Namvazhvu
23.07.2023 உலக தாத்தா-பாட்டிகள் தினம்
Thursday, 20 Jul 2023 12:02 pm
Namvazhvu

Namvazhvu

தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்

ஓடியாடி உழைத்த கால்கள் சற்று ஓய்வு எடுக்கும் காலம் முதுமைக் காலம். இனிமையாக ஓய்வு எடுக்கும் இக்காலம், பெரும்பாலும் துயரம் நிறைந்ததாகவும், சுமையானதாகவுமே அமைகின்றது. குடும்பத்தின் சுமைதாங்கிகளான முதியோரை இன்று சுமைகளாகப் பார்ப்பது மிகவும் வேதனை தருவதும், மனிதாபிமானமற்ற செயலுமாகும். தங்கள் பிள்ளைகளுக்குக் கல்வியையும், நல்ல வாழ்க்கைத் துணையையும், வளமான எதிர்காலத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு, தங்களுக்கென்று ஒரு வாழ்க்கையே உண்டு என்பதை மறந்து, தியாக மனநிலையுடன் வாழும் வயது முதிர்ந்த பெற்றோர்களின் நிலை இன்று அந்தோ பரிதாபம்! முதியோரை மதிப்பதும், மாண்போடு நடத்துவதும் அவர்களுக்கான உரிமை. இவை மறுக்கப்படும்போது குடும்பமும், திரு அவையும் சீர் குலைகிறது. இச்சூழலில் மூன்றாம் உலக தாத்தா-பாட்டிகள் தினத்தைக் குறித்த திருத்தந்தையின் படிப்பினைகள் நாம் பெறும் பேறுபலன்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

இன்றைய நவீன காலத்தில், முதியோரின் ஆயுள்காலம் நீண்டு கொண்டே செல்கின்றது. ஆனால், இச்சமூகம் முதியோருக்குரிய இடத்தை வழங்க மறுப்பதுடன், அவர்களை ஒரு சுமையாகக் கருதுகின்றது. ஒரு சமூகம் தன் மூத்தக் குடிமக்களை எவ்வாறு நடத்துகின்றதோ அதை வைத்துதான், அந்தச் சமூகத்தின் தரத்தை நாம் கணிக்க முடியும். எளிதில் பாதிப்படையக்கூடிய நிலையில் இருக்கும் முதியோர் குறிப்பாக, தனிமையில் மற்றும் நோயில் இருப்போர் நமது சிறப்புக் கவனத்துக்கும், அக்கறைக்கும் உரியவர்கள். இவர்கள் சுமையானவர்கள் அல்லர்; மாறாக, விவிலியம் எடுத்துக்கூறுவது போன்று ‘ஞானத்தின் சேமிப்புக் கிடங்குகள்’ (சீரா 8:9). எனவேதான் நம் திருத்தந்தை பிரான்சிஸ், 2021 ஆம் ஆண்டு திரு அவையில் முதலாவது தாத்தா-பாட்டிகள் தினத்தை நிறுவினார். அதன்படி இயேசுவின் தாத்தா-பாட்டியும், அன்னை மரியாவின் தாயும்-தந்தையுமான சுவக்கின்-அன்னா இவர்களின் திருவிழாவை மையமாகக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதம் 4 ஆம் ஞாயிறை ‘உலக தாத்தா-பாட்டிகள்’ தினமாகக் கொண்டாட அழைப்பு விடுத்தார். அதன்படி இந்த ஆண்டு ஜூலை 23 ஆம் நாள் உலக அளவில் மூன்றாம் ஆண்டு தாத்தா - பாட்டிகள் தினத்தைக் கொண்டாடுகின்றோம்.

‘தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்’ என்பதே இந்த ஆண்டின் கருப் பொருளாகும். ‘அவரது இரக்கம் தலைமுறை தலைமுறையாய்’ என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட தனது கடிதத்தில், மரியா மற்றும் எலிசபெத்தின் சந்திப்பைக் குறித்துக் கூறுகையில், “தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்ட எலிசபெத்து உரத்தக் குரலில், ‘பெண்களுக்குள் நீர் ஆசிபெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசிபெற்றதே (லூக் 1:42) என்று கூறிய வார்த்தைகள், பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் நமது தினசரி இறை வேண்டலில் எதிரொலிக்கின்றன” என்றார்.

தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மரியா இச்சந்திப்பின் வழியாக, ‘இறைவன் தலைமுறை தலைமுறையாய் இரக்கம் காட்டி வருகிறார்’ என அறிக்கையிட தூய ஆவியாரே அவரைத் தூண்டியுள்ளார். தாத்தா-பாட்டி மற்றும் பேரக்குழந்தைகள், சிறியவர்கள் மற்றும் பெரியோர்கள் போன்ற வெவ்வேறு தலைமுறைகளுக்கு இடையே நடைபெறும் பயனுள்ள சந்திப்பின் வழியாக, அதே ஆவியானவர் நமக்கும் ஆசியளித்து உதவி செய்கிறார்.

