கோயம்புத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு-புதுவை ஆயர்கள் பேரவையின் கூட்டத்தில், உலக ஆயர்கள் மாமன்றத்திற்கான கலந்தாய்வு வரைவு - ‘Instrumentum Laboris’ எனும் ஆவணத்தின் இந்திய பதிப்பானது, இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் துணைத் தலைவரும், தமிழக ஆயர் கள் பேரவையின் தலைவரும், சென்னை - மயிலை உயர் மறைமாவட்டத்தின் பேராயருமான மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களால் வெளியிடப்பட்டது.
இந்த ஆவணம், உலகளாவிய திரு அவையின் ஒட்டுமொத்த மறைமாவட்டங்களிலும் உள்ள நம்பிக்கையாளர்கள் சந்திக்கும் இறை அனுபவங்களை, துயரங்களை, சவால்களை, குறிப்பாக போர், வன்முறை, பயங்கரவாதம், வெப்ப நிலை மாற்றம், பொருளாதாரச் சமச்சீரின்மை, சமூகப் பாகுபாடு, சுரண்டல்கள், சமய அச்சுறுத்தல் மற்றும் உயிர்த் தியாகம் போன்றவற்றைத் தெளிவுபடுத்துகிறது. இது உலக ஆயர்கள் மாமன்றத்தின் அமர்வுகளில் விவாதங்களுக்கான கையேடாக அமையவிருக்கின்றது.
‘Instrumentum Laboris’ ஒரு பரந்த கூட்டொருங்கியக்கப் பயணத்தின் கனி! இது ஒட்டுமொத்தத் திரு அவையாலான ஓர் ஆவணம். மறைமாவட்ட அளவில், மண்டல அளவில், தேசிய அளவில் மற்றும் கண்டங்கள் அளவில் மாமன்ற செயல்முறையில் பங்கெடுத்தவர்கள் அனைவரும் இந்த ஆவணத்தின் இணை ஆசிரியர்கள்.
கூட்டொருங்கியக்கத் திரு அவைக்கான மாமன்றம் எல்லா மறைமாவட்டங்களிலும் நடத்தப்பட்டது. தேசிய மாமன்றக் கலந்தாய்வுக் கூட்டமானது 2022, ஜூலை 26 ஆம் முதல் தேதி 28 ஆம் தேதி வரை பெங்களூரில் நடத்தப்பட்டது. ஆசிய கண்டங்களுக்கான மாமன்றம் பாங்காக்கில் 2023, பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை இடம்பெற்றது. இவற்றின் பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகள் இந்த ஆவணத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
உலக ஆயர்கள் மாமன்றத்தின் 16-வது பொதுக் கூட்டத்தின் முதல் அமர்வானது 2023, அக்டோபர் 4 ஆம் தேதியில் இருந்து 29 ஆம் தேதி வரை வத்திக்கானில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கர்தினால் பிலிப்நேரி பெராரே (CCBI தலைவர் மற்றும் கோவா-டாமன் பேராயர்), கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் (மும்பைப் பேராயர்), கர்தினால் ஆண்டனி பூலா (ஹைதராபாத் பேராயர்), கர்தினால் ஜார்ஜ் மார் ஆலஞ்சேரி (சீரோ-மலபார் திரு அவையின் முதன்மைப் பேராயர்), கர்தினால் பசேலியோஸ் மார் கிளீமிஸ் (சீரோ-மலங்கரா திரு அவையின் முதன்மைப் பேராயர்), பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி (CCBI துணைத்தலைவர் மற்றும் சென்னை-மயிலை பேராயர்), பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத் (திருச்சூர் பேராயர்), ஆயர் ஜோசப் பாம்ப்ளனி (தெலிச்சேரி ஆயர்), ஆயர் அலெக்ஸ் ஜோசப் வடக்கும்தலா (கண்ணூர் ஆயர்), அருள்சகோதரி லலிதா தாமஸ் S.J.T., (பெங்களூர் ஜோதிநிவாஸ் கல்லூரி முதல்வர்), அருள்சகோதரி மரிய நிர்மாலினி A.C., (தலைமை அன்னை, அப்போஸ்தலிக்க கார்மல் அருள்சகோதரிகள்), அருள்சகோதரி டானியா ஜார்ஜ், M.Id, ஆகியோர் இந்தியாவில் இருந்து நடக்கவிருக் கும் இந்த மாமன்றத்தில் பங்கேற்க உள்ளனர்.