Namvazhvu
23 ஜூலை, 2023 - ஆண்டின் பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு சாஞா 12:13,16-19 உரோ 8:26-27 மத் 13:24-43
Saturday, 22 Jul 2023 07:15 am
Namvazhvu

Namvazhvu

இரு விதைகளும் வினைகளும்

நாம் கடந்த ஞாயிறு அன்று வாசித்தஆறு வகை நிலங்களின்தொடர்ச்சியாக இருக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இந்த நற்செய்தி வாசகம் மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணக்கிடக்கிறது. இதன் பின்புலம் இதுதான். மத்தேயு நற்செய்தியாளரின் குழுமத்தில், இருவகையான மனிதர்கள் இருக்கின்றார்கள். நேர்மையாளர்கள், பொல்லாதவர்கள். பொல்லாதவர்களைத் தங்கள் குழுமத்திலிருந்து வெளியேற்றுவதா? அல்லது அவர்களை அப்படியே வைத்துக்கொள்வதா? வெளியேற்றுவது என்றால், எப்போது வெளியேற்றுவது? வைத்துக் கொள்வது என்றால், எதுவரை வைத்துக்கொள்வது? அவர்களை என்ன செய்வது? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக அமைகின்றது இன்றைய நற்செய்தி வாசகம்.

வயலில் தோன்றிய களைகள் உவமை

வழக்கமாக, மத்தேயு நற்செய்தியாளரின் உவமைப் பொழிவில் சொல்லப்பட்டுள்ள உவமைகள் இறையாட்சி பற்றிய உவமைகளாக மட்டுமே இருக்கின்றன. ஆனால், இந்த உவமை இரண்டு காரணங்களுக்காகச் சொல்லப்படுகிறது: ஒன்று, இறையாட்சி அல்லது விண்ணரசு என்றால் என்ன என்பதை அறிய. இரண்டு, இறுதி நாள் நிகழ்வுகளைப் பற்றியது அல்லது இறுதித் தீர்ப்பின் போது நடப்பது பற்றியது.

இன்றைய உவ மையில், எல்லாம் இரட்டைப் படையில் இருக்கின்றன: விதைகள் இருவகை: கோதுமை, களை. விதைப்பவர்கள் இருவகை: நிலக்கிழார், பகைவன். எதிர்வினைகள் இருவகை: அனைத்தையும் வளர விடுவது, களைகளைப் பறிப்பது. விளைவுகள் இருவகை: கோதுமை களஞ்சியத்தில் சேர்க்கப்படுகிறது, களைகள் நெருப்பில் எரிக்கப்படுகின்றன. உணர்வுகள் இருவகை: நிலக்கிழாரின் பொறுமை, வேலையாள்களின் அவசரம். மனிதர்கள் இருவகை: நேர்மையாளர், நெறிகெட்டோர். வாழ்வியல் நிலை இருவகை: கடவுளின் பொறுமை, மனித அவசரம்.

கடவுளின் பொறுமை, மனித அவசரம்என்னும் இறுதி இணையை மையமாக வைத்து, இன்றைய நாள் வாசகங்களைப் புரிந்துகொள்வோம்.

வயலில் களைகளைக் கண்ட பணியாளர்களுக்குக் கோபம் வருகிறது. தங்கள் தலைவரிடம் ஓடி, ‘வயலில் களைகள் காணப்படுவது எப்படி? நாங்கள் போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வரலாமா?’ எனக் கேட்கின்றனர். பணியாளர்களின் ஆர்வக் கோளாறைக் கண்டுபிடித்த அவர், ‘வேண்டாம்! இவ்வளவு ஆர்வத்திலும் அவசரத்திலும் நீங்கள் கோதுமையையும் பறித்துவிடுவீர்கள்!’ என்கிறார்.

இத்தலைவர் வெறும் விவசாயி மட்டுமல்ல; மாறாக, மேலாண்மையியலில் சிறந்தவரும் கூட. அதாவது, வயலின் ஒரு பாத்தியில் 50 கோதுமைச் செடிகள், 50 களைகள் இருக்கின்றன என வைத்துக் கொள்வோம். முளைத்து வருகின்ற பருவத்தில் கோதுமைச் செடிகளும், களைகளும் ஒன்றுபோலத் தெரியும். 40 களைகளோடு சேர்த்து 10 கோதுமைச் செடிகளையும் பறித்துவிட்டால், தலைவருக்கு 10 செடிகள் நஷ்டம். ஆனால், வேலைக்காரர்கள் ரொம்ப எளிதாகஸாரி!’ சொல்லி ஒதுங்கிவிடுவார்கள். இவர்களுக்கு அது வெறும்ஸாரி!’தான். தலைவருக்கோ அது அவருடைய சொத்து. வேகமாக மனக்கணக்குப் போடுகிற அவர், தன்னுடைய எந்தக் கோதுமையையும் இழக்கத் தயாராக இல்லை.

இந்த இடத்தில் நாம் மற்றொரு மேலாண்மையியல் பாடத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, தலைவனைவிட, ஊழியக்காரன் பரபரப்பாக இருக்கக்கூடாது. தலைவனே தூங்கப் போய்விட் டான். ஊழியக்காரன் ஏன் புலம்பிக் கொண்டிருக்க வேண்டும்? இவன் புலம்புவதால் களை வளராமல் போய்விடுமா? அல்லது இவன் கொஞ்சம் எக்ஸ்ட்ரா உழைத்தால் தலைவன் அள்ளிக் கொடுப்பானா? இல்லை! அப்புறம் ஏன் இந்த ஆரவாரம்! தலைவனுக்கு எல்லாம் தெரியும். அமைதியாகத் தூங்கச் செல்வதே பணியாளனுக்கு அழகு.

