அவர் நல்லவர்தான். யாருக்கும் தீங்கு நினைக்காத நல்ல மனிதர்தான். ஆனால், தொலைவில் அவரைக் கண்டவுடனே ஓடி ஒளிந்து கொண்டவர்கள் பலர் இருந்தனர். அவர்களை அச்சுறுத்தியது என்ன தெரியுமா?
யாரைப் பார்த்தாலும் அவர்களை நிறுத்தி, ‘தொணதொண’வென்று வெகு நேரம் பேசுகின்ற அவரது வாடிக்கைக் குணம்தான் இப்படிப் பலரை அவரிடம் இருந்து துரத்தியது.
நாள்கள் செல்லச் செல்ல அவருக்கு இது புரிய வந்தாலும், அதிலிருந்து விடுபட என்ன செய்வது என்பது அவருக்குத் தெரியவில்லை.
இப்படி விடாமல் தொடர்ந்து வெகு நேரம் பேசிக்கொண்டே இருக்கும் மனிதர்களை ஆங்கிலத்தில் ‘டாக்கஹாலிக்ஸ்’ என்கின்றனர். பேச்சே இவர்களுக்குப் போதைப்பொருள் போல ஆகிவிடுகிறது. இவர்களை எங்கும் பார்க்கலாம்.
திங்கள் அன்று அலுவலகம் வந்ததும் சனி, ஞாயிறன்று குடும்பத்தோடு எங்கே போனார், யாரைப் பார்த்தார், என்ன செய்தார், என்னவெல்லாம் உண்டார், எதையெல்லாம் வாங்கினார்... என்று விலாவாரியாகச் சொல்லி, அலுவலகத்தில் உள்ள மற்ற அனைவரையும் துன்புறுத்தும் பெண் உங்கள் அலுவலகத்தில் இருக்கலாம்.
நீங்கள் பங்கேற்கும் விருந்தில் மற்றவர்களின் குரலை எல்லாம் அமுக்கி, அடக்கி, ஒடுக்கும் அளவுக்கு உரத்தக் குரலில் பேசிக்கொண்டே இருக்கும் நபரைப் பார்க்கலாம். உங்கள் உறவினர்கள், குடும்பத்தில் ஒருவருக்குக் கூட இந்தப் பிரச்சினை இருக்கலாம்.
இப்படி வெகு நேரம் பேசி, எல்லோரையும் ‘அறுத்து’ துன்புறுத்தும் நோய் உள்ளோர் மக்கள் விரும்பிக் கேட்கும் பிரபல பேச்சாளர்களாக ஆக இயலாது. ஆனால், வகிக்கும் பதவி, செய்யும் பணி இவற்றால் அடிக்கடிப் பேச வருவோரிடம் இந்த நோய் இருந்தால், அவர்கள் நம்மில் தோற்றுவிக்கும் அத்தனை எதிர்மறை உணர்வுகளையும் சொல்லாமல் உள்ளிருத்திக் கொண்டு, அவர்கள் பேச்சைக் கேட்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லாமல் போகலாம்.
அரசியல் மேடைகளில் இப்படிப் பேசும் ‘பயங்கரவாதி’களில் ஒருவரைப் பற்றிய நகைச்சுவைத் துணுக்கை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
அவர் பேசிக்கொண்டே இருக்கிறார். கூட்டத்தில் இருந்த நபர்கள் வரிசையாக எழுந்து போய்க் கொண்டே இருந்தாலும், நமது பேச்சாளர் பெருமகன் நிறுத்துவதாக இல்லை. கடைசியில் ஒரே ஓர் ஆள் அவர் முன்னே அமர்ந்துகொண்டு, அவர் முகத்தையே பார்த்த வண்ணம் இருக்கிறார். ‘மற்ற அனைவரும் போய்விட்டார்கள். இந்த ஓர் ஆள் மட்டுமே உட்கார்ந்து என் முகத்தையே பார்த்துக் கொண்டு, இவ்வளவு கவனமாக எனது பேச்சைக் கேட்கிறார் என்றால், இவர் எனது தீவிர ரசிகராக இருக்க வேண்டும்’ என்று நெகிழ்ந்து போய் பேச்சை நிறுத்திவிட்டு, அவரைப் பார்த்து, “நீங்கள் என் தீவிர ரசிகராக இருக்க வேண்டும்” என்கிறார். முன்னே அமர்ந்திருந்த அந்த ஆள் “அய்யய்யோ. அப்படியெல்லாம் இல்லைங்க. நான்தான் மைக் செட்டுக்குப் பொறுப்பு. எப்ப நீங்க முடிப்பீங்க, எப்ப நான் எல்லாத்தையும் எடுத்துட்டு வீட்டுக்குப் போகப் போறேன்னு யோசிச்சிட்டு இருக்கேன்” என்கிறார்.
இப்படி அளவுக்கு மீறி, விடாமல் தொடர்ந்து பேசுவது, ஏன் ஒரு நோயோடு ஒப்பிடக்கூடிய அளவுக்கு பிரச்சினையாகி விடுகிறது? இது கேட்போருக்கு அலுப்பூட்டுகிறது, சலிப்பூட்டுகிறது, வெறுப்பூட்டுகிறது, எரிச்சலை ஏற்படுத்துகிறது. இவர்கள் பேசிக்கொண்டே இருப்பதால், என்ன பேசுகிறோம் என்பதே புரிவதில்லை. கவனமாய்ப் பாதுகாக்க வேண்டிய இரகசியங்களை அவிழ்த்து விட்டு விடுவார்கள். தேவையில்லாத காரியங்களைச் சொல்லி பிறரின் நேரத்தை வீணாக்கி விட்டு, அது தெரியாமலேயே இருப்பார்கள். சொல்லக் கூடாதவற்றைச் சொல்லி பிறரது கோபத்தை, பகையைச் சம்பாதித்துக் கொள்வார்கள்.
