதுவே. இந்த நற்பண்பு இல்லாதபோது, மனிதர்கள் உறவாடுதல் அவர்களது உறவுகளை அழிக்கும் நஞ்சாகவும், உறவுகளை அழிக்கும் போதைப் பொருளாகவும் மாறுகின்றனர். தொடர்பாடல் துறையில் இருப்பவருக்கு இது மிகவும் முக்கியமானது. நமது தொடர்பாடல் மனிதரிடையே வேற்றுமைகளையும், மோதல்களையும் தூண்டிவிடாமல், அவர்களிடையே பிறரை மதிக்கும் அன்புறவை உருவாக்குவது மிகவும் அவசியம்.

இதயத்திலிருந்து இதயத்திற்குத் 

தொடர்பாடல்

நன்கு பேசுவதற்கு நன்றாக அன்பு செய்தல் போதும்’

‘இதயத்திலிருந்து பேசுதல்’ என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றை புனித பிரான்சிஸ் தெ சேல்ஸ் தருகிறார். இப்புனிதரின் இறப்பின் 400வது ஆண்டு நினைவாக நான் எழுதிய ‘அனைத்தும் அன்பே’ (Totum Amoris Est) என்ற திருத்தூது திருமடலில் இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். பிரான்சிஸ் சலேசியார் எனப்படும் இவரின் 400வது ஆண்டு நினைவு என்பதோடு, 2023 ஆம் ஆண்டில் வரும் இன்னொரு நினைவையும் குறிப்பிட விரும்புகிறேன். திருத்தந்தை 11 ஆம் பயஸ் தனது (Rerum Omnium Perturoationem) என்ற மடல் வழியாக இப்புனிதரை கத்தோலிக்க இதழியல் துறையில் பணியாற்றுபவர்களின் பாதுகாவலராக அறிவித்தார். புனித பிரான்சிஸ் சலேசியார் சிறந்த அறிவாளி, எழுத்தாளர், ஆழ்ந்த இறையியலாளர். இவர் ஜெனீவாவின் ஆயராக 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பணியாற்றியவர். கால்வின் என்பவரின் தப்பறைக் கொள்கைகளுக்கு மத்தியில் திரு அவையைத் திறம்பட வழிநடத்தியவர். அவர் தனது கனிவான பண்பு, மனிதாபிமானம், தன்னோடு ஒத்துப்போகாதவர்களிடமும் பொறுமையாக உரையாடல் மேற்கொள்ளும் தன்மை இவற்றால் மக்களிடையே கடவுளின் இரக்கமுள்ள, அன்பின் மிகச்சிறந்த சான்றாகத் திகழ்ந்தார். நாமும் அவருடன் சேர்ந்து பின்வருமாறு கூற முடியும்: ‘இன்சொல் நண்பர் தொகையைப் பெருக்கும், பண்பான பேச்சு உன் மதிப்பை உயர்த்தும்’ (சீராக் 6:5).

‘ஓர் இதயம் இன்னோர் இதயத்துடன் பேசுதல்’ என்னும் அவரது கூற்று, வரலாற்றில் பலருக்குத் தூண்டுதலாக இருந்துள்ளது. புனித ஜான் என்றி நியூமன் என்பவர் இவர் வழி நின்று (Cor ad cor loquitur) என்பதைத் தனது விருதுவாக்காகத் தேர்ந்தெடுத்தார். புனித பிரான்சிஸ் சலேசியாரின் உறுதியான நம்பிக்கை ‘நன்கு பேசுவதற்கு, நன்கு அன்பு செய்தால் போதும்’ என்பதாகும். இவரின் கருத்துப்படி தொடர்பாடல் என்பது செய்திகளைச் செயற்கையாகக் கூறாமல் அது தொடர்பாளரின் இதயத்தின் பிரதிபலிப்பாகவும், கண்ணுக்குப் புலப்படாத அன்பின் வெளிப்பாடாகவும் அமைதல் அவசியம்.

