Namvazhvu
வாழ்வு வளம் பெற 2. அந்த மூன்று குரங்குகளைப் போல
Monday, 10 Jul 2023 05:53 am
Namvazhvu

Namvazhvu

இரண்டு நிமிடங்களில் ஓர் இமாலய சாதனையைச் செய்து முடித்துவிட்டது போல வெற்றிக்களிப்போடு தன் நண்பர்களைப் பார்க்கிறான் அந்த இளைஞன். “எல்லாம் ஆர்டர் பண்ணியாச்சு. அரை மணி நேரத்தில வந்துடும்என்கிறான்.

அவனது சாதனை என்ன? தனது கடன் அட்டையை (கிரெடிட் கார்ட்) பயன்படுத்திஸ்விக்கிமூலம் அவனுக்கும், நண்பர்களுக்கும் வேண்டிய உணவைக் கேட்டிருக்கிறான்.

மகாத்மாஎன்று நாம் போற்றும் காந்தி அவனதுசாதனையைப் பற்றி என்ன சொல்லி இருப்பார்? காந்தியை நன்கு படித்து, ஆய்வு செய்து காந்தியத்தைப் புரிந்துகொண்டவர்களே இந்தக் கேள்விக்குச் சரியான பதில் சொல்ல முடியும்.

பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் இத்தகையோரில் ஒருவர். அவர் சொல்வது என்ன தெரியுமா? “பிச்சை எடுத்து உண்பதற்கு மிக நெருக்கமானது, கடன் அட்டையைப் பயன்படுத்தி உணவு அருந்துவதும்என்கிறார் அவர். ‘காலச்சுவடு’ (ஜனவரி 2023) இதழில்நுகர்வுக் கால காந்திஎனும் தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில் இதனைச் சொல்கிறார்.

கடன் வாங்கி நுகர்வதை, காந்தி ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. நுகர்வது என்றால்...? உணவை ஸ்விக்கியில் ஆர்டர் பண்ணிய இளைஞனும், அவனது நண்பர்களும் அந்த உணவு வந்ததும் வெறுமனே நுகர்ந்து பார்த்துவிட்டு எறிந்துவிடப் போவதில்லை. நுகர்வது என்றால் பயன்படுத்துவது. ‘கன்ஸ்யூம்என்ற ஆங்கிலச் சொல்லைத்தான்நுகர்வுஎன்று மொழிபெயர்க்கிறோம். எனவே, கன்ஸ்யூமர்ஸ் நுகர்வோர். கன்ஸ்யூமரிசம் என்பது நுகர்வு வெறி.

ஆனால், கடன்வாங்கிச் செலவழிப்பது பற்றி இன்று கவலைப்படுவோர் இருக்கிறார்களா? ‘கடன் அன்பை முறிக்கும்என்று உணவகங்களில் எழுதி வைத்த காலம் ஒன்று இருந்தது. அதன் மூலம் என்ன சொல்ல விழைந்தார்கள்? ‘கடனால் உறவுச் சிக்கல்கள் ஏற்படுவது சகஜம். எனவே, காசு இருந்தால் சாப்பிடு. இல்லையென்றால் போய்விடு. கடன் கேட்காதேஎன்பதுதான் அந்த ஒற்றை வாக்கியத்திற்குப் பின்னால் ஒளிந்திருந்த செய்தி.

இன்றுஎங்கள் நிறுவனத்திடம் இருந்து கடன் வாங்கும் தகுதி உங்களுக்கு இருக்கிறதுஎன்று நிறுவனமே அழைத்துச் சொல்கிறது. ‘ஆஹா! கடன் பெறும் தகுதியை நான் பெற்றுவிட்டேன்!’ என்று நுகர்வோர் பெருமிதப்படும் அளவு நிலைமை மாறி இருப்பதைப் பொன்ராஜ் சுட்டிக்காட்டுகிறார்.

கடன் தருவதை - அதுவும் பல்லாண்டுகள் நீடிக்கப் போகிற வட்டிச் சுமையோடு கடன் தருவதை - ஏதோ மக்களுக்குப் பெரும் சேவை செய்வது போன்று விளம்பரப்படுத்துகிறார்கள். விளம்பரங்களுக்குக் கோடி கோடியாகச் செலவிடும் நிறுவனங்கள், என்ன எதிர்பார்ப்பில் அப்படிச் செய்கிறார்கள்? நுகர்வோரைப் பன்மடங்கு பெருக்கத்தான். தங்களின் வருமானத்தைக் கூட்டுவது தானே அவர்களின் ஒரே நோக்கம்?

நாம் நம்மையே விளம்பரப்படுத்திக் கொள்ளாவிட்டால், நம்மை யாரும் பொருட்படுத்தப் போவதில்லைஎன்று பலர் நம்பும் காலம் இது.

காங்கிரஸ் கட்சியினர் வெளிநாட்டுப் பத்திரிகைகளில் செய்த விளம்பரங்களுக்கான செலவு தேவையற்றதுஎன்று சொன்னவர் காந்தி என்பதையும் பொன்ராஜ் கட்டுரையில் நினைவுபடுத்துகிறார்.

எந்த ஒரு பொருளும் தனக்கு உண்மையிலேயே தேவையா? இல்லையா? என்று யோசிக்க விடாமல் செய்து, அதை வாங்கினால் மட்டுமே தனக்கு மகிழ்ச்சி என்று நினைக்க வைத்து, ஏமாற்றுவது எவ்வளவு பெரிய தீமை!