நட்புகள், திருமண வாழ்வு, அலுவலகத்தில் நல்ல பெயர், பதவி உயர்வு போன்ற முக்கியமான காரியங்களைக் கூட இந்த நோய் அழித்துவிடலாம். இத்தனை ஆபத்துகள் இருப்பதால்தான், இந்த நோய் நம்மைப் பாதிக்காமல் பாதுகாப்பதும் ஏற்கெனவே நாம் பாதிக்கப்பட்டவர் என்றால் அதனின்று மீண்டு வருவதும் மிக அவசியம்.
எப்படி மீள்வது?
இந்தப் பிரச்சினையால் பெரிதும் பாதிக்கப்பட்டவர் டேன் லயன்ஸ். இவரது ‘தொண தொண’ப்பைத் தாங்க முடியாமல் இவரது மனைவி தனியே பிரிந்து சென்று விட்டார். தாய் இப்படி தனியே சென்றதற்கு, இவரின் இடைவிடாப் பேச்சுதான் காரணம் என்று இவரது பிள்ளைகளே குற்றம் சாட்டினர். இவரது வேலை பறிபோனது. இதற்குப் பிறகுதான் இத்தனைக்கும் காரணம், தன்னால் நிறுத்த முடியாத பேச்சுதான் என்பதை இவர் உணர்ந்தார். தாயும், பிள்ளைகளும் சேர்ந்து வாழட்டும் என்று தன் மனைவியை அழைத்து பிள்ளைகளோடு தங்கச் செய்துவிட்டு, இவர் வெளியேறினார். வாடகை வீட்டில் தனியே தங்கிக் கொண்டு, இந்த நோயினின்று மீள்வதற்கான வழிகள் பற்றி தீவிர ஆய்வில் ஈடுபட்டார். ஆய்வின் விளைவாகத் தானே சில வழிமுறைகளை வகுத்துக் கொண்டு அவற்றைக் கவனமாகப் பின்பற்றினார்.
முற்றிலுமாக இந்த பேச்சுப் போதை நோயினின்று மீண்ட பிறகு, இதே பிரச்சினையால் வாடும் மனிதர்களுக்கு உதவிட ஆங்கிலத்தில் நூல் ஒன்று எழுதினார். அதன் பெயர் ‘எஸ்.டி.எஃப்.யூ: த பவர் ஆஃப் கீப்பிங் யுவர் மவுத் ஷட் இன் ஆன் என்ட்லெஸ்லி நாய்சி வெர்ல்ட்’ (வாயை மூடு: சத்தம் முடியாத உலகில் வாயை மூடிக்கொள்ளும் ஆற்றல்).
இந்த நூலில் இந்த நோயாளர்களுக்கு அவர் சொல்லும் வழிமுறைகள் என்ன?
முதலாவது, ‘எப்போதெல்லாம் எதுவும் பேசாமலே இருக்க முடியுமோ, அப்போதெல்லாம் எதுவும் பேசாதீர்கள். பணத்தை யாராவது வாரி இறைத்துக் கொண்டே செல்வார்களா? தேவையானபோது மட்டும் பையில் இருந்து பணத்தை எடுத்துச் செலவு செய்வது போல, வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். இத்தருணத்தில் பேச எந்தத் தேவையும் இல்லை எனும்போதெல்லாம், வாயை இறுக மூடிக்கொள்ளுங்கள்’ என்கிறார் லயன்ஸ்.
அவரது இரண்டாவது அறிவுரை, ‘சில வாக்கியங்கள் பேசிய பிறகு நிறுத்துங்கள். ஆழமாகச் சுவாசியுங்கள். நீங்கள் சொன்னதை அருகில் அமர்ந்திருப்பவர் உள்வாங்கி, புரிந்து கொள்வதற்கு அவருக்கு நேரம் கொடுங்கள்’.
மூன்றாவதாக, ‘தொலைபேசியில் பேசுவதை, குறுஞ்செய்திகள் அனுப்புவதை, புகைப்படங்களைப் பதிவு செய்வதை எல்லாம் குறையுங்கள்’. நான்காவதாக, ‘ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது எதுவும் சொல்லாமல், செய்யாமல் அமைதியாக இருங்கள்’. ஐந்தாவது, ‘பிறர் பேசும் போது அவர்கள் சொல்வதைப் பொறுமையாக, கவனமாகக் கேட்கும் கலையைக் கற்றுக்கொள்ளுங்கள்.’
இவற்றை நுணுக்கமாக அவர் கடைப்பிடிக்கத் தொடங்கிய சில மாதங்களிலே, அவர் இழந்தவை எல்லாம் திரும்பக் கிடைத்தன. இவரில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைப் பார்த்துவிட்டு மனைவியும்-பிள்ளைகளும் தங்களோடு சேர்ந்து வாழுமாறு அழைத்தனர். பிரிந்திருந்த மனைவி முன்பைவிட பிரியமாக இருப்பதை அவர் உணர்ந்தார். பள்ளியில் படிக்கும் மகள், தான் சொல்வதை எல்லாம் கவனமாகக் கேட்கும் தந்தையிடம் மனம் விட்டுப் பேசுவதைப் பார்த்தார்.
எனவே, இந்த வழிமுறைகளைப் பின்பற்றி இடைவிடாமல் பேசிக்கொண்டே இருக்கும் நோயினின்று தப்பித்தால், அல்லது மீண்டு விட்டால் நம் வாழ்க்கை மேலும் வளம் பெறும்.