புனித பிரான்சிஸ் சலேசியாரின் கூற்றுப்படி ‘இதயத்திலும், இதயத்தின் மூலமாகவே ஒரு மனிதன் கடவுளை அறியும் செயல்பாடு நிகழ்கிறது’ (Totum Amoris Est,  28.12.2022). தனது சிறந்த அன்பினால் புனித பிரான்சிஸ் சலேசியார் காது கேளாதோரும், பேச்சற்றவருமாகிய மார்ட்டின் என்பவரின் சிறந்த நண்பராகத் திகழ்ந்தார். அதனாலேயே இவர் தனது கருத்தை வெளிப்படுத்த இயலாதவர்களின் பாதுகாவலராகக் கருதப்படுகிறார்.  இந்த ‘அன்பு என்னும் அளவுகோலாலேயே தனது போதனைகளிலும், எழுத்துகளிலும் ஜெனீவாவின் இப்புனித ஆயர் ‘எதை நாம் தொடர்பாடல் செய்கிறோமோ, அதுவாகவே நாம் இருக்கிறோம்’ என்ற உன்னதமான கூற்றை நினைவுபடுத்தினார். இக்கூற்று இன்றைய சமூக ஊடகங்களில் நிகழ்வனவற்றிற்கு மாறாக உள்ளது. இன்று சமூக ஊடகங்கள் வழியாக ஒருவர் தாம் உண்மையில் இருப்பதை பிறருடன் பகிர்ந்துகொள்ளாமல், பிறர் தன்னை எப்படிக் காண வேண்டுமென்று நான் நினைக்கிறேனோ, அவ்வாறு பகிர்தல் என்பதே நிகழ்வாக உள்ளது.

புனித பிரான்சிஸ் சலேசியார் தனது கருத்துகள் அடங்கிய ஏடுகளை ஜெனீவா மக்களிடையே பரப்பினார். இதனால், ஜெனீவா மறைமாவட்டத்திலும், அதற்கு வெளியிலும் அவரது இதழியல் புகழ் பரவியது. திருத்தந்தை ஆறாம் பவுல் கூறியது போன்று, அவரது எழுத்துகள் மக்களுக்கு மகிழ்வையும், அறிவுத்திறனையும் தந்ததோடு, விரும்பிப் படிக்கும் இயல்பினையும் கொண்டிருந்தன (Sabaudiae Gemma என்னும் திருமடல், 29.01.1967). மேற்கூறியவை தொடர்பாடலின் செய்திகள், அறிக்கை, நிகழ்ச்சிகளின் இயல்பாக இருத்தல் அவசியம் அன்றோ!

இன்றைய தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகள் மேற்கூறிய இயல்புகளைக் கொண்டிருத்தல் எவ்வளவு அவசியமானது! ஊடகத் துறையில் பணியாற்றுவோர் அனைவரும் இப்புனிதரின் கனிவுடைமையால் தூண்டப்பட்டு, உண்மையைத் தைரியத்துடனும், சுதந்திரத்துடனும் எடுத்துக்கூறவும், உணர்வுகளைத் தூண்டும் எதிர்மறையான சொல்லாடலைப் பயன்படுத்தும் சோதனையை மேற்கொள்ளவும் முன்வருதல் அவசியம்.

கூட்டொருங்கியக்கத் திரு அவையில் இதயத்திலிருந்து உரையாடுதல்

‘திரு அவையிலும் ஒருவருக்கொருவர் செவிமடுப்பது மிக அவசியம் என்றும், இதுவே பிறருக்கு நாம் அளிக்கவல்ல வாழ்வளிக்கும் கொடை’ என்றும் நான் முன்பு கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன் (56 ஆம் உலகத் தொடர்பு நாளுக்கான செய்தி, 24.01.2022). முன்சார்பு எண்ணங்களை விடுத்து, கவனமுடனும் திறந்த மனதுடனும் பிறருக்குச் செவிமடுப்பது நாம் கடவுளின் பாணியில் கனிவுடனும், நெருக்கமாகவும், கரிசனையுடனும் பிறருடன் பேசுவதற்கு வழிவகுக்கிறது.

