திருப்பலி முன்னுரை
இன்று நாம் பொதுக்காலத்தின் 16 வது ஞாயிறு திருவழிபாட்டினை சிறப்பிக்கின்றோம். இஞ்ஞாயிறை தாத்தா-பாட்டி மற்றும் முதியோர்கள் தினமாக கொண்டாட நம் திரு அவை நமக்கு அழைப்பு விடுக்கின்றது. இன்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம் அனைவரையும் இறைவார்த்தைப்படி நடந்து பலன் தரக்கூடிய மக்களாக வாழ்ந்து அவரின் ஆட்சியில் பங்கு பெற்றிட பணிக்கின்றார். களைகளும் பயிர் செடிகளும் ஒன்றாக வளர்வது இயல்பு. உண்மையில் ஒரு களைச்செடி பயிர் செடியாக மாற முடியாது. ஆனால் ஒரு பயிர் செடி களையாக மாறுவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. ஆனால் மனித வாழ்க்கையை பொருத்தவரை களைகளாக, தீயோனைச் சார்ந்தவர்களாக இருப்பவர்கள், பயிர் செடிகளாக, ஆண்டவரைச் சார்ந்தவர்களாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பயிர்களையும் களைகளையும் அதாவது தீயோரையும் நல்லோரையும் ஆண்டவர் ஒரே உலகில் வளரச் செய்கிறார், வாழச் செய்கிறார். இறுதி நாளில் இந்தக் களைகள், தீயோர்கள், பயிர் செடிகளாக, நல்லவர்களாக மாறுவார்கள் என்று பொறுமையாகக் காத்துக் கொண்டிருக்கிறார். நல்லவர்களாக வாழ்பவர்களுக்கும் தங்களை மாற்றிக் கொள்கிறவர்களுக்கும் விண்ணரசிலே இடம் தருகிறார். இறுதிவரை களைகளாகவே, தங்கள் வாழ்க்கையைத் தொடர்கிறவர்களை அழியா நெருப்பில் சுட்டெரிக்கிறார். இன்று நாம் யார்? களஞ்சியத்தில், விண்ணரசில் சேர்த்து வைக்கப்படும் நல்ல பயிர்களா அல்லது நெருப்பில் சுட்டெரிக்கப்படும் பதர்களா என்று சிந்திப்போம். மேலும் நமது பங்கிலும் இல்லத்திலும் இருந்து நமக்கு நல்வழி காட்டும் நம் தாத்தா-பாட்டி மற்றும் முதியோர்களுக்குச் சிறப்பாக இத்திருப்பலியில் மன்றாடுவோம்.
முதல் வாசக முன்னுரை
ஆண்டவர் ஆற்றல் மிக்கவர், இருப்பினும் பாவிகளாகிய நமக்கு கனிவான தீர்ப்பை வழங்குகிறார். அவர் விரும்பியதை செய்ய முடியும், இருப்பினும் நம் பாவங்களை மன்னிக்கிறார் என்றுரைக்கும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
நாம் இறைவனிடம் என்ன கேட்க வேண்டும், அதை எப்படி கேட்க வேண்டும் என்பதையெல்லாம் கற்றுக் கொடுத்து, நமக்காக தந்தை கடவுளிடம் தூய ஆவியார் தொடர்ந்து பரிந்து பேசுகிறார் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.
மன்றாட்டுகள்
நம்பிக்கையை நல்குபவரே! உமது திரு அவையை வழிநடத்தும் திருப்பணியாளர்கள், தங்களது செயல்களினால் உமது மக்களின் நம்பிக்கையை பெற்று, அவர்களை பயிர்களாக உமது களஞ்சியத்தில் சேர்த்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
அமைதியை அருள்பவரே! வேண்டுமென்றே, திட்டமிட்டு, மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், சாதியத்தின் பெயரால் எம் நாடுகளில் நடத்தப்படும் வன்முறைகள் முடிவுக்கு வந்து, அமைதி அருளும் நாடாக எம் தாய் திருநாடு மாறிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
ஞானத்தை கொடுப்பவரே! நீர் கொடையாக கொடுத்திருக்கும் தாத்தா பாட்டிகளுக்காக, முதியோர்களுக்காக, உமக்கு நன்றி கூறுகிறோம். தொடர்ந்து ஆசிர்வதித்து உடல், ஆன்ம நலன்களை தந்து நீர் இவர்களை வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
நலம் பல தருபவரே! தங்கள் பிள்ளைகளால் புறம்பே தள்ளப்பட்டு வழியோரங்களிலும், முதியோர் இல்லங்களிலும் வாடிக் கொண்டிருக்கும் உள்ளங்களுக்கு உமது கனிவான அன்பை, இரக்கத்தை பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
வரங்களை வழங்குபவரே! நீர் நல்ல பயிர்களாக எங்களை இவ்வுலகில் படைக்கிறீர், நாங்களோ பயனற்ற பதர்களாக மாறிப் போகிறோம். இனிவரும் காலங்களில் உமது வார்த்தையைக் கடைப்பிடித்து நல்லவர்களாக நாங்கள் மாறிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.