முந்தைய பொருள் உற்பத்தி முறை எத்தகைய பொருள்களை உருவாக்கித் தந்தது? அவை நிலைத்திருக்க வேண்டும், அவற்றின் ஆயுள் நீண்டதாக இருக்க வேண்டும் என்று முன்பு நம்பினார்கள். அதனால்தான் நம் முன்னோர் பயன்படுத்திய சில பொருள்கள் பல தலைமுறைகளைக் கடந்து, நம்மிடம் வந்து சேர்ந்தன. ஒரு தலைமுறையினர் இன்னொரு தலைமுறையினருக்குத் தொடர்ந்து தரக்கூடியவையாக அவை இருந்தன. ‘இது சாதாரணமான ஒன்று அல்ல; என் மூதாதையர் பத்திரமாய் வைத்திருந்து பாசத்தோடு தந்தது. இது பழையதாக இருக்கலாம்; ஆனால், இது விலைமதிப்பற்றதுஎன்று மதித்துப் போற்றிப் பாதுகாக்கும் அளவுக்கு அவற்றின் ஆயுள் நீடித்தன. பழம்பொருள்களின் மதிப்பு மட்டுமல்ல, பாரம்பரியத்தின் மதிப்பையும் அவை பெற்றன.

இன்று எத்தகைய பொருள்களை உற்பத்தி செய்து, ஓயாத விளம்பரங்கள் மூலம் ஆசைகளை யும், கனவுகளையும் நம் மனதில் உருவாக்கி, அவற்றை வாங்கி நுகரச் செய்துவிடுகிறார்கள்? இன்றைக்கு இவர்கள் நம்மை வாங்க வைப்பவை ஈசலுக்கு நிகரானவை. அவற்றின் ஆயுள் மிகக் குறைவு. நாம் வாங்கியவை நமது காலத்திலேயே மடிந்து, மறைந்து போகின்றன. இவற்றை எப்படி அடுத்தத் தலைமுறையினருக்கு அளிக்க முடியும்?

சில காணொளி விளையாட்டுகளைத் தீவிர வெறியோடு விளையாடும் சிறுவர்கள், எதனை வெற்றி என நினைக்கிறார்கள்? மிகக் குறைந்த நேரத்தில், மிக அதிகமான மனிதர்களைச் சுட்டுக் கொன்றழிப்பதைத்தான். ‘இதுதான் வெற்றி, இதுதான் சாதனைஎன்று அவனை நம்ப வைக்கும் விதத்தில், இந்த விளையாட்டுகள் உருவாக்கப்படுகின்றன. இப்படித்தான் நுகர்வு வெறி நம் மனநிலையை, நம் இயல்பையே மாற்றிவிடுகிறது.

நிறைய பணம் கொடுத்து ஒன்றை வாங்கிய பிறகு, இதனால் பெரிதாய்ப் பயன் ஒன்றும் இல்லையே என்பது புரிந்ததும் ஏமாற்றம் மேலிடுகிறது; சலிப்பு குடியேறி விடுகிறது.

இதனால்தான் நுகர்வு வெறிக்குப் பலியாகிவிடும் தற்கால மனிதர்கள் தன்னையும், தனது பிம்பத்தையும், தன்னைச் சூழ்ந்திருக்கும் உலகையும் நுகர்வதைத் தவிர, வேறு எந்த நோக்கமும் இல்லாதவர்களாக ஆகிவிடுகின்றனர் என்ற சோகமான உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார் பொன்ராஜ். தனக்குப் பயன் தராத, தான் நுகர முடியாத எதுவும் தனக்குத் தேவையில்லை, தான் அதைப் பொருட்படுத்த வேண்டியதே இல்லை என்பதே இவர்களின் மனநிலை.

திருமணம் இன்றியே சேர்ந்து வாழச் சம்மதித்து, உறவு என்றால் இதுதான் என்று உணர வைத்த பெண்ணிடம், ஓராண்டு முடிவதற்குள்இனி நாம் பிரிந்து விடுவதே நல்லதுஎன்று இந்தத் தலைமுறையினர் தயக்கமின்றிச் சொல்வதும் இதனால் தான். நோய்வாய்ப்பட்டோரின் அனைத்து உடல், உளச்சிக்கல்களை அனுபவித்தாலும், மருந்தென எதைக் கொடுத்தாலும், தனக்கு நோயே இல்லை என்று மறுப்பவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். தன்னலம் ஒன்றே இவர்களுக்கு உலகை அளக்கும் கருவி.

காந்தியின் மூன்று குரங்குகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா? ஒன்று, கண்களைப் பொத்திக்கொண்டும்; இரண்டு, இரு காதுகளைப் பொத்திக்கொண்டும்; இன்னொன்று தன் வாயைப் பொத்திக்கொண்டும் இருக்கும் குரங்குப் பொம்மைகள் இவை.

இது நல்லது, இதனால் உனக்கு நன்மை, ஊருக்கு நன்மை, உலகுக்கு நன்மைஎன்று யார் சொன்னாலும், இத்தகைய அறிவுரைகளைக் கேட்க விரும்பாத, அறிவுரை சொல்பவரைப் பார்க்க விரும்பாத, அவருக்குப் பதில் சொல்லவும் விரும்பாத குரங்குகளைப் போல, நுகர்வு வெறி உருவாக்கும் தற்கால மனிதர்களாகிய நாம் ஆகி விடுகிறோம் என்கிறார் காந்தியைப் படித்த பாலசுப்ரமணியன் பொன்ராஜ்.

மகாத்மாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவற்றில் முக்கியமான ஒன்று இது. மிகக் கவனமாக இருந்து நுகர்வு வெறியினின்று நம்மை நாம் பாதுகாத்துக் கொண்டால் நம் வாழ்வு இன்னும் வளம் பெறும்.