இதயத்தைத் தொடும் விதத்தில் இன்று திரு அவையில் தொடர்பாடல் செய்வது மிகவும் அவசரமான தேவையாக உள்ளது. இதுவே பல காயங்களுக்கு மருந்தாகவும், நமது சகோதர- சகோதரிகளின் பயணத்திற்கு ஒளியாகவும் அமைகிறது. தூய ஆவியாரால் வழிநடத்தப்படும் தொடர்பாடல் திரு அவையில் நிகழ வேண்டும் என நான் கனவு காண்கிறேன். இது இனிமையானதாகவும், அதே வேளையில் இறைவாக்குத்தன்மை உடையதாகவும், மூன்றாம் ஆயிரத்தாண்டில் மிகச்சிறந்த நற்செய்தி அறிவிப்புக்கு வழிகாட்டுவதாகவும் அமையும். இந்தத் தொடர்பாடல் நம்மைக் கடவுளோடு நல்லுறவுகொள்ளச் செய்வதோடு, பிறரோடும் சிறப்பாக பல்வேறு தேவைகளில் இருப்போருடனும் கனிவுள்ள உறவுகொள்ளச் செய்ய வேண்டும். இவ்வாறு இத்தொடர்பாடல் தன்னை முன்னிலைப் படுத்தாமல், எல்லாரிடமும் நம்பிக்கையின் ஒளியைத் தூண்டி விடுவதாக அமைய வேண்டும். பிறருக்குச் செவிமடுத்தலில் தாழ்ச்சியும், உரையாடலில் கனிவுள்ள அக்கறையும், அன்பிலிருந்து உண்மையைப் பிரிக்காத நிலையும் ஏற்படும் வண்ணம் தொடர்பாடல் அமைய வேண்டும்.

அமைதியின் மொழியால் ஆன்மாக்களில் போர்க்குணத்தை அகற்றுதல்

‘இனிய நா எலும்பையும் நொறுக்கும்’ என்று நீதிமொழிகள் கூறுகின்றது (நீமொ 25:15). இன்று போர்கள் மலிந்துள்ள இடங்களிலெல்லாம் அமைதிக் கலாச்சாரத்தை உருவாக்க, இதயத்தால் பேசுதல் மிகவும் அவசியம். இதுவே பகைமையும், வெறுப்பும் உள்ள இடங்களில், உரையாடலும்-ஒப்புரவும் உருவாக வழிவகுக்கும். இன்று அகில உலக அளவில் நாடுகளிடையே மோதல்கள் பெருகி வரும் வேளையில், வெறுப்புணர்வைத் தூண்டாத தொடர்பாடல் மிகவும் இன்றியமையாதது. ‘எதிரிகளிடம் மதிப்புடன் உரையாடுவதற்குப் பதிலாக, அவர்களை இகழ்ந்து பழித்துரைப்பது மேல்’ என்ற இன்றைய கலாச்சாரப் போக்கை முறியடிக்க வேண்டியது அவசியம் (‘எல்லாரும் சகோதரர்கள்’ என்னும் திருத்தந்தை பிரான்சிசின் மடல், அக்டோபர் 3, 2020, பக்கம் 201).

‘அவனியில் அமைதி’ என்னும் தன் மடலில் திருத்தந்தை 13 ஆம் ஜான் குறிப்பிடுவது போன்று, ‘உண்மையான அமைதி ஒருவர் மீது மற்றவர் கொண்டுள்ள நம்பிக்கையின் மீதுதான் கட்டியெழுப்பப்படுகிறது’ (எண் 113.). இதன்படி, உரையாடலுக்கும், போர் மனப்பான்மையை முற்றிலும் கைவிடும் மன நிலைக்கும் மக்களைத் தயார்படுத்தும் சமூகத் தொடர்பாளர்கள் இன்றைக்கு மிகவும் தேவைப்படுகிறார்கள். இவர்கள் மக்களிடையே நிலவி வரும் போர்க்குணத்தைத் தகர்த்தெறிய முடியும்.