தலைவன் இங்கே பொறுமை காப்பதால் சில பிரச்சினைகளும் எழுகின்றன: ) களைகள் கோதுமைக்குத் தேவையான நிலத்தின் ஊட்டத்தை எடுத்துக்கொள்கின்றன. ) கோதுமைக்குப் பாய்ச்சப்படும் நீரைப் பறித்துக்கொள்கின்றன. ) களைகள், பல பூச்சிகள் மற்றும் புழுக்களைத் தங்கள்பால் ஈர்ப்பதால், அவற்றாலும் கோதுமைப் பயிருக்குத் தீங்கு நேர்கின்றது. ) களைகள் மண்டிக் கிடக்கும் போது அது வயலின் அழகைக் கெடுக்கிறது. ஆனாலும், தலைவர் அமைதி காக்கிறார்? ஏன்? ஒரு கோதுமைப் பயிர்கூட அழிந்துவிடக் கூடாது என்பதற்காக, மேற்கண்ட அனைத்துப் பிரச்சினைகளையும் தாங்கிக்கொள்கின்றார்.

இதுதான் கடவுளின் பொறுமை! ஆக, கடவுள் காத்திருக்கின்றார்!

களைகளின் இயல்பு மாறுவதில்லை. களை எப்போதும் களைதான். பாதி தூரம் களையாக வந்தபின், அது கோதுமையாக மாற முடியாது. களையின் இயல்பு, தன்னுடைய காத்திருத்தலால் மாறாது என்று தெரிந்தாலும், கடவுள் காத்திருக்கின்றார்.

கடவுளின் பொறுமை எதிரியின் செயலை இறுதியில் அழிக்கின்றது. களைகளின் இருப்பு கோதுமைப் பயிர்களுக்கு நெருடலாக இருந்தாலும், இறுதியில் களைகள் பறித்து எரிக்கப்படும்வரை அவை காத்திருக்க வேண்டும். களைகளின் இருப்பைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். தங்களுடைய வாழ்வாதாரமான தண்ணீரும், உரமும், ஊட்டமும் அநீதியாகப் பகிரப்படுவதை அல்லது பறித்துக் கொள்ளப்படுவதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

கடவுளின் பொறுமை பல நேரங்களில் நம் அவசரத்தோடு பொருந்துவதில்லை. ‘நம்பிக்கையின் பிதாமகன்என அழைக்கப்படுகின்ற ஆபிரகாமே, தனக்குக் கடவுள் தந்த வாக்குறுதி நிறை வேறும் என்ற பொறுமை இல்லாமல், தனக்கான வாரிசாக, தன்னுடைய அடிமையின் மகன் எலியேசரை, உரிமைப் பிள்ளையாகத் தத்தெடுக்க முனைகின்றார். ‘மீட்பின் நாயகன்என அழைக்கப் படுகின்ற மோசே, ‘பாறைக்குக் கட்டளையிடு!’ என்று கடவுள் சொன்னதை மறந்து, ‘பாறையை இருமுறை அடித்துதன்னுடைய அவசரத்தால், வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகின்றார். இஸ்ரயேலின் முதல் அரசராகிய சவுல், ஆண்டவருக்குப் பலி செலுத்தி, அவரிடம் நற்பெயர் வாங்க வேண்டும் என அவசரப்பட்டு, அமலேக்கியரின் கால்நடைகளை அழிக்காமல், அவற்றை ஆண்டவருக்கென ஒதுக்கி வைத்ததால், அரச நிலையை இழக்கின்றார். ஒருங்கிணைந்த இஸ்ரயேலின் அரசராகிய தாவீது, ‘ஆண்டவரிடம் கேட்டால் அவர் எனக்கு மனைவியைத் தருவார்என்று அறிந்திருந்தாலும், அவசரப்பட்டு பெத்சேபாவைத் தழுவிக்கொள்கின்றார். அவளுடைய கணவனைக் கொல்கின்றார். விளைவு, வாள் அவருடைய தலைக்குமேல் இறுதிவரை தொங்கிக் கொண்டே இருந்தது.

மனித அவசரங்கள் பல நேரங்களில் கோதுமைப் பயிர்களை அழிப்பதோடு, நிலத்தையும் பாழ்படுத்தி விடுகின்றன.

கடவுளின் பொறுமையை நாம் எப்படிப் பெறுவது? 1) நம்பிக்கை பார்வை கொண்டிருப்பதால். 2) தீமையின் இருப்பை ஏற்றுக்கொள்வதால். 3) தீமை என்னுடைய நன்மையை எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை என்ற பரந்த மனம் கொள்வதால். 4) வாழ்வின்மேல் உரிமை கொண்டாடுவதால். 5) நன்மைத்தனத்தில் வளர்வதால். 6) ‘இதுவும் கடந்து போகும்!’ என எண்ணுவதால்.

இறுதியாக, நாம் களைகளின் நடுவில் சிக்கிக்கொண்ட கோதுமைப் பயிர்களாக, ஆண்டவரை நோக்கி பெருமூச்சு எழுப்பினாலும் (இரண்டாம் வாசகம்), அவர் பல நேரங்களில், ‘பொறு!’ என்கிறார். ஏனெனில், அவர்பொறுமையும், பேரன்பும் கொண்டவர்’ (முதல் வாசகம், பதிலுரைப் பாடல், திபா 86).