எலிசபெத்தை மரியா ‘விரைந்து’ (1:39) சென்று சந்திக்கிறார். இது முதியோர்களையும், இளைஞர்களையும் இணைக்கும் உறவைப் பற்றிச் சிந்திக்க நம்மை அழைக்கின்றது. மேலும், இளைஞர்கள் வயதானவர்களோடு கொண்டுள்ள நட்பு, அவர்களின் வாழ்க்கையை நிகழ்காலத்தின் அடிப்படையில் பார்க்கவும், எல்லாம் தங்களின் திறன்களைப் பொறுத்தது அல்ல என்பதை உணரவும் உதவுகிறது. முதியோர்களின் வாழ்வில் இளைஞர்களின் உடனிருப்பு அவர்களுக்குத் தங்கள் கனவுகள் நிறைவேறும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது.

மேலும், “நமது வாழ்க்கையை முழுமையாக வாழவேண்டும் எனவும், நமது மிகப்பெரிய நம்பிக்கைகள் மற்றும் கனவுகள் உடனடியாக நிறைவேறுவதில்லை; மாறாக, நமது முதிர்ச்சியான செயல்பாடுகள், உரையாடல்கள் மற்றும் பிறருடனான உறவின் மூலம் என்பதை நினைவில் கொள்ளவும், பணம் மற்றும் உடைமைகளை வைத்துக்கொண்டு, அதில் மட்டுமே கவனம் செலுத்துபவர்கள், கடவுள் எவ்வாறு செயல்படுகிறார் என்பதில் பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள்” எனவும் இன்றைய இளைஞர்களுக்கு அறிவூட்டுகிறார் திருத்தந்தை.

2013 ஆம் ஆண்டு தான் எழுதிய ‘நற்செய்தியின் மகிழ்ச்சி’ (எண் 53) எனும் திருத்தூது ஊக்கவுரையில், ‘பங்குச் சந்தையில் இரு புள்ளிகள் குறைந்துவிட்டன என்றதுமே அது கவனிக்கப்பட வேண்டிய செய்தி என்றால், முதியோர் ஒருவர் தங்க வீடின்றி குளிரில் வாடி இறந்தால் அது கவனிக்க வேண்டிய செய்தி ஆகாதா?’ என்று கேள்வி எழுப்புகிறார். ‘வயதான நம் பெற்றோரை அன்புடன் சந்திப்பதன் மூலம், கடவுளின் நான்காவது கட்ட ளையை நாம் கடைப்பிடிக்க முடியும்’ என்கிறார். மேலும், ‘முதியோரைப் புறம்பே தள்ளுவது என்பது ஒரு கலாச்சாரக் கொலையாகும்’ என்கிறார்.

2015 ஆம் ஆண்டு 8வது உலகக் குடும்பங்கள் மாநாட்டுத் திருவிழிப்பின்போது, ‘தாத்தா-பாட்டி கள் குடும்பத்தில் வாழும் நினைவுகள். இவர்கள் இறைநம்பிக்கையை நமக்குள் ஊட்டியவர்கள். எனவே, வயதானவர்களைப் பராமரியுங்கள்’ எனக் கேட்டுக்கொண்டார். மேலும், ‘தாத்தா-பாட்டிகளை வேராகவும், பெற்றோரை அடிமரமாகவும் கொண்டு விளங்கும் குடும்பங்கள் ஒருமைப்பாடு, ஒன்றிப்பு, நம்பிக்கை, ஆதரவு, பாதுகாப்பு, மகிழ்வு மற்றும் நட்புறவில் திளைத்து, குழந்தைகளின் வளர்ச்சியில் பங்குகொள்கின்றன’ என்கிறார்.

ஆண்டவராகிய கடவுள் நம்மிடம் விரும்புவது, முதியோர்களைக் கைவிடவோ அல்லது அவர்களை வாழ்க்கையின் விளிம்பிற்குத் தள்ளவோ கூடாது என்பதுதான். ஆனால், இன்று முதியோர்களைக் கைவிடுவதும், அவர்களைப் புறந்தள்ளுவதுமே அடிக்கடி நடக்கின்ற ஒன்றாக இருக்கிறது. குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் அவர்களின் இருப்பு விலைமதிப்பில்லாத ஒன்றாகும். ஏனெனில், பாரம்பரிய வரலாற்றையும், அதன் வேர்களையும் பாதுகாக்க உறுதிபூண்டுள்ள மக்களின் ஒரு பகுதியாக முதியோர்கள் இருக்கின்றனர். கடவுளின் புனித மக்களுக்குத் தேவையான வரத்தை முதியோரிடமிருந்தே பெறுகின்றோம். அவர்கள் எதிர் காலத்தைக் கட்டியெழுப்பத் தேவையான கடந்த காலத்தை நிகழ்காலத்தில் தருகின்றனர். தாத்தா-பாட்டி மற்றும் முதியோர்களுக்கான உலக தினம் அவர்களுக்கும், திரு அவைக்கும் விலைமதிப்பில்லா நம்பிக்கையின் அடையாளமாக இருக்க வேண்டும். இந்நாள் இளைஞர்கள் மற்றும் முதியோர்களுக்கான மகிழ்ச்சியான மற்றும் உறவுகளைப் புதுப்பித்துக்கொள்ளும் வாய்ப்பாகவும் அமையட்டும்.