இன்று தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடாமல், தைரியமாக பொது நன்மைக்காக உண்மையை வலிமையாக எடுத்துரைக்கும் ஊடகவியலாளர்கள் தேவை. 60 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல் தற்போது போர்கள் பற்றிய அச்சம் உலக மக்களிடையே தோன்றத் தொடங்கியுள்ளது. இது முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும். விரைவாக மாற்றப்பட வேண்டும். இது தொடர்பாடல் துறையிலும் நிகழ வேண்டும். போர்க் கருவிகளைப் போலவே இன்று கீழ்த்தரமான வார்த்தைகள் பகிரப்படுகின்றன. இது மிகவும் ஆபத்தானது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். போர் மற்றும் வன்முறையைத் தூண்டும் பேச்சுகள் உடனே நிறுத்தப்பட வேண்டும். தங்களது நலனுக்காக உண்மையைத் திரித்துக் கூறும் பிரச்சாரங்கள் கைவிடப்பட வேண்டும். மாறாக, மக்களிடையே நிலவும் வேறுபாடுகளைக் களைந்தெறியும் ஆற்றல் உள்ள தொடர்பாடல் வலுப்பெற வேண்டும்.

போர் என்னும் நஞ்சு, மனித இதயத்திலிருந்தே வருவதால், அமைதி என்பதும் மனித இதயத்தின் ஒரு முக்கிய முடிவெடுத்தலால்தான் இயலும் என்பதைக் கிறிஸ்தவர்களாகிய நாம் அறிந்திருக்கிறோம் (திருத்தந்தை பிரான்சிஸ் 56 ஆம் ஆண்டின் உலக அமைதிக்கான செய்தி, 01.01.2023). இன்று உலகில் நாம் அனுபவிப்பதைவிட மிகச் சிறந்த கலாச்சாரத்தை உருவாக்கவும், பிளவுண்டு கிடக்கும் உலகை ஒன்றுபடுத்தவும் வழிகாட்டுவதற்கான முடிவு மனித இதயத்திலிருந்தே எழும்ப வேண்டும். இதற்காக நாம் ஒவ்வொருவரும் முயற்சி எடுக்க வேண்டும். இதற்காக ஊடகத் துறையில் பணியாற்றுவோர் பெரும் பொறுப்புணர்வோடும், தமது ஊடகப் பணிகளை உலகிற்கான அர்ப்பண உணர்வோடும் நிறைவேற்ற அழைக்கப்படுகின்றனர்.

இறைத்தந்தையின் இதயத்திலிருந்து அனுப்பப்பட்ட வார்த்தையாகிய இயேசு கிறிஸ்து நமது தொடர்பாடல் பணிகளை நாம் தெளிவாகவும், திறந்த உள்ளத்தோடும் இதயத்திலிருந்து பேசுகின்றவர்களாகவும் ஆற்ற நமக்கு உதவிபுரிவாராக!

வார்த்தை மனிதர் ஆன இயேசு கிறிஸ்து, மக்களின் துடிக்கும் இதயங்களுக்குச் செவிமடுக்கவும், பகைமையையும், பிளவுகளையும் அகற்றி நாம் அனைவரும் சகோதரர்கள், சகோதரிகள் என்பதைக் கண்டுணரவும் உதவிபுரிவாராக!

அன்பும், உண்மையின் வார்த்தையுமான இயேசு கிறிஸ்து நாம் அன்பின் அடிப்படையில் உண்மையைப் பேசவும், ஒருவர் மற்றவர்களுக்குப் பாதுகாவலாகத் திகழவும் உதவுவாராக!

உரோமை புனித லாத்தரான் பெருங்கோவில்

22, ஜனவரி 2023

புனித பிரான்சிஸ் சலேசியார் நினைவு நாள்

திருத்தந்தை பிரான்சிஸ்